Showing posts with label வக்ஃப் வாரியம். Show all posts
Showing posts with label வக்ஃப் வாரியம். Show all posts

Thursday, October 01, 2009

வக்பு வாரிய கல்லூரி மாஜி முதல்வருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

வக்பு வாரிய கல்லூரி மாஜி முதல்வருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையில், பேராசிரியைக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த வக்பு வாரிய கல்லூரி முன்னாள் முதல்வர் இஸ்மாயில், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


மீண்டும் பணியில் சேர்க்க கோரிய இஸ்மாயில் மனுவையும் தள்ளுபடி செய்தது. மதுரை கே.கே.நகரில், வக்பு வாரிய கல்லூரி 1958ல் துவக்கப்பட்டது. வக்பு வாரிய கட்டுப்பாட்டில் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் பேராசிரியை ஷமீம்ராணி 1996 அக்., 1ல் பணியில்சேர்ந்தார். இஸ்மாயில் விரிவுரையாளராக 1978ல் கல்லூரியில் சேர்ந்தார். 1999ல் முதல்வராக நியமிக்கப்பட்டார். 2003ல் இஸ்மாயில் செக்ஸ் தொந்தரவு செய்வதாக ஷமீம்ராணி கல்லூரி நிர்வாகக் கமிட்டியிடம் புகார் செய்தார். 2003ல் கமிட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.


இதற்கு இஸ்மாயில் அளித்த பதில் திருப்தியாக இல்லாததால் கமிட்டி, ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குழு விசாரணையில், இஸ்மாயில் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. 2003 ஜூலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு, அவரை பணியில் இருந்து நீக்க நிர்வாக கமிட்டி முடிவு செய்தது. இந்நிலையில், கல்லூரியில் புதிதாக நிர்வாகத்தை ஏற்ற கமிட்டி, அவரை பணியில் மீண்டும் சேர்க்க முடிவு செய்து, 2006 மே 29ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் மாணவர் அஸ்ரப் அலி பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.


மேலும், இஸ்மாயிலை மீண்டும் பணியில் சேர்க்கும் நிர்வாக கமிட்டி முடிவை ரத்து செய்யக் கோரி பேராசிரியை ஷமீம்ராணி ஒரு மனு செய்தார். இம்மனுக்கள் தாக்கலானதையடுத்து நிர்வாகக் கமிட்டி, இஸ்மாயிலை பணி நீக்கம் செய்தது. இதனால், மீண்டும் தன்னை பணியில் சேர்க்கக் கோரி இஸ்மாயில் தனியாக ஒரு மனு செய்தார். இம்மனுக்கள், தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி.ராஜா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அஸ்ரப் அலி சார்பில் வக்கீல் சுப்பையா, ஷமீம்ராணி சார்பில் மூத்த வக்கீல் டி.ஆர்.ராஜகோபால், அரசு தரப்பில் ஜானகிராமுலு ஆஜராயினர்.


நீதிபதிகள் உத்தரவில், ""பேராசிரியைக்கு கல்லூரி முதல்வரே செக்ஸ் தொந்தரவு கொடுத்தது துரதிருஷ்டவசமானது. கல்லூரி நிறுவன முதல்வராக இருப்பவரிடம், இத்தகைய நடவடிக்கையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தளவுக்கு முதல்வரை எதிர்த்து தைரியத்துடன் போராடிய ஷமீம்ராணியை கோர்ட் பாராட்டுகிறது. ஷமீம்ராணிக்கு, இஸ்மாயில் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கல்லூரி நிர்வாகம் (முரண்பாடான நடவடிக்கைகளுக்காக) ஷமீம்ராணிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இஸ்மாயில் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என்றனர்.

நன்றி : தினமலர்

Monday, August 31, 2009

வக்பு வாரியமா? த.மு.மு.க கிளை அலுவலகமா?

வக்பு வாரியமா? த.மு.மு.க கிளை அலுவலகமா?
( ஏவி.எம். ஜாபர்தீன் )
( கௌரவ ஆசிரியர், சமநிலைச் சமுதாயம் )

சகோதரர் ஹைதர் அலி வக்பு வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டபோது ஒரு திறமையாளர் தலைமையில் வக்பு போர்டு என்ற ஊழல் மகா சமுத்திரம் புனித மடைந்து விடும். என்று மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.

ஆனால், அண்மையில் பள்ளிவாசல் நிர்வாகங்களில் வக்பு வாரியத்தின் தலையீட்டால் பல பள்ளிவாசல்கள் நிர்வாகக் கமிட்டி இன்று வக்பு வாரிய அதிகாரிகள் வசம் சென்று விட்டன. அவற்றில் கூத்தாநல்லூரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் நடைபெற்று வரும் அராஜகத்தை இங்கு முன்வைக்கின்றேன்.

கூத்தாநல்லூரில் பெரிய பள்ளிவாசல் என்பது அந்த மஹல்லா மக்கள் தொழுகைக்கு மட்டுமல்லாது அந்த ஊரின் முக்கிய நிர்வாகங்களையும் கவனித்து வந்தது.

திருமணத்திற்கான அனுமதி திருமணப்பதிவு, மரணப்பதிவு, விவாகரத்து மற்றும் விவாகரத்துக்கான நஷ்ட ஈடு ஆகியவைகளை பெரிய பள்ளிவாசலின் நிர்வாகம் கவனித்து வந்தது. 14 பள்ளிவாசல் களைக் கொண்ட அந்த ஊருக்கு பெரிய பள்ளிவாசல்தான் தலைமை நிலையமாகச் செயல்பட்டது.

சுமார் 30 வருடங்களுக்கு முன் பெரிய பள்ளிவாசலில் வேலை செய்து வந்த சிப்பந்திகளில் ஒருவர் கையாடல் செய்தார். என்ற காரணத்தைக் காட்டி வக்பு வாரியம் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது.

அதன் பிறகு ஜனாப் ஏ.ஜே. அப்துல் ரசாக் தலைவராக இருந்தபோது 1978 இல் நிர்வாகத்தை உள்ளூர் ஜமாஅத்திடம் ஒப்படைக்கும் வண்ணம் 7 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை நியமித்து 7 பேர் கொண்ட குழு 15 பேராக முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டத் திட்டங்களையும் வகுத்தனர்.

அதன் பிறகு வக்பு போர்ட் தலைவராக வந்த அப்துல் லத்தீப் நிர்வாகம் சிறப்புற நடைபெறுவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவை மேலும் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இருமுறை நீட்டித்தார். இரண்டாவது மூன்றாண்டுகள் முடியும்போது அப்துல் லத்தீப் வக்பு வாரியத்தலைவர் பதவியை விட்டு விலகினார்.

அப்போது இடைக்காலத்திற்கு இசைமுரசு நாகூர் அனீபாவை தமிழக அரசு வக்பு வாரியத் தலைவராக நியமித்தது. அவரது பதவி காலத்தில் மீண்டும் 3 ஆண்டுகள் பதவி கால நீட்டிப்புக்காக நிர்வாகக் குழுத் தலைவரும் நானும் அவரைச் சந்தித்தோம். 3 ஆண்டுகளுக்குப் பதிலாக அவர் முறைப்படி வாரியத்தைக் கூட்டி 5 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து தந்தார். காரணம் நிர்வாகத்தில் எந்த முறைகேடும் இல்லாதபோது அனாவசியமாக மாறுதல் செய்ய வேண்டியதில்லை. என்று முடிவெடுத்தார்.

முன்பே கூறினேன், வாரியம் ஒரு ஊழல் மகா சமுத்திரம் என்று நாகூர் அனீபா அவர்கள் பதவி விலகும் சமயத்தில் அவர் அறியாமலேயே அவரிடம் ஒரு கடிதம் கையெழுத்து வாங்கப்பட்டது. அதில் 5 ஆண்டுகள் நீட்டிப்பை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். இதனை பெரிய பள்ளி நிர்வாகஸ்தர்கள் நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றனர். உயர் நீதிமன்றம் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ட்ரிப்யூனல் மூலம் ஏனைய விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. வக்பு வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

நாகப்பட்டினத்தில் உள்ள ட்ரிப்யூனல் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து ஐந்து ஆண்டுகள் வரை தற்போதைய நிர்வாகம் எவ்வித இடையூறும் இன்றி தொடரலாம். ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் பள்ளிவாசல் சட்ட விதிகளுக்குட்பட்டு உறவின் முறை ஜமாஅத்தாரிலிருந்து புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். என்று தீர்ப்பளித்தது.

மாநில ஆட்சி மாறியது. திருமதி பத்ர் சயீத் வக்பு வாரியத் தலைவராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். சட்ட வல்லுனரான இவர் காலத்தில் பிரச்சினைகள் அதிகம் இல்லை என்றாலும் ஊழல் மகா சமுத்திரத்தை மாற்றி அமைக்கப் பெரும் போராட்டம் நடத்தினார். அலுவலர்களை நம்பாமல் முக்கியமான ஆவணங்களை தன்னுடனே வீட்டிற்கே எடுத்து வந்துவிடுவார்

திருமதி பத்ர் சயீத் இருந்தபோது தானே முன்னின்று தேர்தலை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வசம் பள்ளிவாசல் நிர்வாகத்தை ஒப்படைப்பதாக உறுதி கூறினார். ஆனால் அவர் காலத்தில் ஏதும் முடியவில்லை. பிறகு புதிய தலைவராக ஹைதர் அலி பதவி ஏற்றார்.

நாகப்பட்டினம் ட்ரிப்யூனல் அளித்த தீர்ப்பை எதிர்த்து கூத்தா நல்லூரில் உள்ள சில விஷமிகள் தூண்டுதலால் வக்பு வாரியம் ‘ஸ்டே; வாங்கியது. ;ஸ்டே; வாங்கியவுடனேயே நிர்வாக அதிகாரி ஒருவர் அடாவடியாக பள்ளிவாசலினுள் புகுந்து அங்கிருந்த சிப்பந்திகளை மிரட்டி அலுவலகச் சாவி, வங்கி செக்குகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். இது முறையாக பதவி வகித்து வரும் நிர்வாகிகளை அழைத்து அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்காக ரசீது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்

ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நிர்வாகிகளும் ஏன் வம்பு என்று ஒதுங்கிக்கொண்டு விட்டனர். நிர்வாகத்திலோ அல்லது நிதி கையாண்டதிலோ எவ்வித முறைகேடும் இல்லாத பட்சத்தில் எவ்வித முகாந்திரமும் இன்றி நிர்வாகக் குழுவிடமிருந்து பொறுப்பை வக்பு வாரியம் கைப்பற்றியது. இதனால் மனம் வெறுத்துப்போன ஜமாஅத் பெரியவர்கள் நிர்வாகத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.

நிர்வாக அதிகாரி நிரந்தரமாக அங்கு இருப்பதில்லை. பல ஊர்களுக்கும் அவரேதான் நிர்வாக அதிகாரி அவர் எப்போது வருவார் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. அவர் வரும்போது அவரிடம் வாங்க வேண்டிய கையெழுத்துகளை சிப்பந்திகள் வாங்கிக் கொள்வர். இதில் முக்கியமான ஒன்று ஊர் உத்தரவு என்ற திருமண அனுமதி.

இது உள்ளூரில் உள்ள உறவின் முறை ஜமாஅத்தாரால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. யார் முதல் திருமணம் செய்கிறார்கள் என்றும் யார் இரண்டாவது முறையாகத் திருமணம் செய்கிறார்கள் என்றும் அவர்களுக்குத்தான் தெரியும்.

உறவின் முறை ஜமாஅத் என்ற பெயரிலேயே அவர்கள் அனைவரும் தூரத்து உறவினராகவாவது இருப்பார். இதனால் யாருக்கு ஊர் உத்தரவு கொடுக்கலாம் என்று அவர்கள் தீர்மானிப்பர்.. அவர்கள் உத்தரவு தந்தால்தான் திருமணத்தின்போது திருமணப்பதிவு புத்தகமும் திருமணம் செய்து வைக்க சமயப் பெரியவரும் திருமணம் நடக்கும் இடத்திற்குச் செல்வார். .

இப்போது என்ன நடைபெறுகிறது?

ஊர் உத்தரவு கேட்டு வரும் மனுவை பள்ளிவாசல் சிப்பந்தி ஒருவர் எடுத்துக்கொண்டு வெளியூரில் இருக்கும் நிர்வாக அதிகாரியைத் தேடிப் பிடித்து கையெழுத்து வாங்கி வருகிறார். இதில் திருமணமானவரா இல்லையா? மணவிலக்கு செய்தவரா இல்லையா என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

முன்பு நிர்வாகிகள் இருந்தபோது மணவிலக்கு செய்தவர். மணமகனாக இருந்தால் அவர் தனது முந்தைய மனைவிக்குச் சேர வேண்டியவைகளைக் கொடுத்து விட்டானா என்று தீர விசாரித்து அப்படி ஏதும் செலுத்தவில்லை என்றால் ஊர் உத்தரவு மறுக்கப்படும். வக்பு நிர்வாகத்தில் இதுவெல்லாம் கண்டு கொள்ளப்படுவதில்லை.

அதேபோல் விவாகரத்து சொத்துப் பிரச்சினை என்று யாரும் போலீஸ் பக்கமோ நீதிமன்றமோ செல்லாமலே நிர்வாகஸ்தர்களிடம் சென்று பஞ்சாயத்து செய்து வந்தனர். இவை அனைத்தும் இப்போது போலீசுக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றுவிட்டன.

வக்பு வாரியம் ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தால் அவர் வக்புக்கான வரவு செலவு பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை நடைபெறுகிறதா என கண்காணிப்பது சிப்பந்திகள் சம்பளம் பெறுதல் பள்ளிவாசலின் வருமானத்தை முறையாகப் பெற்று அவைகளை வங்கியில் செலுத்துவது ஆகியவற்றைப் பார்ப்பதுதான் வழக்கமே தவிர திருமணத்திற்கான அனுமதி கொடுப்பது எந்த வக்பு சட்டத்தின் கீழ் வருகிறது? இப்படி கட்டமைப்பு கொண்ட ஒரு நிர்வாகத்தை வக்பு வாரியம் வந்து கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டது.

இதற்கிடையே இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வக்பு வாரிய நிர்வாகத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்தனர். இதை அறிந்ததும் வக்பு வாரியம் தேர்தலை நடத்த முடிவு செய்தது.வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை நியமித்தது. அதில் ஏழு பேர் தேர்தல் இங்குள்ள நடை முறைக்கு சரிப்பட்டு வராது. எலக்‌ஷனுக்குப் பதில் செலக்‌ஷன் தான் வைக்க வேண்டும் என்று கூறி ஒத்துழைக்க மறுத்தனர். ஊரிலுள்ள உறவின் முறை ஜமாஅத்தினர் ஒரு கூட்டம் கூடி 50 பேர் கொண்ட குழுவை உருவாக்கி இவர்கள் மூலம் உறவின் முறை ஜமாஅத்தின் பட்டியல் தயாரிப்பது என்ற முடிவு எடுத்தனர்.

உறவின் முறை ஜமாஅத் என்றால் என்ன என்று பார்ப்போம்.

கூத்தாநல்லூர் ஆரம்ப காலத்தில் சுமார் 400 வருடங்களுக்கு முன் வாழ்ந்துவந்த 11 முஸ்லிம் குடும்பங்கள் கரை வழி என்றும் உள்ளூர் வாசிகள் என்றும் இரத்த சம்பந்தமான உறவு கொண்டவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தக் குடும்பத்தினர்தான் திருமணம் வமிசாவழி விருத்தி ஆகியவை மூலம் இன்று பல குடும்பங்களாக இருக்கின்றனர். எந்தக் குடும்பத்தை எடுத்தாலும் ஆதியில் இருந்த 11 குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பர். இவர்கள் பெரும் சொத்துக்களை வாங்கி பள்ளிவாசல்களைக் கட்டி மதரஸாக்களைத் துவக்கி இவைகளைப் பராமரிப்பதற்காக சொத்துக்களை வாங்கி வக்பு செய்தனர். பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட சொத்துகளை நிர்வகிக்க ஏற்படுத்திக்கொண்ட அமைப்பே கூத்தாநல்லூர் உறவின் முறை ஜமாஅத்.

இந்த உறவின் முறை ஜமாஅத் தான் காலங்காலமாக பள்ளிவாசல்கள் அனைத்தையும் நிர்வகித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாது சென்னை சிங்கப்பூர் போன்ற நகரங்களிலும் கூத்தாநல்லூர் உறவின் முறை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துகளை வாங்கி வக்பு செய்துள்ளனர்.

உறவின் முறை ஜமாஅத் பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி இந்த உறவின் முறை ஜமாஅத் முறையை எதிர்த்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பிலேயே தேர்தலில் பள்ளிவாசலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உறவின் முறை ஜமாஅத்தினரிடமிருந்துதான் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியதும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையில் கூத்தாநல்லூரிலேயே அன்வாரியா தெருவில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வக்பு வாரியம் தேர்தல் அறிவிப்புச் செய்தது. அதற்கான வாக்காளர் பட்டியலையும் அவர்கள் தமுமுகவினரைக் கொண்டு தயாரித்துள்ளனர்.

அன்வாரியா தெருவில் வசிக்கும் அந்த மஹல்லாவைச் சேர்ந்தவர்களில் பெரும்பகுதியினரைத் தவிர்த்துவிட்டு உறவின் முறை என்ற வார்த்தைக்குப் பதில் உள்ளூர் வாசிகள் என்ற வார்த்தையை வைத்து வக்பு வாரிய அதிகாரிகள் 20 பேர் மட்டும் அன்வாரியா தெரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களையும் மீதி 130 பேர் வெளியூரிலிருந்து குடிவந்தவர்களையும் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இந்த 130 பேரில் பெரும்பான்மையோர் தமுமுக உறுப்பினர்கள் கூத்தாநல்லூரில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றங்கள் இயங்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.

சென்ற மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. என்னவோ பெரிய கலவரப் பிரதேசம் போல் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் வந்திருந்தனர். கூடவே ஒரு டி.ஐ.ஜியும் கூட்டத்தைக் கலைக்க பயன் படுத்தும் தண்ணீர் பீய்ச்சும் வஜ்ரா வாகனம் என்று பெரிய ஆர்ப்பாட்டத்தோடு ஆரம்பித்த தேர்தலில் உறவின் முறை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு தமுமுகவின் மூக்கு உடைபட்டது.

தமுமுக ஆதரவு பெற்ற வெளியூரைச் சேர்ந்தவர்களில் மூவர் போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள். தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தேர்தல் களத்திற்கு வந்தால் போலீஸில் பிடித்துக் கொடுக்க ஊரே தயாராக இருந்தது.

இப்படி ஹைதர் அலியின் கனவு பலிக்கவில்லை. தமுமுகவினரால் ஊர் பிளவுபட்டது. குடும்பங்கள் பிரிந்தன. தந்தையும் தனையனும் தனித்தனியாக நிற்கின்றனர். தமுமுகவும் தெளஹீத் ஜமாஅத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்களிடமிருந்து சுன்னத் ஜமாஅத்தைக் காப்பது இப்போது மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது.

ஹைதர் அலியின் ஒரே அஜெண்டா சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைக் கைப்பற்றி அதனை தமுமுக கொள்கை கொண்டவர்களிடம் ஒப்படைப்பதுதான்.

ஏற்கெனவே இந்த இதழில் தமுமுக உறுப்பினர்கள் எப்படி ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் செய்கின்றனர் என்பதை பட்டியலிட்டோம். இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. போல் தமுமுகவினரே ஒவ்வொரு ஊரிலும் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைக் கைப்பற்ற நடைபெறும் சதி இது.

மீண்டும் பெரிய பள்ளிவாயில் பற்றி பார்ப்போம். உறவின் முறை ஜமாஅத் கொண்ட பட்டியல் வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தும் அவர்கள் தேர்தல் நடத்த அறிவிப்பு செய்யவில்லை. ஆனால் அவசர அவசரமாக அன்வாரியா தெரு பள்ளிவாசலுக்கு தேர்தல் வைப்பதன் . .மூலம் அதே பாணியைப் பின்பற்றி பெரிய பள்ளிவாசலிலும் தேர்தல் நடத்தலாம்.என்று திட்டமிடுகிறார்கள் போலும்.

அன்வாரியா தெரு பள்ளிவாசல் வாக்காளர் பட்டியலில் உறவின் முறை ஜமாஅத்தினர் அல்லாதார் 130 பேர் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் வக்பு வாரிய தலைவர் இல்லை அவர்களும் உறவின் முறை ஜமாஅத்தார்தான் என்று சத்தியம் செய்கிறார்.

உறவின் முறை ஜமாஅத்தார் அல்லாதவர்கள் ஒன்றும் ஒதுக்கப்பட வில்லை. அவர்களில் பலர் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூத்தாநல்லூர் முன்சிப்பல் தலைவரே உறவின் முறை ஜமாஅத்தைச் சாராதவர் தானே? பள்ளிவாசல் நிர்வாகத்தை தவிர அவர்களுக்கு எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை. இதனை முன்பின் தெரியாத வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்களிடம் எப்படி ஒப்படைப்பது?

சில மாவட்டங்களில் இறந்தவர்களைக் கூட சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லுமாறும் உள்ளூர்வாசிகள் மட்டும் தான் இங்கு அடக்கம் செய்யமுடியும் என்றும் கூறுகின்றனர். கூத்தாநல்லூர் அவ்வாறு இல்லையே.

கூத்தாநல்லூரில் எந்த தொழிற்சாலையோ அல்லது வருமானம் தரக் கூடிய பெரிய தொழில்களோ கிடையாது. நகராட்சியாக உயர்வு பெற்றதற்கு காரணம் அவ்வூர் உறவின் முறை ஜமாஅத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து பணம் ஈட்டி கூத்தாநல்லூரில் வளமாக வாழ்ந்தனர். பள்ளிவாசல்கள் மதரஸாக்களைப் போன்றவை களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து பராமரிக்கிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்கள் இவ்வூர்களில் வேலை செய்தோ தொழில் செய்தோ தான் தங்கள் வருமானத்தை ஈட்டிக் கொண்டார்கள்.

இறுதியாக கூத்தாநல்லூர் சம்பவம் ஒரு உதாரணம். பள்ளிவாசல் நிர்வாகத்திற்குள் தமுமுக நிர்வாகத்தினரைத் திணிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் தகவல்கள் கிடைக்கின்றன. அண்மையில் ஜூனியர் விகடனில் மேலை நாசர் என்பவர் இதேபோல் சில விபரங்களைக் கூறி குமுறியிருந்தார்.

இக்கட்டுரை மாண்புமிகு முதலமைச்சர் பார்வைக்குச் செல்லும் என்று நம்புகிறோம்.

தமுமுக இதே பாணியைக் கையாண்டால் அதனை தி.மு.கழகம் ஆதரித்து வந்தால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டிலுள்ள சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களிடமிருந்து திமுக கூட்டணிக்கு ஒரு வாக்குகூட கிடைக்காது. மாண்புமிகு முதல்வர் ஆவன செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

( சமநிலை சமுதாயம் – மார்ச் 2009 இங்கும் அங்கும் பகுதியிலிருந்து )

SAMANILAI SAMUDHAYAM
NO 5 GREEMS ROAD
CANARA BANK BUILDING
IInd Floor
P O Box No. 6262
Thousand Lights
CHENNAI 600 006
Tel : 044 – 282 90 785
Fax : 044 – 24311229
Editor2samanilai@yahoo.co.in
Editor2samudhayam@yahoo.co.in

Friday, April 10, 2009

வக்ஃப் வாரிய தலைவர் பதவி ஹைதர் அலி ராஜினாமா செய்தார்

வாரியத் தலைவராக கடந்த 27.03.2007 அன்று த.மு.மு.க வின் திரு. ஹைதர் அலி பதவியேற்றபோது.


தி.மு.க கூட்டணியில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததாலும், த.மு.மு.க அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் திரு. ஹைதர் அலி அவர்கள் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதாலும் தி.மு.க வால் வழங்கப்பட்டிருந்த வக்ஃப் வாரியத் தலைவர் பதவியை இன்று திரு. ஹைதர் அலி அவர்கள் ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள் :

ம.ம.க வேட்பாளர்கள் அறிவிப்பு - பி.ஜே.பி யுடன் கூட்டணி???

வக்ஃப் வாரிய தலைவர் பதவி திரும்ப ஒப்படைப்பு???

Tuesday, April 07, 2009

வக்ஃப் வாரிய தலைவர் பதவி திரும்ப ஒப்படைப்பு???

வாரியத் தலைவராக கடந்த 27.03.2007 அன்று த.மு.மு.க வின் திரு. ஹைதர் அலி பதவியேற்றபோது.


தி.மு.க கூட்டணியில் இருந்து தங்களை கலட்டி விட்டதாலும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததாலும் தி.மு.க வால் வழங்கப்பட்டிருந்த வக்ஃப் வாரியத் தலைவர் பதவியை இன்று த.மு.மு.க ராஜினாமா செய்து திரும்ப ஒப்படைக்க இருப்பதாக ஒரு ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியின் தன்மை இன்னும் சில நாட்களில் தெளிவாகிவிடும்.

Monday, November 24, 2008

வக்ஃபு இடத்தில் அறிவாலயமா? வெட்ககேடு!! வெட்ககேடு!! - IDMK Interview in JUVEE

திருச்சி ருஸ்த்தும் பீவீ பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை திமுக வினர் கலைஞர் அறிவாலயத்திற்காக ஆக்கிரமித்துள்ளதால் அதை மீட்டெடுக்கும் போராட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளதை அணைவரும் அறிவர்.இதன் ஒரு பகுதியாக தமிழகமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது குறித்து ஜீனியர் விகடன் பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களின் பேட்டி இங்கு வெளியிடப்படுகின்றது. புகைப்படங்களின் மேல் சொடுக்கி அதை பெரிதாக்கி படிக்கவோ பிரின்ட் எடுக்கவோ செய்யலாம்.
தமிழகத்தை கலக்கிய சுவரொட்டி



பக்கம் 1



பக்கம் 2


Sunday, November 09, 2008

ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃபு சொத்தில் கலைஞர் அறிவாலயம் போராடத் தயாராகும் முஸ்லிம் அமைப்புகள்

தமிழன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 06-2008
கலைஞர் அறிவாலயம் சர்ச்சை
வக்ஃபு வாரிய இடத்தில் கலைஞர் அறிவாலயம் என்கிற தலைப்பில் அக்டோபர் 23 தேதியிட்ட தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் நாம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம் அதில் திருச்சி மேலச்சிந்தாமணியில் உள்ள “ருஸ்தும் பீ“ பள்ளிவாசலுக்குச் சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 30,000 சதுரடி இடத்தை தி.மு.க.வினர் வக்ஃபு வாரிய அனுமதியில்லாமல் தன் வசப்படுத்தி கட்சி கட்டிடமும் திருமண மண்டபமும் கட்டியுள்ளது பற்றி எழுதியிருந்தோம். இந்த செய்தியை படித்த பல்வேறு அரசியல் இயக்கப் பிரமுகர்களும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் அலாவுதீன் நம்மிடம் ஒரு ஆளுங்கட்சி அதன் கட்சி அலுவலகத்திற்காக பள்ளி வாசலுக்கு சொந்தமான இடத்தை அபகரித்திருப்பது மிகப்பெரிய தவறு. பத்திரிக்கைகளில் இது பற்றி செய்திகள் வந்தும் கூட தமிழக முதல்வர் அந்த இடத்தை தார்மீக ரீதியாக வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. அநீதியானது.

வக்ஃபு வாரிய சொத்துக்களை என்னென்ன விஷயங்களுக்காக பயன்படுத்த குத்தகைக்கு விடலாம் என்று வக்ஃபு வாரிய சட்டத்தில் வழிவகைகள் உண்டு. பள்ளிவாசல், அரபி பாடசாலை, அனாதை இல்லம், முதியோர் இல்லம், பள்ளிக்கூடம், உள்ளிட்ட 17 வகையான மக்கள் நல பயன்பாட்டிற்கு மட்டுமே குத்தகைக்கு விடலாம். அல்லது பயன்படுத்தலாம். என்று கூறப்பட்டுள்ளது அதை வக்ஃபு வாரியம் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். மேலும் தாங்கள் அபகரித்துள்ள இடத்தை தற்போது வக்ஃபு வாரியத்திடம் வாடகைக்கு தி.மு.க கேட்டுள்ளதாக தெரிகிறது.

அரசியல் கட்சிகளின் பயன்பாட்டிற்காக வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை துளி கூட வாடகைக்கோ, குத்தகைக்கோ, ஒப்படைக்க கூடாது. அது தவறான நடைமுறைக்கு வழிவகுக்கும். அவ்வபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரசியல் அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இப்படி வக்ஃபு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் வக்ஃபு வாரிய சொத்துக்கள் அனைத்துமே காணாமல் போய்விடும். வக்ஃபு வாரிய தலைமையும் அதன் உறுப்பினர்களும் தி.மு.கவின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளிவாசல் இடத்தை உடனே மீட்க வேண்டும். இல்லையேல் எங்கள் கட்சி அந்த இடத்தை மீட்க போராட்டத்தில் இறங்கும் என்றார் அலாவுதீன் ஆவேசத்துடன்.
முழு செய்தியையையும் வாசிப்பதற்கு கீழே உள்ள புகைப்படத்தில் கிளிக் செய்து வாசிக்கவும்

Sunday, March 16, 2008

வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு தடுத்த முஸ்லிம்கள் மீது தாக்குதல், பொய்வழக்கு கண்டித்து MNP ஆர்ப்பாட்டம்

அநீதிக்கெதிராக ஆர்பரிக்கும் மனிதநீதிப்பாசறையினர்


16.03.2008 அன்று காலை 11 மணியளவில் மனித நீதிப் பாசறை மதுரை மாவட்ட தலைவர் திரு. ஏ.முகம்மது காலித் அவர்க் தலைமையில் மதுரை மாவட்டம் சேழவந்தான் அருகே உள்ளது திருவாலவாயநல்லூர் கிராமத்தில் ஃபாசிச வெறியர்களான ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி தீவிரவாத கும்பல் மரணமடைந்த பென்னின் உடலை அடக்க சென்ற அப்பாவி முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலைவெறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் தாக்குதலுக்குள்ளான அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ள மதவெறி படித்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. டி.எஸ் அன்பு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதியோர்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யக் கோரியும் மதுரை தெற்கு வாசல் பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நீதிப் பாசறையி்ன் மாநில பேச்சாளர் திரு. கே. சையது இப்றாஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். சட்டக் கல்லூரி மாணவர் திரு. ராஜா முகம்மது நன்றியுரை கூறினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளில் இருந்தும் நூற்றுக்காணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



திருவாலவாயநல்லூர் முஸ்லிம் ஜமாத்தினர் அனைவரும் மதவெறி கொண்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. அன்பு அவர்களால் பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்தப்பட்டிருப்பதால் ஜமாத்தின் முன்னால் செயலாளர் திரு. சேட் அவர்கள் நடந்த சம்பவம் குறித்து நமக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது. உடனடியாக வக்ஃப் வாரியத் தலைவர் திரு. ஹைதர் அலி அவர்களும், அரசில் இசுலாமியர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமுமுக வும் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்டு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், இஸ்லாமியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்த ஃபாசிச வெறியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசை வலியுருத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


இறைவன் மிகப் பெரியவன்
முஸ்லிம் ஜமாத்

திருவாலவாயநல்லூர் - 625221
திருவாலவாயநல்லூர் அஞ்சல் -
வாடிப்பட்டி தாலுகா - மதுரை மாவட்டம்


மதுரை மாவட்டம் சேழவந்தான் அருகே உள்ளது திருவாலவாயநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான அடக்கஸ்த்தளமான கப்ரஸ்தான் உள்ளது. இந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தபோது ஆர்.எஸ்.எஸ் ஃபாசிச சிந்தனை கொண்ட சில விஷமிகளா எதிர்த்து வந்தனர். இந்த எதிர்ப்பை மீறி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இது தற்போது ஆர்.டி.ஓ விசாரனையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் 14.03.2008 அன்று முஸ்லிம் பெண்மணி ஒருவர் வஃபாத்தானார் (மரணித்தார்). அந்த ஜனாஸாவை(பிரேதத்தை) 15.03.2008 அன்று அடக்கம் செய்ய எடுத்துச் சென்றோம். அப்போது அர்.எஸ்.எஸ மற்றும் இந்து முன்னணியை சோந்த சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 1 சிறுவார் உட்பட 5 முஸ்லிம்க் படுகாயமடைந்துள்ளனர்.

இதன் பின்பு காவல் துறைக் கண்காணிப்பாளர் அன்பு, ஜமாத் தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் உட்பட 28 முஸ்லிம்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 ன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார். இதில் பலர் வயோதிகர்கள். ஆனால் எதிர் தரப்பில் ஒருவர் மீது கூட வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவு அன்பு இந்து முன்னணிக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். முஸ்லிம்களுக்கு நடக்கும் இத்தகைய கொடுமைகளையும் பல அதிகாரிகளிடம் கொண்டு சென்றுள்ளோம்.


குறிப்பாக வக்ஃபு வாரியத்திடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்று பல மாதமாகி விட்டது வக்ஃபு வாரிய சேர்மன் ஹைதர் அலியை நேரடியாக சந்தித்து வக்ஃபு நிலத்தை மீடு்க வேண்டும் என்று மனு நாம் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெறியவில்லை.


எனவு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பொய்வழக்குகளையும் கவணத்தில் கொண்டு பள்ளிவாசல் இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் ஒருதலைப்பட்சமாக நடக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ் அன்பு மீது நடவடிகடகை எடுக்கவும் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஜமாத்தின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.


இவன்
சேட்
முன்னாள் செயலாளர்

Sunday, August 19, 2007

வக்ஃப் வாரியத் தலைவரின் அறிக்கை

பொறுப்புணர்வை மறந்து பொய்யான தகவல்களுடன் வெளியிடப்பட்ட அறிக்கை -ஜெயலலிதாவின் அறிக்கை குறித்து தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் விளக்கம்


பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஹைதர் அலி


ஆகஸ்ட் 17, 2007 அன்று ஹோட்டல் பிரசிடென்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவருமான செ. ஹைதர் அலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மதவாத பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து மக்கள் மன்றத்தில் அம்பலமாகிப் போன ஜெயலலிதா, இப்போது முஸ்லிம்களுக்கு .ஆதரவாக இருப்பதுபோல அறிக்கை வெளியிட்டு, அதிலும் வழக்கபோலவே பொய்களைப் புனைந்துள்ளார்.

முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு எதிராக வக்ஃபு வாரியத்தை திமுக அரசு தூண்டிவிடுவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

இஸ்லாமிய சமயக் கோட்பாடுகள் பற்றியும், முஸ்லிம்களின் உணர்வுகள் பற்றியும் ஜெயலலிதா பேசியிருப்பது இந்த நூற்றாண்டின் மாபெரும் நகைச்சுவையாகத் தெரிகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையையும் திமுக இழந்து வருவதாகவும், ஜமாஅத் நிர்வாகங்களில் வக்ஃப் வாரியத்தைத் தலையிடச் செய்து முஸ்லிம்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக திமுக அரசு இழந்து விட்டதாகவும், நரேந்திர மோடியின் அரசியல் தோழி குற்றம்சாட்டியுள்ளார்.

அறிவார்ந்த விமர்சனத்திற்கும், ஜெயலலிதாவிற்கும் அறவே சம்பந்தம் இருக்காது என்பதை அவரது இந்த அறிக்கை அறுதியிட்டு உறுதி செய்துள்ளது.

பாபர் பள்ளிவாசலை இடிக்க தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை அனுப்பிய ஜெயலலிதா, வக்ஃப் வாரிய நிர்வாகிகள் சென்னை வியாசர்பாடியில் உள்ள கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள புனித மகான்களின் நினைவிடங்களை உடைத்துத் தரைமட்டமாக்கியுள்ளதாக உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா குறிப்பிடுவது போல எந்த ஒரு சம்பவமும் நடக்கவே இல்லை. வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்கள் தமிழகமெங்கும் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் நிலையில், கன்னிகாபுரத்தில் உள்ள வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான பி. ஹைதர் அடக்கஸ்தலத்தை வியாசர்பாடி சுற்றுவட்டாரத்தில் 12 ஜமாத்துகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த பொது அடக்கஸ்தலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிலர் அத்துமீறி நுழைந்து கட்டடம் எழுப்ப முனைந்துள்ளனர். அடக்கஸ்தலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்கள் மீது வக்ஃபு வாரிய ஆய்வாளர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதான் உண்மை.

ஜெயலலிதா, கனவுக் காட்சிகளிலும் கற்பனைக் காட்சிகளிலும் நடித்தவர். அந்த முன் அனுபவம் இப்போது அவருக்கு கைகொடுக்கிறது போலும்.

இறையில்லமான பாபர் பள்ளிவாசலை இடிக்க ஆதரவு கொடுத்தவர் ஜெயலலிதா என்பதும், 1992ம் ஆண்டில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் பங்கேற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பாபர் பள்ளிவாசலை இடிக்கும் கரசேவையை ஆதரித்த ஒரே முதலமைச்சர் இவர்தான் என்பதும் நாடறிந்த உண்மை.

கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில்

மதத்தின் புனிதத்தன்மையை பாழ்படுத்துவது பற்றி ஜெயலலிதா பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமமானது.

இஸ்லாமிய இறைக் கோட்பாட்டுத் தத்துவம் பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். திரைக்கோட்பாடு, தில்லானா நாடகங்கள் பற்றித் தெரிந்த அவருக்கு இஸ்லாமின் இறைக் கோட்பாடு பற்றி என்ன தெரியும்? இஸ்லாம் இறைக்கோட்பாட்டை அவர் படித்திருந்தால் முதலில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டிருக்கவே மாட்டார்.

வாக்குறுதிகளைப் பற்றி ஜெயலலிதா வாய்க்கூசாமல் பேசுகிறார். ''1999ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய 'முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில்...

''நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அதைத் தவறு என்று ஒத்துக்கொள்ளும் துணிவு எனக்குண்டு. பாஜகவுடன் நான் தேர்தல் உறவு வைத்ததுதான் வாழ்வில் நான் செய்த பெரும் தவறு. எதிர்காலத்தில் ஒருபோதும் பாஜகவுடன் உறவு வைத்துக் கொள்ளவே மாட்டேன்'' லி என்று மாநாட்டில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, அதன்பிறகு பாஜகவுடன் எப்படியெல்லாம் உறவாடினார் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிட வில்லை.

குஜராத்தில் 2002ல் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் நரேந்திர மோடியின் ஆசியுடனேயே நடைபெற்றது என்று சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த குஜராத் உள்துறைச் செயலாளர் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்து, லட்சக்கணக்கான முஸ்லிம்களை சொந்த நாட்டில் அகதிகளாக்கிய மாபாதக நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தனி விமானத்தில் பறந்து சென்று, பூச்செண்டு கொடுத்து வாழ்த்தியவர், முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்துப் பேசுவது வேதனையான வேடிக்கைதான்.

2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்காலம் முடியும்வரை முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார்.

ஆந்திர முதல்வர் டாக்டர் ராஜசேகர ரெட்டி, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதைக் கடுமையாக கண்டனம் செய்து, எனது தலைமையில் முஸ்லிம்கள் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கு ஆளானவர் ஜெயலலிதா.

வக்ஃப் வாரியத்திற்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் தனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகவும், இதன்காரணமாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இதைத் திறக்காமல் உள்ளதாகவும், இக்கட்டிடம் தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார் ஜெயலலிதா.

இதுவும் முழுக்க முழுக்க பொய்யானதாகும். 2001ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டையிலிருந்து வக்ஃபு வாரிய புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 2001ல் புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டாலும், அரசின் நிர்வாக அனுமதி கிடைக்கவில்லை. வக்ஃபு வாரியத்தின் நீண்ட போராட்டத்திற்குப் பின் அரசின் நிர்வாக அனுமதி 2004ம் ஆண்டில் மட்டுமே கிடைத்தது. இது ஜெயலலிதா ஆட்சியின் அவலத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்டிடப் பணிகள் 30.1.2005ல் தான் தொடங்கப்பட்டது. மேலும் கட்டிடப் பணிக்கு அரசு மானியமாக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த ஜெயலலிதா, 2001லி2002ஆம் ஆண்டில் ரூ.24 லட்சம் மட்டும் ஒதுக்கினார். பிறகு மீதி தொகை 2005லி2006ஆம் ஆண்டில்தான் ஒதுக்கினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டாலும், ஜெயலலிதா ஆட்சியில் கட்டுமானப் பணியை கான்ட்ராக்ட் எடுத்துக்கொண்டவர்கள் செய்த குளறுபடிகள் கட்டட திறப்பை தாமதப்படுத்துகிறது.

புதிய கட்டிடம் திறக்கப்படாததற்கு ஜெயலலிதாவே காரணம் என்பதை குற்றம்சாட்டுகிறேன். காலதாமதத்திற்கு திமுக அரசு பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இக்கட்டிடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக ஆகிவிடவில்லை என்பதையும், வக்ஃபு வாரியம் இவ்வலுவலகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு முன்னாள் முதல்வர், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பொய்யான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இனிமேலாவது அவர் பொறுப்புடன் நடந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

பத்திரிகை அறிக்கையினை டவுன்லோட் செய்வதற்கு

பக்கம் - 01

பக்கம் - 02

பக்கம் - 03