Showing posts with label வக்பு வாரியம். Show all posts
Showing posts with label வக்பு வாரியம். Show all posts

Monday, August 17, 2009

வக்பு வாரியத்தில் நடந்த ஊழல்: அப்துல் ரகுமான் புகார்


ஈரோடு: வக்பு வாரியத்தில் ஊழல் நடந்துள்ளதாக, அதன் தலைவர் அப்துல் ரகுமான் கூறினார். ஈரோடு வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அதில் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


தற்போது கையில் இருக்கும் நிலம் குறைவு தான்; இதிலும், பெரும் பகுதி, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் நிலம், சமுதாயக் கல்வி மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். முஸ்லிம் சமுதாய மக்களில் சிலர், தலித்தை விட கல்வியில் கீழே உள்ளனர். கல்லாமை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். மீட்கும் நிலத்தில், பள்ளி, கல்லூரி மாணவியருக்கான விடுதி, தொழிற்பயிற்சி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இலவச மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பு போன்றவை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.


மத்திய, மாநில அரசுகள், வக்பு வாரியத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன. முதல் வகுப்பு முதல், கல்லூரி வரை சிறுபான்மை கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வக்பு வாரியத்தில் அதிக ஊழல் நடந்துள்ளது. அதனால் வர வேண்டிய வருவாய் வரவில்லை. இப்பிரச்னைகளைத் தீர்த்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளேன். அதற்காக விடுமுறை நாட்களில் கூட தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். பல ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 25 கிரவுன்ட் நிலத்தை ஆக்கிரமித்திருந்த அருணா கார்டன் இடம் மீட்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு வக்பு வாரியத்துக்கு ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் வழங்குகிறது. சென்றாண்டு பள்ளிவாசல், தர்காக்கள் மூலம் 2.31 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது சம்பளத்துக்கே சரியாகி விடுகிறது. ஆக்கிரமிப்பாளரிடமே வாடகை வசூலித்து நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளோம். ஸ்பான்சர்கள் நிதி வழங்க முன் வருகின்றனர். மாநில அரசு, ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். வக்பு வாரியத்தில் நடந்த ஊழலுக்கு ஆதாரம் இல்லை. அதற்கான ஆதாரம் தேடுகிறேன். கிடைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அப்துல் கூறினார்.
நன்றி : தினமலர்

Sunday, November 09, 2008

ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃபு சொத்தில் கலைஞர் அறிவாலயம் போராடத் தயாராகும் முஸ்லிம் அமைப்புகள்

தமிழன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 06-2008
கலைஞர் அறிவாலயம் சர்ச்சை
வக்ஃபு வாரிய இடத்தில் கலைஞர் அறிவாலயம் என்கிற தலைப்பில் அக்டோபர் 23 தேதியிட்ட தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் நாம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம் அதில் திருச்சி மேலச்சிந்தாமணியில் உள்ள “ருஸ்தும் பீ“ பள்ளிவாசலுக்குச் சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 30,000 சதுரடி இடத்தை தி.மு.க.வினர் வக்ஃபு வாரிய அனுமதியில்லாமல் தன் வசப்படுத்தி கட்சி கட்டிடமும் திருமண மண்டபமும் கட்டியுள்ளது பற்றி எழுதியிருந்தோம். இந்த செய்தியை படித்த பல்வேறு அரசியல் இயக்கப் பிரமுகர்களும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் அலாவுதீன் நம்மிடம் ஒரு ஆளுங்கட்சி அதன் கட்சி அலுவலகத்திற்காக பள்ளி வாசலுக்கு சொந்தமான இடத்தை அபகரித்திருப்பது மிகப்பெரிய தவறு. பத்திரிக்கைகளில் இது பற்றி செய்திகள் வந்தும் கூட தமிழக முதல்வர் அந்த இடத்தை தார்மீக ரீதியாக வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. அநீதியானது.

வக்ஃபு வாரிய சொத்துக்களை என்னென்ன விஷயங்களுக்காக பயன்படுத்த குத்தகைக்கு விடலாம் என்று வக்ஃபு வாரிய சட்டத்தில் வழிவகைகள் உண்டு. பள்ளிவாசல், அரபி பாடசாலை, அனாதை இல்லம், முதியோர் இல்லம், பள்ளிக்கூடம், உள்ளிட்ட 17 வகையான மக்கள் நல பயன்பாட்டிற்கு மட்டுமே குத்தகைக்கு விடலாம். அல்லது பயன்படுத்தலாம். என்று கூறப்பட்டுள்ளது அதை வக்ஃபு வாரியம் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். மேலும் தாங்கள் அபகரித்துள்ள இடத்தை தற்போது வக்ஃபு வாரியத்திடம் வாடகைக்கு தி.மு.க கேட்டுள்ளதாக தெரிகிறது.

அரசியல் கட்சிகளின் பயன்பாட்டிற்காக வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை துளி கூட வாடகைக்கோ, குத்தகைக்கோ, ஒப்படைக்க கூடாது. அது தவறான நடைமுறைக்கு வழிவகுக்கும். அவ்வபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரசியல் அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இப்படி வக்ஃபு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் வக்ஃபு வாரிய சொத்துக்கள் அனைத்துமே காணாமல் போய்விடும். வக்ஃபு வாரிய தலைமையும் அதன் உறுப்பினர்களும் தி.மு.கவின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளிவாசல் இடத்தை உடனே மீட்க வேண்டும். இல்லையேல் எங்கள் கட்சி அந்த இடத்தை மீட்க போராட்டத்தில் இறங்கும் என்றார் அலாவுதீன் ஆவேசத்துடன்.
முழு செய்தியையையும் வாசிப்பதற்கு கீழே உள்ள புகைப்படத்தில் கிளிக் செய்து வாசிக்கவும்

Wednesday, August 06, 2008

வக்பு வாரிய கல்லூரி விவகாரமும், ததஜவின் போராட்டமும்!

கேள்வி : வக்பு வாரியக் கல்லூரி விவகாரத்தில் வாரியத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ததஜ போராட்டம் நடத்தியுள்ளதே...?

பதில் : அணுசக்தி ஒப்பந்தம், மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற வற்றில் போராட்டங்களை நடத்தாதவர்கள், வக்பு வாரியத்தை மட்டும் குறிவைக்கிறார்கள் எனில், அவர்களது பொறாமை குணம்தான் இதற்கு காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இனி விளக்கத்திற்கு வருவோம். அதாவது வக்பு வாரியக் கல்லூரியை முன்னேற விடாமலும், கண்ணியக் குறை வான செயல்களை செய்துக் கொண்டும் ஒரு கூட்டம் தொடர்ந்து செய்து வந்த பித்தலாட்டத்திற்கு, எதிராக மதுரை மக்கள் வெகுநாட்களாக குமுறிக் கொண் டிருந்தார்கள். அதனடிப்படையில் அக்கல்லூரியை எல்லா வகையிலும் மேம்படுத்துவதற்காக வக்பு வாரியத் தலைவர் செ.ஹைதர் அலி எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறார்.

இதற்கு சிலர் அழகிரி பெயரை சொல்லி இடையூறு செய்தனர். அங்கு புதிதாக போடப்படும் 9 பேராசிரியர் களையும் முஸ்லிம் அல்லாதவர் களையே போட வேண்டும் என அடம்பிடித்தனர். இதற்கு வக்பு வாரியத் தலைவர் அசைந்து கொடுக்கவில்லை. பிறகு முதல்வர் கலைஞரை சந்தித்து வாரியத் தலைவர் முறையிட்டார். அதன் பிறகுதான் ஒன்பது பேரில் குறைந்தது ஐந்து முஸ்லிம் பேராசிரியர்களையாவது நியமிக்க வேண்டும் என முடிவானது. ஹைதர் அலி இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் 9 பேராசிரியர்களும் முஸ்லிம் அல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டிருப் பார்கள் என்பது மனசாட்சி உள்ளவர் களுக்கு தெரியும்.

முதல்வரின் மகன் பெயரை பயன் படுத்தி சிலர் துஷ்பிரயோகம் செய்ய வந்த போதும், அதை முதல்வரிடமே முறையிட்டு 9 பேரில் 5 பேரை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக நியமித் ததற்கு முறைப்படி பார்த்தால் பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பொறாமை காரணமாக குறை சொல்கிறார்கள்.

இத்தனை வருடங்கள் மோசமான நிலையில் வக்ஃபு வாரியம் இருந்தபோது, அதற்கு எதிராக போராடாதவர்கள் இப் போது தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்கள் வக்பு வாரியத்திற்கு தலைவராக பொறுப்பேற்ற பிறகு போராடுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? யார் துண்டுதல் என்பதை மக்களின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்.

- தமுமுக இணையத்தளம்