தாங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் நிறைவு உரையின் போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேரளாவிலும், ஆந்திராவிலும் தருவார்களேயானால் நாமும் தரத் தயார் என்று பேசியது எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கும், எல்லோருக்கும் எல்லாம் இருக்கும் இடம் நோக்கிச் செல்ல என்ற புரட்சிக்கவியின் பாடலுக்கும் எதிரான கருத்து.
தமிழக முஸ்லிம்கள் தங்களை முதல்வராக்க வாக்குகளை அளித்திருக்கிறார்கள். தமிழக முஸ்லிம்கள் கேரள முதல்வருக்கோ, ஆந்திர முதல்வருக்கோ வாக்களிக்க வில்லை.
பெரியார் பாசறையில் படைக்கலனாய் மிளிர்ந்த நீங்கள் பொறுப்பான முதல்வர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பொறுப்பை தட்டிக் கழிப்பது முஸ்லிம்களாகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இரண்டு முகம் என்கிற கூற்று நினைவுக்கு வருகிறது.
நாங்கள் இந்தியக் குடிமக்கள், இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள், வழியால் முஸ்லிம்கள், நாங்கள் தமிழக அரசுக்கு வரி கொடுக்கிறோம், உலக அளவில் அண்ணியச் செலாவணியை ஈட்டித் தருகிறோம், தேர்தல் வாக்குறுதிகள் மீறப்படுவதற்கு மட்டுமே என்ற தங்களின் நிலையை மாற்றி முஸ்லிம் தலைவர்கள் ஏமாறலாம், முஸ்லிம்கள் ஏமாறத் தயாராக இல்லை, காரணம் நெருக்கடிகள் எங்களை நெறிபட வைத்திருக்கிறது.
டாக்டர் கலைஞர் அவர்களே! தமிழக அரசின் வாய்மை வென்றிட, வாக்களித்த எங்களுக்கு மரபுகளை மீறாமல் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு.
No comments:
Post a Comment