Monday, October 05, 2009

முஸ்லிம்களின் தேவைகளை கேட்காமலேயே செய்பவர் முதல்வர் கருணாநிதி சமூக நல்லிணக்க விருதுகளை வழங்கி அன்பழகன் பேச்சு


சென்னை, அக்.5-
முஸ்லிம்களின் தேவைகளை கேட்காமலேயே நிறைவேற்றுபவர் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பழகன் கூறினார்.
சமூக நல்லிணக்க விருது
இந்திய ïனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் சமது பிறந்த நாளையொட்டி சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவுக்கு மாநில தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் தலைமை தாங்கினார்.
நிதி அமைச்சர் அன்பழகன், சமூக நல்லிணக்க விருதுகளை பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரிஅனந்தன், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை துணைத் தலைவர் டாக்டர் ஹபீப் முகம்மது, சிறுபான்மையோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் சேவியர் அருள்ராஜ் ஆகியோருக்கு வழங்கி பேசினார்.
உடல்நிலை சரியில்லை
அமைச்சர் அன்பழகனுக்கு வாழ்த்தி பேசிய இந்திய சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா.சற்குணம் குல்லா ஒன்றை பரிசாக வழங்க, அதனை காதர்மொய்தீன் அவருக்கு அணிவித்தார். அமைச்சர் அன்பழகன் அந்த குல்லாவை அணிந்தபடியே பேசினார். அவர் பேசியதாவது:-
இங்கு விருதுகளை வழங்கி பேச வேண்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிர்பாராத வகையில் 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக வரமுடியாத நிலையில் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். கழகம் சார்பில் நீயாவது கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறியதன் பேரில் அவர் சார்பில் நான் கலந்து கொண்டுள்ளேன்.
அனைவரும் திராவிடர்கள்
திராவிட இயக்கத்திற்கு இஸ்லாமிய சமூகத்தோடு நீண்ட தொடர்பு உண்டு. கருத்து ஒற்றுப்போனால் மன வேறுபாடு வராது. வன்முறை தவிர்க்கப்படுமேயானால் நியாயங்கள் தானாக நிலைக்கும். அந்த வகையில் நான் இந்த விழாவில் பங்கு கொண்டிருக்கிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை எல்லாம் எண்ணிக்கைக்காகத் தான். ஆனால் நாம் அனைவரும் சகோதரத்துவத்தால் ஒன்றாக இருக்கிறோம். மதம் வெவ்வேறாக இருந்தாலும் மொழி நமக்கு தமிழ் ஒன்று தான்.
நான் இந்த குல்லாவை அணிந்திருப்பதால் முழுக்க முஸ்லிமாகிவிடவில்லை. நண்பர்களை மதிப்பதற்கு தான் இந்த அடையாளம். நாம் அத்தனை பேரும் திராவிடர்கள். உலகிலேயே தென்னகத்து மக்கள் தான் மூத்த குடிமக்கள். தொன்மையான இனம் திராவிடம், தொன்மையான மொழி தமிழ். இஸ்லாமுக்கும், கிறிஸ்துவத்துக்கும் அன்பும், சமத்துவமும் அடிப்படையானவை. இதற்கு அடிப்படை காரணம் திராவிட அடிப்படை. அந்த அடிப்படையில் நாம் எல்லோரும் ஓர் இனம்.
பிற்பட்டோர் பட்டியலில்
இஸ்லாமியர்களுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்காமலேயே கொடுக்கக் கூடியவர். இந்த சமுதாயத்திற்காக தி.மு.க. ஆட்சி செய்த சாதனைகளை, உதவிகளை அவர் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறார். மிலாது நபிக்கு முதன்முதலாக விடுமுறை அளித்தது தி.மு.க. ஆட்சி தான். தெக்கனி, லெப்பை முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தது, அரசு கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டியது, சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தது, ஓய்வூதியம் பெறும் உலாமாக்கள் எண்ணிக்கையை 2400 ஆக உயர்த்தியது தி.மு.க. ஆட்சி தான்.
98-ல் மதுரை வக்பு வாரிய கல்வி நிறுவனங்களை பராமரிக்க ரூ.5.95 லட்சம் வழங்கப்பட்டது. 99-ல் ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கியது, முஜாபர்களுக்கும் ஓய்வூதியம் நீட்டிப்பு, உருது அகாடமி தொடங்கியதும் தி.மு.க. ஆட்சியில் தான்.
கேட்காமலேயே செய்வார்
ரூ.58.69 லட்சம் செலவில் காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. இஸ்லாமிய ஆய்வு மையம் ஏற்படுத்தியது, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது, தனி இயக்குனரகம் அமைத்தது, உலாமாக்கள் வாரியம் ஏற்படுத்தியது போன்ற பணிகளை தி.மு.க. ஆட்சி தான் செய்தது. எனவே முஸ்லிம்களுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்காமலேயே செய்யக் கூடியவர்.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.
மின்கட்டண சலுகை
முன்னதாக மசூதிகளுக்கும், மதரஸாக்களுக்கும் மின் கட்டணம் வணிக ரீதியில் அல்லாமல், வீட்டு கட்டண ரீதியில் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
விழாவில் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் மத்திய மந்திரியுமான அகமது வாழ்த்தி பேசினார். மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் வரவேற்றார். அப்துல்ரஹ்மான் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலிலூர்ரஹ்மான், அப்துல்பாஷித், அய்ïப் ரஹ்மானி, செய்யது அகமது, மாவட்ட தலைவர் ஜெய்னுலாபுதீன், இளைஞர் அணி அமைப்பாளர் நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் அணி அமைப்பாளர் பாத்திமா முஸப்பர் நன்றி கூறினார்.

No comments: