Thursday, April 16, 2009

வாலிபருக்கு தமுமுக உறுப்பினர் என்பதால் மறுக்கப்பட்ட சிறை வார்டன் பணி வழங்க பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு

மதுரை: கன்னியாகுமரியை சேர்ந்தவருக்கு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்ததற்காக மறுக்கப்பட்ட சிறை வார்டன் பணியை வழங்க சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த சகுபர் சாதிக் தாக்கல் செய்த ரிட் மனு: நான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக வடக்குசூரங்குடி கிளையில் உறுப்பினராக இருந்தேன். ஒரு வாரஇதழ் ஏஜன்ட்டாகவும் பணிபுரிந்தேன். என் மீது ஈத்தான்மொழி போலீசில் ஒரு குற்றவழக்கு பதிவாகியிருந்தது. அதில் என் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்.


இந்நிலையில் நான் சிறை வார்டன் கிரேடு 2 பணிக்கு அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்றேன். எனக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. சீரூடை பணியாளர் தேர்வாணைய தலைவர், சிறை ஐ.ஜி., எஸ்.பி.,யிடம் கேட்ட போது என் மீது வழக்கு, முஸ்லீம் முன்னேற்ற கழக உறுப்பினர், வார இதழ் ஏஜன்ட் என காரணம் காட்டி பணியில் நியமிக்க மறுத்து விட்டனர். என்னை பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். மனுதாரர் சார்பில்வக்கீல்கள் லஜபதிராய், ஜின்னா ஆஜராயினர்.


நீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்த உத்தரவு: முஸ்லீம் முன்னேற்ற கழகம் அமைதியை குலைக்கும், வெறுப்பை தூண்டும் அமைப்பு என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இங்கு தாக்கல் செய்யப் படவில்லை. அரசால் தடை செய்ய இயக்கமோ, மதரீதியான இயக்கமோ என அறிவிக்கப்படவில்லை. அதில் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே மனுதாரர் தகுதியற்றவர் என கூற முடியாது. இவ்விஷயத்தில் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உட்பட மூன்று பேரது அணுகுமுறை தவறு. மனுதாரரை மேலும் கஷ்டபடுத்த அனுமதிக்க கூடாது. அவரை பணியில் அமர்த்த மூன்றுஅதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நன்றி : தினமலர்

No comments: