மகள் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அமீர் ஜவஹர், தமிழன் தொலைகாட்சியில், "ஒற்றுமையை நோக்கி.." என்கிற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நம் முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஒற்றுமையின்மையின் காரண காரியங்கள், அது எற்படுவதற்கான வழி வகைகள் என்று பல தரப்பட்ட கருத்துக்களை கூறி வருகிறார்கள் இதில் என்னுடைய பேட்டியும் இரண்டு பகுதிகளாக இடம் பெற்றுள்ளது
இந்த நிகழ்ச்சி பற்றி கருதுச் சொன்ன மவுலவி பீஜே இதை ஒரு கோமாளிக்கூத்து என்று ஆரம்பத்தில் கூறியதாக வருத்தப் பட்ட அமீர், பிறகு பீஜே தன் கருத்தை மாற்றிக் கொண்டதாகவும் சொன்னார்.
ஆனால் சில தினங்களுக்கு முன் வின் தொலைக்காட்சியில் நடந்த அவரது கேள்வி-பதில்'நிகழ்ச்சியில் "பிரிவு ஏற்படத்தான் செய்யும். ஒரே குழுவாக இருப்பது நடக்காத காரியம். நடப்பது தவறு. அதைச்சுட்டிக் காட்டி நல்லதுகளை எடுத்துச் சொல்கிறோம். அப்போ கொஞ்சம் பேர் அங்கிருந்து பிரிந்து நம்மகிட்டே வரத்தான் செய்வாங்க. அதைத் தடுக்க முடியாது. அப்படி பிரிஞ்சி, பிரிஞ்சி வந்து கடைசியிலே நாமெல்லாம் ஒண்ணாயிடுவோம். ரசூலுல்லா காலத்தில் குறைஷிகள் ஒண்ணாத்தான் இருந்தாங்க, பிறகு பிரிஞ்சி, பிரிஞ்சி வந்து கடைசியிலே ஒண்ணாயிடல்லியா" என்று ஒரு வினோதமான காரணத்தை முன் வைத்ததன் மூலம் தன்னைப் பொறுத்தவரை ஒற்றுமைக்கான வாசற்கதவை இழுத்து மூடி விட்டார் என்றே கொள்ள வேண்டியதாக இரூக்கிறது.
இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலர் ஹக்கிம் சத்தார் பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெற்ற பேரணியைக் குறித்துப் பேசுகையில், "உணர்ச்சி வசப்பட்டு என்ன பிரயோஜனம் ? அறிவு பூர்வமாகச் சிந்தியுங்கள். முஸ்லிம் லீக் காரர்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கக் கூடியவர்கள்" என்று தங்கள் கையாலாகத் தனத்துக்கு சப்பைக்கட்டு கட்டினார். பொதுவாக முஸ்லிம் லீக் கட்சியினர் Easy-chair intellectuals - சாய்வு நாற்காலி சண்டப்பிரசங்கிகள் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது.
அதை நிரூபிப்பது போலவே ஹக்கிம் சத்தாரின் பேச்சும் அமைந்தது. அதைவிட கலிமாச் சொன்ன ஒவ்வொரூ முஸ்லிமும் முஸ்லிம் லீக் தான் என்று அவர் அடித்த ஜோக்கை நினைத்து யாரும் வாயால்(?) சிரிக்க மாட்டார்கள் என்பது என்னவோ உண்மை.
ஒரு 'இஃப்தார்' நிகழ்ச்சி. நான் தொகுத்து வழங்கினேன். அநேகமாக எல்லா முஸ்லிம் தலைவர்களும் ஆஜர். எல்லோருமே ஒற்றுமையை வலியுறுத்தியே பேசினார்கள். கடைசியாக தேசீய லீகைச் சேர்ந்த அப்துல் காதர் என்கிற பெரியவர் பொட்டார் ஒரு குண்டு, "என்ன எல்லாரும் ஒத்துமை ஒத்துமைன்னு பேசிக்கிட்டு இருக்கீக. எல்லாரும் அவங்க, அவங்க அமைப்பை கலச்சிப்புட்டு எங்க கட்சிக்கு வந்துடுங்க எல்லாம் சாரியாப் போகும் ஒத்துமை வந்துடும் என்றார்." - கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா ?
இப்போது அந்த தேசிய லீகுக்குள்ளேயே பிளவு. 'கோனிக்கா' பஷீர், தான் தான் இன்னமும் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியின் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் செய்யது இனாயத்தூல்லா சாகிபை தலைவராக அறிவித்துள்ளார்கள். இவர் பல்வேறு இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் முகமாக எடுக்கப்பட்ட முயற்சிகளில் முனைந்து முன் நின்றவர். தன்னுடைய நோக்கம் பதவியல்ல; ஒற்றுமைக்கான தொடர்ந்த முயற்சிதான் என்று தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.
ஒற்றுமை பற்றி ஒரு தலைவரிடம் நான் பேசியபோது, "நானும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்கிறேன். ஆனால் அபூ ஜஹில்களோடு யாருங்க சேருவா" என்று என்னை அதிர வைத்தார்.
நான் இதற்கு முன்பு 'தஃப்ரகில்' எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் ஒற்றுமை என்கிற விஷயத்தில் மக்கள் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஆசைப்படுகிறார்கள். ஆதங்கப் படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தலைவர்கள் மத்தியிலோ அல்லது தொண்டர்கள் மத்தியிலோ இப்போதுள்ள நிலையிலிருந்து மாறுவதற்கான எந்தவிதமான அறிகுறிகளையும் காணோம். .
ஆக, We are back to square one - நாம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி இருக்கிறோம். and we are at the cross-roads - நம் சமூகம் நிற்பது நாற்சந்தியில்.
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
No comments:
Post a Comment