Sunday, September 30, 2007

துபாயில் JMC முப்பெரும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க முப்பெரும் விழா



துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி, வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக முஹம்மது அனஸ் இறைவசனங்களை ஓதினார். பரீஜ் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் மன்ற பொதுச்செயலாளர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மன்ற அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 'துபாய் பிளாக்' என இரண்டு விடுதிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். வருடந்தோறும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது கல்லூரி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கி வருவதாகத் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் உலக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான முனைவர் எம்.எம். ஷாகுல் ஹமீது தனது உரையில் ஜமால் முஹம்மது கல்லூரிக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு தாய், மகன் பாசப்பிணைப்பைப் போன்றது என்றார். தாயகம் வரும் ஒவ்வொரு வரும் தனது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல் கல்லூரிக்கு வருகை தர கேட்டுக் கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஷேக் முஹம்மது கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு படிப்புகள், கேம்பஸ் இண்டர்வியூ, வருடந்தோறும் ஆகஸ்ட் 15 அன்று நடத்தப்பட்டு வரும் முன்னாள் மாணவர் மன்ற விழா, கல்லூரியில் பள்ளிவாசல் விடுதிக்கட்டிடத்திற்கு உதவிய ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தீன் மேலும் பல்வேறு வழிகளில் கல்லூரிக்கு உதவி வரும் ஈடிஏ டி என் எஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் அல்ஹாஜ் நூருல் ஹக், HRM ED அல்ஹாஜ் எம். அக்பர் கான் உள்ளிட்ட பலரை நினைவு கூர்ந்தார்.

கல்லூரி தாளாளர் அல்ஹாஜ் எம்.ஜே. அப்துல் கபூர் சாஹிப் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவி வரும் முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி பொருளாளர் அல்ஹாஜ் கே.ஏ. கலீல் அஹமது சாஹிப், பேராசிரியர் கலந்தர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து தனது நிறுவனங்களுக்கு கல்லூரி மாணவர்களைத் தேர்வு செய்யும் திட்டத்தை அறிவித்தார்.முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.



துபாயில் 'இறைவாக்கும் நபிவாழ்வும்' நூல் வெளியீட்டு விழா



துபாய் ஏகத்துவ மெய்ஞானசபையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் எழுதிய 'இறைவாக்கும் நபிவாழ்வும்' எனும் நூல் வெளியீட்டு விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம். ஜெ. முஹம்மது இக்பால் விழாவிற்கு தலைமை வகித்து, நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். பெருங்கவிக்கோ அவர்கள் சகொதர சமுதாய மக்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் கொண்டுள்ள அன்பை, நட்பை விவரித்தார். அவர்களின் தமிழ்ப்பணி குறித்து விவரித்தார்.

ஏற்புரை நிகழ்த்திய பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் இஸ்லாமிய தமிழ் ஞான சிறப்பு மற்றும் இஸ்லாமியர்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்தும், தனது தமிழ்ப் பணிக்கு அவர்கள் கொடுத்து வரும் அபரிமிதமான ஒத்துழைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும் மெய்ஞான சபை ஞானக்கடல் இமாம் கலீல் அவ்ன் மெளலானா அவர்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் விவரித்தார்.

சபையின் கவிஞர்கள் பெருங்கவிக்கோவின் சேவைகளை பாராட்டிப் பேசினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.ஜே. அப்துல் ரவூப், இம்தியாஸ் உள்ளிட்டோர் சிறப்புற செய்திருந்தனர்.


தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

No comments: