Thursday, May 31, 2007

"கைதியின் கதை" - உளவுத் துறை விசாரனை - தினமலர்

ஜனாப்.அப்துன் நாசர் மதானி


மதானிக்கு ஆதரவாக "கைதியின் கதை' ஆவணப்படம் "சிடி'யாக வெளியீடு

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் மதானி, முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஆதரவாக, "கைதியின் கதை' என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு நெருங்கும் வேளையில், "சிடி' வெளியிடப்பட்ட பின்னணி என்ன என்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சியினர் நிறுவனர் அப்துல்நாசர் மதானி(41) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் 167 குற்றவாளிகள் மீதான விசாரணை தனி நீதிமன்றத்தில் முடிந்தது; தீர்ப்புக்காக வழக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், "கைதியின் கதை' (மதானி மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த ஆவணப்படம்) என்ற தலைப்புடன், 45 நிமிட படம் "சிடி'யாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை, "மீடியா ஸ்டெப்ஸ்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது; "ஆலூர் ஷானவாஸ்' என்பவர் இதை தயாரித்துள்ளார். இப்படத்தில், மதானியின் பள்ளி பருவம், ஆவேசமான அரசியல் மேடைப்பேச்சு, மத ரீதியான போதனைகள் இடம்பெற்றுள்ளன. "சங்க் பரிவார்' அமைப்புக்கு எதிராக 1991ல், "இஸ்லாமிக் சேவா சங்' அமைப்பை துவக்கியது; வெடிகுண்டு தாக்குதலில் மதானியின் கால் ஊனமடைந்தது தொடர்பான, விளக்கங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



பாபர் மசூதி இடிப்புக்கு பின், "இஸ்லாமிக் சேவா சங்' தடை செய்யப்பட்டு, "கேரள மக்கள் ஜனநாயக கட்சி' (பிடிபி)யாக உருவானதும் விளக்கப்பட்டுள்ளது. மதானியின் சொந்த ஊரான, சாஸ்தான் கோட்டையில் வசிக்கும் அவரது தந்தை, பள்ளி தலைமையாசிரியர் அப்துல்சமது பேட்டி, கேரளா மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில செயலர் முகமது ரஜீம் பேட்டியும் இடம்பெற்றுள்ளன. ரஜீம் பேட்டியில்,""கோவை சிறையில் உள்ள மதானியை விடுவிக்க, சென்னை ஐகோர்ட், கேரளா ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வரை சென்றோம்; முடியவில்லை.

அவர் மீதான வழக்கு செலவுக்காக, எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீடு விற்கப்பட்டுள்ளது,'' என, தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் அளித்துள்ள பேட்டியில்,""விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவரை, விசாரணை கைதியாகவே ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைத்திருப்பது மனித உரிமை மீறல்,'' என, தெரிவித்துள்ளார். சிலரது விமர்சனங்களும், இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

மதானியின் மனைவி சூபியா அளித்துள்ள பேட்டியில், ""ஒன்பது ஆண்டுகளுக்கு முன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கணவர், கோவை சிறையில் உள்ளார். அவரை சந்திக்கும் போதெல்லாம், எனக்கு தைரியமூட்டுவார்; அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. சிறைக்கு சென்றபோது அவரது எடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாக குறைந்துவிட்டது. முறையான சிகிச்சை இல்லாததே இதற்கு காரணம்,'' என, குற்றம் சாட்டியுள்ளார். இறுதியில், சட்டம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், மதானியின் சிறைவாசத்தை நிச்சயம் கண்டிப்பார்கள்' என்ற வர்ணனையுடன் படம் முடிகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் "சிடி', ஒரு பிரிவு மக்களிடையே வினியோகிக்கப்பட்டு வருகிறது; இதன் பின்னணி என்ன, என்பது குறித்து உளவுப்போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி : தினமலர்

1. கைதியின் கதை சிடி வெளியீட்டு விழா செய்திகள்

2. கைதியின் கதை வீடியோ "தமிழ் முஸ்லிம் மீடியா" வில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் இது உள்ளது பார்க்க அல்லது டவுன்லோட் செய்ய விரும்புபவர்கள் www.tamilmuslimmedia.com என்ற முகவரியில் சென்று பார்க்கலாம்.

1 comment:

அருளடியான் said...

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் பணியாற்றிய மூன்று பத்திரிக்கையாளர்களை எரித்துக் கொன்ற வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி, சென்னையில் நடைபெறும் அரசு விழாவுக்கு போலீஸ் பாதுகாப்போடு வந்து செல்கிறான். அவன் சட்டத்துக்கு அஞ்சவில்லை. 'கைதியன் கதை' ஆவணப்பத்தில் சட்டவிரோதமாக எதுவும் இல்லை. இப்படத்தை தயாரித்தவர்கள் உளவுத்துறைக்கு அஞ்சத்தேவையில்லை. இப்படத்தை தடை செய்யமுடியாது. அப்படித் தடை செய்தாலும் தமிழகம் முழுவதும் பரப்புவோம். முஸ்லிம் லீக்கை விமர்சிக்கும் இப்படம், தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் முந்தானையில் ஒளியும் இந்திய தேசியலீக் பஷீர், தாவூத் மியா கான், ஷேக் தாவூது, காயல் இளவரசு போன்ற முஸ்லிம் தலைவர்களையும் தோலுரித்திருக்க வேண்டும்.