Sunday, May 06, 2007

நீதியைத்தேடி...(கவிதை)

ஆயிரக்கணக்கானோரை விசாரித்து முடித்தும், தமக்கெதிரான சாட்சியங்கள் ஏதுமில்லா சூழலிலும், வாழ்க்கையை இழந்து விரக்தியின் விளிம்பில் விசாரணைக்கைதிகளாய் கோவைச்சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய "நீதியைத் தேடி!" மற்றும் "கைதியின் கதை!" ஆகிய குறுந்தகடுகள் கண்டதால் மனதில் விம்மியெழுந்த எண்ண அலைகளை கவிதை உருவில் இங்கே வெளிப்படுத்தியுள்ளேன் - ஆக்கம்: இப்னு ஹனீஃப்



கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்
தூரிகை கொண்டு வரையப்பட்ட
ஓவியமோ காவியமோ அல்ல இது!
எங்களது உடலில் இன்னும்
உயிர் உள்ளது என்ற
மறக்கப்பட்ட உண்மைக்கு
எஞ்சியுள்ள ஒரே சான்று!

எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்
வேதனையை வெளிபடுத்த இந்த
உள்ளத்திற்கு கண்ணில்லையே,
கண் கட்டப்பட்ட இவ்வுலக
நீதி தேவதையைப் போல்...
ஆகையால்தான் வேதனை, வெளியே
தெரியும் விழிகளின் வழியே வெப்பமாக!

வேதனையை வெளிப்படுத்த இந்த கண்கள்
இரத்தக் கண்ணீர் வடிக்கும் சாத்தியமில்லை,
பானையில் இருந்தால்தானே
அகப்பையில் வரும்? - தற்போது
எங்கள் உடலிலும் இரத்தம் இல்லையே!
ஈவிரக்கமற்ற காட்டேரிகளைப்போல்
நாங்களுமா நடமாடும் சடலங்களானோம்?

இங்கு சமத்துவம் ஆழமாக இருக்கிறது!
அப்பாவிக்கும், பாவிக்கும் இல்லை
சிறு வித்தியாசங்கள் இங்கு பல,
இருவரும் இருக்கின்றனர்
சமமாக!? - இவ்வுலகில்,
நடமாடிக் கொண்டும், நடைப் பிணங்களாகவும்,
சிறைக்கு உள்ளும், வெளியிலும்!

நாங்களும் வாழ்ந்தோம் சில நாட்கள்!
"அந்த இனிமையான மணித்துளிகளின்
நினைவுகள் போதும், மீண்டும்
நாம் சந்திக்கும் வரை, அல்லது
சத்திய மரணம் நம்மை சந்திக்கும் வரை''
எனும் வார்த்தைகள் இன்னும் எத்தனை
நாட்கள் உதவும் அறியோம் இறைவா!

நீதி தேவதையே, நீ கண்ணை கட்டி இருப்பது
பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்கிடவே
என்ற எங்கள் நம்பிக்கையை, உன்
நீதித் தாராசில் நிறுத்திப்பார்! - அநீதி
இழைக்கப்பட்டோர் உன்னிடம்
எதிர்பார்ப்பை கைவிட்டு
களத்தில் இறங்கியதன் காரணம் புரியும்!

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற சில
முத்திரைகளுக்கு அஞ்சிடுவர் இவர்களென்று
எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை!
இப்போது அவர்களின்
எதிர்பார்ப்புகள் அநியாயமாக
மறக்கவும், மறுக்கவும் பட்டு
வேதனை மட்டுமே தொடர்கதையாக!

நீதி தேவதையே, நீ கண் திறக்க
மாட்டாயா என்று கேட்பவர்கள்
குரல் ஓலமாய் மாறும் முன், உன்
நீதி உடனே வழங்கப்பட வேண்டும்!
அதுவே உன்னுடைய உடலில்
உயிருள்ளது என்பதற்கு எஞ்சி
இருக்கும் கடைசி வாய்ப்பு!!

No comments: