Thursday, April 12, 2007

முஸ்லிம்களுக்கு தனி உள் ஒதுக்கீடு தேவை - Hasan Ali M.L.A

முகவை சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்கள்


முஸ்லிம்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வேண்டும்!
சட்டமன்றத்தில் உறுப்பினர் ஹசன் அலி உரை


(தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான மானியக் கோரிக் கையின்போது. கடந்த ஏப்ரல் 5 அன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏன் தேவை என்பதை எடுத்துரைத்து 30 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சி.பி.எம். உறுப்பினர் பால பாரதி மற்றும் திமுக உறுப்பினர் கலீலுர்ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர். இந்த உரைகளைத் தொடர்ந்து முதல்வர் இடஒதுக்கீடு அறிவிப்பை செய்தார் இங்கே சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி அவர்களின் உரையிலிருந்து சில முக்கியப் பகுதிகளை அளிக்கிறோம்.)


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே... உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

''தேர்தல் சமயத்திலே அன்னை சோனியாவினுடைய தொண்டனாக நான் தேர்தலிலே நின்றபோது கலைஞர் அவர்களுடைய வாக்குறுதியான சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்பதை சொல்லித்தான் நான் சிறுபான்மையினரிடம் வாக்களிக்குமாறு கேட்டேன்.

திருச்சியிலே நடந்த மாநாட்டிலே, சேது சமுத்திரத் திட்டம் எப்படி தமிழர்களின் நீண்டநாள் கனவாக இருக்கின்றதோ, அதேபோல் சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் இந்த இடஒதுக்கீடு நீண்ட கால கனவாக இருக்கிறது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றால் உடனடியாக அதை நிறைவேற்றுவேன் என்று சொன்ன கலைஞர், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆளுநர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் அரசு கொள்கை விளக்கக் குறிப்பிலும் இடம்பெறச் செய்தார்கள்.

இந்த இடஒதுக்கீடு என்பது இன்றைக்கு இங்கே சட்டமன்றத்திலே நான் உங்களிடம் கேட்க வேண்டுமா அல்லது நீதிமன்றத்திலே போய் எனக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டுமா என்கின்ற ஒரு நிலை இருக்கிறது. ஏனென்றால் Judiciary யிலே போய்க் கேள் என்றுதான் இன்றைக்குச் சொல்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் யார் என்பதை எப்படி அறிய வேண்டும் என்று சொல்லுகின்ற தகுதி நீதிமன்றங்களுக்கு இல்லை. அதற்கு நீதிமன்றங்கள் ஏற்புடை யவும் அல்ல. ஏனென்றால் சமுதாயத்தில் யார் யார் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளார்கள் என்பதை அளவிடக்கூடிய அளவுகோல் எதுவும் நீதிமன்றங்களிடம் இல்லை. இதற்கு நீதிமன்றங்கள் சமுதாயத்திலுள்ள மக்களுடைய ஏற்றத்தாழ்வுகளிலிருந்து ஒதுங்கியிருப்பதுவே காரணம். இதை நான் சொல்லவில்லை. நீதியரசர் சின்னப்ப ரெட்டி அவர்கள், வசந்தகுமாருடைய வழக்கிலே சொல்லியிருக்கிறார்.

இதே போல நீதிபதி தேசாயும் சொல்லியிருக்கிறார். நீதி தேவதையினுடைய கண்களிலே கட்டியிருக்கி றார்களே கறுப்புத் துணி, அதை யார் என்று பார்க்காமல் சம நீதி
செய்வதற்கு. ஆனால் இன்றைக்கு கட்டியிருக்கும் கறுப்புத் துணியோ இந்த மக்களிடமிருந்து விலக்கி வைப்பதற்கு, இந்த மக்களைப் பார்க்கக் கூடாது என்பதற்காக கட்டி வைப்பது என்று. இப்படி எத்தனையோ இருக்கின்றன. இவைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.


ஆனால் இன்று இவைகளையெல்லாம் மீறி முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு செய்வதில் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எந்தவித சட்டசிக்கலும் இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது. மண்டல் ஆணையம் தொடர்பான வழக்கில் தமிழக முஸ்லிம்கள் 94.61 சதவிகிதம், கிறிஸ்தவர்கள் 79.83 சதவிகிதமும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு NSSO தேசிய மாதிரி ஆய்வு நிறுவனங்களை மேற்கோள் காட்டி தமிழக முஸ்லிம்கள் 93.3 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று சச்சார் குழு அட்டவணை 10ல் 3ஆம் பாகத்தில் 204வது பக்கத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவிலே உள் ஒதுக்கீடு வழங்குவதிலே எந்த இடர்ப்பாடும் எழவில்லை. கர்நாடகாவிலே சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதிலே எந்த இடர்ப்பாடும் எழவில்லை. அதுபோல இந்த இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சாசன சட்டத்திருத்தமோ தேவையில்லை. 2007லி2008ஆம் ஆண்டு பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் அடிப்படையில் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு செலவிடும் மொத்த தொகையில் 15 சதவிகிதத்தை மத ரீதியான சிறுபான்மையினருக்கு மேற்கு வங்காளம் ஒதுக்கியிருப்பது போல இந்த தமிழக அரசும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.


நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களுடைய குறிப்பிலே மிக அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. 25 சதவிகிதம் இந்த பிற்படுத்தப்பட்ட நலிவுற்ற முஸ்லிம் சமுதாயக் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை. அப்படியே சென்றாலும் பாதியிலேயே அந்தப் பள்ளிப் படிப்பை விட்டு விடுகிறார்கள். இதைக் களைவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாவதாக முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலே மானியங்களும், ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் நடத்துகின்ற பள்ளிகளை தரமான பள்ளிகளை முன்வந்து தமிழக அரசே நடத்த வேண்டும். அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு என்று தனியாக பள்ளிகள் அமையப்பட வேண்டும். அவர்கள் தங்கும் விடுதிகளும் அமையப்பட வேண்டும். தமிழ் வழியில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலே அவர்கள் தொடங்கும் புதிய வகுப்புகளுக்கு மானியம் அளிப்பதில்லை என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் முஸ்லிம் கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் பாடங்களுக்கு மானியம் அளிப்பதில்லை என்பதை மறுபரிசீலனை செய்து முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியிலே தொழிற் பயிற்சி நிறுவனங்கள் அமைப்பீர்களேயானால் இந்த தொழில் பயிற்சி நிலையங் களில் சேர்வதற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதாவது 8வது படித்தால் அவர்களுக்கு சேர முடியும் என்ற நிலையை உருவாக்கினால்தான் அங்கே இந்த பிற்படுத்தப்பட்ட, நலிவுற்ற மாணவர்கள் சேர்வதற்கு வகை செய்யப்படும்.

நவீன உயர்கல்வி, சிறுபான்மையினரால் நடத்தப்படும் பொறியியல் மற்றும் உயர் தொழிற்கல்வி நிறுவனங்களில் நலிவுற்ற சிறுபான்மை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கவும், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிறுபான்மை யினர் தொடங்கும் பள்ளிகளுக்கு மானியம் வழங்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத ரீதியாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை மிகமிகக் குறைவு. உதவித் தொகையையும், பயனாளிகள் தொகையையும் பெருக்கிட இந்த அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களில் 4.1 விழுக்காடு முஸ்லிம்கள். இதைச் சொல்லும்போது, மொத்தத் தமிழக மக்கள் தொகையிலே 5.66 விழுக்காடு முஸ்லிம்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தக் கொடுமை உங்களுக்கு விளங்கும்.

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கான நிதியை பன்மடங்கு உயர்த்த வேண்டும். இதற்கு நீங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டி வசூல் செய்கின்றீர்கள். வட்டி வசூல் செய்வது ஒரு சிறிய தொகையே ஆனாலும் கூட, முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வட்டி கொடுப்பதும், வாங்குவதும் மத ரீதியாக தடை செய்யப்பட்ட ஒன்று. ஆகவே நீங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியிலிருந்து விலக்களித்து மேற்கு வங்கத்திலே செய்திருக்கிறார்கள் இதற்கு சேவை வரி ஒன்றைச் செய்யலாம். சேவை வரி என்று சொன்னால் தயங்காமல் அதை வாங்க முடியும். ஆகவே அதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களுடைய அவல நிலையை நீங்கள் அறிய வேண்டுமென்றால், 1.1.2006, அதாவது சென்ற வருட தமிழக அரசின் விவரக் குறிப்பைப் பார்த்தாலே உங்களுக்கு விளங்கும். 1.1.2006 அன்று தமிழகத்தில் உள்ள 296 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் வெறும் 10 பேர்தான் முஸ்லிம்கள். 231 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் வெறும் 10 பேர்தான் முஸ்லிம்கள். அதிலும் இருவர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2007ல் குடிமைப் பணியில் 540 அலுவலர்களில் வெறும் 17 பேர்தான் முஸ்லிம்கள். அவர்களில் 3 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர்.

சச்சார் குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்துவோம் என்ற கலைஞர் அரசின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள்; செய்வார்கள். இதில் சுட்டிக்காட்டியுள்ள கேரள இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும். நான் இதையெல்லாம் இங்கே கலைஞரிடம் சொல்லி, 'கலைஞர் அவர்களே, இதையெல்லாம் எனக்கு நீங்கள் செய்ய வேண்டும்' என்று நான் கேட்கும்போது, ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் ஒரு எல்.கே.ஜி மாணவன் ஐயா இப்படி, இப்படி நடக்க வேண்டுமென்று சொல்வது போல் இருக்கலாம் ஏனென்றால், கலைஞர் நான் சொன்ன எல்லாவற்றையும் விட கூடுதலாகச் செய்பவர். நான் சொல்வதே சிறிது. இதைவிடச் சிறப்பானத் திட்டங் களை வைத்திருக்கிறார்கள்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

காரைக்கடி, இஸ்லாம், முஸ்லிம்

No comments: