Saturday, July 21, 2012

தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் தற்போதைய கடமைகள் (மீழ் பதிவு)



தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் தற்போதைய கடமைகள்
நெடுங்காலமாக இந்தியாவை ஜாதி வெறி, மத வெறி எனும் நோய் பீடித்து வருகின்றது. ஜாதி மதம் என்ற மாயையில் வீழ்த்தி நம்முள் ஜாதி மத கலவரங்களை மூட்டி ரத்த ஆறு ஓடச்செய்து 80 சதவிகிதத்திற்கும் அதிகமான எம் இந்திய பூர்வீக குடிமக்களை ஓர் சிறிய கூட்டம் அடிமையாக நடத்தி வருகின்றது. ஒவ்வொரு முறையும் திட்டமிட்ட மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். கோடிக்கணக்கான பெருமதியுள்ள சிறுபான்மை சமுதாயத்தின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. குஜராத்தில் எம்மக்களின் குடலுறுவிய ரத்தத் தடயங்கள் மாறும் முன் இதோ மும்பையிலும் கோவையிலும் மற்றுமோர் நிகழ்வுக்கான ஆயத்தங்கள்.

இந்தச்சூழ்நிலையில் தமிழகத்தில் நம் மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தி மக்களை சமூக அரசியல் ரீதியாக பாதுகாக்க வேண்டிய நம் இயக்கங்கள் இன்று தம்மில் அடித்துக்கொண்டு அதை உலக மக்களின் பார்வைக்காக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றார்கள். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட நம் சமுதாயத்தின் உரிமைக்கு குரல் கொடுக்க துவங்கப்பட்ட சில பத்திரிகைகள் தங்களின் கூட்டணி தலைவர்களின் புகழ்பாடவும் அவர்களின் ஆளுயர புகைப்படங்களை தாங்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மறுமலர்ச்சி போன்ற பத்திரிகைகள் மூலையில் உறங்குகின்றன.

சமூக மறுமலர்ச்சிக்காகவும் ஒடுக்கப்பட்ட நம் இனத்தின் மீட்சிக்காகவும் துவக்கப்பட்ட பல இயக்கங்கள் தம்முள் ஏற்ப்பட்ட கலகத்தாலும் யார் பெரியவன் என்ற போட்டியில் அரசியல் சாக்கடையில் சங்கமித்ததாலும் சமூக அரசியல் பேரியக்கங்கலாகி சுய அடையாளத்தை இழந்து நிற்கின்றன. அந்தோ பரிதாபம். இந்தச்சூழ்நிலையிலும் அத்தி பூத்தாற்போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. இது வரை சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் புறக்கணிக்கப்பட்டே வந்த நமது சமுதாயத்திற்கு குறிப்பிட்டு சொல்லும் வகையில் சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் இடம் கிடைத்துள்ளது. இது உண்மையில் நம்மை மகிழ்ச்சியில் ஆழத்திய செய்தி.

அதுபோல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளின் கூட்டணியில் நமது சமுதாய இயக்கங்களான தமுமுக மற்றும் முஸ்லிம் லீக் போன்ற இயக்கங்கள் உள்ளன அதுபோல் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் தங்களின் உறுப்பினர்களையும் முஸ்லிம் லீக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இடஒதுக்கீடு என்ற மிட்டாயை காட்டியே நமது சமூக ஓட்டுக்களை அரசியல் கட்சிகள் பெற்று வந்தன அதற்கு உடந்தையாக நமது சமுதாய அமைப்புக்களும் துணை நின்றுள்ளன. ஆனால் இது வரை இடஓதுக்கீடு என்ற பழம் தேர்தல் நேரத்தில் மட்டுமே காண்பிக்கப்பட்ட எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலின் போது இடஒதுக்கீடு என்ற கனியுடன் அப்பாவி முஸ்லிம் விசாரணைக்கைதிகளின் விடுதலையும் தேன்தடவிய வாக்குறுதிகளாக காட்டப்பட்டன.

இன்று திமுக பதறியேற்றவுடன் செய்த சில செயல்கள் இந்த ஆட்சியின் மீது சிறிய நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டாண்டு காலமாக நாம் அரசுப்பணிகளிலும், கல்வியிலும் புறக்ககணிக்கப்பட்டே வருகின்றோம். யார் நம்மை புறக்கணிக்கின்றார்களோ இல்லையோ இந்திய ஃபாசிச கும்பல்கள் நமக்கு (முஸ்லிம்களுக்கு) எந்த விதத்திலும் இடஓதுக்கீடு கிடைக்கக்கூடாதென்பதிலும் எந்த விதத்திலும் நமது சமூகம் உயர்கல்வி பெற்றிடக்கூடாதென்பதிலும் மிக கவனமாக செயல்பட்டு வருகின்றார்கள். இந்தச் சுழ்நிலையில் தமிழகத்தில் நமது சமுதாயத்தின் பாதுகாவலர்கலாக தங்களை அடையாளங்காட்டும் இயக்கத்தினர் செய்ய வேண்டிய கடமைகளாக சிலவற்றை இங்கு எடுத்து வைக்க விரும்புகின்றேன் இறைவன் நாடினால் நமது இயக்கங்கள் தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவற்றை செயல்படுத்தும் என்று நம்புவோம்.

மத்திய அரசால் முஸ்லிம்களின் நிலையை கண்டு ஆராய அமைக்கப்பட்ட 'பிரதம அமைச்சரின் உயர்நிலைக்குழு' வின் தலைவர் இராஜேந்திர சச்சார் அவர்கள் கடந்த ஏப்ரல் 16ம் நாள் தனது முதல் நிலை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்கள் அதில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களை இங்கு நம் மக்களின் கவணத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

*அரசு உதவிகள் எதுவும் முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை.

*அரசால் நடத்தப்படும் சமூக உதவி திட்டங்கள் எதுவும் முஸ்லிம்களை சென்று அடைவதில்லை.

*கல்வியிலும் வேலைவாய்ப்புக்களிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*வங்கிகள் மூலம் அரசு வழங்கும் கடன் திட்டங்கள் அனைத்திலும் முஸ்லிம்கள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 94.9 சதவிகித முஸ்லிம்களை அரசின் எந்த உதவியும் சென்று சேர்வதில்லை.

*ஒட்டுமொத்த ஏழை முஸ்லிம்களில் 1.9 சதவிகித முஸ்லிம்களே அரசால் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச உணவு என்ற அரசு திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர் மற்றவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*நகர்ப்புரங்களில் 60 சதவிகித முஸ்லிம்களும் கிராமப்புரங்களில் 54.6 சதவிகித முஸ்லிம்களும் கல்விக்கூடங்களுக்கே சென்றதில்லை.

*தேசிய அளவில் 40.8 சதவிகிதா முஸ்லிம்கள் கல்விக்கூடங்களுக்கே சென்றதில்லை.

*மொத்த முஸ்லிம்களிள் கிராமங்களில் 3.1 சதவிகிதத்தினரே இளநிலைப்படிப்பை முடித்துள்ளனர்.

*மொத்த முஸ்லிம்களில் நகர்பபுரத்தில் 1.2 சதவிகிதத்தினரே முதுநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்கள்.

*60.2 சதவிகித முஸ்லிம்களுக்கு நிலமே கிடையாது.

*கல்வியில் முஸ்லிம்களின் நிலை மிக மோசமாகவே உள்ளது.

*ஒருவித மாச்சர்யத்திற்கு நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

*பல மாநிலங்களில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

*இப்படிப்பட்ட மாநிலங்களில் முஸ்லிம்களால் சொத்துக்களை வாங்கிடவோ விற்றிடவோ இயல்வதில்லை.

*முஸ்லிம்கள் வாழுமிடங்களில் அரசு உதவிகள் வேண்டுமென்ற வழங்கப்படுவதில்லை.

*முஸ்லிம்கள் அதிகமாக வாழுமிடங்களில் அரசு கல்விக்கூடங்கள் மிக குறைவாகவே இருக்கின்றன.

இதுபோல் நீழ்கின்றது இந்தக்குழுவின் அறிக்கை. ஆக அரசு இடஓதுக்கீடு அளிக்கின்றதோ இல்லையோ அரசு வேலைவாய்புக்களில் முஸ்லிம்கள் அமர்த்தப்படுகின்றார்களோ இல்லையோ நமது இயக்கங்கள் மீது கீழகண்டவை கடமைகளாகியுள்ளன இவற்றை செய்தாலே ஓரளவிற்கு நமது தேவைகளை நாமே நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


தமுமுக, ததஜ, முஸ்லிம் லீக் மற்றுமுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் கடமைகள் :


இன்று நமது சமுதாயப் பிரதிநிதிகள் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமர்ந்திருக்கின்ற நிலையில் ஆளுங்கட்சியோடு கூட்டணியில் உள்ள இயக்கங்கள் என்ற நிலையில் தமுமுக வும் முஸ்லிம் லீக்கும் செய்ய வேண்டியவை.

முதலில் நமது சமுதாயத்தின் படித்த இளைஞர்கள் தங்கள் இயக்கங்களின் கிளைகள் மூலம் தமிழகமெங்கும் அடையாளங்காணப்பட வேண்டும்.
அவர்கள் கல்வி வாரியாக தரம் பிரிக்கப்படவேண்டும்.

அரசிலும் மற்ற இடங்களிளும் தங்களுக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தமிழகமெங்கும் காலியாகவுள்ள அரசுப்பணியிடங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இதை மிக எளிதாக ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தொடர்ச்சியாக கண்கானித்தாலே அறியலாம்.

அடையாளப்படுத்தப்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான கல்வியிறிவும் திறமையும் உள்ள ஏற்கனவே தமிழகம் முழுவதும் அடையாளங்காணப்பட்ட நமது சமுதாய இளைஞர்களை முன்னிறுத்த வேண்டும்.

அரசில் நமக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை எவ்வகையிலேனும் அப்பணியில் அமர்த்த வேண்டும். தேவையெனில் நமது சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் அழுத்தம் கொடுத்து அவர்களின் சிபாரிசின் மூலம் இவ்விளைஞர்களை பணியில் அமர்த்திட வேண்டும்.

அதுபோல் தமிழகம் முழுவதும் உயர்நிலைக்கல்வியை முடித்துவிட்டு மேல்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்களை நமது சமுதாய இயக்கங்களின் கிளைகள் மூலம் கிராம, நகர வாரியாக அடையாளம் காணப்பட வேண்டும்.

அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் மேல்டிப்புக்காண கல்வி உதவித்தொகை தங்குமிட வசதி போன்ற அனைத்து வசதிகளும் தங்கள் ஒவ்வொரு மாவட்ட கிளை நிர்வாகத்தின் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவ்வுதவிகள் அம்மாணவர்களுக்கு கிடைத்து அவர்கள் தங்கள் கல்வியை அவ்வுதவி கொண்டு தொடர்ந்திட செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் கல்வியை முடிக்கும் வரை தொடாந்து உதவிகள் கிடைக்கின்றதா என்று கண்கானிக்க வேண்டும்.

இன்று நமது தமிழகத்தில் முஸ்லிம் கமுதாயத்தில் ஒரு வேதனையான நிலை நிவுகின்றது என்னவென்றால் முஸ்லிம்சமுதாயத்தின் பெண்களே அதிகம் கல்வி கற்க கூடியவர்களாகவும் ஆண்கள் அவ்வளவு தூரம் கல்வியல் நாட்டமில்லாமலும் இருக்கும் நிலை. இதை நமது இயக்கங்கள் மாற்ற முயல வேண்டும். கிராமம், கிராமமாக, நகரம் தோறும் தங்கள் இயக்கத்தின் தொண்டர்களை கொண்டு கல்வியின் அவசியத்தை நமது சமுதாய ஆண்களிடமும் இளைஞர்களிடமும் விளக்க வேண்டும் அவர்களிடம் நிலவும் வெளிநாட்டு வேலை என்ற மாயையை போக்க வேண்டும். உள்நாட்டிலேயே ஏதாவது வேலை செய்ய வற்புறுத்த வேண்டும். அதற்குண்டான வாய்ப்புக்களை ஏற்படுத்தி தர வேண்டும். நமது மாணவர்களை மேற்கல்வி படிக்க ஊக்கம் கொடுக்க வேண்டும்.


தணியார் துறைகளிலும் நமது இளைஞர்களை வேலையில் அமர்த்த ஏற்பாடு செய்யவேண்டும். அதற்காக வேண்டி தணியார் துறை வேலை வாய்ப்புகளை கணக்கிட்டு அதற்கு நமது இளைஞர்களை தோந்தெடுத்து பணியில் அமர்த்த வேண்டும் அதற்கு நமது இயக்கங்கள் தமது அனைத்து அதிகாரங்களையும் பயண்படுத்த வேண்டும்.

முக்கியமாக காவல் துறைக்கும் இராணுவத்துக்கும் ஆள்
எடுக்கும் போது நமது இளைஞர்களை திரளாக சென்று விண்ணப்பிக்க செய்ய வற்புறுத்துங்கள். தமிழகத்தின் காவல்
துறையிலும் பாதுகாப்பு துறையிலும் படித்த தகுதியான நமது இளைஞர்களை வேலையில் சேர்க்க முற்படுங்கள். இந்த 5 ஆண்டுகால ஆட்சிக்குள் தமிழகத்தில் குறைந்த பட்சம் 50 முஸ்லிம்களை ஆய்வாளர், துணை ஆய்வாளர் எனவும் சுமார் 500 முஸ்லிம்களை காவலர்களாகவும் ஒன்றிரண்டு முஸ்லிம்களை உயர் மட்ட அதிகாரிகள் பணிக்கும் நியமிக்க தங்களது அனைத்து அதிகாரங்களையும பயன்படுத்தி நமது இயக்கங்கள் முயல வேண்டும். இதுவே ஒரு மாபெரும் வெற்றியாகும். இதை ஐந்து வருடங்களுக்கும் மிக எளிதாக நிறைவேற்றலாம்.


காவல்துறையிலும், இராணுவத்திலும் நமது இளைஞர்களை அதிகளவில் பணியில் சேர்ப்பதன் மூலம் குஜராத் மற்றும் கோவையில் நடந்தது போன்ற சம்பவங்கள் நடக்காது தவிர்க்கலாம் அல்லது இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் நமது சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையாவது ஓரளவிற்கு குறைக்கலாம். குஜராத்திலும் கோவையிலும் இவ்வளவு சேதம் சமது சமூகத்திற்கு ஏற்ப்பட்டதன் முக்கிய காரணம் காவல்துறையிலும் இரானுவத்திலும் முஸ்லிம்கள் இல்லாது போனதால் மிக எளிதாக இவர்கள் காவிமயமாக்கப்பட்டதே. ஒருவேலை நாம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் இத்துறையில் இருந்திருப்போமேயானால் இவ்வளவு அழிவு நமது சமூகத்திற்கு ஏற்படாமல் தடுத்திருக்க இயலும். அதை மனதில் கொண்டு இந்த குறிப்பிட்ட துறைகளிள் நமது விகிதாச்சாரத்தை அதிகரிக்க நமது இயக்கங்கள் முயல வேண்டும்.இதில் நாம் வெற்றி பெற்றால் மீண்டும் ஒரு குஜராத்தோ அல்லது கோவையோ நடக்காமல் தடுக்கலாம் அல்லது கோவையில் சமீபத்தில் நடந்த நிகழ்வு போல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து (அதிலும் மனநிலை பாதித்தவரும் அடக்கம்) தீவிரவாதிகளாக காட்டிய சம்பவங்களை தடுக்க இயலும். நமது சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலர் இந்த துறையில் இருந்திருந்தால் ரத்தின சபாபதி போன்றோர் இதைச்செய்வதற்கு தயங்குவார்கள். இதற்கு நமது இயக்கங்கள் முனையவேண்டும். நமது இளைஞர்களும் இதுபோன்ற பணிகளிள் தங்களை இனைத்து கொள்ள தங்களை தயார் படுத்திட வேண்டும்.

வெளிநாட்டிற்கு அனுப்ப முனையும் பெற்றோரை எதிர்த்து தங்கள் இளமையை நமது தாய் நாட்டிற்காகவும் நமது சமுதாயத்தை பாதுகாக்கவும் தியாகம் செய்யுங்கள். இந்திய சுதந்திரத்திற்காக நமது நமுதாய முன்னோர்கள் செய்த தியாகத்தை காட்டிலும் அதிகமான தியாகம் இன்று நமது இந்திய திருநாட்டை ஃபாசிச சக்திகளிடம் மீட்க தேவைப்படுகின்றது. மீண்டும் ஓர் சுதந்திரத்தை அடையவும் நமது நாட்டை ஃபாசிச சக்திகளிடம் இருந்து மீட்கவும் நமது நாட்டின் இராணுவத்திலும் காவல்துறையிலும் தங்களை இணைத்து அனைத்து தியாகங்களுக்கும் தயாராகுங்கள். நமது இந்தியாவின் மதச்சர்பின்மையையும் இறையான்மையையும் என்றும் காப்போம்.

நம் சமுதாதாயத்தின் அழிவிற்கும் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று நமக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் தொடர்ச்சியான பொய்ப்பிரச்சாரங்களாகும். ஒரே பொய்யை திரும்ப திரும்ப தங்களிடம் உள்ள ஊடகங்கள் வாயிலாக கூறுவதன் மூலம் அதை உண்மைப்படுத்தலாம் சியோனிஸ்ட்டுகள் தங்கள் காரியங்களை சாதிக்கவும் தங்கள் பொய்களை உண்மைப்படுத்தவும் எதிரிகளை வெற்றி கொள்ளவும் ஊடகங்களையே தங்களின் ஆயுதங்களாக பயன்படுத்துகின்றனர்.

உதாரணம் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது, முதலில் ஊடகங்கள் வாயிலாக ஈராக்கில் அணு ஆயுதம், உயிரியல் ஆயுதம் மற்றும் கெமிக்கல் ஆயுதங்கள் இருப்பதாகவும் அதனால் உலகிற்கு பயங்கர ஆபத்தென்றும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப தங்கள் ஊடகங்கள் வாயிலாக கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி ஈராக்கை ஆக்கிரமித்தனர்.

இன்று ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், மக்களால் ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பை தீவிரவாதிகள் என்றும் யூத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வரும் ஹிஸ்புல்லாஹ் உள்பட அனைத்து போராளி அமைப்புக்களையும் தீவிரவாதிகள் என்று கூறி தடைவிதித்ததோடு அதே பொய்யை தங்களிடம் உள்ள ஊடகங்கள் வாயிலாக திரும்ப திரும்ப கூறி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்த சமயம் தனது கள்ளக்கு குழந்தை இஸ்ரேலை விட்டு குண்டு மழை பொழிய செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றது அமெரிக்கா.

இதுபோல் உலகெங்கும் நமது முஸ்லிம் இனத்தை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு யூத, கிருத்துவ, ஃபாசிச பயங்கரவாதிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் ஊடகம். இதன் வாயிலாகவே செசன்யாவிலும், ஃபாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும் இந்தியாவிலுமாக நமது மக்கள் காழ்ப்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்படுகின்றார்கள் இதை வெளிக்கொணர கூட நம்மிடம் போதிய ஊடக வசதியில்லாத நிலை.

இந்தியாவில் ஃபாசிச பயங்கரவாதிகளால் முஸ்லிம் இனத்தின் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் அனைத்தும் ஊடகங்களின் துணை கொண்டே செய்யப்பட்டன. மகாத்மா காந்தியை கோட்சே என்ற இந்து தீவிரவாதியை கொண்டு படுகொலை செய்து விட்டு அன்றைய ஒரே ஊடகமான ரேடியோவின் மூலம் முஸ்லிம்கள் மகாத்மாவை படுகொலை செய்துவிட்டார்கள் என்ற பொய்யை திரும்ப திரும்ப ஒலிபரப்பியதன் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குஜராத்தில் நடந்ததும் அதுவே ரயிலை முஸ்லிம்கள் எரித்துவிட்டார்கள் என்ற செய்தியை இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்கள் மூலமும் பரப்பி திட்டமிட்டு நம்மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டார்கள். கோவையில் நடந்ததும் இதுவே இன்றும் திட்டமிட்டு தமிழகத்தில் நமது சமுதாய இளைஞர்களை ஊடகங்களின் வாயிலாக தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் ஃபாசிச பயங்கரவாதிகள் அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

நாம் அதற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்யக்கூட வக்கற்றவர்களாக உள்ளோம். நாம் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றோம் நம்மீது இனப்படுகொலை ஏவிவிடப்படுகின்றது ஃபாசிச பயங்கரவாதிகள் அரச இயந்திரங்களின் துணை கொண்டு நம்மை அழிக்கின்றர்கள் என்று நமக்கு நேர்ந்த பாதிப்புக்களை பட்டியலிட்டு உலக மக்களின் முன் வைத்து நியாயம் தேடக்கூட உரிய ஊடகங்கள் நம்மிடம் இல்லை. நமக்கெதிராக செய்யப்படும் பொய்யபிரச்சாரங்களுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்யவும் நாம் தீவிரவாதிகள் அல்ல எல்லோரையும் போல் அப்பாவி மக்களே என்று கூறி நமக்கெதிராக நடக்கும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து நம் மக்களை விழிப்புணர்ச்சி அடைய செய்யக்கூட நம்மிடம் போதிய ஊடகங்கள் இல்லை. இருக்கும் ஓரிரு ஊடகங்களும் இயக்கம் சார்ந்தவையாக உள்ளன அவற்றிற்கு தங்கள் இயக்கங்களின் கொள்கைகளை விளக்கவும் தமக்கிடையே நடக்கும் சண்டைகளை செய்திகளாக்கி நமது சமுதாயத்தை பிளவு படுத்தவுமே பக்கங்கள் போதவில்லை.

இவற்றையெல்லாம் நாமும் நமது இயக்கங்களும் உணர வேண்டும் இன்றைய நமது சமுதாயத்தின் முக்கிய தேவை நமக்கென ஒரு செய்தி நாளிதழ் கேரளாவில் முஸ்லிம் லீக்கின் "சந்திரிக" வைப் போலவும் ஜமாத் இஸ்லாமியின் "மாத்யமம்" பத்திரிகைகளை
போலவும் தமிழகத்தில் அனைத்து தரப்பும் படிக்கக்கூடிய ஊடகம் ஒன்று நமக்கு முக்கியத்தேவை.அதுபோல் முஸ்லிம்களால் கேரளத்திலும் அண்டை மாநிலங்களிளும் நடத்தப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் போல் தமிழத்திலும் நமக்கு ஓர் தொலைக்காட்சி அலைவரிசைவேண்டும். இதையெல்லாம் நமது இயக்கங்களோ அல்லது சமூக அக்கறை மிக்க முஸ்லிம்
தொழிலதிபர்களோ ஆரம்பிக்கலாம் அப்படி செய்யும் பட்சத்தில் நமது ஒட்டுமொத்த சமுதாயமும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


நாமும் நமது சகோதர கேரள முஸ்லிம்களை போன்று அனைத்து தரப்பினரும் வாசிக்கும் தினசரிகளையும் அனைத்து தரப்பினரும் காணும் தொலைக்காட்சி அலைவரிசையையும் கொண்டிருந்தால் நமக்கெதிராக இன்று ஊடகங்களின் துணை கொண்டு ஃபாசிச பயங்கரவாதிகளால் செய்யப்படும் பிரச்சாரங்களை முறியடிக்கலாம். நமது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒற்றுமைப்படுத்தி தமிழகத்தின் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக மாறலாம். நமது சமுதாய மக்களை விழிப்படையச்செய்து நமக்கெதிராக திட்டங்கள் தீட்டி செய்ல்படுத்திவரும் ஃபாசிச பயங்கரவாதிகளின் திட்டங்களை முறியடித்து நம் சமுதாயத்தை காக்கலாம். இதற்கு முக்கிய தேவை ஊடகங்கள். இதன் அவசியத்தை நமது சமுதாயம் கட்டாயம் உணர வேண்டும்.

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள ததஜ போன்ற நமது சமுதாய அமைப்புக்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி நமது சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றது என்ற நிலையில் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவிக்க வேண்டும். கோவையிலும் தமிழகத்தில் பிறபகுதிகளிளும் நடந்த சம்பவங்கள் போன்று காவல்துறையும் ஃபாசிச சக்திகளும் நமது சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் போது தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி முஸ்லிம்களின் ஓட்டுக்களால் 70க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட வலுவான எதிர்க்கட்சியாக இருப்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி இதுபோன்ற அநியாயங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வலியுருத்த வேண்டும்.

அப்படி நமக்கு ஆதரவாக இடஒதுக்கீட்டிற்காகவும் நம்மீது நடத்தப்படும அநியாயங்களுக்கெதிராகவும் குரல் கொடுக்க மறுத்து நமக்கெதிராக செயல்படும் பட்சத்தில் அக்கூட்டணியிலிருந்து விலகி அக்கட்சி நமக்கு செய்த துரோகங்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி அக்கட்சிக்கெதிராக கடுமையான முறையில் போராட தயங்க கூடாது. சமீபத்தில் தனது வாக்குறுதியை மீறி முஸ்லிம்களுக்கெதிராகவும் அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்கெதிராகவும் மீண்டும் பொடாவை கொண்டுவந்து முஸ்லிம்களுக்கெதிராக பிரயோகிக்க வேண்டும என்பதுபோலவும் குரல் கொடுத்து வரும் அதிமுக தலைவர் ஜெயலலிதாவிற்கு அவருடன் இருக்கும் நமது சமுதாய இயக்கங்கள் கண்டனம் கூட தெறிவிக்காதது மிக வருத்தமான விஷயம்.


நமக்கெதிராக அக்கிரமங்களும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்படும்போது நாம் இயக்க பேதம் பார்க்காமல் இனம் என்ற அடிப்படையில் நமது அனைத்து அரசியல் சமுதாய இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் நமது பலம் என்வென்பதை நமது
எதிரிகள் உணர்வார்கள். அதைவிடுத்து விடியல்காரன்தானே என்று தமுமுக சும்மாயிருப்பதும் தமுமுக செய்யும் அனைத்தையும் குறைகூறி ததஜ சும்மாயிருப்பதும்
ஒருவர் மீது ஒருவர் போலிசில் பொய்ப்புகார் கூறுவதும் ஒருவர் பத்திரிகையில் மற்றவரின் காரியங்களை குறைகூறி மற்றவர்களை குற்றவாளிகளாக சித்தறிப்பதும் (உதாரணம் :
உணர்வின் பொதக்குடி சம்பவம் ஒரு நடுநிலை ரிப்போர்ட்) நமது சமுதாயத்தை பலகீனப்படுத்தவே செய்யும்.


கோவை சம்பவம் தொடர்பாக நியாயம் கோரி தமுமுக, மனித நீதி பாசறை போன்ற அமைப்புக்கள் ஒருங்கிணைந்து போராடவிருப்பதாக வரும் செய்திகள் மகிழ்ச்சியை தருகின்றன. மற்ற அமைப்புக்களையும் ஒருங்கினைத்து போராட முயலுங்கள் ஒரு சில அமைப்புக்கள் தங்களோடு ஒருங்கிணைய மறுத்து ஃபாசிச சிந்தனையுடையோரின் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருப்பதும் ஜெயலலிதா போன்றோர் ஃபாசிஸ்ட்டுகளுடன் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களுக்கெதிராக கருத்துக்களை கூறி செயல்படும்போது அவர்களுடன் கூட்டணியல் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காது மௌனம் காப்பதும் கடுமையான சந்தேகங்களை உண்டாக்குகின்றன்.

இதுபோல் நமக்கெதிராக நடக்கும் அநீதிகளை கண்டிக்காது வியாக்கியானம் பேசி ஃபாசிச சக்திகளுக்கு துணைபோவோருடன் கூட்டணி சேர்ந்து சுயநலப்போக்கோடு செயல்படும் போலி சமூக அரசியல் இயக்கங்களின் துரோகங்களை மக்கள் மன்றத்தில் வைத்து அவர்களை தனிமைப்படுத்த நமது சமுதாயத்தின் அனைத்து அமைப்புக்களும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.


இதுபோல் நமது வேதம் கூறியதைப்போன்று ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்து நாம் அனைவரும் இயக்க பேதம் பாராமல் நமக்கெதிராக நடக்கும் அநீதிகளுக்கெதிராக போராடி
ஃபாசிச சக்திகளின் செயல்களுக்கு ஒத்து ஊதும் நம்முள் இருக்கும் எட்டப்பர்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி அவர்களை நாம் அனைவரும் இணைந்து சமுதாயப்பகிஷ்காரப்படுத்தினால் நம்முள் காட்டிக்கொடுப்பவர்களும், நமது சமுதாயத்தை வைத்து வியாபாரம் செய்பவர்களும் உருவாகமாட்டார்கள். நாம் அனைவரும் இனைந்து நான் மேலே கூறிய காரியங்களை ஐந்துவருட திட்டமாக செயல்படுத்தி அதில் வெற்றி பெற்றால் நாம் இடஒதுக்கீடு கேட்டு போராட தேவையில்லை, வேண்டிய இட ஒதுக்கீட்டை நாமே உருவாக்கி கொள்ளலாம்.


தமிழகத்தின் அரசியலில் முஸ்லிம்கள் தவிர்க்க இயலாத சக்தி என்பதை அனைவரும் உணர வேண்டும். சுய லாபங்களுக்காக வெற்றி தோல்வியை தீர்மானிப்பது முஸ்லிம்கள் இல்லை அது பெரும்பான்மை சமுதாயம் என்பது போன்ற சுயநல பேச்சுக்களையும் அறிக்கைகளையும் நிறுத்தி நமது சமுதாயத்தை திசைக்கு ஒன்றாக பிற்த்து ஓட்டுக்களை சிதறடித்து பலகீனப்படுத்தும் செயல்களை நிறுத்தி தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் நாடார் சமுதாயம் மற்றும் முக்குலத்தோர் சமுதாயம் ஒருங்கிணைந்து தங்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக வாக்களிக்க கூடிய கட்சியை மட்டும் ஆதரிக்கின்றதோ அதுபோல் நமது கோரிக்கைகள எந்த கட்சி நிறைவேற்றுவதாக வாக்களிக்கின்றதோ அந்தக்கட்சிக்கு மட்டும்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்காளர்களும் வாக்களிப்பார்கள் அவர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி என்ற ஒரு நிலையை தமிழகத்தில் நாம் கொண்டுவர முயல வேண்டும்.

அப்படி ஒரு நிலை வருமானால் தமிழகத்தின் ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய மாபெரும் சக்தியாக ஒரே சமூகமாக நமது இஸ்லாமிய சமூகம் அமையும் அன்று இடஒதுக்கீடு தானாக நமது கால்களில் விழுந்து கிடக்கும். நமக்கெதிராக ஜெயலலிதாக்கள் குரல் கொடுக்க தயங்குவார்கள், மாசானமுத்துக்களும், ரத்தின சபாபதிகளும் ஃபாசிச சித்தாந்தத்தை மூட்டைகட்டிவிட்டு பாய்களுக்கு பாய்விரிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை சுயநலன்களை மறந்து நாம் ஒன்று கூடினால் இன்ஷா அல்லாஹ்.. இதை இயக்கங்கள் உணர்வார்களா?

கனவுகள் நினைவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை, நம் இயக்கங்களும் மக்களும் அதற்காக ஒருங்கிணைவார்கள் இறைவன் நாடினால் என்ற நம்பிக்கையில் முடிக்கின்றேன்.

குறிப்பு : சிறந்த அறிஞர்களும் சிந்தனையாளர்களும் நமது சமூகத்தில் உள்ளார்கள் அப்படிப்பட்டவர்கள் நமது சமூகத்தின் வெற்றிக்கான தங்களது செயல்திட்டங்களை கட்டுறைகளாக்கி தருவீர்களானால் நான் இங்கு பிரசுரிக்க தயாராக உள்ளேன். என்னை மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.
நன்றி
முகவைத்தமிழன்

No comments: