Wednesday, August 01, 2012

மரண தண்டனையும் இசுலாமிய இயக்கங்களின் பார்வையும்...

வழக்கமான பரபரப்புதான்... உணர்வு பத்திரிக்கையின் சுவரொட்டியில் (ஜீலை27 ஆகஸ்ட் 2) 'அல்லாவின் சட்டத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாமியப் போராளி' என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி வழக்கம்போல் எனக்குள் பரபரப்பை ஊட்டியது. கொள்கைக் குன்றுகள் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் என வாங்கிப் படித்தால், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் சென்னையில் நடந்து முடிந்த மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் மரண தண்டனைக்கு எதிராகப் பேசிய பேச்சுக்களை விமர்சனம் செய்து உணர்வு பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி இருக்கிறது.

அந்த மாநாடு சென்னையில் கடந்த ஜீன்மாதம் 2ம் தேதி நடந்தது. அம்மாநாட்டில் அவர் கலந்து கொள்ளும்போதே நாம் நினைத்தோம், 'கொள்கை குன்றுகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும்' என்று.  ஆனால் மாநாடு முடிந்து மிகத் தாமதமாக செய்தி தெரிந்து தற்போது கடும் விமர்சனம் செய்துள்ளார்கள். என்ன வேகம்….!

பேராசிரியர் மீதான‌ விமர்சனத்திற்கு அவரும் அவர் சார்ந்த கட்சியுமே பதில் அளிப்பது சரியாக இருக்கும். ஆகையால் உணர்வு பத்திரிக்கையின் மரண தண்டனைக்கு ஆதரவான விசமத்திற்கு மட்டுமே நாம் இக்கட்டுரையில் பதில் அளிக்க முயற்சிக்கிறோம்.

ஒரு குட்டி கதையுடன் கொள்கைக் குன்றுகளுக்கு பதில் அளிப்போம்..

ஒரு காட்டில் மோசமான ஒரு புலி இருந்தது. அவ்வப்போது ஊருக்குள் வந்து ஆட்டையும், மாட்டையும், மனிதனையும் வேட்டையாடிக் கொண்டிருந்தது. மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள் இப்புலியை பிடிக்க உலக போலீஸ்காரன் அமெரிக்கா, அவன் அல்லக்கை நாடுகளைச் சேர்ந்த போலீஸ், உலகில் துப்பு துலக்குவதில் வல்லவரான ஸ்கார்ட் லாண்டோ என்னவோ அந்த போலீஸ், அவங்களோட அவங்களுக்கு இணையான நம்ம தமிழ்நாட்டு போலீஸ் எல்லோரும் சேர்ந்து, அந்த புலியைப் பிடிக்காமல் வரமாட்டோம் என்று தனித் தனியாக காட்டுக்குப் போனாங்களாம் மூட்டை முடிச்சுகளோடு..
பல நாட்கள் ஆகியும் அந்த கொடூர புலியை பிடிக்க முடியாமல் மற்ற நாட்டுக்காரர்கள் ஊருக்குத் திரும்பி வந்துட்டாங்களாம். ஆனால் காட்டுக்குள் போன நம்ம தமிழ்நாட்டு போலீஸ் மட்டும் காட்டில் இருந்து திரும்ப வரல. எங்கடா அவங்கள மட்டும் காணோம்னு நம்ம நல்ல போலீச தேடி எல்லோரும் காட்டுக்குள் போனாங்களாம். அங்க பார்த்தா நம்ம தமிழ்நாட்டு போலீஸ் மரத்தில ஒரு நரியக் கட்டிப் போட்டு லத்தியில அடி அடினு அடிச்சு, நீதான் புலினு ஒத்துக்க ஒத்துக்கனு அடிச்சுட்டு இருந்தாங்கலாம்

இந்த கதைக்கும் இனி நான் பேசப் போகும் கட்டுரைக்கும் தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ளவேண்டியது வாசகர்கள் பொறுப்பு…

ஸ்கார்ட்லார்ந்து போலீசுக்கு இணையான புலனாய்வு புடுங்கிகள் என்று கூறப்படும் தமிழ்நாட்டு காவல்துறையினர் உண்மையான குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகள் மீது பொய்வழக்குகள் போட்டு, கடுமையான சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் என்று ஒன்றை வாங்கியதால், செய்யாத குற்றத்திற்காக இன்று எத்தனை பேர் சிறைகளில் வாடி வருகிறார்கள் என்று தெரியுமா, கொள்கைக் குன்றுகளே…?

இன்றைய இந்திய குற்றவியல் நடைமுறைகளைப் பற்றியும் காவல்துறையின் குற்றவாளிகளைக் கைது செய்து புலன் விசாரனை செய்யும் லட்சணங்கள் குறித்தும் உங்களுக்குத் தெரியுமா..?

உணர்வு சொல்கிறது “இந்த நாட்டில் உள்ள உருப்படியான சட்டம் ஒன்று உள்ளதென்றால் அது மரண தண்டனை சட்டம்தான். மற்ற குற்றவியல் சட்டங்கள் எல்லாம் பல வருடங்கள் குற்றம் செய்தவனுக்கு சோறு போட்டு, அவனை படிக்க வைத்து, அவனுக்கு பாதுகாப்பளித்து, மருத்துவம் பார்த்து, அவனுக்குத் தேவையான அனைத்து சுகபோகங்களையும் வழங்கக்கூடிய மானங்கெட்ட சட்டமாகத்தான் உள்ளது.”

302 சட்டபிரிவுகள் கொலைக் குற்றம் போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்க இந்திய தண்டனை சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் காவல் துறையின் புலன் விசாரணை முறை எப்படி நடக்கிறது? மானங்கெட்டதனமாக, ஒரு சார்பாக, அரசியல் பழிவாங்கவேண்டும் என்ற அடிப்படையில், உரிமைகளுக்காகப் போராடுபவர்களை எப்படி அடக்குமுறையால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்த்தால்தான் இந்த கொள்கைக் குன்றுகளின் உளரல்களுக்கு பதிலளிக்க முடியும். உதாரண‌த்திற்கு இரு வழக்குகளைப் பார்ப்போம்.

மதுரை பாண்டியம்மாள் கொலை வழக்கு

கடந்த 1991ஆம் ஆண்டில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரை, அவரது கணவர் வேலுச்சாமியும் மற்றும் இருவரும் சேர்ந்து கொலை செய்து விட்டதாக காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த கொலை தொடர்பாக, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அந்த ஊருக்கு அருகே ஒரு பெண்ணின் பிணம் கிடந்ததாகவும் அது பாண்டியம்மாள்தான் என்றும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தான்தான் தன் மனைவியைக் கொலை செய்ததாகவும், கொலை செய்த விதம் குறித்து நீதிமன்றத்தில் நடித்தும் காட்டினார் பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமி. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்மணி, அந்த நீதிமன்றத்தில் நேரில் வருகை தந்து, தனது பெயர் பாண்டியம்மாள் என்றும், தன்னைக் கொலைசெய்து விட்டதாகத்தான் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது என்றும் சாட்சியமளித்தார். பாண்டியம்மாள் உயிரோடு இருக்கிறார் என்றால், கண்டெடுக்கப்பட்ட பிணம் யாருடையது? இன்று வரையிலும் இது விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது. ஒருவேளை அந்த பாண்டியம்மாள் சில ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தின் முன் தோன்றியிருந்தால்?

சுஜாதா கொலைவழக்கு

கடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள உப்புக்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்த சுஜாதா என்பவர் காணாமல் போனார். இந்த நிகழ்வு தொடர்பாக, அதே ஊரைச் சேர்ந்த கார்மேகம், அவரது பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் 12பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து கார்மேகம் தனது வாக்குமூலத்தில், சுஜாதாவைக் கடத்தி வன்புணர்ச்சி செய்து, நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள சுடுகாட்டில் வைத்து பெட்ரோலை ஊற்றி பிணத்தை எரித்து விட்டேன் என்று கூறியதாக காவல் துறையினர் கூறினார்கள். வழக்கும் நடந்து வந்தது. இந்நிலையில் சுமார் 9 ஆண்டுகள் கழித்து, காணாமல் போய், எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அதே சுஜாதா, திருமணம் முடிந்து, கணவர் மற்றும் குழந்தையுடன் அவரது ஊருக்கு வந்து சேர்ந்தார். இதன்படி பார்த்தால் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சாம்பல் யாருடையது? செய்யாத குற்றத்திற்கு, கார்மேகம் உள்ளிட்டோர் அனுபவித்த தண்டனைக்கு யார் பொறுப்பு?

மரண தண்டனையை எதிர் நோக்கி உள்ள அப்சல் குரு

காசுமீரத்தைச் சேர்ந்த சரண‌டைந்த முன்னாள் போராளியான அப்சல் குரு எப்படி எல்லாம் சித்திரவதைகள் செய்யப்பட்டு பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் சிக்கவைக்கப்பட்டார் என்று அவரின் வழக்கின் உண்மை மூலத்திலும் பல ஆவணங்களில் இருந்தும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அப்சலின் வார்த்தைகளில் இருந்து...

”பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் நான் அறியாமலும், விரும்பாமலும், நோக்கமில்லாமலும் ஈடுபடுத்தப்பட்டதின் அளவும் ஆழமும், தொடக்கம் முதலே, காவல்துறையால் பெரிதுபடுத்தப்பட்டது”

மனித உரிமை ஆர்வலர் அருந்ததிராய் அவர்கள் அவுட் லுக் பத்திரிக்கையில் அப்சல்குருவின் கதையை எழுதும் போது எப்படி எல்லாம் அவர் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகிறார்

“புலன் விசாரணை அதிகாரியான காவல் துறை உதவி ஆணையர் ரஜ்பீர் சிங், டிசம்பரில் சட்ட விரோதமான நடவடிக்கையாக ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அவரால் ‘என்கவுண்டரில்’ கொல்லப்பட்ட ‘பயங்கரவாதிகளின்’ எண்ணிக்கையைப் போற்றும் விதமாக ‘தில்லியின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் அவர். பத்திரிகையாளர்களின் முன்பு முகமது அப்சல் வாக்குமூலம் கொடுக்க வைக்கப்பட்டார். அப்சல் ஏற்கனவே காவல்துறையிடம் குற்றத்தை ஒத்துக் கொண்டதாக காவல் துறை துணை ஆணையர் அசோக் சாந்த் கூறினார். இதுவும் ஒரு பொய் என்று பின்னர் தெரிய வந்தது. காவல் துறையிடம் அப்சல் முறையாக வாக்குமூலம் அளித்தது அடுத்த நாள்தான் நடந்தது. (அதற்குப் பிறகும் அவர் சித்திரவதையின் அச்சுறுத்தலுடன் காவல் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார். இதுவும் சட்டப்படி தவறான நடைமுறை). அவரது பத்திரிகையாளர் ‘வாக்குமூலத்தில்’ நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தன்னைத் தானே முழுக்க முழுக்க தொடர்புபடுத்திக் கொண்டார் அப்சல்.

இந்த ‘ஊடக வாக்குமூலத்தின்’ நடுவில் ஒரு மர்மமான நிகழ்ச்சி நடந்தது. நேரடியான ஒரு கேள்விக்கு விடையாக, ஜீலானிக்கும் நாடாளுமன்ற தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அவர் முற்றிலும் நிரபராதி என்று அப்சல் தெளிவாகச் சொன்னார். இந்த இடத்தில் உதவி ஆணையர் ரஜ்பீர் சிங் குரலை உயர்த்தி அவரைக் கடிந்து மவுனமாக்கி விட்டு, அப்சலின் வாக்குமூலத்தில் இந்தப் பகுதியை வெளியிடக் கூடாது என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அடி பணிந்தார்கள் பத்திரிகையாளர்கள்! இந்த நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் வெளியில் வந்தது. ஆஜ் தக் தொலைக்காட்சி இந்த வாக்குமூலத்தை ‘ஹம்லே கே சவ் தின்’ (தாக்குதலின் நூறு நாட்கள்) என்ற நிகழ்ச்சியில் மறு ஒளிபரப்பினார்கள். இந்தப் பகுதி எப்படியோ தப்பி வெளிவந்து விட்டிருந்தது. இதற்கிடையில் சட்டமோ, புலன் விசாரணை நடைமுறையோ தெரிந்திராத பொது மக்களைப் பொருத்தவரை அப்சலின் வெளிப்படையான வாக்குமூலம் அவரது குற்றத்தை உறுதி செய்திருந்தது. ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் தீர்ப்பு’ என்னவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.

அப்சலின் வழக்கறிஞர் ஒரு முறை கூட சிறைக்குப் போய் அவரது கட்சிக்காரரின் கருத்துக்களை கேட்டுக் கொள்ளவில்லை. அப்சலுக்கு ஆதரவாக ஒரு சாட்சியத்தைக் கூட அவர் அழைக்கவில்லை. அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவே இல்லை.

‘ஊடக’ வாக்குமூலத்துக்கு அடுத்த நாள், அப்சலிடமிருந்து ‘அதிகாரபூர்வ’ வாக்குமூலம் கறக்கப்பட்டது. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட, உயர் தர ஆங்கிலத்தில் சரளமாக போகும் இந்த வாக்குமூலம் துணை ஆணையர் அசோக் சாந்திடம் சொல்லப்பட்டது. துணை ஆணையர் சொன்னது படி ‘அவர் சொல்லிக் கொண்டே போனார், நான் எழுதிக் கொண்டே இருந்தேன்’. இந்த வாக்குமூலம் சீலிடப்பட்ட உறையில் நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது. இந்த வாக்குமூலத்தில், அரசுத் தரப்பின் அடிப்படையாக ஆகி விட்டிருந்த அப்சல் ஒரு பிரமாதமான திரைக்கதையை அளிக்கிறார். காசி பாபாவையும் மவுலானா மசூத் அசாரையும் தாரிக் என்பவரையும், இறந்து போன 5 பயங்கரவாதிகளையும், அவர்களது ஆயுதங்கள், கருவிகள், வெடிமருந்துகள், உள்துறை அமைச்சக அட்டைகள், மடிக்கணிகள், போலி அடையாள அட்டைகள் போன்றவற்றையும் இந்தக் கதை திறமையுடன் இணைக்கிறது. எந்த இடத்திலிருந்து எத்தனை கிலோ வெடிமருந்து வாங்கினார், வெடிகுண்டு செய்வதற்காக அவை எந்த விகிதத்தில் கலக்கப்பட்டன, எத்தனை தடவை அவரது மொபைலில் அழைப்புகள் வந்தன என்ற கணக்குகளை துல்லியமாக சொல்கிறார் அப்சல். (இதற்குள், முற்றிலும் மனம் மாறி ஜீலானியையும் சதியில் முழுமையாக சேர்த்துக் கொள்கிறார் அப்சல்).

‘வாக்குமூலத்தின்’ ஒவ்வொரு குறிப்பும் காவல்துறை ஏற்கனவே திரட்டியிருந்த சாட்சியங்களுடன் கச்சிதமாகப் பொருந்தி வந்தன. அப்சலின் வாக்குமூல அறிக்கை, காவல்துறை ஏற்கனவே பத்திரிகைகளுக்கு பல நாட்களுக்கு முன்பே தெரிவித்திருந்த தகவல்களுடன் கச்சிதமாக பொருந்தின.”

சிறப்பு காவல் படையால் காசுமீரத்தில் இருந்து அனுப்பப்பட்ட அப்சல் குரு வஞ்சகமாக பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்
நீதிமன்றத்திடம் போதுமான, வலுவான ஆதாரங்கள் இல்லை என்றாலும் உச்சநீதி மன்றம் இந்திய மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த மட்டுமே அப்சல் குருவிற்கு மரண தண்டனை வழங்கியிருக்கிறது.

ராசீவ் கொலை வழக்கு

ராசீவ் கொலை வழக்கில் இறுதியாக 26 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் கசாப்புக் கடை தீர்ப்பாக 26 பேர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டில் நான்கு நபர்களுக்கு தூக்கு தண்டனையும், மூன்று நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் உச்சநீதி மன்றம் வழங்கியது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். பின்பு நளினிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது ராசீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் என மூன்று பேர் மரண தண்டனை உறுதிபடுத்தப்பட்டு சிறையில் மரண வாசலில் நின்று கொண்டிருக்கின்றனர். ராசீவ் கொலையில் பல மர்மங்களுக்கு விடை கண்டுபிடிக்கப்படாமல், பல கமிசன்கள் போட்டு அதன் அறிக்கைகளை அமுல்படுத்தப்படாமல் ஒரு சார்பாக, சிலரை திருப்திப்படுத்தபடவேண்டும் என்ற அடிப்படையில் இன்று இறுதியாக மூன்று நபர்களை அநீதியாகக் கொல்லவேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்ட பேரறிவாளனின் வார்த்தைகளில் இருந்து பார்ப்போம்.

” 1991ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.50. ஈவெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர்கள் கங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அப்போது பெரியார் திடல் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.

ஏற்கனவே 10-6-1991 மற்றும் 11-6-1991இல் எமது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் (வேலூர் மாவட்டத்தில்) தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், திராவிடர் கழகத்தவர் வீடுகளில் விசாரணை மேற்கொண்டபோது எமது இல்லத்திற்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்போது என்னைப் பற்றியும் கேள்வி எழுப்ப, எனது பெற்றோர் நான் சென்னை பெரியார் திடல், விடுதலை அலுவலகம் கணினிப் பிரிவில் பணியாற்றும் விவரத்தையும், அங்கு தங்கியுள்ள விவரத்தையும் கூறி அழைத்து வந்தனர்.

என்னை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, நாளை காலை, அதாவது 12-6-1991 அன்று அனுப்பி வைப்பதாக வாக்குறுதி கூறியே அழைத்துச் சென்றனர். நேரே மாடியில் உள்ள ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு துணை தலைமை ஆய்வாளர் ராஜு, காவல்துறை கண்காணிப்பாளர்கள் தியாகராசன், சலீம் அலி மற்றும் பலர் இருந்தனர். என்னைப் பற்றியும் எனது கல்வி, குடும்பப் பின்னணி பற்றியும் விசாரித்தனர்.”

மரண தண்டனையின் தூதுவர்களான கொள்கை குன்றுகளே...

ஒருவனை எப்படி எல்லாம் சித்திரவதைகள் செய்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்கப்பட்டு அல்லது அவர்களால் எழுதப்பட்டு வழக்கை ஜோடிக்கிறார்கள் என்று தெரியுமா..? உங்களுக்கு தடா சட்டப்படி காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் அவனுக்கு எதிராக அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நிலையில் எந்த பைத்தியக்காரனும் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளமாட்டான். இங்கே பேரறிவாளனை எப்படி சித்திரவதைகள் செய்யப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் வாங்கப்படுகிறார்கள் என்று பாருங்கள்.

“எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் என்னை சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

கீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால் அடித்தனர். ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.

அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன். இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில் பெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர் மறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.”

”அங்கிருந்த அலுவலகத்தில் (அப்போது அது சித்ரவதைக் கூடம்) வைத்துதான் சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன் என்னைத் துன்புறுத்தி எழுதிய பல பக்கங்களில், பல நாட்களைக் குறிப்பிட்டுக் கட்டாய கையெழுத்துகள் பெற்றார். அப்போது உடன் சில ஆய்வாளர்களும் துன்புறுத்தினர். அதில் என்ன இருக்கிறது எனப் படித்தறிய அனுமதிக்கவில்லை. கையெழுத்திட்டால் என்னை விட்டுவிடுவதாகவும் கூறினர். எனக்கும் தடா சட்டம் தெரியாது. எனக்கு மட்டுமன்று தமிழகத்திற்கே அன்று தடா சட்டம் புதிதானது. இந்த நிலையில் துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் கூறியபடி கையொப்பமிட்டேன். ஆனால் பரிதாபம் என்னவெனில் அவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது. சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற ரீதியிலேயே அவர் கூற்று இருந்தது.

எனவே, தடா சட்டம் தெரியாது; ஒப்புதல் வாக்குமூலம் தெரியாது; அதன் சட்ட ரீதியான தாக்கம் தெரியாது, என்றாலும் கையெழுத்திட்டு விட்டேன். கையெழுத்திடக் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

எந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ அதே அறையில் 16.8.1991 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார். முழுக்க முழுக்க சிபிஐ-யினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்துமுன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு என்னை எச்சரித்தனர்: நீ ஏதும் துன்புறுத்தியது பற்றிக் கூறினால், மீண்டும் உன்னைக் கொடுமைப்படுத்துவோம், சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பி ஓடியதால் சுட்டோம் என்று கூட கணக்குக் காட்டிவிடுவோம் என்று மிரட்டினர். இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சியும், கிளைச்சிறை இருந்த சூழலும், அச்சமும், சட்ட அறியாமையும் எனது வாயை அடைத்து விட்டன.”

இப்படியான சித்திரவதைகளும், அச்சுறுத்தல்களும் கொண்ட நிலையில்தான் இந்தியாவில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்து, அவரை குற்றவாளியாக்குகிறது காவல்துறை. உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க வக்கில்லாத காவல்துறை கிடைத்தவனை குற்றவாளியாக்கும் திறமையைப் பெற்றிருக்கிறார்கள். அப்படி குற்றவாளியாக்கப்பட்டவர்களுக்குத்தான் இஸ்லாம் மரணதண்டனையை கொடுக்கச் சொல்கிறதா…?

இந்திய குற்றவியல் நடைமுறைகளும், நீதிமன்றங்களும்

உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கும்படியான‌ நிலையில்தான் உள்ளன. ஒருவனை உள்ளூர் நீதிமன்றம் குற்றவாளி என்கிறது. அவனையே உயர் நீதிமன்றம் குற்றமற்றவன் என்று விடுதலை செய்கிறது. அப்படி என்றால் உள்ளூர் நீதிமன்றத் தீர்ப்புகள் தவறு என்றுதானே அர்த்தம்? ஒரு சரியான விசாரணை முறையில் நிலையாக முடிவெடுக்க முடியாதவாறு குற்றவியல் சட்டங்கள் தடுமாறும்போது மனிதத் தீர்ப்புகள் எப்படி நியாய‌மாக இருக்க முடியும்? எந்த அடிப்படையில் இந்த கொள்கைக் குன்றுகள் மரணதண்டனைக்கு ஆதரவாக வாய் கிழியப் பேசுகிறார்கள்?

உலகில் எங்கு நீதியான ஆட்சி, நீதமான ஆட்சி நடைபெறுகிறது? இறை சட்டங்களை பேண‌க்கூடிய ஆட்சி நடக்கும் ஒரு நாட்டை உங்களால் காண்பிக்க முடியுமா..?

ஒரு குற்றத்திற்கு அடிப்படையான காரணிகளைப் பார்க்காமல், பொதுவாக வெறுத்து ஒதுக்கும் மனநிலைதான் இன்று நம்மிடம் உள்ளது. சமுகப் பொருளாதார வாழ்வியலில் மாற்றம் காண‌ முயலாமல் குற்றத்தையும் அதற்கான தண்டனைகளையும் பேசுவது என்ன நியாயம்..?

நீங்கள் கூறுவது போல் கொலைக்கு கொலைதான் தீர்வு என்றே வைத்துக்கொள்வோம். அது சரியாக எங்கு நடைமுறைப்படுத்தப்படும்? இஸ்லாமிய சட்டங்கள் பூர்ணமாக அமல்படுத்தப்படும் ஒரு நாட்டில்தான் அச்சட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும். அப்படி முழுமையாக இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டில் குற்றங்கள் குறைவாகவோ அல்லது குற்றங்களோ இல்லாத நிலையில் இருக்கும். ஏன் என்றால் அங்கு மக்கள் வாழ்நிலை, சமுக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஏழ்மை என்று அற‌வே இருக்க வாய்ப்பில்லை.

உமர்(ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஜகாத் என்னும் தருமங்கள் வாங்க அங்கு யாரும் இல்லை என்ற நிலை இருந்ததாக கூறக் கேட்கும்போது அரபு தீபகற்பத்தில் அன்றைக்கு நீதமான ஆட்சி முறையும், இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அமல்படுத்தப்பட்டதையும் அறிந்து கொள்கிறோம். உலகில் சிறந்த ஆட்சி என்று உமர்(ரலி) அவர்கள் ஆட்சியையும், அதுபோல் ஆட்சி முறை இந்தியாவில் வர வேண்டும் என்றும் காந்தி கூறியதாக ஆவணங்கள் தெரிவிக்கும்போது, அது போல் ஒரு ஆட்சி முறையா இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

அங்கு எவரும் பசிக்காக திருடவேண்டிய கட்டாயமில்லை. இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளில் பசி என்பதே நிரந்தர அடையாள‌மாக இருந்துவருகிறது.

அய்யா கொள்கைக் குன்றுகளா..! நாங்கள் தெரியாமல்தான் கேட்கிறோம்... இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி முறையா நடைபெறுகிறது? அப்படியே இஸ்லாமிய சட்டங்களை இந்திய நீதிமன்றங்கள் ஏற்று அதன்படியா நீதி பரிபாலனம் செய்கிறார்கள்?

அவர்கள் கொடுக்கும் மரணதண்டனை எப்படி சரியாக இருக்கும் என்று எண்னுகிறீர்கள்? இங்கிருக்கும் காவல்துறையினர், அப்படியே இஸ்லாமிய சட்டங்களை ஏற்று இறை அச்சத்துடன் நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கு உள்ளது, அதனால் பொய்க் கேசு போடக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்ட உத்தமர்களா..? இவர்கள் போடும் வழக்கிற்கு எப்படி மரணதண்டனை விதிக்க..?

தங்களுக்குச் சாதகமான குரான் வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு தங்கள் மன உணர்வுகளுக்கு தகுந்தாற்போல் விளக்கம் கொடுக்கும் கொள்கைக் குன்றுகளே..! நம்பிக்கை கொண்டோரே!

சுதந்திரமானவனுக்காக(கொலை செய்த) சுதந்திரமானவன்,
அடிமைக்காக(கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக(கொலை செய்த)
பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்குவது
உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு(கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்கவேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அறிவுடையோரே !

பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக்கொள்வீர்கள். அல்குரான். 2: 178,179.

இதில் கொள்கைக் குன்றுகளின் மொழி பெயர்ப்பில் கொள்கைச் சகோதரன் என்றும் பிற மொழி பெயர்ப்புகளில் பாத்தியஸ்தர் என்றும் உள்ளது.
பிற மொழி பெயர்ப்பாளர்கள் இந்த வசனத்திற்கான விளக்கம் கூறுகிறார்கள்.
அரபு மண்ணில் அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரு வம்சத்தினர் இருந்து வந்தனர்.
ஒருவரை ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று கருதி வந்தனர். இவர்களில் ஒரு வம்சத்தாருக்குரிய அடிமை, பிற வம்சத்தாரால் கொல்லப்பட்டால், அடிமையைப் பழிவாங்காமல், அதற்கு ஈடாக கொலை செய்த வம்சத்திலிருந்து ஒரு சுதந்திரமானவனை பழி தீர்ப்பார்கள். ஒரு பெண்ணுக்குப் பதில் பெண்ணை பழி தீர்க்காமல் ஒரு ஆணைப் பழி தீர்ப்பார்கள். பழி தீர்ப்பதில் நீதத்தைக் கட்டாயப்படுத்தியே இவ் வசனம் அருளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதே வசனத்தில் மன்னிப்பைப் பற்றியும், இழப்பீடு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதே இப்படி மன்னிக்கவும், இழப்பீடு பெறவும் இந்தியாவில் சட்ட நடைமுறைகள் இருக்கின்றனவா.?

அப்படியான சட்ட நடைமுறைகள் இருந்தால் மரணதண்டனை பற்றி பேச நியாய‌ம் இருக்கிறது. இது பற்றியெல்லாம் யோசியாமல் மரணதண்டனையை வலியுறுத்துவதில் என்ன நியாய‌ம் இருக்கிறது?

சிறைவாசிகளை பல வருடங்கள் சிறையில் வைத்து அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதாகவும், சிறைகளில் தேனாறும், பாலாறும் ஒடுவது போலவும் உணர்வின் கட்டுரையாளர் குறைபட்டுக் கொள்கிறார்.

எவரும் விருப்பட்டு பத்தாண்டுகள், இருபதாண்டுகள் சிறையில் இருப்பதில்லை. இன்று அதிகமாக சிறையில் இருப்பவர்கள் யார்..? சிறையில் உள்ள பெரும்பான்மையானவர்கள் படிப்பறிவு அற்ற பாமர ஏழைகள், உழைப்பாளிகள், இசுலாமியர்கள், தலித்துகள், தொழிலாளிகள். ஒரு தவறுக்காக தண்டனை வழங்குவது ஒருவனுக்காக இருந்தாலும், தண்டனை அனுபவிப்பது அவனின் ஒட்டுமொத்தக் குடும்பமும் தான். ஒரு சிறையாளியின் குடும்பத்தையும் சிறைக்கைதியாகவே பார்க்கும் அவல நிலை நம் சமூகத்தில் உள்ளது.

“குற்றத்தை விட்டு விட்டு, குற்றவாளியை வெறுக்கும் மனநிலை” தான் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. சிறைவாசியை விட அவன் குடும்பம் படும் அவமானம் மிகக் கொடுமையானது. சிறையில் இருப்பவர்கள் பெரும்பான்மையானோர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்கள். பணம் செலவழித்து சொந்தமாக வக்கீலை அமர்த்தி வழக்கு நடத்த முடியாமல் தண்டனை பெற்றவர்கள் தான் அதிகமாக‌ சிறையில் உள்ளார்கள்.

வழக்குகளை தாமதப்படுத்த காவல்துறை செய்யும் தந்திரங்களும், நீதிமன்ற நடைமுறைகளுமே விசாரணை சிறைவாசிகளாக அதிக நாட்கள் சிறையில் இருக்கக் காரணம். இந்தியா முழுவதும் இன்றைக்கும் குற்றம் நிரூபிக்கப்படாமல், விசாரணை சிறைவாசிகளாக தடுத்து வைக்கப்பட்டவர்களின் நிலை தெரியுமா உங்களுக்கு.? இவர்களின் குற்றங்களுக்கு அது பொய்யானதாகக் கூட இருந்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்கி இருந்தால் கூட இவ்வளவு வருடங்கள் சிறையில் இருக்க வேண்டியதில்லை என்ற அளவிற்கு சிறையில் அநீதியாக தடுத்து வைக்கப்பட்டவர்களின் கதை தெரியுமா உங்களுக்கு..?

இந்த உளுத்துப்போன சட்டங்களால் களவாடப்பட்ட, 17 வருடங்கள் சிறையில் இருந்து குற்றமற்றவர்கள் என்று விடுதலையான தடா ரஹீம், குனங்குடி அனிபா, அப்துல்நாசர் மதனி போன்றவர்களின்  வாழ்க்கையைத் திருப்பித் தரமுடியுமா அல்லது இந்த சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களால் திருப்பித் தரமுடியுமா..?

17 வருடங்கள் பிணையில் கூட வர முடியவில்லை. அவர்களாக விருப்பப்பட்டுதான் சிறையில் இருந்தார்களா..?

கொள்கைக் குன்றுகளே.. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் விசரணை இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவனை உடனடியாக கொன்று ஒழிக்கக் கூறுவீர்கள் போல் உள்ளது.

இந்த தேசத்தில் இரண்டு வகையான நீதி முறையும், பாகுபாடுகளும் கொண்டதாக சட்ட நடைமுறைகள் இருந்து வருவதை கேட்கத் துப்பில்லை. அதை விடுத்து இன்றைக்கு அநீதியான முறையில் அரசே செய்யும் கொலை தண்டனையான மரண தண்டனையை எதிர்த்தால் உங்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது.

அப்சல்குரு, பேரறிவாளன் உட்பட அனைவரையும் தூக்கில் போட பாசிஸ்டுகள் விரும்புகிறார்கள்; அதற்காகப் போராடுகிறார்கள். நீங்களும் இந்தியாவில் அநீதியான முறையில் வழங்கப்படும் மரண தண்டனையை உருப்படியான சட்டம் என்கிறீர்கள். மரண தண்டனைக்கு எதிராகப் போராடும் சில இஸ்லாமியத் தலைவர்களை கொச்சைப்படுத்துகிறீர்கள். அதனால் இங்கே யார் பாசிஸ்டுகளோடு கைகோர்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள நாங்கள் அதிகம் சிரமப்படத் தேவை இல்லை.

எங்களுக்கு உங்கள் அளவு மார்க்கம் தெரியாது. நீங்கள் பெரிய படிப்பாளிகள். பல மார்க்கத் தீர்ப்புகள் கொடுக்கும் வல்லமை கொண்டவர்கள். இருப்பினும் எனக்கு ஏற்படும் சில கேள்விகள்..

இந்திய சட்டங்கள் புனிதமானதா..? அச்சட்டங்களும் நீதிமன்றங்களும் சரியான தீர்ப்பைத்தான் தருகின்றனவா.?

சரியான நீதி இசுலாமிய ஆட்சியில்தான் கிடைக்கும் என்றால் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியா நடக்கிறது.?

உலகில் எங்கு இஸ்லாமிய ஆட்சியும் இறைவன் வகுத்த சட்டதிட்டங்கள் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது.?

இறைவனின் சட்டமும், நபிகள் நாயகத்தின் வழி முறையிலான இசுலாமிய ஆட்சி எப்படி இருக்கவேண்டும்?

கலிபாக்கள் ஆட்சி முறை மக்கள் ஆட்சி முறை. அப்படியான ஆட்சி முறை உலகில் எந்த இஸ்லாமிய நாட்டில் நடைமுறையில் உள்ளது?

மரண தண்டனையை பின்பற்றும் நாடான சவூதி அரேபியாவில் முழுமையான இஸ்லாமிய சட்டப்படிதான் ஆட்சி நடக்கிறதா..?

இந்தக் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளித்துவிட்டு பிறகு வாருங்கள் மரண தண்டனையைப் பற்றி பேசலாம்.

அன்பான உறவுகளே…

பல்லாண்டுகளாக நீதியின் பெயரால் அரசே வழங்கும் மரண தண்டனைகளை எதிர்ப்போம்.

அப்சல்குரு, பேரறிவாளன்,சாந்தன், முருகன் மீதான மரண தண்டனைகளை எதிர்ப்போம்.

நீதியான சட்டம் இல்லா நாட்டில் மரணதண்டனை ஒரு சார்பானதே!
அது உழைக்கும் மக்களையும், போராடும் போராளிகளையும் ஒழித்துக்கட்டவே என்பதைப் புரிந்து கொள்வோம்.

அநீதியான முறையிலான மரண தண்டனையை மார்க்கத்தின் பெயரால் ஆதரிக்கும் குழப்பவாதிகளை இனம் காண்போம்.

நபிகள் நாயகம் அவர்களின் அரபா இறுதிப் பேருரை…

சீர்திருத்தத்தைத் தன்னிருந்து துவங்குதல்

குழிக்குள் போகட்டும் பழியுணர்ச்ச்சி

அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதல் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ அப்துல் முத்தபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

- சே.ஜெ.உமர்கயான்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=20618&Itemid=139
 

No comments: