Wednesday, July 01, 2009

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !
( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி, துபை )

தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன. இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போவதற்கு யார் காரணம்? என அலசி ஆராய்வது பேதமைத் தனமாகும்.

சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட ஆட்சியாளர்கள் தாம் காரணமென்று உடனே சொல்லி விடுவார்கள். தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை பார்த்தாலே தெரியும்.

1970 க்கு முன்பு ஒரு இளைஞன் ஏதாவதொரு போதை பொருளை பெற வேண்டுமென நினைத்தால் அவ்வளவு எளிதில் அது அவனுக்கு கிடைத்து விடுவதில்லை. இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் பல நிலையில் அவனை சூழ்ந்து கொள்ளும். இத்தகைய சிரமத் திற்குள்ளும் அதை தேட வேண்டுமா? என்ற கேள்விக் குறியோடு அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு நல் வழிக்கு வந்து விடுவது அன்றைய எதார்த்தமான நிலைபாடு.

ஆனால் இன்றைக்கு எவ்வளவு மாற்றம்? ஒவ்வொரு இளைஞனையும் வழிய தேடிவரும் நிலையில் போதைப் பொருள்கள் காணுமிடமெல்லாம் பாகுபாடில்லாமல் நிரம்பி வழிகிறது. பள்ளிக்கூடம், கல்லூரிகள், மருத்துவமனை வளாகம், பொழுதுபோக்கு கூடங்கள், வீதிகள், தோறும் என இலகுவாக கிடைக்கும் ஒரே விஷயம் கஞ்சா, மது, பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதைப் பொருள்களே !

இத்தகைய போதைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் அந்நிய சதிகாரர்கள் அல்லர். சாட்சாத் நமது தமிழகத்தை கடந்த 40 ஆண்டு காலமாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே ! என சொல்வதற்கு நமக்கு எவ்வளவு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களான பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும் கண்ட கனவெல்லாம் தமிழகத்தின் இளைஞர்களை ஒழுக்க முள்ள அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டுமென்பது தான்! அதற்காகவே இயக்கம் கண்டு பல சோதனைகளை சந்தித்த அந்த உத்தம தலைவர்களின் அருமைத் தம்பிகள் என தங்களை மார்தட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் நமது இளைஞர்களை போதைக்கு தூண்டுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்?

அரசின் கஜானாவை நிரப்ப விலை மதிப்பில்லா நமது இளைஞர்களின் குறுதியும், உயிரும் தான் வேண்டுமா? ஊர் தோறும் ஆலயம் அமைப்போம் ! என்ற சொல் மாறி வீதி தோறும் டாஸ்மாக் அமைப்போம் என்றல்லவா முனைப்புக் காட்டுகிறார்கள்.

40 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்குரிய சாதனை களுக்கு மணிமகுடமாய் இருப்பது டாஸ்மாக் தானோ? ஒரு காலத்தில் துண்டு பீடி குடிப்பதற்கே சமூகத்திற்கு பயந்த இளைஞன் இன்று பள்ளிக்கூடம் செல்லும் போதே மது குடித்துவிட்டுப் போகும் அவலங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம் செல்லும் மாணாக்கரின் நெஞ்சத்தில் கல்விக்கண் திறந்த சரஸ்வதியின் நினைவு வரும் என்பது அந்தக் காலம். இன்றோ டாஸ்மாக்கின் நினைவல்லவோ? வருகிறது.

போதை மனிதனுக்கு கேடு என்று தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் கடவுள் மதம் இவைகளை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் மட்டும் தான் போதைக்கு வெண் சாமரம் வீசுகின்றனர். இப்போது புரிகிறதா? இவர்களின் நாத்திக போக்குக்கு என்ன காரணமென்று போதையின் தீங்கை விவரிக்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இவ்வாறு கூறப்படுகிறது. ‘வீணாக பொருளை விரயம் செய்யாதீர்கள்’ நிச்சயமாக பொருளை விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 17:26,27) வீண் விரயம் என இங்கு குறிப்பிடுவது மேற்குறிப்பிட்ட போதைப் பொருளுக்காக யார் காசை செலவழிக்கிறார்களோ? அதனையே குறிப்பிடுகிறது காசை கரியாக்காதே! என்ற மூத்தோர்களின் வழக்கு சொல்லும் பீடி, சிகரெட், மது போன்றவைகளையே குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் தன்னைத் தானே கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது பிடிபட்டால் தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுகிறான். இதை இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.


தற்கொலை முயற்சி என்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது சட்டம்? (Spot Death Suicide) ஒரே நேரத்தில் சாவதா? அல்லது (Slow Motion Suicide) கொஞ்சம் கொஞ்சமாக சாவதா? இரண்டுமே ஒன்று தான் என்றால் புகை மற்றும் மது பழக்கமுடையவர்களை ஏன் இந்த தண்டனை சட்டம் முன் நிறுத்தப்படுவதில்லை?

தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷப் பொருட்களான அமோனியா, நிகோடின், ஹைட்ரஜன் சயனைடு, மெத்தனால், ஹெக்சாமைன், ஆல்கஹாலில் கலந்துள்ள எத்தனால், பூச்சிக்கொல்லி மருந்தில் கலந்துள்ள ஃபீனால், டி.டி.டி.(D.D.T) விஷம், கார் பேட்டரியில் கலந்துள்ள கேட்மியம், போன்ற பொருட்களைத் தானே பீடி, சிகரெட், மது போன்றவற்றில் கலக்கிறார்கள். இப்பொருட்களை நேரடியாக உட்கொண்டால் (Spot Death Suicide) உடனடி காரணம்! பீடி,சிகரெட்,மதுவாக உட்கொண்டால் (Slow Motion Suicide) மெதுவான மரணம்! இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.
ஆக தற்கொலை செய்வதும் குற்றமென்றால் செய்ய தூண்டுவதும் குற்றம் தானே? இன்றைக்கு ஆட்சியாளர்கள் இளைஞர்களை (Slow Motion Suicide) மெதுவான மரணத்தின் பக்கம் தூண்டி வரும் போது ஆட்சியாளர்களை யார் தண்டிப்பது?

இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டிற்குரியது ! (ஆனால் சட்டம் நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம்) அரசின் இந்த முயற்சிக்கு நல்லோர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் !

பீடி, சிகரெட், மூலம் வரும் ஆபத்துகள் அதை பயன்படுத்துவோருக்கு மட்டும் தான் என்பதல்ல, அவன் இழுத்து விடும் புகையை சுவாசிக்கும் பக்கத்து மனிதனுக்கும் சேர்ந்தே கேடு வருகிறது.

தவறு செய்பவன் ஒருவன் தண்டனையை அனுபவிப்பது மற்றொருவன் என்பது என்ன நியாயம்? புகை பிடிப்போரே கொஞ்சம் சிந்தியுங்கள் ! பொது இடங்களில் நீங்கள் இழுத்து விடும் புகையை சகிக்க் முடியாமல் எத்தனை பேர்கள் முகம் சுளித்து மூக்கை மூடுகின்றனர். அவர்களின் மன உளைச்சலை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

இதைப்பற்றி இஸ்லாத்தின் மாபெரும் தலைவராம் அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்; “ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால் அவன் தன் அருகிலிருப் போருக்கு இடைஞ்சல் செய்ய மாட்டான்’ (நபிமொழி – நூல்:புகாரி) பீடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான முஸ்லிம்களே, உங்களின் செயல் இந்த நபிமொழிக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் உங்களது மறுமை நாளின் நிலையை பற்றி யோசியுங்கள். எனது காசு நான் குடிக்கிறேன் இதை தடுக்க நீ யார் என வீராப்பு பேசுபவர்களைப் பற்றி முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான் ‘உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்’(அல்குர்ஆன் 2:195) எவ்வளவு அற்புதமான வார்த்தை! பீடி, சிகரெட், மது போன்றவைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அழித்து வருவதைத் தான் குர்ஆனும் தடுக்கிறது.

மதுவை ஒழிப்பதற்காக போராட்டக் களம் கண்டு கள்ளுக்கடை மறியலில் கைதாகி சிறை சென்ற முதல் பெண்கள் என்ற பெருமை கொண்ட தந்தைப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாவும் அமைத்து தந்த மது ஒழிப்பு போராட்டக் களம் நாடு முழுவதும் இன்னும் வேகமாக விரிவாக்கம் பெற வேண்டும். தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல எடுக்கப்பட்ட “பெரியார்” என்ற திரைப்படத்திற்கு ரூபாய் 95 லட்சத்தை மானியமாக வழங்கி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் பெரியாரின் உயிர‌ணைய‌ கொள்கையான மது எதிர்ப்புக் கொள்கையை மட்டும் புறந்தள்ளியது ஏன்?

திரைப்படத்திற்கு கொடுத்த 95 லட்சத்தை பசுமைத் தாயகம் போன்ற மது ஒழிப்பு பிரச்சார இயக்கங்களுக்கு கொடுக்கப் பட்டிருந்தால் பெரியாரின் ஆன்மாவாவது இன்றைய திராவிட தம்பிமார்களை மன்னித்திருக்கும்.
ஒரு காலத்தில் இவன் பீடி, சிகரெட், மது குடிப்பவனா? என்று கோபத்துடன் கேட்ட நம் தமிழகத்தில் இன்று இவன் பீடி, சிகரெட், மது குடிக்காதவனா? என வியப்புடன் கேட்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு நாட்டில் எங்கும் எப்போதும் போதைப் பொருள்கள் நிரம்பி காணப்படுகின்றன.

ஒவ்வொரு சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஒழுக்கநெறி வழிகாட்டியாக விளங்கக்கூடிய இறைப்பணியாளர்களில் சிலரும் கூட பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு போய் விட்ட கன்றாவியை என்னவென்று சொல்வது? மசூதி களின் இமாம்களில் சிலரும், தேவாலயங்களின் பாதிரிமார்களில் சிலரும், கோயில்களின் பூசாரிகளில் சிலரும் கூட பீடி, சிகரெட், பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போய் தாங்கள் செய்யும் இந்த தவற்றை பிறரின் பார்வையில் படும்படியாக செய்யும் இவர்களை முன்னிலைப்படுத்தி இறைவணக்கம் செய்வோர்கள் யோசிக்க வேண்டாமா? இதுபோன்ற தவற்றை செய்யும் ஆன்மீகப் பணியாளர்களை அந்தந்த இறைப்பணித் துவத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இறைப்பணியும் தூய்மை யடையும். ஒவ்வொரு சமூகத்தின் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

அற்புதமான ஒரு இளைய சமுதாயத்தை வழி கெடுத்து விட்டதோடு நிற்காமல் அடுத்த தலை முறையையும் வழி கெடுக்கும் முயற்சியிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது ஆரோக்கிய மானதல்ல ! நல்லெண்ணம் கொண்டோரும் சிந்தனை வாதிகளும் அவசர,அவசியமாக மது, சிகரெட், பீடி போன்ற தீய செயல்களை எதிர்த்து தீவிர களப் போராட்டம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது. இத்தகைய போராட்டத்திற்கு தாய்மார்களின் ஏகோபித்த நல்லாதரவும் கிடைக்கும் ! நாம் காணப்போகும் தீவிர மது ஒழிப்பு போராட்டம் போதையில்லா சமுதாயம் உருவாக்கும் புதிய விடியலாக இருக்கட்டும் !

நன்றி : முதுவை ஹிதாயத்

No comments: