Saturday, February 28, 2009

இலங்கையில் உடனே போர் நிறுத்தம் தேவை இடம்பெயர்ந்த முஸ்லிம்களை சொந்த மண்ணில் குடியமர்த்த வேண்டும் டெல்லி செய்தி நிறுவனத்திற்கு. K.M.K.பேட்டி


இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் போர் நிறுத்தத்தை இலங்கை அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் சொந்த இடத்தில் குடியமர்த்தப்படவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., டெல்லியிலுள்ள ஏசியன் டிரிபியூன் என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.


பேட்டியில் பேராசிரியர் கே.எம்.கே கூறியிருப்பதாவது:இலங்கையில் மிகப்பெரிய மனித இன படுகொலையை தடுக்க உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.


அதற்காக விடுதலைப்புலிகள் அப்பாவி தமிழ் மக்களை கேடயமாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஆயுதங்களை கைவிட்டுவிட்டு போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும்.இலங்கை அரசு அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தத்தை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.


விடுதலைப் புலிகள் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்.


போர்க்களத்தில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றும் மனித நேயத்துடன் இலங்கை அரசு செயல்பட வேண்டும்.இலங்கையில் வடக்கு மாகாணத்தில் 19 ஆண்டுகளுக்கு முன்பாக விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் அகதிகள் முகாமிலிருந்து வெளியேற்றி சொந்த மண்ணில் குடியமர்த்த வேண்டும்.


இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்னவென்றால் உடனடியாக அங்கே போர்நிறுத்தம் நடைபெறவேண்டும் என்பதுதான்.


ஏதோ போர் நிறுத்தத்திற்காக இதை நாங்கள் வலியுறுத்தவில்லை. போர்க்களத்தில் அப்பாவி பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றவே இலங்கை அரசை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் போர்க்களத்தில் சிக்கிக்கொண்டு குண்டடிப்பட்டு இறக்கிறார்கள்.


விடுதலைப் புலிகள் இந்த இனப் படுகொலை குறித்து கொஞ்சம்கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. இரு தரப்பாரும் அப்பாவி பொதுமக்களை தவிர்த்துவிட்டு அவர்கள் போர் நடத்த முடியுமானால் நடத்தட்டும்.


பயங்கரவாதிகளை மட்டும் தனிமைப்படுத்திட முடியுமானால் இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை தொடரலாம் அப்படி என்றால் அது நல்லது.ஆனால், விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தி அவர்கள் தலையின் மேலே துப்பாக்கிகளை வைத்து போரில் ஈடுபடும்பொழுது தீவிரவாதிகளை தனிமைப்படுத்தி போர்நடத்த முடியாது.மேற்கண்டவாறு பேராசிரியர் கே.எம்.கே. கூறினார்.


அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:


கே. இலங்கையில் அதி கரித்துவரும் மனித படுகொலை குறித்து உங்கள் கருத்து எனன?


ப. இலங்கையில் என்ன நடக்கிறது என்று பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரியும். அந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசின் கொள்கை என்ன வென்றால் விடுதலைப் புலி கள் ஆயுதங்களைகை விட்டுவிட்டு சரணடைய வேண்டும் அதே நேரத்தில் இலங்கை அரசு உடன டியாக போரை நிறுத்திவிட்டு சமரச பேச்சில் ஈடுபடவேண்டும் என்பதுதான்.


கே. பயங்கரவாதிகளுடன் ஏன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்?


ப. இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன்தான் போர் நடத்துகிறது. ஆனால், அப்பாவி மக்களும் தமிழர்களும் கொல்லப்படுகிறார்கள். இரு தரப்பிலும் வீசும் குண்டுகள் இவர்கள் மீது விழுகின்றன.


ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவர்களெல்லாம் இரு தரப்பினரிடையே மாட்டிக்கொண்டு மாய்பவர்கள்தான். அது போக விடுதலைப் புலியினர் அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி போர் புரிகிறார்கள்.


எனவேதான் போர் நிறுத்தம் வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பதை பத்திரிகைகள் வாயிலாகத்தான் தெரிந்து கொள்கிறோம். கள நிலவரம் புரியவில்லை. மத்திய அரசின் கொள்கைதான் எங்கள் கொள்கையும்.


போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு.இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பிரச் சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.அவர்களுடைய பிரச்சினைகள், உரிமைகள் அரசியல் ரீதியாகவும், அரசியல் சட்டத்திற்கும் உட்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.


இதைத்தான் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்காமல் அமைதியாக தீர்க்க வேண்டும்.


அப்படி மேற்கொள்ளும் தீர்வானது இலங்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டும் அங்கே உள்ள சிங்களவர்களுக்கு நிகராக தமிழர்களும், முஸ்லிம்களும் சம உரிமை பெற்று வாழும் வரையிலும் அமையப்பட வேண்டும்.


அனைத்து தரப்பினருக்கும் சம சீராக உரிமைகள் வழங்கப்படும் என்பது மத்திய அரசின் கொள்கை.


கே. இலங்கை பிரச்சினை குறித்தும் விடுதலைப் புலிகள் பிரச்சினை குறித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்ன?


ப. இது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக் கிறோம். அதே நேரத்தில் வடக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளால் இடப்பெயர்வுக்கு உட்பட்டு தற்போது அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் சொந்த மண்ணில் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது நிலைப்பாடாக கொண்டுள்ளது.


கே. கடந்த 19 ஆண்டுகளாக ஏறத்தாழ 1 லட்சம் முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றனவே?.


ப. ஆமாம் அவர்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும்.


கே. யாரால் தீர்க்கப்பட வேண்டும்?


ப. இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தீர்க்கப்பட வேண்டும்.


தற்போது விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திலிருந்த பெரும்பாலான நிலப்பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றிவிட்டதால் முஸ்லிம்களை அகதிகள் முகாம்களிலிருந்து வெளிக் கொண்டு வந்து அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்.


கே. தமிழகத்தில் பெரும் பாலான கட்சிகள் விடுதலைப் புலிகளின் தனி நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த கட்சிகளுடன் உங்களுடைய தொடர்பு குறித்தும், உங்கள் நிலை பாடு குறித்தும் சொல்லுங்கள்?


ப. ஆமாம் அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரிக்கவில்லை விடுதலைப் புலிகளால் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளும் மோதல்களும் அந்த நாட்டின் உள் விவகாரம் ஆகும்.


இந்த வகையில் மத்திய அரசின் நிலைப்பாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடும் ஒன்றுபோல் இருப்பதை கவனிக்க வேண்டும்.


இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையை பொறுத்தவரை அவர்கள் பிரச்சினையை இலங்கை அரசு சுமூகமாக தீர்க்க வேண்டும்.


கே. அதாவது விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்கிறீர்களா?


ப. ஆமாம். அது சர்வதேச அளவில் தெரிந்தது. இந்த நேரத்தில் ராணுவ நடவடிக்கை மூலம் நிரந்த தீர்வை ஏற்படுத்த முடியாது என்று வலியுறுத்தி கூறுகின்றேன்.ராணுவ நடவடிக்கை இன்றோ நாளையோ வெற்றி பெறுவதாக தெரியலாம். ஆனால் நாளை மறுநாள் கொரில்லா போர் மூளலாம். மனித குண்டு வெடிப்புகள் நிகழலாம். மீண்டும் பிரச்சினைகள் தொடரும். எனவே, இலங்கையின் அரசும் இலங்கை அதிபரும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒரு அரசியல் தீர்வுதான் சரியான பதிலாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


கே. சமீபத்தில் மேற்கத்திய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட பேட்டிகளில் இருந்து போர்க்களத்தில் இருந்து தப்பிவரும் பொதுமக்கள் மனநிலை வெளிப் பட்டுள்ளது அவர்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளிருந்து விடுதலைப் புலிகள் சுடுவதாகவும் எனவே, வேறு வழியின்றி இலங்கை ராணுவம் திருப்பி சுடுவதாகவும் சொல்லியிருக்கிறார்களே ஆனால் இலங்கை ராணுவம் பொது மக்களை நோக்கி சுடுவதை மறுத்திருக்கிறார்களே இதில் விடுதலைப்புலிகளின் பிரச்சார தந்திரம் இருக்கிறதா?


ப. பொதுமக்கள் பலியாகவில்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியதே.இவ்வாறு பேராசிரியர் கே.எம்.கே.காதர் மொகிதீன் பேட்டியளித்துள்ளார்.

1 comment:

usmankhan said...

why did nt he revealed it in parliament