Tuesday, February 17, 2009

பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மத்ரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள், பணியாளர்களுக்கு நல வாரியம் நிதி அமைச்சர் க.அன்பழகன் அறிவிபப்பு

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் மதரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள், பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

உலமாக்கள், பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்ற சமுதாயத்தின் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னிலைப்படுத்தி வந்தது.

கடந்த 1ம் தேதி சென்னை கலைவானர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள்-உமராக்கள் மாநாட்டில் இது பிரதான தீர்மானமாக இடம்பெற்றிருந்தது.

இம்மாநாட்டில் பங்கேற்று நிறைவுறையாற்றிய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் உணர்வோடும் உரிமையோடும் இத்தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றி தருவார் அதற்கு நான் துணை நிற்பேன் என உறுதியளித்தார்.

இன்று தமிழக சட்டப் பேரவையில் 2009-10ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தாக்கல் செய்தபோது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேராசிரியர் க.அன்பழகன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை முஸ்லிம் களுக்காக குறிப்பிடப்பட் டுள்ள விவரங்கள் வருமாறு:

சிறுபான்மையினர் நலன்

சமூகப் பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியதோடு, சிறுபான்மையினர் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்துவதற்காக, சிறுபாமையினருக்கான தனி இயக்குநரகம் ஒன்றையும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மையின இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெறத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டத்தின் கீழ் சுமார் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், 10 ஆயிரம் சிறுபான்மையினருக்கு ரூ.30 கோடி கடனுதவி வழங்கப்படும்.

மேலும், மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் ஒன்று அமைக்கப்படும்.

இவ்வாறு பேராசிரியர் க. அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி தெரிவித்துள்ளது.
.

No comments: