Sunday, November 09, 2008

ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃபு சொத்தில் கலைஞர் அறிவாலயம் போராடத் தயாராகும் முஸ்லிம் அமைப்புகள்

தமிழன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 06-2008
கலைஞர் அறிவாலயம் சர்ச்சை
வக்ஃபு வாரிய இடத்தில் கலைஞர் அறிவாலயம் என்கிற தலைப்பில் அக்டோபர் 23 தேதியிட்ட தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் நாம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம் அதில் திருச்சி மேலச்சிந்தாமணியில் உள்ள “ருஸ்தும் பீ“ பள்ளிவாசலுக்குச் சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 30,000 சதுரடி இடத்தை தி.மு.க.வினர் வக்ஃபு வாரிய அனுமதியில்லாமல் தன் வசப்படுத்தி கட்சி கட்டிடமும் திருமண மண்டபமும் கட்டியுள்ளது பற்றி எழுதியிருந்தோம். இந்த செய்தியை படித்த பல்வேறு அரசியல் இயக்கப் பிரமுகர்களும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் அலாவுதீன் நம்மிடம் ஒரு ஆளுங்கட்சி அதன் கட்சி அலுவலகத்திற்காக பள்ளி வாசலுக்கு சொந்தமான இடத்தை அபகரித்திருப்பது மிகப்பெரிய தவறு. பத்திரிக்கைகளில் இது பற்றி செய்திகள் வந்தும் கூட தமிழக முதல்வர் அந்த இடத்தை தார்மீக ரீதியாக வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. அநீதியானது.

வக்ஃபு வாரிய சொத்துக்களை என்னென்ன விஷயங்களுக்காக பயன்படுத்த குத்தகைக்கு விடலாம் என்று வக்ஃபு வாரிய சட்டத்தில் வழிவகைகள் உண்டு. பள்ளிவாசல், அரபி பாடசாலை, அனாதை இல்லம், முதியோர் இல்லம், பள்ளிக்கூடம், உள்ளிட்ட 17 வகையான மக்கள் நல பயன்பாட்டிற்கு மட்டுமே குத்தகைக்கு விடலாம். அல்லது பயன்படுத்தலாம். என்று கூறப்பட்டுள்ளது அதை வக்ஃபு வாரியம் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். மேலும் தாங்கள் அபகரித்துள்ள இடத்தை தற்போது வக்ஃபு வாரியத்திடம் வாடகைக்கு தி.மு.க கேட்டுள்ளதாக தெரிகிறது.

அரசியல் கட்சிகளின் பயன்பாட்டிற்காக வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை துளி கூட வாடகைக்கோ, குத்தகைக்கோ, ஒப்படைக்க கூடாது. அது தவறான நடைமுறைக்கு வழிவகுக்கும். அவ்வபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரசியல் அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இப்படி வக்ஃபு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் வக்ஃபு வாரிய சொத்துக்கள் அனைத்துமே காணாமல் போய்விடும். வக்ஃபு வாரிய தலைமையும் அதன் உறுப்பினர்களும் தி.மு.கவின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளிவாசல் இடத்தை உடனே மீட்க வேண்டும். இல்லையேல் எங்கள் கட்சி அந்த இடத்தை மீட்க போராட்டத்தில் இறங்கும் என்றார் அலாவுதீன் ஆவேசத்துடன்.
முழு செய்தியையையும் வாசிப்பதற்கு கீழே உள்ள புகைப்படத்தில் கிளிக் செய்து வாசிக்கவும்

1 comment:

அருளடியான் said...

இப்பிரச்சினையில் தமுமுகவின் மவுனம் நமக்கு கவலை தருகிறது. திருச்சி திமுக அபகரித்த வ‌க்ஃப் சொத்தைப் பற்றிய தமுமுகவின் நிலைப்பாட்டை நாம் அறிய விரும்புகிறோம்.