சட்டக்கல்லூரி கலவரம் - உண்மைக் குற்றவாளி யார்? அம்பலப்படுத்தும் உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த கலவரம், மற்ற பிரச்னைகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. நாள்தோறும் மாணவர்கள் கைது, தாக்குதலைக் கண்டித்துத் தீக்குளிப்பு, போராட்டம் என விதவிதமான ஆர்ப்பாட்டங்கள் பரபரப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருக்கின்றன.
பொதுமக்கள் மத்தியில் இந்தக் கலவரம் இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது, அதற்கான காரணங்களைக் கண்டறியும் முயற்சியில் வழக்கறிஞர்கள் குழு களத்தில் இறங்கியது. பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையிலான இந்தக் குழுவில் பேராசிரியர்கள் சிவக்குமார், சந்தோசம், லெனின், வழக்கறிஞர் லெனின், மனோகரன், சுஜாதா உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் நவம்பர் 20-ம் தேதி தங்கள் பரிந்துரைகளை அரசுக்கு அளித்தனர்.
கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் களத்தில் இறங்கிய உண்மை அறியும் குழுவினர் கல்லூரி நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தினர். இந்தக் குழுவில் இடம்பெற்ற குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கேசவனை சந்தித்தபோது, "சட்டக் கல்லூரி கலவரம் தொடர்பாக மீடியாக்களில் வெளியான வன்முறைக் காட்சிகளில் ஓரளவுதான் உண்மை இருக்கிறது. மோதலுக்குப் பிரதானமாக பல காரணங்கள் இருக்கின்றன'' என்றவர்,
"சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் 160 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் 149 பேர் தலித் மாணவர்கள். அதிகப்படியான தலித் மாணவர்கள் இருப்பதால், சாதி மோதலாகத்தான் இந்தப் பிரச்னை கவனிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே முக்குலத்தோர் மாணவர் பேரவைக்கும், தலித் மாணவர்களுக்கும் இடையில் விழாக்கள் நடத்துவதில் தொடர் மோதல் இருந்து வந்துள்ளது. இந்த மோதலை பல்வேறு சாதி அமைப்புகள்தான் பின்புலத்தில் இருந்து இயக்கி வந்துள்ளன. அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்ற உச்சரிப்பையே தலித் அல்லாத சில மாணவர்கள் வெறுத்துள்ளனர். குறிப்பாக, விஜய் பிரதீப் என்ற மாணவர் சாதாரண ராக்கிங் நடக்கும்போதுகூட, `நான் யார் தெரியுமா? மேலவளவு முருகேசன் படுகொலையில் முதல் குற்றவாளியான ராமர் என் சித்தப்பாதான். என் பேக்ரவுண்ட் புரிஞ்சுக்கோ' என மிரட்டி வந்துள்ளார். இதை கல்லூரி நிர்வாகிகளும் உறுதிப்படுத்தினர். தற்போது அடிபட்டு சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன் உள்பட சிலர் மீது வன்கொடுமைச் சட்டம், அடிதடி என பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
பிரச்னைக்கான தொடக்கப்புள்ளி கடந்த 7-ம் தேதி பாரிமுனை பஸ் நிலையத்தில் நடந்துள்ளது. தேர்வு எழுதிவிட்டு வந்த ஏழுமலை, மேகநாதன், ராஜா, சிவராஜ் ஆகிய தலித் மாணவர்களை கிருஷ்ணசாமி, அய்யாத்துரை, நாகராஜ், பிரதீப் உள்ளிட்ட சில மாணவர்கள் சேர்ந்து, `ஏன்டா எக்ஸாம் எழுத வந்தீங்க? சொல்றதைக் கேட்க மாட்டீங்களாடா?' என்றவாறு பலமாக அடித்துவிட்டனர். இவர்களது நோக்கம் விடுதி மாணவர்கள் தேர்வு எழுதக் கூடாது என்பதுதான். அடுத்து வந்த நாட்களில் பாரதிகண்ணன் உள்பட சில மாணவர்கள் கத்தியோடு கல்லூரி வளாகத்தில் வலம் வந்துள்ளனர். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர்.
சம்பவம் நடந்த 12-ம் தேதியன்று பாரிமுனை பஸ் நிறுத்தத்தில் அடிவாங்கிய மாணவர்கள், `தேர்வு எழுத முடியவில்லை. பாதுகாப்புக் கொடுங்கள்' என்று விடுதி மாணவர்களுக்குத் தெரிவிக்க, விடுதி மாணவர்களும் உருட்டுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்துள்ளனர். அப்போது பஸ் ஸ்டாண்டில் மாணவர்களை அடித்த அய்யாத்துரையை அழைத்து அடித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கீழே விழுந்த அவருக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர். அவர் இந்தத் தகவலை கல்லூரிக்குள் சுற்றிக் கொண்டிருந்த பாரதிகண்ணனுக்குத் தெரிவிக்க, ஆத்திரமான பாரதியும், ஆறுமுகமும் கத்தியைத் தீட்டிக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
இதைக் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்ரீதேவ், உடனே போலீஸ் உதவி கமிஷனர் நாராயணமூர்த்தியிடம் புகார் கொடுத்துள்ளார். ஏ.சி.யோ, `பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங்கையும், வக்கீல் சங்கத் தலைவர் பால் கனகராஜையும் அழைத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார். போலீஸார் முதலில் புகாரை வாங்கவில்லை. மீண்டும் மீண்டும் முதல்வர் வற்புறுத்திய பின்னரே புகாரை வாங்கியுள்ளனர். இதற்குள் பாரதிகண்ணன் கத்தியை எடுத்துக் கொண்டு எதிரில் வந்த தலித் மாணவர் சித்திரைச் செல்வனை நோக்கிச் சுழற்ற, அவரது காது துண்டாகியுள்ளது. தலையில் வெட்டியதால் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் கொதித்துப் போன விடுதி மாணவர்கள் உருட்டுக் கட்டை, மண்வெட்டிகளோடு தாக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், முதல்வர் புகார் தரவில்லை என போலீஸ் தவறாகச் சொல்கிறது. அவர் செய்ய வேண்டிய கடமையை சரியாகச் செய்திருக்கிறார். அவர் மீது அரசு எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கை தேவையற்றது.
எங்கள் ஆய்வில் தெரியவந்த வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்திற்குப் பிறகு தலித் மாணவர்களை மட்டுமே குறிவைத்து போலீஸ் கைது செய்கிறது. சித்திரைச் செல்வனைக் கத்தியால் குத்திய பாரதிகண்ணன் மீது வெறும் கொலை மிரட்டல் வழக்கும், காயமடைந்த சித்திரைச் செல்வனைக் கைது செய்தது மட்டுமல்லாமல், கொலை முயற்சி வழக்கையும் போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், திருப்பதியில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் கோகுல்ராஜ், உயர்நீதிமன்ற வளாக கேண்டீனில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்ற போலீஸார் `என்ன சாதி? எந்தக் கல்லூரி?' எனக் கேட்டுள்ளனர். அவரோ, `நான் எஸ்.சி. அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று சொல்லியிருக்கிறார். சம்பவத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். அதேபோல், தாக்குதலில் இறங்கிய தலித் மாணவர்களை, `அடிக்க வேண்டாம். விட்ருங்க' என ஒவ்வொருவரையும் தடுத்து விரட்டிக் கொண்டிருந்த திலீபன் ஜோ என்ற மாணவரையும் இதே பிரிவில் கைது செய்திருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன், அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோரையும் சந்தித்தோம். இதில் ஆறுமுகம் என்ற மாணவர், `ஆமாம். நாங்கள் கத்தியோடுதான் கல்லூரிக்கு வருவோம்' என சாதாரணமாகத் தெரிவித்தார். தலித் மாணவரான சித்திரைச் செல்வனுக்குத் துணையாக இருந்த, சம்பவத்துக்குத் தொடர்பில்லாத கோவிந்தன், இளமுகில், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
எங்கள் விசாரணையில், மாணவர்களின் நிலைக்கு முக்கியக் காரணமே தமிழக அரசுதான். சட்டக் கல்லூரியில் பணம் கட்டிப் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தந்துள்ளனர். ஆனால், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. 55 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. கூடுதல் தகுதி வளர்க்கும் வசதியோ, சரியான கல்வியோ இந்த மாணவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. திட்டமிட்டே அரசு இவர்களைப் புறக்கணிக்கிறது. ஜாதி அமைப்புகள் இந்த மாணவர்களை நெருங்குவதற்கு இதுவே காரணமாகிவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கவுன்சலிங் கூடம் நிறுவப்படுவது அவசியம். சட்ட அறிவை வளர்க்கும் முறையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க உள்ளோம். தமிழக அரசு சரியான தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினால் எதிர்காலத்தில் இன்னொரு கலவரம் நடக்காமல் தடுக்கலாம்'' என்றார் முடிவாக.
சட்டக் கல்லூரி கலவரத்தில் தலித் மாணவர்களைத் தடுக்க கல்லூரி முதல்வர் அழைப்பின்பேரில் சென்ற வக்கீல் ரஜினிகாந்த் நம்மிடம், "கலவரத்திற்கு முக்கியக் காரணம் எழும்பூரில் மையமாகச் செயல்படும் ஒரு ஜாதிப் பேரவைதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூவேந்தர் முன்னேற்ற முன்னணியின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்காக கல்லூரியில் இருந்து முளைப்பாரி எடுத்துச் செல்லும் வைபவங்களை நடத்தினர். சாதித் தலைவர்கள் தங்கள் சாதிகளை வளர்க்க மாணவர்களுக்கு `மூளைச் சலவை' செய்யும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதைவிடக் கொடூரமான பல தாக்குதல்கள் தலித் மாணவர்கள் மீது நடந்துள்ளன. அவையெல்லாம் வெளியே வரவில்லை.
இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கையில் கத்தி, கொடுவாள் போன்ற இரும்பு ஆயுதங்கள் வைத்திருந்தது பாரதிகண்ணன், ஆறுமுகம் இருவரும்தான். இதன்மூலம் திட்டமிட்ட தாக்குதலுக்குத் தயாராக வந்தது எந்தத் தரப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். திருப்பித் தாக்கிய தலித் மாணவர்களுக்கு அவர்களைக் கொலை செய்யும் நோக்கமில்லை. அதனால்தான் திட்டமிட்டு அவரது கை, கால்களில் தாக்கினர். பாரதிகண்ணன் தப்பித்து ஓட அனைத்து வாய்ப்புகளும் இருந்தது. அவர் திரும்பத் திரும்ப கத்தியை எடுத்துக் குத்த வந்ததால்தான் பிரச்னை வேறு மாதிரியாகத் திரும்பியது. இதில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தாக்குதலில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் தலித் மாணவர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் உண்மை!'' என்றார்.
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்
No comments:
Post a Comment