Monday, October 06, 2008

அரபு மொழி பேசுவோரையும் தமிழ் படிக்க வைத்த பெருமை முஸ்லிம் லீகிற்கு உண்டு! தளபதி ஷபீகுர் ரஹ்மான்





இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் 13ஆம் ஆண்டுவிழா தஞ்சையில் நடைபெற்றது. ஆன்மீக அரங்கத்திற்கு ப.யு.அய்யூப் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட அரசு காஜி செய்யது காதர் ஹ{சைன்புகாரி ஆலிம் முன்னிலை வகித்தார்.



இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது:-



இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இலக்கியப் பெருவிழாவில் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு நல்கிய உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



மறைந்த நமது தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத், நீடூர் சயீத் ஆகியோருடன் இணைந்து இதற்கு முன்பு இலக்கிய மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன்.



சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது அவர்கள் முஸ்லிம் லீக் பணிகளோடு, ~இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவரது மறைவை தொடர்ந்து தற்போது நமது முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., உலக ஒருங்கிணைப் பாளராக இருந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சேவை புரிந்து வருகிறார்.



தமிழக முஸ்லிம்களை பொறுத்தவரை தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் பற்றும் - பாசமும் கொண்டிருக்கின்றனர். அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.



தமிழக ஆலிம் பெருமக்கள் பலர் மார்க்க சேவையோடு, தமிழ் சேவையையும் புரிந்துள்ளனர். மதரஸாக்களில் அரபி மொழி போதிக்கும் போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும் எடுத்து விளக்கி வருகின்றனர்.




தமிழகத்தின் புகழ் பெற்ற ஆலிமாக திகழ்ந்த ஷெய்குல் மில்லத் அமானி ஹஸரத் அவர்கள் மதரஸாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போதெல்லாம் அரபி மொழி கற்றுக் கொடுக்கும்போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும், இலக்கியத்தையும் எடுத்து விளக்குவார்.



அதேபோன்று கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்திய அரசியல் சபையிலே இந்தியாவில் ஆட்சி மொழியாக அறிவிக்கக்கூடிய தகுதியும், தொன்மையும் இலக்கிய - இலக்கண வளமையும் நிறைந்த மொழி தமிழ் ஒன்றுதான். தமிழையே இந்தியாவின் பொது மொழியாக அங்கீகரிக்க வேண்டும் - அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.



அதுமட்டுமல்ல - மொராக்கோ நாட்டிலே நடைபெற்ற உலக முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டிலே இந்திய அரசின் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு ஒருமுறை முஸ்லிம் லீகிற்கு கிடைத்தது.



முஸ்லிம் லீகின் சார்பாக, காயிதெ மில்லத் அவர்கள் அப்துஸ் ஸமதை இந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது அப்துஸ் ஸமதிடம் சில புத்தகங்களை கொடுத்து இந்த புத்தகங்களை மொராக்கோ மாநாட்டில் கலந்துகொள்ளும் முஸ்லிம் கல்வியாளர்களிடம் கொடுத்து படிக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.



காயிதெ மில்லத் அப்துஸ் ஸமதிடம் கொடுத்தனுப்பிய தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பத்ஹ{ர் ரப்பானி, சிம்து ஸ{பியான் போன்ற அரபு - தமிழ் நூல்களை மொராக்கோவில் நடைபெற்ற உலக முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டிலே கலந்து கொண்ட அரேபியர்கள் பலரும் வாசிக்கும் நிலை ஏற்பட்டது.




அப்போது அவர்கள் வாயிலிருந்து ஏராளமான தமிழ் சொற்கள் வெளிப்பட்டன. இத்தகைய ஒரு அதிசயம் அங்கு நிகழ்ந்தது.



மாநாட்டை முடித்து தமிழகம் திரும்பிய அப்துஸ் ஸமத் மாநாட்டு நிகழ்வுகள் தொடர்பாக ~மணிவிளக்கு ஏட்டிலே எழுதிய கட்டுரையில், அரபுகளையும் தமிழ் பேச வைத்த அற்புத தலைவர் காயிதெ மில்லத் அவர்களின் அந்த செயலினை வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளார்.



இந்த அளவுக்கு முஸ்லிம் பெருமக்கள் தமிழின் மீது தனியாத பற்றுக்கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்களாக மட்டுமல்லாமல் ஆன்மீகத் தலைவராகவும், திகழ்ந்து தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.



தமிழ் மொழிக்கும் - அரபு மொழிக்கும் இடையேயான ஒற்றுமைகளை ஆய்வு செய்து நூல்களை எழுதுபவர்களுக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறிவித்துள்ளார்.



தமிழ் அறிஞர் பெருமக்களும், முஸ்லிம் ஆலிம்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடுவது இன்றைய காலத்தின் அவசியமாகும்.



முஸ்லிம்கள் தமிழை வளர்த்தார்கள். தமிழால் இஸ்லாம் வளர்ந்தது. தமிழ் மொழிக்காக முஸ்லிம் பெருமக்கள் இயற்றித் தந்துள்ள ஏராளமான இலக்கியங்கள் இன்னும் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. அவற்றையெல்லாம் அனைத்து மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இதுபோன்ற இலக்கிய மாநாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.



-இவ்வாறு தளபதி ஷபீகுர் ரஹ்மான் பேசினார். நிகழ்ச்சியில் வவ்வாலடி, ஹபீப் முஹம்மது இஸ்லாமிய பாடலை இசைத்தார். அதிரை அருட்கவி முஹம்மது தாஹா, ஆலிம் கவிஞர் தேங்கை ஷர்புதீன், மறைஞானப் பேழை மவ்லவி ஹ{சைன் முஹம்மது மன்பயீ ஆகியோர் உரையாற்றினர். அப்துஸ் ஸலாம் ஆலிம் நன்றியுரையாற்றினார்.

No comments: