பறக்கட்டும் நம் தேசியக் கொடி! சிறக்கட்டும் நம் தேசம்!!
சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைத் தொட்டு இருக்கிpறோம். முகில் கிழித்து அசைந்தாடும் நம் தேசியக் கொடியைப் பார்க்க விழிகள் தாவுகின்றன. சுதந்திரத்தின் பெருமை அடிமைகளுக்கு தெரிவதில்லை. ஆர்த்து எழுந்து ஜாதி மதம் இனம் மொழி கடந்து போராடினோம். ஆம், 30 கோடி முகமுடையாள் நம் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதி கூற்றுக்கு அர்த்தம் கொடுத்தோம். ஆகஸ்ட் 15, தித்திப்பான நாள். வெள்ளை ஆதிக்கம் வெளியேற்றப்பட்ட நாள், நம்மை நாமே ஆளுவதற்கு வழி கண்ட நாள்.
நம்முடைய தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களைப்பற்றி சர்.மௌண்ட்பேட்டன் பிரபு வேதனையோடு கண்ணீர் மல்க கூறிய வார்த்தைகளை மறந்து விட முடியாது. அடிமை இந்தியாவில் பீரங்கிகளுக்கும், டாங்கிகளுக்கும் இடையில் வந்த போது, ஆம், அடிமை இந்தியாவில் வலம் வந்த போது நாங்கள் அவரைப் பாதுகாத்தோம், ஆனால் சுதந்திர இந்தியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுதந்திரத்தை நீங்கள் எங்கே காக்கப் போகிறீர்கள் என்று வேதனையோடு கூறினார். மிச்சமுள்ள தோட்டாக்கள் ஆங்காங்கே இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், எதிராக வெடித்துக் கொண்டு இருக்கின்றன இன்றும். வறுமை, இல்லாமை, கல்லாமை, மூட நம்பிக்கை, ஜாதி, மத மோதல் என் தாய்த் திருநாட்டில் நடப்பது கண்டு வேதனை அளிக்கிறது. நம் தேசியக் கொடியின் மூன்று நிறங்கள் - தியாகம், பசுமை, தூய்மை போன்றவற்றை பாரத மக்களுக்கு பகர்கின்றன.
தேசியக் கொடியை ஏற்றுவோர்களே! ஆட்சியாளர்களே! அரசு அதிகாரிகளே! உங்கள் இதயத்தில் ஒன்றை ஆழமாகப் பதித்துக் கொள்ளுங்கள். தேசியக் கொடி துணியாலும், நூலாலும் நெய்யப்பட்டது அல்ல, இந்திய பன்மைச் சமுதாய மக்களின் இரத்த நாளங்களாலும், நரம்புகளாலும் பின்னப்பட்டது. அதை உடைக்கும் உளுத்தர்களை இனம் கண்டு ஊதையில் துரும்பு போல் ஆக்கிவிடுங்கள். ஆம், நீதி, நேர்மை, வாய்மையை உயரே பறக்க விடுங்கள். வேற்றுமையில் ஒற்றுமை உயரே பறக்கட்டும், மானுடம் சிரிக்கட்டும், இந்தியா உயர்ந்து நிற்கட்டும், உலகமே நம்மைப் பார்த்து படிப்பினை பெறட்டும், பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்ற பாடல் பட்டுத் தெறிக்கட்டும் எட்டுத்திக்கும் என்று சுதந்திரப் பொன்நாளை வற்றாத வாஞ்சையோடு வாழ்த்துகிறோம்.
1 comment:
neengal santhosama suthanthira thinam kondadunko.thappille!valthukkal.aana innoru naadu suthanthiram adaiya kurukke nikkireenkale.ithu niyayama?
Post a Comment