Tuesday, April 22, 2008

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறுபான்மை அமைப்புகள் தீர்மானம்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறுபான்மை அமைப்புகள் தீர்மானம்

முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மாநிலச் செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகான் நிருபர்களிடம் கூறியது:

சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத பாதிப்புகள் இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் தற்போது ஏற்பட்டுள்ளது.

முதுகலை மருத்துவப் படிப்பில் ரோஸ்டர் முறை என்கிற சுழற்சி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கிறிஸ்தவர்கள் 14-வது இடத்திலும், முஸ்லிம்கள் 28-வது இடத்திலும் உள்ளனர்.

முதுகலை மருத்துவப் படிப்பில் இரண்டு சமுதாயத்துக்கும் ஒரு இடம் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் பல ஆண்டுகள் விண்ணப்பிக்கவே முடியாத நிலைக்கு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

பொறியியல், மருத்துவம் கவுன்சலிங்கிலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதிப்பு கடுமையாக இருக்கும்.

தமிழக அரசின் இடஒதுக்கீடு இல்லாமலேயே அரசுப் பணிகளில் 3.2 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். பலதுறைகளில் 4 முதல் 9 சதவீதம் வரை இரு சமுதாய மக்களும் பணியில் இருந்ததை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சிறுபான்மை மக்களுக்கு உதவுவதாக் கூறி அளிக்கப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீடு முற்றிலும் ஏமாற்று வேலையாக இந்தக் கூட்டம் கருதுகிறது.

அண்மையில் நியமிக்கப்பட்ட 2.5 லட்சம் அரசுப் பணியாளர்களில் கிறிஸ்தவர்கள் 2.5 சதவீதமும், முஸ்லிம்கள் .5 சதவீதமும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.

ரோஸ்டர் முறைக்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

அரசின் தவறான சட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்டும் வகையில் 10 ஆயிரம் அரசுப் பணிகள் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகளை ஒன்று திரட்டிப் போராட உள்ளோம்' என்றார் அவர்.

No comments: