தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு உண்மைக் குற்றவாளிகளை கைது செய்த நெல்லை காவல்துறையைப் பாராட்டுகின்றோம். மாநிலம் தழுவிய முக்கியப் புள்ளிகளையும் விசாரிக்க வேண்டும்.
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
கடந்த ஜனவரி 24 அன்று தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் பைப் வெடிகுண்டு வெடித்ததாக செய்தி வெளியானது. அப்போதே இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று கூறினோம். உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் இது குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டியிடம் காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.
இந்நிலையில், நெல்லை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேர்களை கைது செய்துள்ளனர். இதில் கொல்லப்பட்ட சங்பரிவார் பிரமுகர் குமார் பாண்டியனின் தம்பி ரவியும் ஒருவர். இவர் இக்கும்பலின் வழிகாட்டியாக செயல்பட்டு வந்துள்ளார் என்றும் தெரிகிறது.
தங்கள் கொள்கையைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இவர்களே குண்டுகள் மூலமாகத் தாக்கி அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட இக்கும்பல் திட்டமிட்டிருந்ததும் இதன் மூலம் தெரிகிறது. சமூக அமைதியைக் குலைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதே இவர்களது நோக்கமாக இருந்திருக்கிறது.
இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் குண்டு வெடித்த இடத்தில் கிடைக்கப் பெற்ற வெடி மருந்துகளும் இப்போது தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகளும் ஒரேமாதிரியாக இருப்பதாக டி.ஐ.ஜி கண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.
எனவே, ஹைதராபாத் மக்கா பள்ளி குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் ஈடுபடும் மத்திய புலனாய்வு குழு தமிழக காவல்துறையிடமிருந்து தென்காசியில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்து தடயங்களைப் பெற்று அவ்வழக்குத் தொடர்பாக மறு விசாரணையை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
தென்காசி வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இக்கும்பலுக்கு பின்னணியில் வேறு பலமான சக்திகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றோம். எனவே இது குறித்து மாநில அளவில் செயல்படும் சங்பரிவார் அமைப்புகளின் முக்கியப் புள்ளிகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.
சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வேலை கொடுக்காமல் துரிதமாகவும் நுட்பமாகவும் செயல்பட்ட நெல்லை காவல்துறையை பாராட்டுகின்றோம். தொடர்ந்து இவ்வழக்கை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்றோம்.
சமூக ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் கேடு விளைவிப்பவர்களை சட்டத்தின் துணை கொண்டு உறுதியுடன் ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment