முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு: முதல்வர் ஆலோசனை
புதுதில்லி, ஜூன் 9: தமிழகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் மு.கருணாநிதி.
மூன்று தினங்களுக்கு முன்பு முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், இடையூறுகள் இல்லாமல் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவது குறித்த பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.
சில தினங்களுக்கு முன்பு, சிறுபான்மையினர் விழா ஒன்றில் பேசிய முதல்வர், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு இருப்பதாகக் கூறப்படுவது உண்மையானால், தமிழகத்திலும் அவசர சட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டுவரலாம் என்று தெரிவித்தார்.
அவசரச் சட்டம் எப்போது? அதன்படி, அவசரச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பல புள்ளி விவரங்களைச் சேகரித்து, சட்டத்தை வடிவமைப்பதற்கான ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்துக்கு எந்த நேரத்திலும், இறுதி வடிவம் கொடுத்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ராஜஸ்தான் மற்றும் அண்டை மாநிலங்களில் குஜ்ஜர் இனத்தவர் தங்களை பழங்குடியினராக அறிவிக்குமாறு போராட்டம் நடத்தியதால், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டு விஷயத்தில் தமிழக அரசு அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே இறுதி முடிவு எடுக்க உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.
தற்போது, தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது. அதில், மிகவும் பிற்பட்ட சமூகத்தினருக்கு 30 சதம், பிற்பட்ட சமூகத்தினருக்கு 20 சதம் வழங்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு, மிகவும் பிற்பட்ட சமூகத்தினரின் 30 சதவீதத்தில் இருந்து 6 சதமும், கிறிஸ்தவர் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு, பிற்பட்ட வகுப்பினரின் 20 சதவீதத்தில் இருந்து 2 சதமும் எடுத்து, தனி இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.
இதுதொடர்பாக, பல்வேறு சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசித்திருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், மிகவும் பிற்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டில் 6 சதத்தை தியாகம் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி ஒப்புக்கொள்ளுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இப் பிரச்னை குறித்து விவாதிக்கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தனி இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றலாமா என்றும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது
இதற்கிடையில், குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய வரும் தமிழக முதல்வர், அடுத்த வாரம் தில்லியில் மூன்று நாள் தங்கியிருப்பார். அப்போது இந்த தனி இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
முதல்வரின் தில்லிப் பயணத்துக்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமணி
குறிப்பு : நேற்று கூட தமுமுக வின் மாநில பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள் நெல்லையில் இட ஒதுக்கீட்டை வலியுருத்தி முஸ்லிம்களுக்கு உடணடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பேட்டியளித்தார்கள்.
எப்படியாவது கலைஞரின் இந்த ஆட்சிக் காலத்தக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்களின் கனவை மெய்ப்பிப்பாரா பார்ப்போம்.
சமயத்திற்கு பொருந்தி போவது போல் அருளடியான் என்பவர் ஒரு கட்டுரைக்கான தொடுப்பினை இன்று காலை எமக்கு அனுப்பியிருந்தார் அதையும் இங்கு பதிகின்றேன். வேறு வழியில்லையென்றால் முஸ்லிம்கள் இவரின் இந்த கருத்தையும் பரிசீலிக்கலாம். விடுதலை சிறுத்தை அண்ணன் திருமா வளவன் கூட முஸ்லிம்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளார்.ஏன் தலித்துகளும், கிருத்தவர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து ஒரு அணி அமைத்தால் என்ன? முஸ்லிம் அமைப்புகள் சிந்திக்குமா?இந்த ஆட்சிக்குள் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லையென்றால் ஒவ்வொரு முறையும் முஸ்லிம் வாக்கு வங்கிகளை துரோகிகளுக்கு எந்த நன்மையுமின்றி திசை மாற்றுவதை விட்டு தமுமுக போன்ற அமைப்பகள் நேரடி அரசியலில் இரங்கி முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகுதிகளை பெறுவதும்தான் ஒரே வழி!! அதற்கு எடுத்துக் காட்டு உ.பி அரசியல். - முகவைத்தமிழன்
புதிய தமிழகத்தை ஆதரிப்போம்!!
வரும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் புதிய தமிழகம் வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தி.மு.க தன் வாக்குறுதிப்படி முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாள் தோறும் வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். பா.ஜ.கவுக்கு எதிரணி என்ற அடிப்படையில் தான் நாம் தி.மு.கவுக்கு அதரவளித்தோமே தவிர தி.மு.கவுக்கான நம் ஆதரவு நிரந்தரமானதல்ல. மதுரையிலும், கரூரிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட திமுகவினருக்கு உரிய பாடம் கற்பிப்போம். இத்தேர்தலில், தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்வோம். மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே ஜெயலலிதா தன் மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்பதை நினைவில் வையுங்கள். சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது.
கோவை சிறைவாசிகளின் விடுதலையிலும் முதலமைச்சர் அக்கறை காட்டவில்லை. எதிர் கட்சித் தலைவியான, ஜெயலலிதா முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. கோவை சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக உள்ளார்.
பா.ஜ.கவைப் பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டியது தான். விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற்றியும், கோவை சிறைவாசிகள் விடுதலை பற்றியும் என்ன நிலைப்பாடு என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே, நாம் 1. காங்கிரஸ் (தி.மு.க) 2. அ.இ.அ.தி.மு.க 3. பா.ஜ.க 4. தே.மு.தி.க ஆகிய கட்சிகளூக்கு வாக்களிக்க முடியாது.
முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், கோவை சிறைவாசிகள் விடுதலைக்கும் ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.
நன்றி : அருளடியான்
No comments:
Post a Comment