Wednesday, January 17, 2007

டெல்லியில் பேரணி ஏன்?

போராட்டம் நடத்த டெல்லி செல்ல வேண்டுமா?
ஏ.ஆர். பிலால் அஹ்மது, புரைதா, சவூதி அரேபியா

கேள்வி: ஒரு குடும்பத்திற்குத் தேவைப்படும் ஒரு மாத செலவை எடுத்துக் கொண்டு டெல்லி செல்ல வேண்டுமா? வீண் விரயம் அல்லவா? அந்தப் போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டியதுதானே? என சிலர் கேட்கிறார்களே...!

பதில்: உரிமைகளைப் பெறுவதற்கு பல போராட்டங்களை நடத்துகிறோம். அதில் பொருளாதார செலவுகள் தவிர்க்க முடியாதவை. சமூகத்தின் நாளைய நன்மைக்காக நாம் செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்கும் விளைவு உண்டு என்ற நம்பிக்கையிலேயே நாம் போராடுகிறோம். செலவுகள் என்பது உரிமைப் போராட்டத்திற்காக நாம் செய்யும் சின்னச் சின்ன தியாகங்கள் என்பதை உணர வேண்டும்.
தஞ்சாவூரில் 2004 மார்ச் 21ல் நாம் நடத்திய லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இடஒதுக்கீட்டிற்கான வரலாற்றுப் பேரணிக்கும் பெரும் தொகை செலவானது. அங்கு வருகை தந்த ஒவ்வொருவரும் செலவு செய்துதான் வந்தார்கள். ஆயிரக்கணக்கில் வாகனங்களுக்குச் செலவு செய்து வந்தவர்களும் உண்டு.

அந்த எழுச்சிக்குப் பிறகுதான் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு உச்சக்கட்ட அரசியல் விவாதமாகியது. அதன் பயனை புரிந்து கொண்டவர்கள் அதற்காக செலவு செய்த தொகையைப் பற்றி கவலைப்படவில்லை. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெற முடியும் என்ற வகையில் சரி கண்டார்கள்.

இப்போது தலைநகர் டெல்லிக்கு அழைக்கிறோம். டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு இப்போராட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில் நடைபெறும் இந்த போராட்டம் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் இப்போராட்டம் கவரும்.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடகம் மற்றும் கேரளாவில் உள்ளது போல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு நாடு முழுவதும் விரிவுபடுத்த ப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்து அதன் ஆட்சி காலத்தில் பாதி அளவு முடிந்த தருவாயில் 2004தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி டெல்லியில் நாடாளுமன்றத்தின் முன் இப்போராட்டம் நடைபெறுவது தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்க முடியாது என்ற நெருக்கடியை ஆளும் கட்சியினருக்கு அளிக்கும்.

இந்த போராட்டம் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெறும் போராட்டமாகும். இந்த போராட்டத்தில் பிற மாநில முஸ்லிம்களும் பங்கு கொள்ள வேண்டும் என்பதும் நமது நோக்கமாகும். தமிழகத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வீதிக்கு வந்து போராடும் உணர்வு நாடுமுழுவதும் உள்ள முஸ்லிம்களிடமும் பரவ வேண்டும் என்பதும் நமது நோக்கமாகும்.

அகில இந்திய அளவில் இடஒதுக்கீடு கேட்பதற்கு டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு பேராடுவதுதான் கோரிக்கையின் வலிமையை நாடு முழுவதும் எதிரொலிக்க வைக்கும்.

ஆனால் சில குறுமதியாளர்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் புலப்படுவதில்லை. இந்த போராட்டம் சில 'அப்நார்மல்கள்' புலம்பியுள்ளது போல் காங்கிரஸ் கட்சியை மட்டும் இலக்காக கொண்டு நடத்தப்படும் போராட்டம் அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் எச்சரிக்கை விடுப்பதற்காக நடைபெறும் போராட்டம் என்பதை அறிவுடையோர் அறிவார்கள்.

யாருக்கெல்லாம் டெல்லி வந்து போராடக்கூடிய அளவுக்கு பொருளாதார சக்தி இருக்கிறதோ அவர்களை மட்டும் அழைக்கிறோம். ஆர்வமிருந்தும், பொருளாதார பலமில்லாத சகோதரர்களுக்கு பொருளாதார பலமுள்ள டெல்லி வர முடியாத சகோதரர்கள் உதவி செய்கிறார்கள். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.செலவு செய்யவே சக்தியற்ற சகோதரர்களை கட்டாயப்படுத்தி இழுத்துக் கொண்டு டெல்லி செல்வோம் என்று நாம் எங்கும் முழங்கவில்லை. எனவே இத்தகைய கேள்விகள் தேவையற்றது. நாளைய தலைமுறைகள் உரிமைகளுடன் வாழ பயனுள்ள செலவுகள் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments: