Saturday, December 30, 2006

ஒட்டகங்களை வெட்ட தடை நீக்கம்


ஒட்டகங்களை வெட்ட தடை நீக்கம்

சென்னை: ஒட்டகங்களை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நேற்று நீக்கியது.

பக்ரீத் பண்டிகை அன்று ஏழைகள் மகிழ்ச்சியோடு உண்டு மகிழ கறி பங்கிட்டு தானமாக கொடுப்பர். இது "குர்பானி' எனப்படுகிறது. வளைகுடா நாடுகளில் ஒட்டகங்களை குர்பானி கொடுப்பது வழக்கமாக இருப்பதால், இங்கும் அவற்றை குர்பானி கொடுப்பது விசேஷமாக கருதப்படுகிறது. ஒட்டகத்தின் விலை அதிகமாக இருப்பதால், பலர் சேர்ந்து ஒட்டகத்தை வாங்குகின்றனர். கடந்த முறை பக்ரீத் பண்டிகைக்கு சென்னையில் ஒட்டகங்கள் குர்பானி கொடுக்கப்பட்டன. தற்போதும் சென்னைக்கு ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பாரதிய பிராணி மித்ர சங் அமைப்பின் நிறுவனத் தலைவர் கவுஹர் அசிஷ் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "வழிபாட்டுத் தலங்களில் ஒட்டகங்களை பலியிடுவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். பக்ரீத் தினத்தன்று குர்பானி என்ற போர்வையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஒட்டக இறைச்சியை விற்பதற்கும் தடை விதிக்க வேண்டும். பலியிடுவதற்காக தமிழக எல்லைக்குள் ஒட்டகங்களை கொண்டு வருவதை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, சந்துரு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஒட்டகங்களை வெட்டுவதற்கு இடைக் காலத் தடை விதித்தது. ஐகோர்ட் விதித்த தடையை நீக்கக் கோரி தஸ்தகீர் சாகிப் ஜாமியா மசூதியின் செயலர் அப்துல்காதர் சாகிப், வக்கீல்கள் மிலாத் அமைப்பின் இணைச் செயலர் அப்துல்முபின் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நேற்று இந்த மனுக்களை நீதிபதிகள் ஜோதிமணி, சந்துரு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராகி, "பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணை சென்னைக்கு மட்டுமே பொருந்தும். தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு பொருந்தாது. மேலும், இந்தச் சட்டப்பிரிவு 28ன்படி, மத விழாக்களில் பிராணிகளை பலியிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பிராணிகளை கொல்வதற்காக தேர்ந்தெடுக்கப்படும் இடங்களை மாநகராட்சி கமிஷனர் முடிவு செய்யலாம்' என்று தெரிவித்தார். தஸ்தகீர் சாகிப் ஜாமியா மசூதி சார்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஏழு பேர் சேர்ந்து கூட்டு குர்பானி கொடுக்கின்றனர். ஒட்டகங்களை ஏற்கனவே, விலைக்கு வாங்கி விட்டோம். ஐகோர்ட் விதித்த தடையை நீக்க வேண்டும் என்று வாதாடினார். பாரதிய பிராணி மித்ரா சங் அமைப்பு சார்பில் வக்கீல் பார்த்தசாரதியும் மற்றும் வக்கீல் ராஜேந்திரனும் ஆஜராகி, ஒட்டகங்களை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூடாது என்றும் மத்திய அரசின் அறிவிப்பாணை தமிழகம் முழுவதற்கும் பொருந்தும் என்றும் வாதாடினர்.
மனுக்களை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் தனது இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:

பிராணி வதை தடுப்புச் சட்டப்பிரிவு 28ன்படி, மத விழாக்களில் பிராணிகளை வெட்டுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப்பிரிவுகள் 296 மற்றும் 298 ஐ சுகாதார அதிகாரிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பிராணிகளை வெட்டுவதற்கு உரிய இடங்களை சுகாதார அதிகாரிகள் குறிப்பிட வேண்டும். இடைக்கால தடை உத்தரவு நீக்கப்படுகிறது.

இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் தனது உத்தரவில் கூறியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை மார்ச் மாதத்துக்கு தள்ளி வைத்த டிவிஷன் பெஞ்ச், மனுக்களுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

நன்றி : தினமலர்

No comments: