Thursday, November 02, 2006

இலங்கை முஸ்லிம்களின் நிலை

இலங்கை முஸ்லிம்களின் நிலைபற்றிய ஒரு கம்யூனிஸப் பார்வை


இங்கே கீழே வெளியாகி இருக்கும் கட்டுரையை இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரர் எங்களுக்கு அனுப்பி இருக்கின்றார். எங்களது வேண்டுகொளை ஏற்று இலங்கை முஸ்லிம்களின் நிலைபற்றிய கட்டுரையை ஆக்கித் தந்தமைக்கு சகோதரர் அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வருங்காலத்தில் இது போன்ற தொடர் ஆக்கங்களை சகோதரரிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை இனப்பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியில் அரசு இறங்கி இருக்கும் இந்தச் சூழ்நிலையில், இந்தத் தீர்வில் முஸ்லிம்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாகும். எந்த இனத்தின் உரிமையின் மீதும் எங்களது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. அது இஸ்லாத்திற்குப் புறம்பானதும் கூட. தமிழ்த் தேசியப் போராட்டம் ஆரம்பித்த பொழுது கூட ஏற்படாத, முஸ்லிம்களின் அரசியில் விழிப்புணர்வு மற்றும் அடக்குமறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முஸ்லிம்களின் அரசியல் மற்றும் ஆயத போராட்ட முறைகளுக்கும் மற்றும் தமிழ் குழக்களுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. முஸ்லிம்களின் அரசியல் பிரவேசம் புலிகளின் அடக்குமறையின் காரணமாகத் தான் தீவிரமடைந்ததே ஒழிய, அதற்கு முன் முஸ்லிம்கள் எந்த அரசியல் தீவிரத்திலும், உரிமைகளை மீட்டுக் கொள்ள ஆயத வழிமுறையையும் அவர்கள் நாடவில்லை என்பது தெளிவு. சில சமயங்களில் அரசிடம் உதவி பெற்றது கூட அவர்களது இயலாமையைத் தான் வெளிப்பட்டதே ஒழிய, அரசிடம் இருந்து உதவியைப் பெற்றுக் கொள்வதில் எந்த மாற்று வழிமுறையையும் முஸ்லிம்கள் திட்டமிடவில்லை.

மேலும், சகோதரர் இங்கே தெரிவித்திருக்கும் கருத்து முஸ்லிம்களின் மீது புலிகள் காட்டிய இன ஒழிப்பு பற்றி விரிவாகப் பேசுகின்றது. அந்த இன ஒழிப்பில் இந்தியாவின் இந்துத்துவா வின் சாயல் தெரிவதையும் அக் கட்டுரை தெளிவாக்குகின்றது.

மேலும், இந்தக் கட்டுரையின் நெடுகிலும் கம்யூனிஸ சித்தாந்தத்தின் நெடி தெரிகின்றது. இஸ்லாம் கம்யூனிஸத்தின் எதிரி கிடையாது. இஸ்லாத்தின் மீது கம்யூனிஸம் கொண்டுள்ள நிலைப்பாட்டின்படி, இஸ்லாம் போதை தரும் அபினும் அல்ல. மாறாக, வாழ்க்கை நெறி! மேலும் இது தத்துவக் கடலுமல்ல. கம்யூனிஸம் பொருளாதாரச் சமத்துவம் ஒன்றே பிரச்னைக்குத் தீர்வு என்கிறது. இஸ்லாம் அதையும் தாண்டி, அந்தப் பொருளாதாரமும் நேர்மையான வழியில் பெறப்பட வேண்டும், பங்கிடப்பட வேண்டும், இன்னும் திறமைக்கேற்ற ஊதியம் தரப்பட வேண்டும் என்பதோடு நின்றுவிடாமல், மனித வாழ்வு பொருளாதாரத்தில் அடிப்படையில் மட்டும் ஒழுங்குற இயலாது, அதற்கு ஒழுக்க மாண்புகளும் அவசியம் என்பதோடு, அந்த ஒழுக்க மாண்புகளுக்கான வரையறைகளையும் தெளிவாகவே காட்டுகின்றது.

ரஷ்யாவில் கம்யூனிஸம் அரசோட்சிய காலங்களில் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே நடந்த போராட்டங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன, மக்களின் குரல் வலைகள் எவ்வாறு நெறிக்கப்பட்டன என்பதை இன்றைக்கு ரஷ்யா சிதறிய பின்பு நாம் அறிய வருகின்றோம். இன்னும் சீனாவின் ஆட்சியாளர்கள் தங்களது உற்றார் உறவினர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதும் கூட, மக்களால் சுட்டிக் காட்டப்பட முடியாமல் இருக்கின்றது.

ஆனால் இஸ்லாமிய வரலாற்றில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அபுபக்கர் (ரலி) அவர்களும், அவருக்குப் பின் வந்த உமர் (ரலி) அவர்களும், நாங்கள் நீதி தவறினால் உங்களது வாள் எங்களைக் கட்டுப்படுத்தட்டும் என்று மக்களைப் பார்த்துக் கூறினார்கள். அந்த சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு இருப்பினும், அந்த ஏற்றத் தாழ்வுகள் பிரச்னையை உருவாக்கவில்லை.

இஸ்லாத்திற்கும் கம்யூஸத்திற்கும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பினும், அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அநீதிக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தில் இருகொள்கைகளும் கைகோர்ப்பதன் மூலம், அந்த மக்களுக்கான விடியலை விரைவில் மீட்டெடுக்க இயலும்! தொடரட்டும் உறவுகள்...!



முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையும், அதற்கு எதிரான போராட்டமும்

முஸ்லீம் மக்கள் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு 10 வருடங்கள் கடந்த நிலையிலும், எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் இன்றி வாழ்விழந்து ஒடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தமிழ் அடிமையாக உயிர்வாழ்கின்றனர். 1990 ஐப்பசி மாதம் 30 ம் திகதி வடக்கில் இருந்து 48 மணி நேரத்தில் அனைத்து பாரம்பரிய தலைமுறை உழைப்பையும் பறித்தெடுத்த பின்பு, சொந்த மண்ணில் இருந்து ஈவிரக்கமின்றி துரத்தப்பட்டனர். முஸ்லீம் மக்களுக்கு இழைத்த துரோகம், தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணயத்துக்கான விடுதலைப் போராட்ட சீரழிவை மீண்டும் ஒரு முறை நிறுவியது. புலிகளின் குறுந் தேசிய இனவாதம் தமிழ் மக்களின் தேசியத்தையே மறைமுகமாக கேலி செய்து ஒடுக்கியதையே நிரூபித்தது.

சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கப்பட்டு, எந்தவிதமான காரணத்தையும் முன்வைக்காது இரவோடு இரவாக ஆயுத முனையில் துரத்திய நிகழ்வு, தமிழ் மக்களின் வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் ஒரு கறுப்புநாள்தான். இந்த நிகழ்வையிட்டு இலங்கையின் அனைத்து சமூகங்களும், ஆதரவாகவோ எதிராகவோ ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். புலிகளின் இந்த மனித விரோத நிலைப்பட்டை எதிர்க்காது மௌனம் சாதித்த அனைவரும், ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகளே. முஸ்லீம் மக்களுக்கு இந்த நிலைமை ஏற்படவும், இழைக்கப்பட்ட கொடூரத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியாத ஒரு நிலைமை தொடர்வதற்கும், மார்க்சியவாதிகளாகிய நாங்கள் (இங்கு தமிழ், முஸ்லிம், சிங்கள...) பொறுப்பாளிகளே.

இலங்கையில் பாட்டாளி வர்க்கம் தனது அதிகாரத்துக்கான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க தவறிய வரலாற்றுத் தொடர்ச்சியில் தான், தேசிய விடுதலைப் போராட்டம் முன்னுக்கு வந்தது. இந்த தேசிய விடுதலைப் போராட்டம் கூட ஜனநாயகக் கோரிக்கையின் உள்ளடக்கத்தில், ஒரு வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டது என்பதை பாட்டாளி வர்க்கம் புரிந்து கொள்ளத் தவறிய நிலையில், வலது குறுந் தேசியவாதம் தேசியவிடுதலைப் போராட்டத்தின் தலைமைக்கு வந்தது. இந்த வலது தேசியவாதம், குறுந்தேசிய கண்ணோட்டத்தில் மற்றைய இனங்களை எதிரியாக அடையாளம் காட்டியே தன்னையே கட்டமைக்கின்றது. இந்த குறுந்தேசிய இனவாத கண்ணோட்டம் மட்டுமே, அதன் பிரதான மையமான அரசியல் கோசமாக இருந்தது. மற்றைய இன மக்களை எதிரியாக காட்டிய அரசியல், மற்றைய இன மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கவும், அவர்களை எதிரியாக காட்டி ஒடுக்கவும், ஒழிக்கவும் வழிகாட்டியது. தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புகளின் அரசியல் வரையறை இதுவாகவே இருந்தது. பிந்திய காலத்தில் இதன் வளர்ச்சிப் போக்கில் புலிகள் தமது இராணுவ வலிமையில் உயர்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்குவதில், ஈவிரக்கமற்ற மனிதவிரோதத்தை கையாண்டனர்.

இந்த வகையில் சிங்கள மற்றும் முஸ்லீம் அப்பாவி மக்கள் மீதான இனப் படுகொலை தாக்குதல்கள், கூட்டம் கூட்டமாக கொன்று குவிப்பதில் வளர்ச்சி பெற்றது. இந்த குறுந்தேசிய இனவாதமே, புலிகளின் அரசியலில் மையமான நடவடிக்கைக் கண்ணோட்டமாக மாறிய நிலையில், மற்றைய இன போர்வீரர்கள் யுத்தத்தில் சரணடைந்தாலும் கொன்றுவிடும் போராட்டமாக மாறியது. இது போராட்டத்தை பாரிய பின்னடைவுக்கு இட்டுச் சென்றுள்ளது. எதிரி சரணடைவதைவிட கூலிக்கு போராடி மரணிப்பது மேல் என்றளவுக்கு, போராட்டத்துக்கே இது பாதகமாகியுள்ளது. இந்த குறுந்தேசிய இனவாதத்தை அடிப்படையாக கொண்ட புலிகளின் பல்வேறு நடவடிக்கையின் மூலம் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான வரலாற்று தொடர்ச்சி கொண்ட மனிதவிரோத நடத்தையையிட்டு, தமிழ் மக்களாகிய நாம் தலைகுனிகின்ற அளவுக்கு அவமானத்துக்குரியது மட்டும் இன்றி வெட்;ககேடானதுமாகும். இன்று கட்டமைத்துள்ள ஷஷவீரம், மற்றும் ஷஷதியாகம் என அனைத்தும் கறைபடிந்துபோன நிலையில் அவமானத்துக்குரியதாகும். தமிழ் மக்கள் சார்பாக மார்க்சியவாதிகளாகிய நாங்கள் இந்தக் கொடூரமான நிகழ்வையிட்டு, நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகின்றோம். தமிழ் மக்கள் இந்தக் கறையை துடைக்க முனையாத வரை, அக்கறை அவர்களின் முகத்திலும் கையிலும் அப்பிக்கிடக்கும் வரலாற்றுத் தொடர்ச்சியை இன்று நாம் மீளவும் சுட்டிக் காட்டுகின்றோம். இந்த வரலாற்று கறையை துடைக்க போராடும் வரலாற்று கடமையை செய்யத் தவறுகின்ற யாரும், மார்க்சியவாதிகளாக இருப்பதில்லை. முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானகரமான நிகழ்வுக்கு தீர்வு இன்றி தொடரும் எமது தேசிய போராட்ட வரலாற்றில், இந்த மக்களுக்கான தீர்வை பாட்டாளி வர்க்கம் மட்டுமே தீர்த்துவைக்கும் அளவுக்கு முரணற்ற ஜனநாயகத்தை கையாள்பவர்கள். முஸ்லீம் மக்களின் பிரச்சனைகள் மற்றும் சொந்த மண்ணில் இருந்து துரத்திய கொடூரத்துக்கான அடிப்படைகளை கண்டறிவது மற்றும் தீர்வுகளை முன்வைப்பது வரை பாட்டாளி வர்க்கம் அல்லாத எந்தப் பிரிவுக்கும் அக்கறையிருப்பதில்லை. முஸ்லீம் மக்களின் துயரத்தையும் அந்த வரலாற்றையும் தமது பிழைப்புவாத அரசியலுக்கு பயன்படுத்துபவர்கள், அந்த மக்களுக்கான விடுதலைக்கான தீர்வை முன்வைப்பதில்லை. இந்த நிலையில் பிழைப்புவாதத்தை அம்பலம் செய்யவும், முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளையும் மற்றும் அதன் தீர்வையும் முன்வைப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் முரணற்ற கடமையாகும். இந்த வகையில் முஸ்லீம் மக்களை வெளியேற்றிய காரணம் என்ன என்பதை ஆராய்வதன் ஊடாக, தேசியத்துக்கு பதிலாக குறுந்தேசிய போராட்டம் தமிழ், முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கு எதிராக எப்படி மாறியது என்பதை பார்ப்போம்;.

கிழக்கில் முஸ்லீம் மக்கள் மேலான தொடர்ச்சியான இனப்படுகொலைத் தாக்குதல்களும், அதைத் தொடர்ந்து வடக்கில் இருந்து 75000 முஸ்லீம் மக்களை ஏன் புலிகள் வெளியேற்றினர். இதற்கு பலரும் தமது பிழைப்புவாத அரசியலில் தொடங்கி குறுந்தேசிய இனவாத கண்ணோட்டம் வரை, பல்வேறு விளக்கத்தை முன்வைக்கின்றனர். அதை பார்ப்போம்.

1.புலிகள் இந்துத்துவ கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டே, முஸ்லீம் மதத்தை எதிர்த்து இதை நடத்தினர்

2.புலிகள் வெள்ளார் உயர் சாதி கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்ட இயக்கம். இதனால் முஸ்லீங்களை இழிவாக கருதி இதைச் செய்தனர்.

3.யாழ் என்ற உயர் தகமையை கட்டமைக்கும் பிரதேசவாத கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புலிகளின் தலைமை, பிரதேசரீதியாகவே முஸ்லீம் மக்களை இழிவாக்கி வெளியேற்றினர்.

4.முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் மேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக இதை செய்தனர்.

5.முஸ்லீம் மக்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்தனர். இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டனர். அதைத் தடுக்கவே தாக்கியதுடன் வெளியேற்றப்பட்டனர்.

6.முஸ்லீம் மக்கள் ஷஷதொப்பிபிரட்டிகள் அதனால் தாக்கியதுடன் வெளியேற்றப்பட்டனர்.

7.முஸ்லீம் மக்கள் வந்;தேறு குடிகள். அவர்கள் தமிழ் தேசிய இனம் அல்ல. அதனால் தாக்குவதும் வெளியேற்றுவதும் அவசியமாகும்.

8.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பி.பி.சி பேட்டியில் ஷஷதமிழ் -முஸ்லீம் கலவரம் பரவும் அபாயமிருந்தது. அதனால் வெளியேற்றினோம் என்கின்றார்.

9.முஸ்லீம் மக்கள் ஒரு சிறுபான்மை தேசிய இனம் என்ற அடிப்படையில், தமிழ் குறுந்தேசிய இனவாத அடிப்படையில் புலிகள் வெளியேற்றினர்.

முஸ்லீம் மக்கள் பற்றியும், அவர்களை தாக்கியது முதல் வெளியேற்றியதுக்கான காரணங்களையும் குறிப்பாக இப்படி தொகுக்க முடியும். இதில் ஒன்று முதல் மூன்றுவரையிலான காரணங்கள் பிழைப்புவாத அரசியலில் குளிர்காய விரும்புபவர்களின் கற்பனை புனைவுகளாக உள்ளது. நாலு முதல் எட்டு வரையிலான காரணத்தை அடிப்படையாக கொண்ட கண்ணோட்டங்கள், குறுந்தேசிய தமிழ் இனவாத அடக்குமுறையை நியாயப்படுத்தும் கருதுகோள்களாக உள்ளது. ஒன்பதாவது காரணமே பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பகுப்பாய்வாகும்;. முஸ்லீம் மக்களின் வெளியேற்றப்பட்ட நிகழ்வை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தும் இந்த வாதங்களை தனித் தனியாக ஆராய்வோம்.



புலிகள் இந்துத்துவ இயக்கமா? சாதி இயக்கமா? பிரதேசவாத இயக்கமா?

முதலாவதாக முஸ்லீம் மக்களை வெளியேற்றிய நிகழ்விலும் சரி, அவர்கள் மேலான தொடர்ச்சியான படுகொலை தாக்குதலில், புலிகள் இந்து மதவாதத்தை அல்லது வெள்ளார் உயர் சாதியத்தை அல்லது யாழ் பிரதேசவாதத்தை அல்லது மூன்றையும் இதற்கு அடிப்படையாக கையாண்டார்களா? கையாண்டார்கள் எனின் இது எந்த வகையில் கையாளப்பட்டது. எப்படி கையாண்டார்கள்? கையாண்டார்கள் என்று கூறுபவர்கள் யாரும் இதை ஆதாரமாக முன்வைப்பதில்லை. பிழைப்புவாதம் இவற்றை கோசமாக்கி கோசம் போடும் போது, இதை வலிந்து காட்டுவதே பிழைப்புவாதத்தின் சிறப்பியல்பாகும். பிழைப்புவாதத்தின் பண்பாகின்றது.

புலிகள் என்ற அமைப்பு எதை அடிப்படையாக கொண்டு தனது குறுந் தமிழ் தேசியத்தை கட்டமைக்கின்றது. இந்த அடிப்படையான கேள்விக்கு பதிலளிக்காமல், யாரும் எதையும் ஆராய முடியாது. புலிகள் சாதியத்தை முன்வைக்கின்றார்களா? சாதியைச் சொல்லி இயக்கத்தை கட்டுகின்றார்களா? சாதியின் பெயரில் ஆள் திரட்டலில் ஈடுபடுகின்றார்களா? எனின், இல்லை என்பது தெளிவான பதிலாகும். சாதியத்தை தமது அமைப்பாக்கலில் முன்னிறுத்தி இயக்கத்தை கட்டவில்லை. அப்படி இருக்க, புலிகளை சாதிய அமைப்பு என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இருப்பதில்லை. அடுத்து இந்து மதத்தை அடைப்படையாக கொண்டு புலிகள் தம்மை கட்டமைக்கின்றார்களா? மற்றைய மதங்களை இழிவாக காட்டி தம்மை உருவாக்கின்றார்களா? புலிகள் இந்து இயக்கமா எனின், இல்லை என்பது தெளிவான பதிலாகும். இது போன்று யாழ் பிரதேசவாதத்தை அடிப்படையாக கொண்டு தமது இயக்கத்தை உருவாக்கின்றார்களா? மற்றைய பிரதேச மக்களை இழிவாக்கி பிரச்சாரம் செய்து ஆட்களை சேர்க்கின்றார்களா? எனின் இல்லை என்பது தெளிவான பதிலாகும். இப்படியான பிரச்சாரத்தை புலிகள் செய்யின், புலிகள் என்ற இயக்கம் குறுங்குழுவாகி அதன் அளவில் அது எப்போதே சிதைந்து போயிருக்கும்;. இப்படி இல்லாத ஒரு நிலையில் தான் புலிகளின் குறுந் தமிழ் தேசிய இயக்கம் எம்மண்ணில் நீடிக்கின்றது. உயர் சாதியம், யாழ் பிரதேச மேலாண்மை, சைவ அடிப்படைவாதம் என்பன நிலப்பிரபுத்துவ கண்ணோட்டமாகும். இந்த வர்க்கம் தேசியத்துக்கான ஆயுதப் போராட்டத்தில் இருக்கவோ, நீடிக்கவோ முடியாது. இந்த நிலப்பிரபுத்துவ வர்க்கம் தேசியத்தால் தனது நலன்களை இழக்குமே ஒழிய, புதிதாக எதையும் அடைவதில்லை. சாதியத்தை முன்வைத்தால் சாதிப் பிளவும், பிரதேசத்தை முன் வைத்தால் பிரதேச பிளவும், சைவத்தை முன் வைத்தால் மதப் பிளவும், புலிகளின் குறுந் தமிழ் தேசிய போராட்டத்தை சிதைந்தவிடும். போராட்டத்தில் விதிவிலக்கான உதிரிச் சம்பவங்கள், ஒரு இயக்கத்தை மதிப்பிடும் எடுகோளாக எப்போதும் இருப்பதில்லை. விதிவிலக்கான சம்பவங்களில் தண்டனை கொடுக்கப்பட்டது உண்டு. கொடுக்கப்படாத நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளது. சாதி குறைந்த பிரிவுகள் உயர் சாதிக்கு தண்டனை கொடுத்ததும் உண்டு. இதுபோல் மற்றவையும்;. இவை அனைத்தும் விதிவிலக்குகள்தான். அதாவது விதிவிலக்குகளுக்கு மேலான விதிவிலக்கு தான் இவை



நிலவுகின்ற சமூக ஆதிக்க அடிப்படையிலேயே புலிகள் தம்மை கட்டமைத்தனர்

புலிகள் என்ற இயக்கம் சாதி, மதம், பிரதேசவாதம் மீது என்ன நிலையைக் கையாண்டது. இங்கு யாழ் மையவாதம், உயர்சாதிய அதிகாரம், இந்துத்துவ மேலாண்மை மீது சரி ஆணாதிக்கம் மீதும் சரி ஒரு போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக அதை அப்படியே சேதமின்றி பாதுகாத்தது. இருக்கின்ற நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பில் சாதியம், மதவாதம், பிரதேசவாதத்தை அப்படியே பாதுகாப்பதன் ஊடாகவே தன்னை அதனூடாகவே கட்டமைத்து. எதிர்ப்பு மின்றி ஆதரவுமின்றிய நிலையில் இருக்கின்ற ஆதிக்க கண்ணோட்டத்தை அப்படியே பாதுகாத்ததன் ஊடாக தன்னை உறுதி செய்து கொண்டது. இது மேல் இருந்து கீழாகவும், கீழ் இருந்து மேலாகவும் அத்துமீறுவதை அனுமதிக்கவில்லை. சமூக கட்டமைப்பில் சாதிய பிரதேச மதவாதக் கூறுகளின்; சார்பாகவும் எதிராகவும் அத்துமீறுவதை புலிகள் அனுமதிக்கவில்லை. இந்த ஒரு நிலை தான் புலிகளின் குறுந்தேசியத்தை முண்டுகொடுக்கின்றது. சமூகத்தில் அத்துமீறுகின்ற போது, அதிகாரத்தில் உள்ள நபர்களின் விருப்பு வெறுப்புடன் பல தடவைகளில் கடும் தண்டனைக்கும், தண்டனையில் இருந்து தப்பிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. உதாரணமாக உயர்சாதி ஆதிக்க அடக்குமுறையை தாழ்ந்த சாதிக்கு எதிராக கையாண்ட போது, புலிகள் தாழ்ந்த சாதி நபரை படுக்க வைத்து உயர் சாதி ஆதிக்க வாதியின் நாக்கால் முதுகை நக்க வைத்து, உயர் சாதியத்தை அவமானப்படுத்திய நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன. இதற்கு மாறாக தாழ் சாதி இளையன் உயர்சாதி பெண்ணை காதலித்து ஓடிய போது, பிரித்துவிட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. புலிகள் இருக்கின்ற ஆதிக்க சமூக அமைப்பின் அமைதி, தமது தேச விடுதலைப் போராட்டத்துக்கு அவசியமானது என்பதில், அதை அதன் எல்லைக்குள் பாதுகாத்தனர்.

இது போன்று சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதாக பார்த்தனர். ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்களை தமது இராணுவ ஆள் திரட்டலுக்கு ஒரு கோசமாக்கியதுக்கு அப்பால், சமூக தளத்தில் அதை அப்படியே பேணுவதில் தமது நிலையை உறுதியாகவே கொண்டிருந்தனர். பெண்களை இயக்கத்தில் இணைப்பதற்கு புறநிலை நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1985க்கு பின்னால் இயக்கங்களை படுகொலை செய்த நிகழ்வுகளைத் தொடர்ந்தும், மக்களுக்கான ஜனநாயக மறுப்பைத் தொடர்ந்தும் ஆட்சேர்ப்பு என்பது மந்தமாகியது. அத்துடன் இந்திய ஆக்கிரமிப்பு எற்பட்ட நிலையில் வயது வந்த ஆண்களின் இணைவு குறைந்த நிலையில், சமூகத்தில் பலவீனமான நிலையில் வீட்டில் சிறைப்பட்டிருந்த சமூக பொது அறிவில் பின் தங்கியிருந்த பெண்களை இணைப்பது இலகுவானதாகியது. பெண்கள் மீதான ஆணாதிக்க சமூகக் கட்டுப்பாட்டை மீறி விடுதலை பெறத் துடித்த பெண்களை இணைப்பதில், புலிகள் ஆணாதிக்கத்தை ஒரு கோசமாக்கி உத்தியாக்கினர். புலிகள் தமது குறுந்தேசிய இனவாத கண்ணோட்டத்தில் சமூக உள் முரண்பாடுகளை அப்படியே பேணுவதிலும், பாதுகாப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தனர். சமூக ஆதிக்க கண்ணோட்டமே புலிகளின் இயக்க கண்ணோட்டமாக இருந்தது. அத்துமீறுவதை அனுமதிக்காத ஆதிக்க பொது சமூக எல்லைக்குள் தன்னை கட்டமைத்துக் கொண்டது. சமூக ஆதிக்கத்தில் நிலவிய ஆணாதிக்க சுரண்டல் அமைப்பில் உயர் சாதிய அதிகாரம், யாழ் பிரதேச மேலாண்மை, இந்துத்துவம் போன்றவற்றை ஆதாரமாக கொண்டிருந்தனர். இதில் ஒன்றைக் கூட முன்னிறுத்தி அதன் அடிப்படையில் அதிகாரத்தை கட்டமைக்கவில்லை. இருக்கின்ற அமைப்பை அப்படியே பாதுகாத்ததன் ஊடாக, இந்த அமைப்பு இவற்றின் பிரதிநிதியாக இருக்கின்றனர். பொதுவான சமூக ஆதிக்க கண்ணோட்டத்தின் பூர்சுவா பிரதிநிதியாக புலிகள் இருக்கின்றார்களே ஒழிய, புலிகள் இதில் ஒன்றைக் கூட தனது பிரதான மையக் கோசமாக்கவில்லை

இந்த நிலையில் முஸ்லீம் மக்கள் மேலான தாக்குதல், மற்றும் வெளியேற்றப்பட்டதில் சாதி, மதம், பிரதேசவாதம் எந்த இடத்தில் எப்படி புலிகளால் கையாளப்பட்டது என்பதை யாரும் முன்வைப்பதில்லை. கிழக்கில் மசூதி மீதான தாக்குதலின் போது, புலிகள் ஷஷஓம், சூலம் போன்ற அடையாளங்களை இட்டதாக செய்திகள் வெளியாகின. இவை கூட தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்கள் உடனடியாக உணர்வூட்டக் கூடிய மத அடிப்படைவாதத்தை எழுப்பியதால் அல்லது சிலரின் மத உணர்வு சார்ந்து தன்னிச்சையாக எழுதப்பட்டனவே. ஏன் இத்தாக்குதலின் பின்பு புலிகளின் முஸ்லீம் உறுப்பினர்கள் தாக்குதல் இடத்தை கண்காணிக்க சென்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆகவே புலிகள் இந்து அடிப்படைவாத இயக்கமாக மாறிவிட்டதாகவோ அதை ஆதாரமாக கொள்வதாகவோ சொல்ல, ஒரு அடிப்படையான எடுகோள் அல்ல. இதை அவர்களின் நடவடிக்கைகள், அவர்களின் கருத்துகள், அவர்களில் காணப்படும் குணாம்சங்களில் கூட காட்டமுடியாது. இதற்கு பிழைப்புவாத கோசம் கூட எதையும் ஆதாரமாக முன்வைக்க முடியாது. வரலாற்று ரீதியாக தமிழ் தலைமைகள் மற்றும் புலிகள் அல்லாதோரின் கருத்துகளில் இதைக் காட்டுவதும், அதை புலிக்கு பொருத்த முனைவதும் அர்த்தமற்றதாகும்;. அதுபோல் பொதுவான சமூக ஆதிக்க கருத்தை அடிப்படையாக கொண்டு காட்டுவதும் தவறாகும். பிழைப்புவாத வரலாற்று அரசியல் தலைமைகள், பிழைப்புவாத அறிவுத்துறையின் விளக்கவுரைகளை புலிகளுக்கு பொருத்துவது, புலிகளின் பாத்திரத்தை மதிப்பிடத் தவறிய வங்குரோத்துத்தனமாகும். குறிப்பாக மசூதி போன்றவற்றின் மேலான தாக்குதல் மத அடிப்படையிலானது அல்ல. மசூதி முஸ்லிம் மக்களை ஒருங்கமைத்த ஒருமித்த வகையில், இயக்க அடாவடித்தனங்களை எதிர்த்து போராடிய ஒரு களமாகவே இருந்தது. தலதாமாளிகை மேலான தாக்குதல் கூட மத அடிப்படையில் இருந்து அல்ல. சிங்கள பேரினவாதத்தை புத்தமதம் வெளிப்படுத்தி வந்த நிறுவனம் மீதானதாகவே தாக்குதல் அமைந்தது. இந்த வகையிலான தாக்குதல்கள் மக்களை போராட்டத்துக்கு சார்பாக அல்லாமல் எதிரியின் தரப்புக்கு அணிதிரட்டவே வழிவகுக்கின்றது என்பதை குறுந்தேசிய இனவாத அரசியல் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.

குறுந்தேசிய இனவாதம் எப்படி முஸ்லிம் மக்களுக்கு எதிராக மாறியது

இரண்டாவதாக முஸ்லீம் மக்கள் மேலான தாக்குதல் மற்றும் வெளியேற்றத்துக்கு கூறும் காரணங்கள் குறுந்தேசிய இனவாத கண்ணோட்டத்தில் இருந்து எழுவதாகும். ஆதிக்க இனங்கள் சிறுபான்மை இனங்கள் மேலான அதிகாரத்தையும், நலன்களையும் தக்கவைக்க கட்டமைக்கும் கருதுகோள்களை அடிப்படையாக கொண்டே இவை முன்வைக்கப்படுகின்றது. 1993 இல் புலிகளின் தலைவர் பிரபாகரன் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் ஷஷமுஸ்லீம்கள் தனியான கலாச்சாரத்தையும் தனித்துவத்தையும் கொண்டவர்கள். அவர்களின் தனித்துவமும் நில உரிமையும் பாதுகாக்கப்படும். தமிழ் மக்களுடன் ஒன்றாக வாழ்வதன் மூலம் அவர்களின் சமூக பொருளாதார வாழ்வு சிறப்பாக இருக்கும். என்ற புலிகளின் கூற்று அவர்களையே அவர்களின் நடவடிக்கைகள் ஊசலாடவைக்கின்றது. இந்தப்பேட்டி இத்தாக்குதலின் பின்பாகவே வெளிவந்துள்ளது. புலிகளின் வெளியீடான ஷஷஇஸ்லாமியத் தமிழரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் என்பது, ஜனவரி 1987 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளியீடயாகும். இது ஷஷதமிழீழ விடுதலைப் போரில் முதற் களப்பலியான இஸ்லாமியத் தமிழ் வீர மறவன் புலிகள் இயக்கத்தின் லெப்டினட் ஜீனைதீனுக்கு இந்த நூல் காணிக்கையாக வெளிவந்தது. இந்த நூல் முஸ்லீம் சமுகம் பற்றி பேசுகின்றது. புலிகளின் அரசியல் பிரிவின் முன்னுரையில் ஷஷமதம், சாதி என்ற எல்லைக் கோடுகளை அழித்து, ஓரினம் என்ற தேசிய எழுச்சியும், ஒரே நிலம் என்ற தாயகப் பற்றுணர்வும் இஸ்லாமியத் தமிழர்களை எமது புரட்சிப் போராட்டத்தில் அணிதிரட்டி வருகின்றது. இரத்தம் சிந்தும் எமது விடுதலைப் போராட்டம் இஸ்லாமியத் தமிழரின் விடிவுக்கு வழிகோலும் என்பதில் எமக்கு உறுதியான நம்பிக்கையுண்டு அதன் தொடர்ச்சியில் ஷஷதமிழீழத் தனியரசே இஸ்லாமிய மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும்... என்ற கூற்றும் முஸ்லீம் மக்கள் பற்றிய புலிகளின் குறுந்தேசியத் தன்மையை முரண்பட்டபடி வெளிப்படுத்துகின்றது. தமிழ் மக்கள் பற்றி பேசும் இவர்கள், முஸ்லீம் மக்கள் என்று தனித்துவமாக்கி பிரித்துக்காட்டும் போது, மதம் என்ற வேறுபாட்டில் நின்றே விளக்கிய போதும், அதில் இருந்து வேறு ஒன்று அதற்குள் உறுத்தி நிற்கின்றது. இங்கு தமிழ் மக்கள் என்பதற்கு பதில் இந்து, கிறிஸ்துவம் என்று சொல்லத் தவறுவது, முஸ்லீம் மக்களின் தனித்துவத்தை மதம் கடந்து ஒத்துக்கொள்ள மறுக்கின்றது. முஸ்லீம் மக்கள் மதச் சிறுபான்மையினர் அல்ல. இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என்ற வரிசையில் முஸ்லீம் மக்கள் மதமாக இல்லை. மாறாக வேறு எதோ ஒன்று இருப்பதால் தான், அதைத் தனித்து புலிகள் குறிப்பிட்டு காட்ட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். முஸ்லீம் மக்கள் என்று குறித்துக் காட்டும் தன்மை எதை குறிக்கின்றது.

இலங்கையில் சிங்கள, தமிழ், மலையக, முஸ்லீம் மக்கள் என்று குறிப்பிடும் போதே, இனத் தன்மை வாய்ந்த ஒன்று காணப்படுகின்றது. இந்தக் கூற்றில் மதத் தன்மை இருப்பதில்லை. புத்தம், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என்ற குறிப்பிடும் போது மட்டுமே மதம் சார்ந்து வெளிப்படுகின்றது. சிங்களம், தமிழ் என்று குறிப்பிடும் போது அது மொழி சார்ந்து பிரிகின்றது. இங்கு மலையகம், முஸ்லீம் என்று குறிப்பிடுவதில்லை. தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே மொழி சார்ந்தது அல்ல. மாறாக பொருளாதாரம், பொது மொழி, கலாச்சாரம், நிலத் தொடர் என்ற எல்லைக்குள் தேசியம் வளர்ச்சி பெறுகின்றது. இது மதத்தை கடந்து நடக்கின்றது. தேசிய போராட்டம் குறுந்தேசிய போராட்டமாக மாறும் போது, அது மொழியாக தன்னை குறுக்கி கொண்டு, மொழி கடந்த முரண்பாடுகளை அடங்கி ஒடுங்கி நடக்கக் கோருகின்றது. அடங்க மறுத்தால், அடக்குகின்றது. முரண்பாடுகளை மதமாகவும் அல்லது ஏதோ ஒன்றின் ஊடாக காட்டி அடக்கி ஒடுக்குகின்றது.

முஸ்லீம் மக்கள் சிறுபான்மை தமிழ்த் தேசிய இனமே

புலிகளின் தலைவர் பிரபாகரனின் முஸ்லீம் மக்கள் தனியான கலாச்சாரம், தனித்துவமான நிலத் தொடரை கொண்டவர்கள் என்ற கூற்று, அவர்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கக் கோருகின்றது. ஆனால் புலிகள் சொற்களுக்கு அப்பால் நடைமுறையில் இதை மறுக்கின்றனர். முஸ்லீம் மக்களின் பொருளாதார கூறு என்பது வளர்ச்சி பெறாத தன்மை தான், அவர்களை சிறுபான்மை தமிழ் தேசிய இனமாக்கின்றது. இங்கு அவர்களின் மொழி கூட தமிழில் ஒரு பகுதியாகவே உள்ளது. அதாவது தமிழ் என்பது, பல கிளை மொழியே பொதுவாக தமிழாக இருக்கின்றது. இது பிரதேசம், மதம், பண்பாடு, பொருளாதாரக் கூறு... என்று பல்வினை அம்சங்கள் தமிழ் மொழியை தனக்குள் பிரிக்கின்றது. தமிழ் இதுதான் என்று ஒன்றை சொல்லவோ, திணித்துவிடவோ முடியாது. யாழ்ப்பாணத்து தமிழை, கிழக்குக்கோ, முஸ்லீம் மக்களுக்கோ, மலையகத்துக்கோ, தமிழ் நாட்டுக்கோ திணிக்க முடியாது. ஆனால் தமிழ் என்ற பெயரில் வேறு மொழியை அப்படியே தமிழ் ஆக்குவது, தமிழ் அல்ல. அதாவது தமிழ் மொழி பேசும் மக்கள் தமது வாழ்வின் சூழல் சார்ந்து, பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் பொருட்களின் உச்சரிப்பையும், அதன் கலாச்சார வேறுபாட்டையும் கொண்டு பிரியும் போது அதை தமிழாக பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும். யாழ்ப்பாணத்து தமிழ் மொழியின் அடிப்படையில் முஸ்லீம் மக்களின் தமிழை கிண்டல் செய்வது அல்லது அதை தூற்றுவது குறுந்தேசிய இனவாதமாகும்;. இது முஸ்லீம் மக்களை தமிழ் மொழியில் இருந்து தனிமைப்படுத்தி, அவர்களின் தனித்துவ இனத் தன்மையை மறுக்கின்றது. இந்த மறுப்பே அவர்கள் மேலான அடக்குமுறையாக பரிணமிக்கின்றது.



முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களை தாக்கினார்களா?

நாம் தனித் தனியாக முஸ்லீம் மக்கள் மேலான ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் காரணங்களை ஆராய்வோம். முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் மேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என்பது, தமிழ் தரப்பின் முன்கூட்டிய ஆயுதம் எந்திய படுகொலைத் தாக்குதலை மூடிமறைப்பதாகும்;. அதாவது முஸ்லிம் மக்களில் இருந்து அன்னியமான கூலிப்படைகளின் தாக்குதல் கூட, இயக்கங்களின் வரைமுறையற்ற அப்பாவி முஸ்லீம் மக்கள் மேலான தாக்குதலின் விளைவாகும். அதாவது இந்தக் கூலிப்பட்டாளம் உருவாக இயக்கங்களின் குறித்த வன்முறையே காரணமாக இருந்தது என்பதை, இந்தக் குற்றச்சாட்டு மூடிமறைத்து அதை மேலும் ஊக்குவிக்கின்றது. இதே போன்ற குற்றச்சாட்டை சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு கூறின், என்ன தர்க்க நியாயம் இருக்க முடியும். இதேபோல் தான் முஸ்லீம் மக்கள் நிலையும். பலமான இனங்கள் பலவீனமான இனங்கள் மேல் தாக்குதலை நடத்தும் போது, பலவீனமான இனம் தவிர்க்க முடியாமல் எதிர் தாக்குதலில் இறங்குகின்றது. சிங்கள இனவாத சக்திகள் தமிழ் மக்கள் மேலும், தமிழ் குறுந் தேசியவாதிகள் முஸ்லீம் மக்கள் மேலும் நடத்தும் தாக்குதலுக்கு எதிர் மறையில் பதிலடி கொடுக்கின்றது. இங்கு மக்களில் இருந்து அன்னியப்பட்ட குழுக்கள் இதை நேரடியாக கையாளும் போது, இனத்தையே எதிரியாக காட்டி அழிப்பது நியாயப்படுத்தப்படுகின்றது. இங்கு அப்பாவி மக்கள் மேல் இனவாத சக்திகள் நடத்தும் இரண்டு பக்க வடிவத்தையும், நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இனவாதத்தை கட்டமைக்கும் இனவாதிகளை நோக்கி மக்கள் எதிர் தாக்குதலை, இனம் கடந்து நடத்த வேண்டும். இதை இனவாதிகள் செய்யக் கூடாது. இனவாதி மற்றொரு இனவாதி மேல் நடத்தும் தாக்குதல், படிப்படியாக இன மக்கள் மேலானதாக மாறிவிடுகின்றது. தமிழ் இனவாதிகள் முஸ்லீம் மக்கள் மேலும், சிங்கள மக்கள் மேல் நடத்திய தாக்குதல், முஸ்லீம் இனவாதிகள் தமிழ் மக்கள் மேல் நடத்திய தாக்குதல், சிங்கள இனவாதிகள் தமிழ் முஸ்லீம், மலையாக மக்கள் மேல் நடத்திய தாக்குதல் அனைத்தும் தேசிய இனவாதத்தை அடிப்படையாக கொண்டது. எதிரியை விட போராடும் இயக்கங்கள் மக்களை இனத் தன்மையில் கொல்லும் போது, அப்போராட்ட தியாகமே இனவாதமாகி சீரழிகின்றது. ஆனால் போராளிகள் அல்லாத இராணுவம் இனப்படுகொலைகளை நடத்தும் போது, கூலித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கி மேலும் இனவாதம் அம்பலமாகின்றது. தமிழ் குறுந்தேசிய இனவாத இயக்கங்கள் முஸ்லீம் மக்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதலின் விளைவால் தான், முஸ்லீம் இனவாத கூலிக்குழுக்கள் உருவாகியது மட்டுமின்றி எதிர் தாக்குதலை தமிழ் மக்கள் மேல் நடத்தும் நிலைக்கும் இட்டுச் சென்றனர். தமிழ் மக்கள் தமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் மற்றைய இன மக்களின் ஐக்கியத்தை அங்கீகரித்து, அவர்களுடன் இணைந்து போராடத் தவறினர். அம் மக்கள் மேல் அடக்குமுறையை கையாளும் போது, பிரதான எதிரி தனக்கு சார்பாக தாக்குதலுக்கு உள்ளான இனங்களை மாற்றி, தனது கூலிப்பட்டாளத்தை அந்த இனங்களிலும் உருவாக்கின்றது. இது தமிழ் மக்களுக்கும் கூட பொருந்தும்;. இந்த முஸ்லீம், தமிழ் கூலிப்பட்டாளங்களுக்கும் மக்களுக்கும் எந்தவிதமான அரசியல் உறவும் இருப்பதில்லை. மாறாக அந்த மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது. மக்களில் இருந்து தனிமைப்பட்ட பயங்கரவாத கூலிக்குழுவாக இயங்கும் இந்தக் குழுக்கள், தனக்கு எதிரான இன மக்கள் மேல் படுகொலைத் தாக்குதலை நடத்துகின்றது. இதை இனம் கடந்து கண்டிக்க வேண்டும். மக்களுக்காக போராடும் இயக்கங்கள் இந்தக் கூலிக்குழுக்களை அம்பலம் செய்து, இது போன்ற நடவடிக்கையில் தானும் ஈடுபடாது போராடவேண்டும்;. அதை விட்டு அந்தக் கூலிக் குழு சார்ந்த இன மக்களை தாக்கி அழிப்பது, போராட்டத்தை குறுந் தேசிய இனவாதமாக்கி சீரழிந்து செல்வதைக் கடந்து, எந்த விளக்கமும் அதற்கு இருப்பதில்லை.



முஸ்லீம் மக்கள் போராட்டத்தை காட்டி கொடுத்தனரா?

முஸ்லீம் மக்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்தனர் என்பது அர்த்தமற்ற வாதமாகும். காட்டிக் கொடுத்தனர் என்று இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை, முஸ்லீம் மக்களின் விகிதாசாரத்துக்கு ஒப்பிடின் மிக அதிகமானது. காட்டிக் கொடுப்பு என்பது எப்படி, எந்தக் காரணங்களால் நிகழ்கின்றது என்பதை விடுத்து, ஒற்றைப் பரிணாமத்தில் தண்டிக்கும் போது அப்பவிகள் கூட துரோகியாகின்றனர். போராட்டம் மக்களின் ஆதரவைப் பெற்று மக்கள் இயக்கமாக தலைமறைவாக இயங்கத் தவறி, மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு பகிரங்கமாக இயங்கிய குற்றம் யாருடையது. அது இயக்கத்தின் காட்டிக் கொடுப்பு அல்லவா. காட்டிக் கொடுக்கும் காரணத்தின் சமூக உறவாக்கம் ஆராயப்பட்டு தன்னை சுயவிமர்சனம் செய்யத் தவறி தண்டிப்பது, குற்றத்தை தனக்குள் மூடிமறைப்பதாகும். உண்மையில் காட்டிக் கொடுப்பவன் ஏன் செய்தான் என்ற காரணத்தை கண்டறிந்து தண்டிக்காதவரை, இயக்கத்தின் நோக்கமும் அதே காரணத்தால் கொச்சைப்படுத்தப்படுவது நிகழ்கின்றது. அதுவும் இந்தக் காட்டிக் கொடுப்பை இன்னொரு இனமான முஸ்லீம் மக்கள் மேலாக சுமத்தி கொச்சைப்படுத்துவது என்பது கேடுகெட்ட பச்சை இனவாதமாகும்;. அந்த இனங்களின் தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களின் ஜனநாயகத்தை செயல்வடிவமைக்க உதவாத வரை, காட்டிக் கொடுப்பு பற்றிக் கூறி துரோகியாக்க எந்த உரிமையும் எந்த இனத்துக்கும், குழுவுக்கும் கிடையாது.



முஸ்லீம் மக்கள் ஷஷதொப்பி பிரட்டிகளா?

முஸ்லீம் மக்கள் ஷஷதொப்பி பிரட்டிகள் என்று தமிழ் மக்களின் கொச்சையான இன அடையாள மொழி, தமிழ் மக்களின் தேசியத்துக்கு பச்சைத் துரோகம் துரோகமிழைத்த கூட்டணியால், தமது பச்சை இனவாத அரசியலுக்காக கட்டமைக்கப்பட்டவையே. ஷஷதொப்பி பிரட்டிகள் என்று சொன்னவனே தமிழ் மக்களுக்கு துரோகியாகிய போதும், அந்த எடுகோள்கள் மட்டும் துரோகமாகாமல், அதே இனவாத அரசியலில் வன்முறை மொழியாகி நடவடிக்கையாகின்றது. தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகம் போன்று, தமிழ் தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு தொடர்ந்து துரோகமிழைத்தனர். உண்மையில் அண்ணர்களான தமிழ் பாராளுமன்ற அரசியல் வாதிகள் முஸ்லீம் மக்களுக்கு செய்த துரோகத்துக்கு, பரிகாரம் தேடுவதற்குப் பதில் துரோகத்தை நியாயப்படுத்தி மூடிமறைக்க, தம்பிகள் தொடர்ந்தும் ஷஷதொப்பி பிரட்டிகள் என்று கேவலமாக தமது குறுந்தேசிய இனவாத அரசியலை கட்டமைத்தனர். தமிழ்த் தலைமைகள் முஸ்லீம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை கைவிட்டு, தானே தொப்பி பிரட்டியாக இருப்பதை மூடிமறைக்க, எதிர் தரப்புக்கு அவர்களின் தொப்பி மேல் அடையாளப்படுத்திக் கூறிய அரசியலே, எந்த வேறுபாடும் இன்றி இன்றுவரை அவர்கள் மேலான வன்முறையாக தொடருகின்றது.



முஸ்லீம் மக்கள் வந்தேறு குடிகளா?

முஸ்லீம் மக்கள் வந்;தேறு குடிகள் என்பதும், அவர்கள் தமிழ் தேசிய இனம் அல்ல என்பதும் அர்த்தமற்ற ஆதாரமற்ற இனவாதமாகும். இதைத் தான் பெருந்தேசிய இனவாதமும் தமிழ் இனத்துக்கு எந்த வேறுபாமின்றி கூறுகின்றது. இஸ்லாம் மதம் என்பது அரபு தேசத்தில் இருந்து இலங்கை வந்ததே ஒழிய, அங்கிருந்து அரபு மக்கள் வரவில்லை. அதாவது முஸ்லிம் மக்கள் அரபு வழிவந்தவர்கள் அல்ல. பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்கள், இஸ்லாம் மதக் தத்துவத்தை ஏற்றுக் கொண்டதற்கு அப்பால், அவர்கள் அங்கிருந்து வந்தவர்கள் அல்ல. சாதிய அடக்குமுறை உடன்கட்டை ஏற்றுதல் போன்ற காட்டுமிராண்டித் தனங்களைக் கொண்ட மதமாக இந்து மதம் தன்னை நியாயப்படுத்தி நீடிக்கும் போது, மற்றைய மதத் தத்துவங்களை மக்கள் ஏற்பது இயற்கையாக இருந்தது. ஏன் கிறிஸ்துவ மதம் கூட வெளியில் இருந்து காலனித்துவ வாதிகளால் காலனித்துவ நோக்கத்துக்காக கொண்டு வந்தவை தான்;. ஏன் இன்று எம் மண்ணில் இருக்கின்ற இந்துமதம் கூட, எம்மண்ணுக்கு புதியவைதான். எமது பாரம்பரிய மதமாக இன்று இருக்கும் இந்துமதம் என்றும் இருக்கவில்லை. வட இந்தியாவில் இருந்து வந்த இன்றைய இந்து மதம், எம் மண்ணில் பாரம்பரிய வழிபாடுகளை அழித்து அதன் மேல் தன்னை நிறுவிக் கொண்டதே. ஏன் பிள்ளையார் வழிபாடு முதல் இன்று அனுமார் வழிபாடு வரை இந்திய பார்ப்பணியத்தின் அதிகாரத்தின் வரலாற்று செல்வாக்குடன், எம் மண்ணில் அண்மைக் காலத்தில் புகுந்தவையே. இதை விட முஸ்லீம் வழிபாடுகள் காலத்தாலும் அறிவாலும் முந்தியவை.



வடக்கில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனக்கலவரம் ஏற்பட இருந்ததா?

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1993 இல் பி.பி.சி க்கு வழங்கிய பேட்டியில் ஷஷயாழ்ப்பாணத்திலும் அப்போது தமிழ்-முஸ்லீம் கலவரம் பரவும் அபாயமிருந்தது. அதனால் தான் முஸ்லீம்களை தற்காலிகமாக யாழ்ப்பாணத்தை விட்டுச் செல்லுமாறு கூறினோம். அதையும் அவர்களின் பாதுகாப்புக்காகவே செய்தோம்என்கிறார். யாழ்க்குடாநாட்டையும் வன்னியின் பெரும் பகுதியையும் கிழக்கின் ஒரு பகுதியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒரு இயக்கத்தின் தலைவரின் பேட்டி, அந்த இயக்கத்தின் குறுந்தேசியத்தின் இனவாத இயல்பை தெளிவாகவே பட்டவர்த்தமாக்கியது. வடக்கில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரம் (கவனிக்கவும்; இது மதக்கலவரம் அல்ல, ஒரு இனக் கலவரம். இது முஸ்லீம் இனத்தை இனமாக பார்க்கின்றதே ஒழிய மதமாக அல்ல) நடக்க இருந்தது என்பதை, வடக்கில் வாழ்ந்த எந்த தமிழனாவது ஒப்புக் கொள்வானா! தமிழ் மக்கள் சொந்த ஆளுமையில் செயற்படும் ஆற்றல் இழந்து இயக்கங்களின் ஆயுத வன்முறைக்கு அடிமையாகியதன் பின்பு, சுயேட்சையான செயல் என்பது கற்பனைக்குரியதே. அதுவும் ஒரு இனக் கலவரம் நடத்துமளவுக்கு! என்ன ஆச்சரியமான விளக்கம்! இந்த இனக் கலவர புனைவுகளை அங்கு வாழ்ந்த சாதாரண மக்கள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அது சரி, ஒரு இனக்கலவரம் நடக்க இருந்தது எனின், இதை புலிகள் அரசியல் ரீதியாக எப்படி எதிர்த்துப் போராடினீர்கள். இதை தடுக்க என்ன செய்தீர்கள்;. முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் தான் எனின், தமிழ் மக்களின் இன உணர்வுகளை அல்லது மத உணர்வுகளை எதிர்த்து போராடி, முஸ்லீம் மக்களை பாதுகாத்து சகோரதத்துவத்தை நிலை நாட்டியிருக்க வேண்டுமல்லவா! எங்கே! எப்படி! முஸ்லீம் சகோரதத்துவத்தை பாதுகாத்தீர்கள்!; இனக் கலவரத்தை தடுக்க முஸ்லீம் மக்களை பாதுகாக்கவே வெளியேற்னீர்கள் எனின், அந்த மக்களின் உழைப்பை ஏன் ஈவிரக்கமின்றி கொள்ளையடித்தீர்கள்;? இது பகற்கொள்ளை இல்லை எனின், இது என்ன? அன்றாடம் சுரண்டலுக்குள்ளாகிய வண்ணம் கூலிக்குச் சென்று உழைத்த உழைப்பை அபகரிப்பதை என்ன என்பது? மீண்டும் சுரண்டியதற்கு அப்பால் வேறு எதுவுமில்லை. அவர்களின் உழைப்பிலான சொத்தை பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லச் சொன்னீர்களா? யாரிடம் பாதுகாக்க? நல்ல வேடிக்கையான வாதங்கள் தான். எங்கே அந்த மக்களின் சொத்துகள். அந்த மக்களின் உழைப்பை எல்லாம் ஏலம் விட்டு அரையும்குறையுமாக விற்ற பின்பு, அவர்களை பாதுகாக்கவே நாம் வெளியேற்றினோம் என்று சொல்வது, புலிகளின் அரசியல் நேர்மையை, புலிகளின் வாக்கை எல்லாத் தளத்திலும் நிபந்தனையின்றி; தகர்த்துவிடுகின்றது.



முஸ்லீம் மக்கள் ஒரு சிறுபான்மை தேசிய இனமாகும்

முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய சிறுபான்மை இனம் என்பதை பலர் மறுக்கின்றனர். மாறாக அவர்களை மதச் சிறுபான்மையினர் அல்லது தேசிய இனம் என்று வரையறுப்பது என்ற, இரு கடைக்கோடியில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றது. புலிகள் அவர்களை ஒத்தவர்களும் ஷஷஇஸ்லாமியத் தமிழர்களும் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமே. ஏனைய தமிழர்கள் இந்து மார்க்கம், கிறிஸ்தவ மார்க்கம் என்று ஏற்றுக் கொண்டதைப் போலவே இஸ்லாமியத் தமிழர்களும் இஸ்லாம் மதத்தைத் தமது மார்க்கமாகக் கொண்டிருக்கிறார்களே தவிர , அவர்கள் இனத்தால் தமிழர்களே. தமிழ் மொழி மீது அவர்கள் ஏனைய தமிழர்களை விட அதிகப் பற்றுக் கொண்டவர்கள் என்று கூடச் சொல்லலாம். என்று புலிகளின் வெளியீடு கூறுகின்றது. இங்கு முஸ்லீம் என்ற சொல்லுக்கு பதில் இஸ்லாமிய மக்கள் என்ற சொல்; பயன்படுத்தப்படுகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரன் ஷஷயாழ்ப்பாணத்திலும் அப்போது தமிழ்-முஸ்லீம் கலவரம் பரவும் அபாயமிருந்தது. என்று சொல்லும் போது, அதை மதக் கலவரம் என்று சொல்லவில்லை. ஏன் அதே பேட்டியில் ஷஷமுஸ்லீம்கள் தனியான கலாச்சாரத்தையும் தனித்துவத்தையும் கொண்டவர்கள். அவர்களின் தனித்துவமும் நில உரிமையும் பாதுகாக்கப்படும். தமிழ் மக்களுடன் ஒன்றாக வாழ்வதன் மூலம் அவர்களின் சமூக பொருளாதார வாழ்வு சிறப்பாக இருக்கும்.இங்கும் முஸ்லிம் மக்களை மதச் சிறுபான்மையினர் என்று கூறவில்லை. ஆனால் அவர்களின் நூல் அதற்கு எதிராக கருத்து கூறுகின்றது. உண்மையில் முஸ்லிம் மக்களை தனியான ஒரு தேசிய சிறுபான்மை இனம் என்பதை ஏற்க மறுக்கின்றனர். அதை மதச் சிறுபான்மை இனமாக காட்டவே முரண்பட்டபடி முயற்சி எடுக்கின்றனர்.

முஸ்லீம் மக்கள் ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையிலேயே, தமிழ் குறுந்தேசிய இனவாத அரசியலே அவர்களை படுகொலை செய்தது முதல் வெளியேற்றியது வரை நிகழ்ந்தது. இங்கு இவர்கள் மதச் சிறுபான்மையினர் அல்ல. ஒரு இனச் சிறுபான்மையினரே. இங்கும் முஸ்லீம் என்ற பதம் முஸ்லீம் மதத்தை குறித்து சொல்லப்படுவதில்லை. எல்லா குறுந்தேசிய இனவாதிகளும் முஸ்லீம் மதம் என்ற அடிப்படையில் தான் அடையாளப்படுத்தி, வன்முறையை கட்டமைக்கின்றனர். முஸ்லீம் என்ற பதம் எப்படி வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டது என்ற ஆய்வு மிகமுக்கியத்துவம் வாய்ந்து. பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் மத்தியில் இஸ்லாம் ஒரு மதத் தத்துவவியலாக வந்த போது, அதை உள்வாங்கிக் கொள்வது இயற்கையாக இருந்தது. இந்து மதத்தில் காணப்பட்ட பல பிற்போக்கான மனிதவிரோத நடத்தைகள் மற்றும் சாதிய பிளவுளை எதிர் கொண்ட மக்கள், இஸ்லாம் மதத்தை சென்றடைவது இயற்கையானதாகவும் இயல்பானதாகவும் இருந்தது. அத்துடன் சமுக பொருளாதார கூறுகளும், இதை உந்திச் செல்வதில் குறித்த பங்கை வகித்துள்ளது. இந்த நிலையில் இஸ்லாம்;, மதம் என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் காலூன்றத் தொடங்கியது. இந்த வரலாற்றுத் போக்கை இந்து மதம், தனது கடந்தகால நிலப்பிரபுத்துவ ஆதிக்க வடிவிலேயே ஏற்றுக் கொண்டதில்லை. இது அந்த மக்களை மத அடிப்படை எல்லைக்குள், தன்னில் இருந்து அன்னியப்படுத்தியது. அதாவது நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற அடிப்படையில் இருந்த மத உறவாக்கம், மத அடிப்படையில் பிளவுபடத் தொடங்கியது. இந்தப் பிளவில் ஆதிக்க மதமான இந்து மதமே (சைவம்) முன்னின்று ஒடுக்கியது மட்டுமின்றி, எதிர்த்தரப்பை முஸ்லீம் என்ற மதத்தின் ஊடாக அடையாளம் காட்டி ஒடுக்கியது. மக்களை பிளந்து காட்டியது. இவை அனைத்தும் மதம் சார்ந்த நிலப்பிரபுத்துவ சமூக வடிவத்தில் வளர்ச்சி பெற்றது. இந்த சமூகப் புறக்கணிப்பு மத அடிப்படை எல்லைக்குள், தனக்குள்ளான குறுகிய எல்லைக்குள் தன்னை நிலைநாட்ட இட்டுச் சென்றது. இந்த வளர்ச்சி கடந்த சில நூறு வருட வளர்ச்சியில் படிப்படியாக ஏற்பட்டவையே. சைவத்தில் இருந்து அன்னியப்படுத்தப்பட்ட முஸ்லீம் மக்கள், முஸ்லீம் மத பண்பாடு கலாச்சாரம் சார்ந்து தனது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு இசைவாக, தனக்குள் தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது. மறு தளத்தில் சைவ மதத்தின் பரந்த தன்மையற்ற வன்முறை கொண்ட சமூக கண்ணோட்டமே, முஸ்லீம் மதவாத கட்டமைப்பை உருவாக்க துணையாக நின்றது. சைவ மதம் சார்ந்த நிலப்பிரபுத்துவ கண்ணோட்டம் அடிப்படையில் தன்னை தனக்குள் வளர்த்துக் கொள்ளும் ஒரு கட்டமைப்பு ஏற்பட்டது. முஸ்லீம் மக்கள் மேலான சைவ ஆதிக்கம் மற்றும் புறக்கணிப்புடன் கூடிய ஒடுக்குமுறை, முஸ்லீம் மக்களை சிங்கள சமூகத்துடன் இணைந்து செல்லும் தகவமையை ஏற்படுத்தியது.

தமிழ், முஸ்லீம் மக்களிடையே இருந்த மத ஆதிக்க நிலப்பிரபுத்துவ பண்பாடு, தனிமைப்படுத்திய உள்ச் சுற்று நிலப்பிரபுத்துவ பொருளாதார உறவுகள், தனித்துவமிக்க தனித்தனி மொழியை உருவாக்கியது. தமிழ் என்பது மதம் சார்ந்த பிற்போக்கு கூறுடன் தன்னை மாற்றிக் கொண்டது. தமிழ் மொழி என்பது அதன் இயற்கையான பொருள் முதல்வாத கூறில் இருந்து விலகி, கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தை உள்வாங்கிய மொழியாக மாறியது. ஆதிக்கத்தில் இருந்த நிலப்பிரபுத்துவ மதவாத கண்ணோட்டம் கருத்துமுதல்வாதம் சார்ந்து, பொருளின் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தை சிதைத்ததன் மூலம், மொழியில் பிளவு ஏற்பட்டு வேறுபட்ட தன்மையில் வளர்ச்சி பெற்றது. இது இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் இரு மொழிக் கூறிலும் உள்ளடங்கியதாக மாறியது. இது மொழியின் பிளவை ஏற்படுத்தியது. இன்று தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் பேசுகின்ற தமிழ் மொழி மத அடிப்படைவாதம் சார்ந்து, நிலப்பிரபுத்துவ பண்பாட்டு கலாச்சார கூறுகளுடன் வேறுபட்டே தனித்;தனியாக நிற்கின்றது.

இங்கு முஸ்லீம் சிறுபான்மை மதம் மீதான இந்து மதத்தின் புறக்கணிப்புடன் கூடிய அதிகாரம் நீண்ட வரலாற்று தொடர்ச்சியில், தனித் தனியான பண்பாட்டு கலாச்சார படிமங்களை ஏற்படுத்தியது. இந்த இரு சமூகங்களும் தனக்குள் தானே தன்னை மீள ஒருங்கமைத்துக் கொள்ளும் போக்கு, இதன் சிறப்பான வடிவமாகியது. இங்கு யாழ் ஆதிக்க பிரதேசவாதம் மற்றைய பிரதேசங்களுடன் தன்னை அன்னியப்படுத்திய போதும், ஆதிக்கத்தில் இருந்த இந்துமதம் சார்ந்த நிலப்பிரபுத்துவ ஆதிக்க பண்பாடு பிளவை மட்டுப்படுத்தியது. இந்த மதவாத நிலப்பிரபுத்துவ பண்பாடு கடந்த தேசிய எழுச்சிகள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் வித்திட்ட போது, இந்த தேசிய கண்ணோட்டம் மதவாத நிலப்பிரபுத்துவ கூறுகளில் இருந்து தன்னை முரணற்ற வகையில் வெளிப்படுத்திவிடவில்லை. மாறாக பழைய கூற்றின் நீட்சியாக வெளிப்பட்ட போது, தேசிய விழிப்புணர்ச்சிகள் மதக் கண்ணோட்டத்தில் இருந்தே அணுகும் போக்கு தலைகாட்டியது. மறுபக்கத்தில் அந்த தேசிய உணர்வுகள் மொழி சார்ந்த இன உணர்வை தனக்குள் கொண்டிருந்த தன்மை என்பது, மதம் கடந்து தன்னை வெளிப்படுத்தியது. இங்கு மொழி சார்ந்த தேசிய இன உணர்வுக்கு பின்னால், மத உணர்வு நீட்சியாக நீடிப்பது தவிர்க்கமுடியவில்லை. இரட்டைத் தன்மை கொண்ட தேசியம் இனம் சார்ந்தவையாக இருந்தபோதும், அதன் உட்சாரம் மதம் சார்ந்து வெளிப்படத் தொடங்கியது. மதம் சார்ந்த கண்ணோட்டத்தை அடைப்படையாக கொண்ட இனக் கண்ணோட்டம், இனத்தை மதமாக அடையாளம் காட்டி விடுவது பொது குணாம்சமாகியது. இங்கு விழிப்புணர்ச்சி என்பது இனம் சார்ந்து இருப்பது, தமிழ் முஸ்லீம் என்ற இரு இனத்துக்கும் பொருந்தும்;. இது சென்ற நூற்றாண்டின் இறுதி வரையும், இன்றும் அதுவே பொதுசாராம்சமாகும்; இதனால் தான் இந்த தேசிய விடுதலைப் போராட்டம் குறுந்தேசிய இனவாதமாக சிதைந்து சீரழிகின்றது. இதை நாம் மேலும் ஆதாரமாக பார்க்க, முஸ்லீம் மக்கள் மேல் நடத்திய தாக்குதல்களையும், முக்கிய மாற்றங்களையும் ஆராய்வோம்;.

முஸ்லீம் மக்கள் மேலான அனைத்து தாக்குதலையும் இதில் பதிவு செய்யவில்லை. அதே நேரம் இக்காலத்தில் தனிநபர்களாக கொல்லப்பட்டோரையும் இது உள்ளடக்கவில்லை. இந்தப் படுகொலைகளை பல்வேறு இயக்கங்கள் செய்த போதும், இறுதியாக புலிகள் அதை ஒரு நடவடிக்கையாகவே செய்தனர். இக்காலத்தில் இதற்கு பதிலடியாக அரசின் கூலிப்பட்டாளமாக இயங்கிய ஜிகாத் மற்றும் ஊர்காவல் படையினர் தமிழ் மக்கள் மேல் நடத்திய படு கொலைகளை இதற்குள் உள்ளடக்கவில்லை. அன்றைய நாளாந்த பத்திரிகையில் வெளியாகிய செய்தியை அடிப்படையாக கொண்டும், கிடைத்த பத்திரிகையை மட்டும் ஆதாரமாக கொண்டு இவை தொகுக்கப்பட்டது. இதில் காயம் அடைந்தவர்கள் மற்றும் காயம் அடைந்த பின் மருத்துவமனையில் இறந்தவர்களையும் உள்ளடக்கவில்லை. அவை பற்றி எந்த ஆய்வும் இது வரை யாரும் செய்யவில்லை என்றே நம்புகின்றேன்;.

29.11.1986 இல் முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பிரகடனம் செய்யப்பட்டது. முஸ்லீம் மக்களுக்காக கிழக்கில் உருவான முதல் தனிக் கட்சி என்று தகவல்கள் கூறுகின்றன. 1984 இல் இக் கட்சியை புனர்நிர்மானம் செய்த போது, அதில் எட்டுப் பேர் தான் அதில் எஞ்சியிருந்தனர். 1987 ல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்த நிலையில், புலிகள் மரண தண்டனையை பிரகடனம் செய்திருந்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் காங்கிரஸ் 17 ஆசனங்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாகியது. அதே நேரம் தென் இலங்கையில் 12 ஆசனங்களைப் பெற்றது.

1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து முஸ்லீம் மக்கள் சிலரை கொன்றனர்.

1987 இல் மார்கழி 30ம் திகதி காத்தான்குடியில் 28 முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர்.

6.1.88 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடி எல்லையில் 60 குடியிருப்புகள் எரிக்கப்பட்டன.

19.3.88 வீரகேசரி செய்திப்படி நிந்தவூரில் 7 பேரை கடத்திச் சென்றனர்.

1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

1988 கார்த்திகை மாதம் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லீம் பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை செய்தனர்.

2.2.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய கிரனைட் குண்டு வெடித்ததில், இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர்.

7.3.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையைச் சேர்ந்த 600 தமிழர்கள், தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான உதவி அரசாங்கப்பிரிவுகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

11.4.89 வீரகேசரி செய்திப்படி கிண்ணியாவில் 5 முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர்.

4.12.89 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடியில் மூன்று முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

10.12.89 வீரகேசரி செய்திப்படி 12 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

89 பாராளுமன்ற தேர்தலில் முஸ்லீம் மக்களின் வாக்கில் 75 சதவீதத்தை முஸ்லீம் காங்கிரஸ் பெற்றிருந்தது. அதேநேரம் 4 தொகுதிகளை வென்றது

1.2.90 வீரகேசரி செய்திப்படி புலிகள் காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனம் செய்து, வீடுவீடாக சோதனை செய்தனர். 30 பேரை கைது செய்தனர். அத்துடன் சம்மாந்துறையில் மாகாணசபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்முனையைச் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். இதை அடுத்து காத்தான்குடியிலும், கல்முனையிலும் கடைகள் மூடப்பட்டன. முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் குழு உறுப்பினர் மருதூர் கனி கடத்தப்பட்டார். இவர்களை விடுவிக்கக் கோரி கல்முனையில் புலிகளின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள் மேல், புலிகள் சுட்டதில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்களை வைத்தியசாலை கொண்டு சென்ற நிலையில், அங்கு வந்த புலிகள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தபின், ஐவரை சுட்டுக் கொன்றதுடன், வைத்தியர் உட்பட 10 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.

7.2.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் கனிபா என்பவரிடம் பணம் தரும்படி கோரி மறுத்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

10.7.90 வீரகேசரி செய்திப்படி ஏறாவூரில் இரண்டு முஸ்லீம் மக்களை கடத்தி சென்றனர்.

1990 யூன் 11 க்கு பின்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் தொடங்கிய முதல் இரண்டு மாதத்தில் 300 பேர் அளவில் இயக்கங்களால் கொல்லப்பட்டனர். அத்துடன் கிழக்கில் மட்டும் 2500 முஸ்லீம்;கள் தேசிய போராட்டம் தொடங்கிய பின் இராணுவம் மற்றும் இயக்கத்தால் கொல்லப்பட்டனர்.

1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு குருக்கன் மடத்தில் 68 முஸ்லிம் பயணிகளை கடத்திக் கொன்றனர். மொத்தமாக அங்கு 150 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏறாவூரில் 62 பேரை கடத்தினர்.

31.7.1990 வீரகேசரி செய்திப்படி அனுராதபுர மாவட்ட உடுப்பாவலா சின்னப்பிக்குளத்தில் 10 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட பின் கிணற்றில் போடப்பட்டனர்

1.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்று வயல்களில் வேலை செய்து விட்டு வந்த 17 முஸ்லீம்கள் கடத்தப்பட்ட பின் கொல்லப்பட்டனர்.

1.8.90 வீரகேசரி செய்திப்படி கந்தாளாயில் 5 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

3.8.1990 வீரகேசரி செய்திப்படி மஜீத்புரம் பகுதி வயலில் இருந்து திரும்பிய 7 முஸ்லீம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சம்மாந்துறையில் முஸ்லீம் தந்தையும் மகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

13.8.90 வீரகேசரி செய்திப்படி செங்கலடியில் 5 முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர்.

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 200 தமிழர் மற்றும் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி ஏறாவூரில் 4 முஸ்லீம் கிராமங்கள் மேல் நடத்திய தாக்குதலில், 119 முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயம் அடைந்தனர்.

13.8.90 ஐலண்ட் செய்திப்படி சம்மாந்துறையில் 6 முஸ்லீம் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

15.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் 8 முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர்.

1990 ஆகஸ்ட் 3ம் திகதி காத்தான்குடி பள்ளிவாசலில் 122 பேர் கொல்லப்பட்டனர்.

7.8.90 வீரகேசரி செய்திப்படி அம்பாறையில் 18 முஸ்லீம் விவசாயிகள் கொல்லப்பட்டனர். அக்கரைப்பற்றில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 10ம் திகதிக்கு முன்னர் அம்பறையை விட்டு முஸ்லீம்;கள் வெளியேறிவிட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் போடப்பட்டது.

11.8.90 ஏறவூரில் 164 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதை கரிகாலன், நியூட்டன், ரஞ்சித் முன்னின்று செய்தனர்.

1.9.1990 காத்தான்குடியில் மூன்று கிராமத்தில் 5 பள்ளிவாசல் மற்றும் 55 வீடுகள் எரிக்கப்பட்டன.

16.9.90 புனாவை என்ற கிராமத்தில் 7 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

25.9.90 வீரகேசரி செய்திப்படி கல்முனை கடலில் வைத்து மூன்று முஸ்லீம் மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

3.10.90 வீரகேசரி செய்திப்படி மருதமுனையில் இரண்டு முஸ்லீங்கள் கடத்தப்பட்டனர்.

1990 ஐப்பசி மாதம் 30 ம் திகதி யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவில் இருந்து 60000 முதல் 75000 ற்கு மேற்பட்டோரின் அனைத்து சொத்தையும் கைப்பற்றிய பின்பு புலிகளால் துரத்தப்பட்டனர்.

15.11.90 வீரகேசரி செய்திப்படி மன்னாரில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லீம்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பிய போது, புலிகள் சுட்டதில் ஒருவர் மரணம். ஆறு பேர் காயம் அடைந்தனர்.

1992.4.26 இல் அழிஞ்சிப் பொத்தனையிலும், ஆவணியில் பள்ளித்திடலிலுமாக மொத்தம் 300 க்கு மேற்பட்டோரை வெட்டியும் சுட்டும் கொன்றனர்.

இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் 1986-1987 க்கு பின்பாக அதிகரிக்கின்றது. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்பு இது அகலமாகி அதிகரித்து. இந்தியா இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்பு உச்சத்தை அடைகின்றது. 1985 க்கு பின்பாக விடுதலை இயக்கங்கள் பண்பு ரீதியாக மற்றாத்தை சந்தித்ததை தொடர்ந்தே, இந்தப் புதிய நெருக்கடி பரிணமிக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைக்காக ஆயுதம் ஏந்த ஆயிரமாயிரமாக போராட வெளிக்கிட்டவர்கள், அன்னிய அரசுகளின் கைக்கூலியாகி ஆயுதப் பயிற்சி பெற்ற பின்பு, அதன் சிதைவு அங்கிருந்து வழிகாட்டப்படுகின்றது. ஆரம்பம் முதலே அரசியல் ரீதியாக தமிழ் தேசியத்தின் உட்கூறுகளை புரிந்து கொள்ள முடியாத தரகு கட்சியான கூட்டணியின் அரசியல் வழியில் வாலாக உருவான இயக்கங்கள், மத நிலப்பிரபுத்துவ கூறுகளை தனது அரசியல் அடிப்படையாக கொண்டே தன்னை வெளிப்படுத்தியது. இங்கு தேசியம் முதன்மை முரண்பாடாக நீடித்தமையால் இனமுரண்பாடு அடிப்படையாக, அதுவே அரசியலின் மையமான கோசமாகியது. இது தனக்கிடையிலான முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக கொண்ட அதே நேரம், மற்றையை இனங்களை அழிப்பதில் தன்னை அரசியல் மயமாக்கியது.

இந்த வரலாற்று வளர்ச்சியில் தான் முஸ்லீம் மக்கள் மேல் தாக்குதலை இயக்கங்கள் தொடங்கி வைத்தன. முஸ்லீம் மக்களை தமிழ் மக்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றிணைத்த இயக்கங்கள், அவர்களையும் தனது உறுப்பினர் ஆக்கினர். புலிகளின் மாவீரர் பட்டியலில் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் உறுப்பினர்கள் தம் உயிரை இழந்தே உருவாகியுள்ளது. இது போல் எல்லா இயக்கத்துக்கும் பொருந்தும்;. முஸ்லீம் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய அடிப்படை உள்ளடக்கத்தில், முஸ்லீம் மக்களை ஒன்றிணைத்த இயக்கங்கள் அவர்களின் ஆதரவை பெறுவதிலும் கணிசமான வெற்றி பெற்றனர். தமிழ்ப் பகுதி போல் ஆதரவு கொடுப்பதும், இணைவதும் ஒரு நிகழ்வாகவே இருந்தது. இயக்கங்கள் தமது குறுகிய குறுந்தேசிய இனவாத நலன்களில் வளர்ச்சி பெற்ற தன்மையானது, தமிழ் தேசியத்துக்கு முரண்பாடானதாக வளர்ச்சி பெற்றது.

இந்த குறுந்தேசிய இன நலன்கள் படிப்படியாக சொந்த மக்களை விட்டே விலகிச் சென்றது. தமிழ் மக்களையே ஒடுக்குமளவுக்கு அது பரிணமித்தது. புலிகள் உள்ளிட்ட ஆயுதம் எந்திய அனைத்து இயக்கமும், இதில் தீவிரமான மக்கள் விரோதிகளாக தம்மை வெளிப்படுத்தினர். மக்களின் தேசிய பொருளாதார நலன்களை வென்று எடுப்பதற்கு பதில், தனது குறுகிய தேசிய நலனை முதன்மைப் படுத்தி அதில் தனது நலனை அடைவதன் ஊடாக சீரழிந்தது. மக்கள் மேலான வரிகளாகவும், கட்டாய பணச் சேகரிப்பாகவும் மாறியபோது, இதை அடைவதில் இயக்க மோதல் அவதாரமாகியது. இதில் அன்னிய கைக்கூலித் தனத்தை விசுவாசித்து மெய்ப்பித்து காட்ட எடுத்த முயற்சி மேலும் மக்களுக்கு எதிரானதாக மாறியது.

தமிழ் மக்களுக்கு மேலானதாக பொதுவான தாக்குதலாக மாறியது என்பது, பின்பு குறிப்பாக முஸ்;லீம் மக்கள் மேலானதாகவும் பரிணமித்தது. முஸ்லீம் மக்கள் மேலான வரி, பணச் சேகரிப்புகள் முரண்பாடாக வளர்ச்சி பெற்ற போது, முஸ்லீம் மக்கள் மத்தியில் இருந்து அமைப்பாக்கப்பட்ட வடிவம் மூலம் இதை நியாயமாகவே எதிர்க்கத் தொடங்கியது. இந்த எதிர்ப்புகளை ஆயுத முனையில் அடக்க தமிழ் இயக்கங்கள் பின்நிற்கவில்லை. அமைப்பாக்கல் (கட்சி வடிவிலும் பள்ளிவாசல் வடிவிலும் எழுந்தன) இருந்தமையால் தமிழ் பகுதி போல், இந்த எதிர்ப்பை முறியடித்துவிடமுடியவில்லை. அதேநேரம் முஸ்லீம் தேசிய விழிப்புணர்ச்சி வெளிப்பட்டது. முஸ்லீம் காங்கிரஸ் இந்த வன்முறையின் பரிணாமத்துடன் புத்துயிர்ப்படைந்தது. முஸ்லீம் மக்களின் தேசிய விழிப்புணர்வு மதத்துக்கு வெளியில், முஸ்லீம் மக்களை அணிதிரட்டுவதில் படிப்படியாக வெற்றி கண்டது. தமிழ் தேசியம் எப்படி சிங்கள இனவாத தாக்குதலால் விழிப்புற்றதோ, அதே போன்று முஸ்லீம் சமூகமும் இயக்க தாக்குதலால் விழிப்புற்றது. தமிழ் தேசியம் எப்படி தமது நிலப்பிரபுத்துவ அடிப்படையை உள்ளடங்கியதாக உருவானதோ, அதே போன்று முஸ்லீம் காங்கிரசும் உருவானது. இந்த தேசியக் கூறு தேசியத்துக்கு பதிலாக குறுந்தேசியத்தை இனவாதத்தை பரஸ்பரம் அடிப்படையாக கொண்டு உருவானது மட்டும் இன்றி, அதுவே அதன் சீரழிவுக்கான அடிப்படையாகவும் இருந்தது.

முஸ்லீம் மக்கள் மேலான தொடர்ச்சியான தாக்குதல், முஸ்லீம் மக்களை தமிழ் தேசியத்தில் இருந்து தள்ளிச் சென்றது. தனியான தேசியத்தை கோருவது அதன் புதிய வடிவமாகியது. தமிழ் மற்றும் முஸ்லீம் தேசியம் மதத்தை தனது முதன்மைக் கூறாக கொண்டு, தமது அணியைக்கட்டிவிடவில்லை. மாறாக தேசிய இனக் கூறை அடிப்படையாக கொண்டே, தம்மை கட்டமைத்தன. புலிகளைப் போல் தாக்குதலும் சரி எதிர் தாக்குதலும் சரி இந்த தேசிய இனக்கூறில் நின்றே, இவை நடத்தப்பட்டன. மதக் கூறு இங்கு ஒரு அரசியல் வடிவமாக முஸ்லீம் மக்கள் மத்தியில் இருக்கவில்லை. அதாவது தமிழ் மக்கள் போல் முஸ்லீம் மக்களும் இனக் கூறுக்கே முதன்மை அழுத்தம் கொடுத்தனர். பள்ளிவாசல் மேலான தாக்குதல்களின் போதும் கூட, இது வெளிப்பட்டுவிடவில்லை. தமிழ் தேசிய இயக்கங்கள் குறுந்தேசிய இயக்கங்களாக சீராழிந்து பரிணமித்த வரலாற்றில், முஸ்லீம் மக்கள் மேலான தாக்குதல் ஒரு அரசியல் செயற்பாடாக, ஒரு செயல் வடிவமாக மாறியது. இதில் இந்தியாவின் குறிப்பான பங்களிப்பும் உண்டு. அநுராதபுரத்தில் 1985 இல் சிங்கள மக்கள் மேலான புலிகளின் தாக்குதலை, இந்தியா கூறியே புலிகள் செய்ததாக பாலசிங்கம் கூறியது இங்கு கருத்தில் எடுப்பது அவசியமாகும்;. முஸ்லீம் மக்கள் மேலான தாக்குதலாக வளர்ச்சி பெற்று இனக் கலவரமாக, இன அழிப்பாக மாறிய படுகொலை வரலாற்றில், இந்திய ஆக்கிரமிப்பு நலன்களும் இணைந்த வகையிலேயே திணிக்கப்படுகின்றது. இந்திய ஆக்கிரப்பின் போது, தமிழ் மக்களை ஏமாற்றி உருவான சமாதான நாடக மேடையில் உருவாக்கிய புதிய அதிகார அலகுகளை நோக்கி இப்படுகொலை ஊக்குவிக்கப்பட்டது. இந்தியாவின் இந்துத்துவ கண்ணோட்டம் இதன் நெம்புகோலானாது. தொடர்ச்சியான தமிழ் இயக்கங்களின் முஸ்லீம் விரோத கண்ணோட்டம், முஸ்லீம் தேசிய உணர்வுகளை தட்டியெழுப்பிய நிலையில், மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லீம் கங்கிரசை எதிர்கட்சியாகவும் புதிய தேசியக் கட்சியாகவும் பரிணமிக்க வைத்தது. இது இயக்கங்களின் அதிகாரத்தை முஸ்லீம் சமூகங்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கியதுடன், வரி மற்றும் பண சேகரிப்பை தடுத்தது. இந்த புதிய சூழ்நிலைக்கான காரணகாரியத்தை இயக்கங்கள் ஆய்வு செய்து, தேசிய போராட்டத்தை சரியாக முன்னெடுப்பதற்கு பதில், பழைய குறுந்தேசிய இனவாதத் தாக்குதலை அதிகரித்தனர். முஸ்லீம் காங்கிரஸ் மாகாணசபை மூலம் முஸ்லீம் மக்கள் மேலான அதிகாரத்தை வெற்றி கொண்ட காலம் தான், அந்த மக்கள் மேலான தாக்குதலின் உச்ச ஆண்டுகளாகும்;. இந்தியாவின் தயவில் ஆட்சி பீடம் எறிய கைக்கூலி பொம்மை அரசுகள், ஈவிரக்கமற்ற முஸ்லீம் படுகொலையை நடத்தத் தொடங்கினர். இதனால் ஏற்பட்ட எதிர் தாக்குதல்களுக்கு பதில் கொடுக்கும் வண்ணம் புலிகளும், இந்த கூலிக்குழுக்களின் வழியில் முஸ்லீம் மக்களை ஒடுக்குவதில் சமாந்தரமாகவே செயற்பட்டனர். ஒரு இனத்துக்கு எதிரான தாக்குதலில் புலியும் அதன் எதிர் அணியான கைக்கூலி அமைப்புகளும் ஒன்றுபட்டு கைகோத்து நின்றனர். இங்கு இந்தியாவின் சதி வலைகளை அம்பலம் செய்து முஸ்லிம் மக்களை அணிதிரட்ட வேண்டிய பாரிய பொறுப்பை, புலிகள் எதிர்நிலையில் கையாண்டனர்.

இந்திய ஆக்கிரமிப்பாளனை இலங்கை அரசு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய போது, புலிகள் இழந்து போன அதிகாரத்தை கைப்பற்ற தமிழ் கைக் கூலிகளுக்கு எதிராக பாரிய தாக்குதலை சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து நடத்தினர். கட்டாய இராணுவத்தில் இணைக்கப்பட்ட பல அப்பாவி இளைஞர்கள் உட்பட, பலர் அக்கால செய்திப் பத்திரிகைகளிலே குறிப்பிடுமளவுக்கு ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் வீதிகளில் கொல்லப்பட்டனர். அதேநேரம் புலிகள் முஸ்லீம் பகுதியில் இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முஸ்லீம் மக்கள் மேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தினர். பார்க்கவும் மேல் உள்ள தாக்குதல் தரவுகளை. புகழ் பெற்ற பள்ளிவாசல் கொலைகள் உட்பட சில நூறு பேரை கொன்றதன் மூலம், இனப் பகைமை கூர்மையாக வளர்ச்சி பெற்றது. தமிழருக்கே அவமானமான நினைவுச் சின்னமாகியது. முஸ்லீம் மக்களை இனியும் தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்பதை, புலிகளின் குறுந்தேசிய இன அழிப்பு தொடர்ச்சியாக நிறுவிய நிலையில் தான், பழிவாங்கலாக வடக்கில் வாழ்ந்த முஸ்லீம் மக்களை துரத்திவிடும் நிகழ்வு நிகழ்கின்றது. வடக்கில் இருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றிய நிகழ்வை, கிழக்கில் இருந்து வந்த புலிகளின் தலைமையே செய்தது. அக்காலத்தில் இதை எதிர்த்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் வடக்கில் இருந்த புலிகளிடம் கேட்டபோது, கிழக்கில் இருந்து வந்தவர்களே செய்தனர் என்று கூறுமளவுக்கு, அக்காலகட்ட செய்திகள் செய்திப் பத்திரிகைகளில் பதிவாகியுள்ளது.

வடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு, கிழக்கில் அதிகாரத்தை கைப்பற்ற ஏற்பட்ட தோல்வியின் பிரதிபலிப்பே. பிரபாகரன் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் இது தெளிவாக வெளிப்படுகின்றது. ஷஷசிங்கள இனவாதிகளும், சுயநலன் மிக்க முஸ்லீம் அரசியல்வாதிகளுமே தமிழ் மக்களக்கிடையே வேறுபாட்டைப் பெரிதாக்கிப் பகையை உருவாக்கினார்கள்.என்ற கூற்றில் சுயநலமில்லாத முஸ்லீம் தலைமை என்பது என்ன? கிழக்கில் வரி மற்றும் பண சேகரிப்பை நடத்தவும் அதிகாரத்தை நிறுவவும் கிழக்கு முஸ்லீம்கள் சம்மதிப்பார்களாயின், வடக்கு முஸ்லீம்கள் மீது தமது சொந்த நிலத்துக்கு திரும்ப புலிகள் நிபந்தனையின்றியே சம்மதிப்பார்கள்;. புலிகள் முஸ்லீம் மக்கள் மேல் நடத்திய தாக்குதல்கள், மற்றும் வெளியேற்றம் என்பது, கிழக்கில் முஸ்லீம் மக்கள் மேலான அதிகாரத்தை இழந்ததனால் ஏற்பட்ட குறுந்தேசிய இனவாத வெளிப்பாடாகும்.


முஸ்லீம் மக்களும் தமிழ் மக்களும் ஒரே தேசியத்தை முன்னெடுக்க முடியாதா?

முடியும். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் அதன் முரணற்ற உள்ளடக்கத்தில் முன்னெடுக்கப்படும் போது சாத்தியமானது. ஒரு தேசம் என்பதும் தேசியம் என்பதும் என்ன? அதன் அரசியல் உள்ளடக்கம் என்ன? வரலாற்று ரீதியாக தேசம் என்பது தேசிய உற்பத்தியை கட்டமைப்பதே. நிலப்பிரபுத்துவ மதவாத கூறுகளை எதிர்த்து ஒரு மொழி பேசும் மக்கள் ஒரு குறித்த நிலத் தொடர் மேல், தனது பண்பாட்டு கலாச்சார வேர்கள் மேல் கட்டப்படுவதே தேசமாகும்; இந்த தேசத்துக்கான போராட்டமே தேசிய விழிப்புணாச்சியாகும்;. இந்த வகையில் தமிழ், முஸ்லீம் மக்கள் நிலப்பிரபுத்துவ மதவாத (இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ...) கூறுகளை எதிர்த்து அதன் பண்பாட்டு கலாச்சார கூறுகளை தகர்க்கின்ற போராட்டத்தில், தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பிளவு அகன்றுவிடுவது இயற்கையாகும்;. இங்கு மொழி மற்றும் பண்பாட்டு கலாச்சார கூறுகள் மேல் கட்டமைக்கப்பட்டுள்ள நிலப்பிரபுத்துவ மதவாத கருத்து முதல்வாத கூறுகளை எதிர்த்து போராடும் போது, இயல்பாகவும் இயற்கையாகவும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே உள்ள பிளவு அகல்வது இயற்கையாகும். ஒரே மொழி பேசுகின்ற ஒரே பண்பாட்டு கலாச்சார கூறுகளை கொண்ட ஒரு நிலத் தொடர் மீதான ஒரே தேசிய இனமாக மாறிவிடுவது அதன் தன்மையாகும்;. இந்த தேசியம் முற்போக்கான பொருள் முதல்வாத அடிப்படையில் தனது கடந்தகால அடிமைத் தனங்களை களைய முயல்வதன் மூலம், இந்த இணைப்பு பலமாக வளர்ச்சி பெறும். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிடையில் காணப்படும் பண்பாட்டு கலாச்சார கூறுகளின் மிகச் சிறந்த கூறுகளை பரஸ்பரம் உள்வாங்குவதன் மூலம், தமக்கிடையில் நிலவும் பிற்போக்கு கூறுகளை களைந்த ஒரு புதிய தேசிய இனமாக பரிணமிக்க முடியும். இல்லாதவரை மதவாத நிலப்பிரபுத்துவ கூறுகளுடன் எழும் பிற்போக்கு குறுந்தேசிய இனவாத கூறுகள், பிளவை மேலும் மேலும் ஆளமாக பிளந்து செல்வதற்கு துணை போகும். ஐக்கிய கூறுகளை எதிர் நிலையில் கையாளும்; பிளவும் இணைவும், நிகழ்ச்சி நிரலின் உயிர் உள்ள அம்சங்களாக எதிரும் புதிருமாக, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் புதைந்தே கிடக்கின்றது. இந்த வகையில் சிறுபான்மை முஸ்லீம் தேசிய இனம் மீதான தமிழ் குறுந்தேசிய இனவாத வன்முறைத் தாக்குதலுக்காக, தமிழ் தேசியம் தலைகுனிந்து நிற்கின்றது. தமிழ் தேசியம் முன் கையெடுத்து கடந்தகால தவறுகளை நிவர்த்தி செய்ய போராடாதவரை, முஸ்லீம் மக்கள் தமிழ் தேசியத்தில் இருந்து விலகிச் செல்வது வரலாற்று நிகழ்வாகின்றது. தமிழ் மக்களின் வரலாற்று துரோகமாகி, வரலாற்று நிகழ்ச்சியாகிவிடும். இதை யாரும் தவிர்க்க முடியாது.

அடுத்து முஸ்லீம் மக்கள் ஒரு தேசிய இனமா அல்லது சிறுபான்மை தேசிய இனமா என்ற அடிப்படைக் கேள்வி இங்கு எழுகின்றது. இலங்கையின் முஸ்லீம் மக்களின் பிரச்சனை இரண்டு வகையில் தெளிவாக வேறுபட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு பகுதியில் வாழும் முஸ்லீம் மக்கள் மதச்சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால் அவர்கள் செறிந்து வாழும் ஒரு நிலத் தொடரைக் கொண்டு உள்ள பகுதிகளில் சிறுபான்மை தேசிய இனத்தவரவர். முஸ்லீம் என்ற அடையாளக் குறிப்பு பெரும்பான்மை பிரிவால் பெயரளவில் அடையாளப்படுத்தப்பட்டதே ஒழிய, அது இனமல்ல என மறுக்க எடுக்கும் ஒரு எடுகோள் அல்ல. மலையக மக்கள் என அவர்களை மலையில் வாழ்வதால் அடையாளப்படுத்தியது போன்று, முஸ்லீம் மக்கள் என மதத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இனப்பிரிவுகளே. இவர்கள் வளரும் தேசிய சிறுபான்மை இனமாக நாம் கண்டு கொள்ள வேண்டும். இங்கு சிறுபான்மை என்பது இரண்டு அர்த்தத்தைக் கொண்டது. அதாவது இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தில் சிறுபான்மை என்ற அர்த்தத்திலும், தமிழ் இனம் என்ற அடிப்படையில் அந்த இனத்தினுள்ளும் அவர்கள் சிறுபான்மையினமாக இருக்கின்றனர்.

அதை விடுத்து மதச்சிறுபான்மை என்றோ, மதத்துக்கு வக்காலத்து வாங்குவது என மறுதலிக்கும் எக்கோட்பாடும், இன ஆதிக்கவாதிகளின் கூற்றை கேள்விக்கு உள்ளாக்காத வரையறையே. ஏன் நாம் முஸ்லீம் மக்களை ஒரு தேசிய இனமாக அல்லாது சிறுபான்மை தேசிய இனமாக கருதுகின்றோம். இங்கு ஒரு தேசம் என்பது மதவாத நிலப்பிரபுத்துவ கூறுகளை கொண்டு வரையறுப்பதில்லை. இன்று அப்படி காட்டுவது கட்டமைப்பது அதற்காக போராடுவது என்பது ஒரு போக்காக உள்ளது. இதனால் தான் தமிழ் தேசிய போராட்டம் சீராழிகின்றது. உண்மையில் இதை அடிப்படையாக கொண்டே முஸ்;லீம் மக்களை தேசிய இனமாக வரையறுப்பதும் இன்று நிகழ்கின்றது. இதுவே இந்த வரையறையும் வரையறுப்புமே தேசியத்தை பிற்போக்காக மாற்றிவிடுவதுடன், முற்போக்கை அழித்துவிடுகின்றது. தேசம் என்பது தேசியத்தின் உட் கூறுகளை சரியாக விளக்குகின்றது. இந்த தேசம் என்பது தனது சொந்த பொருளாதார கட்டமைப்பை வரையறை செய்கின்றது. அதனடிப்படையிலான பண்பாட்டு கலாச்சார கூறுகளை ஒரு மொழி பேசுகின்ற ஒரு நிலத்தொடர் மீது நிறுவுகின்றது. இதுவே தேசம். இதற்கான போராட்டமே தேசிய போராட்டமாக உள்ளது. இதை முன்னெடுக்க தவறுகின்ற தேசிய போராட்டம் தேசியமாக இருப்பதில்லை. தேசியத்தை உச்சரித்தாலும் அவை பிற்போக்கான தேசிய மறுப்பை, தேசிய அழிப்பை முன்வைக்கின்றது. இது தேசத்துக்காக போராடும் குழுக்களுக்கு அடிப்படையான நியதியாக உள்ளது.

இதே போன்றே தேசமாக தனியான அரசை அமைக்க முடியாதா குறித்த இனமக்களை தேசமாகவும், அவர்களின் போராட்டத்தை தேசிய போராட்டமாகவும் வருணிப்பதும் பிற்போக்கானவையாகும்;. ஒரு தேசம் அமையவேண்டுமாயின் நிச்சயமாக ஒரு பொருளாதார கட்டமைப்பும், அது சார்ந்த பண்பாட்டு கலாச்சார கூறுகளும் அதை நிறுவ ஒரு நிலத் தொடர் மீதான ஒரு பொதுமொழி இல்லாத தேசியம், என்பதும் தேசம் என்பதும் கற்பனையானது. இங்கு இதை ஸ்ராலின் வரையறை என்று காட்டுவதும், அதை சோவியத்துக்கு மட்டும் பொருத்திக் காட்டுவதும் அபத்தமானவை. ஸ்ராலின் வரையறை செய்த தேசிய அடிப்படை கூறுகள், லெனின் மற்றும் மார்க்சால் முன் கூட்டியே தமது தேசிய இனங்கள் தொடர்பான ஆய்வுகளில் எடுத்துக் காட்டியே உள்ளனர். இதை ஷஷதேசியம் எப்பொழுதும், எங்கும் முதலாளித்துவ கோரிக்கையே ஒழிய, பாட்டாளி வாக்க கோரிக்கையல்ல என்ற எனது நூலில் ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளேன்;. இந்த வரையறை சோவியத்துக்கு மட்டும் பொருத்தமானது என்பது, தேசிய சுயநிர்ணய உரிமை சோவியத்துக்கு மட்டும் பொருத்தமானது என்று யே.வி.பி கூறுவதுக்கு நிகரனாது. 1990 களில் யே.வி.பி தலைவர் சோமபாலாவை (இது தான் அவரின் பெயர் என்று நம்புகின்றேன்.) பாரிசில் நான் சந்தித்து கதைத்த போது (தற்போதும் பரிசிலேயே உள்ளார்.), இந்த மனங்கெட்ட அரசியல் விபச்சாரத்தை சொன்னார். இதையே இன்று ஸ்ராலினின் தேசிய வரையறைக்கும் சிலர் செய்கின்றனர். பாதை ஒன்று, சொல்லுகின்ற விதம் மட்டுமே இவர்களுக்கிடையில் வேறாகின்றது.

ஒரு தேசம் மற்றும் தேசிய போராட்டம் என்பது அதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதவரை, அவை பிற்போக்கவும் திசை மாறிச் செல்வதும் நிகழ்கின்றது. சமுதாயத்தில் எதுவும் தனக்கான வரையறையைக் கொண்டே இயங்குகின்றது. அதில் இருந்தே தன்னை மாற்றி அமைக்கின்றது. இல்லாத எடுகோள்கள் கருத்து முதல்வாதமாகும். பொருளை மறுத்த எடுகோள்களை கருத்து முதல்வாதமாக்கி, மதவாத நிலப்பிரபுத்துவ எல்லைக்குள் சீராழிக்கின்றது. இது தமிழ் தேசிய போராட்டத்துக்கே பொதுவாக உள்ள போது, முஸ்லீம் மக்களுக்கு பொருத்திப் பார்க்க மறுப்பது, அதன் மேல் குளிர்காய்வதாகும்;. முஸ்லீம் மக்கள் தமக்கான பொருளாதாரத்தை கட்டமைக்கும் வளர்ச்சியை எட்டாத வரை, தேசிய கூறுகள் பின்தங்கியே காணப்படுகின்றன. சொந்த சுய தேசிய பொருளாதாரத்தை கட்டமைக்கும் போராட்டமே, வளரும் தேசிய இனத்தை, தேசமாக்கும்.

இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சிப் போக்கில் தேசிய இனங்கள் அழிக்கப்படுகின்றன. இது தமிழ், சிங்கள, மலையக, முஸ்லீம் மக்கள் என்று யாரையும் உலகில் விட்டுச் செல்லவில்லை. இந்த நிலையில் தேசிய இனங்கள் தமது சொந்த தேசிய சுய பொருளாதாரத்தை மையமாக வைத்து தேசிய போராட்டத்தை முன்னெடுக்காத வரை, தேசியம் என்பது நிலப்பிரபுத்துவ மதவாத அடிப்படையில் தேசியத்தை ஏகாதிபத்தியத்திடம் சரணடையவைக்கும். இந்தத் தேசியம் தனது நடவடிக்கையில் பிற்போக்கை ஆதாரமாகவும் அடிப்படையாகவும் கொள்கின்றது. மற்றைய இனங்களை எதிரியாக காட்டி அழிப்பது அதன் பொது குணாம்சமாக, உலகளவில் இக்கால கட்டம் முழுக்க நீடிப்பது விதிவிலக்கின்றியுள்ளது. இதுவே இந்த தேசியத்தின் குறிப்பான குணமாகும்.

முஸ்லீம் மக்களின் விடுதலை மற்றும் அவர்களின் தீர்வு என்பது இனம் கடந்த நிலப்பிரபுத்துவ மதவாத கூறுகளை எதிர்த்த போராட்டத்தில் சார்ந்துள்ளது. தேசிய பொருளாதாரத்தை கட்டமைக்கும் போராட்டத்தில் இதற்குத் தடையாக இருக்கும் உலகமயமாதல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததாக அமையும். இதன் பாதையில் அனைத்து தேசிய முற்போக்கு கூறுகளுடன் இணைந்து, பிற்போக்கு தேசியக் கூறுகளை அகற்றுவதாக இருக்கும். இல்லாத வரை முஸ்லீம் மக்களின தற்காலிகமான இடைத் தீர்வு என்பது புலிகளுக்கு வரி மற்றும் பண சேகரிப்புக்கு பணிந்து போகும் நடமுறையுடன் சாத்தியமானது. இல்லாத ஒரு நிலையில் ஏதோ ஒரு விதத்தில் ஏகாதிபத்தியம் புலிகளை அழிப்பதன் ஊடாக அல்லது அரசியல் ரீதியாக போராட்டத்தை கைவிடவைப்பதன் மூலம், தீர்வற்ற அல்லது அற்ப சலுகைக்கு உட்பட்ட ஒரு தீர்வை அடைவதாகவே இருக்கும்;. இங்கு இலங்கையின் அனைத்து தேசிய இனமும், எந்த விடுதலையையும் அடையப் போவதில்லை. மாறாக தேசியத்தை ஏகாதிபத்தியத்திடம் அடகுவைத்து அழிந்து போவதே நிகழும்; இது இலங்கைக்கு மட்டுமல்ல, சர்வதேசத்துக்கே இது பொதுவானவாகும்.


பிழைப்புவாதம் எப்போதும் உள்ளடக்கத்தையும், சமூக விடுதலையையும் மறுக்கின்றது.

1990 ஐப்பசி மாதம் 30 ம் திகதி வடக்கில் இருந்து 48 மணி நேரத்தில் துரத்தப்பட்ட முஸ்லீம் மக்களின் அவலம், 10 வருடம் கடந்த நிலையிலும் தொடர்கதையாக உள்ளது. முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை தமிழ் மக்கள் சார்ந்து பலதரப்பட்டவர்கள் எதிர்த்த போதும், பிரமுகரான பிழைப்புவாதியான ஜெயபாலனே முஸ்லீம் மக்களின் மீட்சியாளராக பவனிவந்தார். இன்று ஜெயபாலன் புலிகளின் பினாமியாகிப் போன பிழைப்புவாத நிலையில், முஸ்லீம் பிரச்சனை ஒரு பிரச்சனையாக அவர் முன் இருப்பதில்லை. இது போன்று சிவத்தம்பி முஸ்லீம் மக்களின் பிரச்சனையை புலிகள் தீர்த்துவிட்டனர் போன்ற எழுத்துகள் மூலம், தனது எழுத்துக் கூலித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் முஸ்லீம் மக்கள் பற்றி பலதரப்பட்ட பிழைப்புவாதிகள், தமது பிழைப்புவாத அரசியலுக்கு இதை ஒரு ஊடகமாக முன்னெடுப்பது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரத்தை, அந்த சமூகம் சார்ந்தும் தமிழ் சமூகம் சார்ந்தும் வெளிவரும் இலக்கியங்களை அடிப்படையாக கொண்டு, இந்த பிழைப்புவாதம் அரங்கேறுகின்றது.

சாதாரணமாக சமூகத்தில் ஒரு பிரச்சனை ஏற்படும் போது ஒவ்வொரு மனிதனும் அதற்கு ஒரு தீர்வை எடுக்கின்றான். முஸ்லீம் மக்கள் சூறையாடப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையை ஒட்டி, இலங்கையில் உள்ள ஒவ்வொருவரும் சார்பாகவோ எதிராகவோ ஒரு முடிவை எடுத்தனர். இந்த நிலையில் முஸ்லீம் மக்கள் பற்றிய பிரச்சனை சரி, அல்லது இலங்கை சமூகம் பற்றிய அனைத்து பிரச்சனையிலும் முடிவை தெரிவிக்கவோ, முடிவை சொல்ல முடியாத இலக்கிய பிதாக்கள், முஸ்லீம் மக்கள் பற்றி நீலிக் கண்ணீர் வடிப்பது தான் பிழைப்புவாதத்தின் உச்சமாகும். சாதியைச் சொல்லி நடந்த பிழைப்புவாதம், தமிழ் நாட்டில் அன்னியப்பட அதன் முடிவுடன் முஸ்லீம் மக்கள் பற்றி புலம்பவது புதிதாக தொடங்கியுள்ளது.

முஸ்லீம் மக்களின் எதிர்காலம் என்ன? இலங்கையில் அவர்களின் அரசியல் நிலை எதிர்காலத்தில் எப்படி இருக்க முடியும்? அவர்களின் போராட்டம் எப்படிப்பட்டதாக இருக்க முடியும்? முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு காரணம் என்ன? மற்றைய சமூகங்களுடன் உறவு எப்படி இருக்க முடியும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் மதப்பிற்போக்கு கூறுகளை எப்படி எதிர்த்து போராடுவது? என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்காமல், முஸ்லீம் மக்கள் பற்றி கரிசனை என்பது போலித்தனமானதாகும்;. முதுகெலும்பற்ற இலக்கிய பதிவுகள், ஒரு சமுதாயத்தின் யதார்த்தத்தை மட்டும் காரணத்தை தெரிந்து கொள்ள முடியாத உள்ளடக்கத்தில் அப்படி மீள ஒப்புவிப்பதுதான்;. இந்த காலத்துக்குரிய வன்முறை சூழ்நிலையால் மட்டும் அவை ஒரு சமூகப் பாத்திரத்தை வகிக்கின்றன. ஆனால் அதன் உள்ளடக்கம் பிற்போக்கு கூறுகளையும் உள்ளடக்கியே வெளிவருகின்றது. இது அந்த முஸ்லீம் மக்களுக்கு தீர்வைத் தருவதில்லை. மாறாக முஸ்லீம் மக்கள் பற்றிய தெளிவான அரசியல் முடிவு தான், அவர்களை நடைமுறைக்கு இட்டுச் சென்று துயரங்களுக்கு முடிவை தருகின்றது. இதை மறுகின்ற பிழைப்புவாத ஒப்பாரிகள், தமது சமூகச் சிதைவை பிழைப்புவாதத்துக்காக மூடிமறைத்து குளிர்காய, ஒரு சமூகத்தையே பயன்படுத்துகின்றது. இது அந்த மக்களுக்கு இழைத்த கொடூரத்தை போன்ற இன்னுமொரு வக்கிரமான கொடூரமாகும்.

நன்றி : இணைய நூலகம்

No comments: