Monday, September 18, 2006

முனீர்ஹோடா குமுதம் ரிப்போர்ட்டர்

கடந்த ஆட்சியின்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி முனீர் ஹோடா, இப்போது முதல்வர் கலைஞரின் செயலாளராக இருக்கிறார். ‘இவர்மீதான கடந்தகால நடவடிக்கை சரிதான்’ என்று ஜெயலலிதா சொல்ல, ‘அது தவறான நடவடிக்கை’ என்று கலைஞர் பதிலடி தர... இந்த மோதல்தான் இப்போது அரசியலை விஞ்சும் வகையில் சூடு கிளப்பியிருக்கிறது.

‘சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முனீர்ஹோடா, கடந்த ஆட்சியில் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார்’ என்று சொல்லி, கலைஞர் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். அடுத்த நாளே இதற்குப் பதிலடி தந்த ஜெயலலிதா, ‘முன்னாள் உள்துறைச் செயலாளராக இருந்த முனீர் ஹோடா, முதல்வராக இருந்த எனக்கும், தலைமைச் செயலாளருக்குமே தெரியாமல், இரண்டு அரசாணைகளில் தானே கையெழுத்திட்டார். அதன்மூலம் கோவை குண்டு வெடிப்பிற்குக் காரணமான மதானி தப்பியோட வழி செய்தார். அவர்மீது நான் துறை ரீதியான விசாரணை செய்தேன். குற்றம் நிரூபிக்கப்பட்டது. முனீர் ஹோடாவை உடனடியாகப் பணி நீக்கம் செய்யச் சொல்லிக் கடிதம் எழுதினேன். அது கருணாநிதியின் தலையீட்டால் ரகசிய காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், அவரை முதலமைச்சரின் அலுவலகத்தில் மிகப் பெரிய பொறுப்பில் வைத்திருக்கிறார் கருணாநிதி!’ என்று கடுமையான ஓர் அறிக்கை வெளியிட்டார்.

‘நாட்டை உலுக்கிய தீவிரவாதச் செயலுக்குத் துணையாக இருந்த மதானி, தப்பியோட வழி செய்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை, முதல்வர் கலைஞர் அருகில் அமர்த்திக்கொண்டு அழகு பார்க்கிறாரா?’ என்று ஜெ. வீசிய அதிர்ச்சிக் குற்றச்சாட்டிற்கு, தலைமைச் செயலாளரிடமிருந்து ‘மறுப்பு’ வந்திருந்தாலும், சர்ச்சை முடிந்தபாடில்லை.

இதுகுறித்து நாம் உள்துறை வட்டாரத்திலுள்ள சிலரிடம் பேசினோம். ‘அன்று நடந்ததென்ன?’ என்பதை ரகசிய ஆவணக் கோப்புகளுடனேயே விவரிக்கத் தொடங்கினார்கள்.

‘‘கேரளாவில் அரசியல் செல்வாக்குப் பெற்ற அப்துல் நாசர் மதானி மீது, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்குதல் நடத்தினர். அதில் அவர் தனது ஒரு காலை இழந்தார். அப்போது, திருவனந்தபுரத்தில் உள்ள ‘லார்டு’ மருத்துவமனையில்தான் அவருக்கு மாற்றுக்கால் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், 1998_ல் கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில், ‘தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார். வெடிகுண்டிற்கான சில மூலப்பொருள்களைக் கொடுத்தார்’ எனக் கூறி, அவரைக் கைது செய்து கோவைச் சிறையில் அடைத்தார்கள்.

சிறையிலிருந்த மதானிக்கு 2002_ல், கால் மூட்டு மோசமாகப் பாதிப்பிற்குள்ளானது. தனக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை திருவனந்தபுரம் லார்டு மருத்துவமனையில் வைத்து வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், ‘இருப்பினும் மதானி இது சம்பந்தமாக அரசுக்கு விண்ணப்பிக்கலாம்’ என்ற கருத்தை வெளியிட்டது.

நீதிமன்றம் கூறியதன் பேரில், கோவைச் சிறையிலிருந்த மதானி, முதல்வர் ஜெ.விற்கு விண்ணப்பித்தார். அது பரிசீலிக்கப்படவேயில்லை. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு ரிட் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் அதை ஏற்று, அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அரசு சார்பில் அதற்குப் பதில் அளிக்கவில்லை.

இறுதியாக, அரசு ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கவேண்டும் என்றும், தவறினால் உரிய உத்தரவு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது. அதன்பேரில், அன்றைய உள்துறைச் செயலாளர் முனீர் ஹோடா, துணைச் செயலாளர் கிருபாகரன், சிறைத்துறை தலைவராக இருந்த போலோநாத் ஆகியோரிடம் இதுகுறித்து விவாதித்தார்.

அதோடு நில்லாமல், ஸ்பெஷல் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஏ.டி.ஜி.பி. முன்ஷினி, ஐ.ஜி. ராவ், எஸ்.பி. அறிவுச்செல்வன், எஸ்.ஐ.டி.யின் சட்ட ஆலோசகர் பாலசுந்தரம், உயர்நீதிமன்ற பப்ளிக் ப்ராசிக்யூட்டர் ஐ.சுப்ரமணியம் அரசு சிறப்பு வழக்கறிஞர் குணராஜ் ஆகியோரிடமும் ‘மதானி விவகாரத்தில் உயர்நீதி மன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்வது எப்படி?’ என்பது குறித்து விவாதம் நடத்தியிருக்கிறார் முனீர் ஹோடா.

தவிர, மனுதாரரான மதானிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்றால், உயர்நீதிமன்றம் இடும் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற காரணத்தினால், கீழ்க்கண்ட நோக்கத்தில் ‘மதானிக்கு ஆசியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவமனையான சென்னை கே.கே.நகர் மூட்டு மாற்று சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது’ என முடிவு செய்யப்பட்டது.

இப்படி முடிவு செய்யப்படுவதற்கு முன்பு, சில விஷயங்கள் ஆராயப்பட்டன. அவை...

(1) மதானி மீது கேரளாவில் பல வழக்குகள் இருக்கின்றன. அங்கு சென்று வருவதில் பிரச்னை உள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கோவையைத் தவிர்த்து மற்ற நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று ‘இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்’ அடிப்படையில், மதானிக்காக என்றே பிரத்தியேகமாக அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டது. இதன்படி மதானியை கோவையைத் தவிர, வேறு எந்த வெளியிடங்களுக்கும் அழைத்துச் செல்லக் கூடாது. (வழக்கு விசாரணைகளுக்கு மட்டும் _ சிகிச்சைக்காக அல்ல) என்று அரசு தடை விதித்துள்ளது.

2. கோவை மருத்துவமனை டீனின் மருத்துவ அறிக்கை மற்றும் மாற்று மூட்டுக்கால் சிகிச்சை நிபுணர்களின் அறிக்கையில், ‘கோவையில் வைத்து மதானிக்கு சிகிச்சை அளிக்க முடியாது’ எனத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

3. ஐ.நா. சபையில், மனித உரிமைப் பாதுகாப்பு சாசனத்தில் இந்தியா உறுதிமொழி எடுத்துக் கையெழுத்திட்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் மதானிக்கு சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

4. இவருக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க வாய்ப்பே இல்லை என்ற பேச்சுக்கு இடமில்லை. அப்படிக் கூறியிருந்தால், தமிழகக் காவல்துறையின் சட்டம் _ ஒழுங்கு பாதுகாக்கத் தகுதியற்றது என்ற நிலை ஏற்படும். இல்லையெனில், நீதிமன்றம் மதானியின் கோரிக்கையை ஏற்றிருக்கலாம். அப்படியரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.

இது போன்ற விஷயங்களை ஆராய்ந்த பின்பே, ஒரு முடிவுக்கு வந்தார் முனீர் ஹோடா.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்ததின் பேரில், உள்துறைச் செயலாளர் முனீர் ஹோடா, மதானியை சென்னையில் வைத்து சிகிச்சை அளிக்க அரசாணையை வெளியிட்டார். ஆனால், அன்று மாலையே அதை ரத்து செய்தார். இதுதான் அப்போது நடந்தது. இதில் முன்னாள் உள்துறைச் செயலாளர் முனீர் ஹோடாவோ அல்லது மற்ற அதிகாரிகளோ எந்த விதிமுறை மீறல்களையும் செய்யவில்லை. தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவும் இல்லை என்பதுதான் உண்மை’’ என்ற தகவல்களை விவரித்தார்கள்!

தொடர்ந்து, இதுபற்றி ஓய்வுபெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது...

‘‘ஜெ. மீது நடைபெற்ற டான்சி நில பேர ஊழல் வழக்கில், டான்சி மேலாண்மை இயக்குனர் முதற்கொண்டு பலர் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்கள். இந்த வழக்கில் ‘கூட்டுமுடிவு’ எடுக்கும்போது, அதிகாரிகளையே தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது ஜெ.விற்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல.

ஆனால், முனீர் ஹோடா மீது ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வைத்திருந்த பொறாமை மற்றும் விரோதத்தின் பேரில், தவறான வழிகாட்டுதலில் அவரை சஸ்பெண்ட் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து, ஜெயந்தி ஐ.ஏ.எஸ்.ஸை விசாரணை அதிகாரியாக நியமித்து, ‘மேற்படி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது’ என இறுதி அறிக்கை பெறப்பட்டு, அவரை டிஸ்மிஸ் செய்ய மைய அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டிருந்தது.

முனீர் ஹோடா மீது ‘சார்ஜ்’ வழங்கப்பட்டது. விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, மதானி வழக்கின் மீது உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருந்தது. அப்படி ஒரு வழக்கு, நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது’’ என்று கூறுகின்றனர்.

‘இதனடிப்படையில், முதல்வர் கலைஞர் தீவிரவாதிக்கு உதவிய ஒரு குற்றவாளி அதிகாரியை உயர்பதவி கொடுத்து அருகில் வைத்துக் கொண்டுள்ளார்’ என்ற குற்றச்சாட்டு, ஆதாரமற்றது. உண்மையில்லாதது என்றுதான் தெளிவாகிறது.
இதற்கிடையே, ‘மதானி மேல்முறையீட்டு மனு நிலுவையிலிருக்கும் போதே, முனீர் ஹோடா மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்த அன்றைய தலைமைச் செயலாளர் மற்றும் விசாரணை அதிகாரியான ஜெயந்தி ஐ.ஏ.எஸ். ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர வாய்ப்பிருக்கிறதா? அதை ஜெ. மீதும் கொண்டுவர முடியுமா? என்ற கோணத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனை நடைபெறுவதாகவும் கோட்டை வட்டாரத்தில் தகவல் பரவிக்கிடக்கிறது.

அதே நேரத்தில், முனீர் ஹோடா மீதான குற்றச்சாட்டுகளைத் துறை சார்ந்த விஷயங்களை வைத்து, அது தவறு என நிரூபிக்க முற்படாமல், அவரை சிறுபான்மைச் சமூக அதிகாரி என்று முதல்வர் குறிப்பிடுவது தேவையில்லாத விஷயம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ரோஹித் யாழரசன்
நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

1 comment:

muslimeen said...

bismillahirrahumanirraheem

jayalalitha is pascist.So expect these type of statement come with her.But our some muslim brothers support her.what i told about them.