Saturday, August 05, 2006

அகண்ட பாரதம் கண்டிட குறுதியில் மூழ்கி எழுந்தவனே!!

சமுதாயத் தலைவர்களே!தன்மானத்தை சிலந்திப் பூச்சியிடம் கற்றுக் கொள்ளுங்கள்!!

அன்பார்ந்த சமுதாயத் தலைவர்களே!

தட்டிவிட்டால் புரவி போல் பாயும் புஜபலம் கொண்ட கொள்கை மரவர்களே!!அகண்ட பாரதம் கண்டிட குறுதியில் மூழ்கி எழுந்தவனே!!
இமயத்தை விஞ்சும் ஈமானைக் கொண்டவனே!!

உன்னை அரசியலில் சில செம்மறி ஆடுகள் முட்டிப் பார்க்கின்றன. நீயோ அதைக் கண்டு பயப்படுகிறாய். நீ ஒன்றுபட்டு விடக் கூடாது என்பதற்காக புரளிகளையும், வதந்திகளையும் பரப்பி உன்னை அடிமைப்படுத்தி விடலாம் என்று கனவு காண்கின்றனர். தரமும், நிறமும், அறிவும், ஆற்றலும், வினை முடிக்கும் செயல் திறனும் இல்லாத தலைகளை நீ தலைவர்களாய் பெற்றதால் தன்னை உணராமல் ஒரு சீட்டுக்கும், நோட்டுக்கும் விலை போகின்றனர்.

சகோதரனே! தலை உள்ளவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆவதில்லை. தலைக்குள் விஷயம் உள்ளவர்கள், நெருப்பில் நிற்கும் சமூக சூழலை உள்வாங்கி இருப்பார்களேயானால் தடுமாற்றத்தை தன்மானம் என்று சொல்லமாட்டார்கள். இருட்டைப் பகல் என்றும், தவிட்டைத் தங்கம் என்றும் சொல்லும் தலைவர்களை Sorry, தலைவலிகளைப் பெற்றதால் தன்மானம், சுயமரியாதை, உணர்வு, உரிமை என்ன விலை என்று கேட்கிறார்கள். மேலே பறக்கும் காகிதங்களை ஆகாய விமானங்கள் என்று சொல்லாதீர்கள்.
அறிவையே இறை மார்க்கமாக அணிந்து கொண்ட முஸ்லிம்களே! அறியாமை கூட உங்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறது!!!


தோழர்களே! திருக்குர் ஆன் சிலந்தியின் பலகீனமான வீட்டைப்பற்றி சொல்லுகிறது. அதை மேடைகளில் ஆயிரம் முறை கூறக் கேட்டு இருப்பீர்கள். அந்த வசனம் இன்னொரு செய்தியை பரிமாறினாலும் அதில் தலைவர்கள் பாடம் பெற வேண்டிய கருத்தும் இருக்கிறது. பேருக்கு படிப்பவர்களால் பேருண்மையை எப்படி பெற முடியும்? பலஹீனமான சிலந்திப் பூச்சி யாரிடமும் தன் தேவைக்கு, உணவுக்கு தத்தி நிற்காது. எத்திப்பிழைக்காது. அவ்வளவு தன்மானம். தன் வீட்டைக் கூட தன் உமிழ் நீரால் கட்டிக் கொள்ளும். தன் உணவைக் கூட தன் கூடாரத்திற்கு வரவழைக்கும்.

சமுதாயத் தலைவர்களே! தலைவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் கருத்துக் குருடர்களே! ஏன்? எதற்கு? எப்படி? என்ற வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியாமல் மந்தைகளாய் சுற்றி வரும் எம் உதிரத்தின் அங்கமாய் உச்சத்தில் இருக்;க வேண்டிய தோழர்களே! குறிப்பாக தலைவர்களே! நீண்ட பாரம்பரியம் என்று பம்பரமாய் சுற்றும் பம்மாத்துகளே! உயிர் இல்லா உணர்வுக்கு உரக்க முழங்கியவர்களே! உரிமை என்று உமியாகிப் போனவர்களே! தன் மானத்தை சிலந்திப் பூச்சியிடம் கற்றுக் கொள்ளுங்கள். தன்மானம் என்ற தடிக் கம்பை ஊன்றிட நம் சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) எனும் அரசியல் பேரியக்கத்தை நோக்கி வாருங்கள்.

இவண்
இந்திய மக்கள் பேரவை,
வளைகுடா நாடுகள்
மற்றும்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK),
தமிழ்நாடு
ipftamil@idmk.org
http://www.idmk.org
இஸ்லாம் முஸ்லிம் இசுலாமியர் முஹம்மது

No comments: