Sunday, August 06, 2006

குறிவைக்கிறார்கள்-ரிப்போர்ட்டர்


அ.தி.மு.க.வின் பிரசார பீரங்கியைக் குறிவைக்கிறார்கள்-ரிப்போர்ட்டர்அண்மையில் மும்பை ரயில்களில் குண்டு வெடிப்புக்கள் நடந்தன. அந்தக் கொடூரத்தைநிகழ்த்திய குற்றவாளிகள் இன்னும் தேடப்படுகிறார்கள்.

1998_ம் ஆண்டு இதேபோன்று, கோவை நகரில் குண்டு வெடிப்புக்கள் நடந்தன. பன்னிரண்டுமணி நேரத்தில் அறுபது பேர் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டுகளும், சக்திமிக்கவெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மேலும் அறுபது பேர் கைதுசெய்யப்பட்டனர்.அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு, எட்டு ஆண்டுகளாக கோவை சிறப்பு நீதிமன்றத்தில்நடைபெறுகிறது.

அரசுத் தரப்புச் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு விட்டனர். ஆனால், அவர்களில்ஒருவர் கூட ஜாமீனில் வெளிவர முடியவில்லை. அன்றைக்குத் தீவிர உணர்ச்சிக்கு ஆட்பட்டஇளைஞர்கள், இளமைக் காலத்தைச் சிறையிலேயே கழித்து விட்டனர். கொடுமைதான்.பயங்கரவாதத்தை, இஸ்லாமிய சமுதாயம் என்றும் ஆதரித்ததில்லை.

ஓர் உயிருக்குத் தீங்குசெய்தால், சமுதாயத்திற்கே தீங்கு செய்ததாகும் என்றுதான் குர்ஆன் கூறுகிறது.ஆனாலும் அந்தச்சமுதாயத்தில், சில களைகள் முளைத்து விடுகின்றன. அதனால், பல சந்தர்ப்பங்களில் அந்தச்சமுதாயமே சோதனைகளுக்கு உள்ளாகிறது. அப்பாவிகள் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள்.

கோவை குண்டு வெடிப்பிற்கு முன்னரும் பின்னரும் தலை தூக்கிய மூடுதிரை மனிதர்களைத் தமிழகக் காவல் துறையினர் துல்லியமாகக் கண்டுபிடித்தனர். அதனால் தமிழகக் காவல்துறைபெருமை பெற்றது. பாராட்டுப் பெற்றது.அதன் பின்னர், தீவிரவாதத்தின் அடிச்சுவடுகள் அழியத் தொடங்கின.நஞ்சுண்ட மனிதர்கள்நாவடங்கிப் போனார்கள்.ஆனால், தி.மு.க. அரசு அமைந்த பின்னர், தமிழகத்தில் மீண்டும் தீவிரவாதம் நடமாடுகிறது என்றதோற்றத்தை உருவாக்க இப்போது முயற்சிக்கிறார்கள்.

அகில இந்திய அளவிலேயே பி.ஜே.பி.அந்தப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது.தமிழக அளவில் இயங்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை ‘தீவிரவாத இயக்கம்’என்று, குஜராத் நரேந்திரமோடி குறிப்பிட்டிருக்கிறார். ‘அந்த இயக்கத்தோடு காங்கிரஸ் கட்சிக்குஉறவு’ என்றும் குற்றம் கூறியிருக்கிறார்.ஒருவேளை, குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைக் களங்கப்படுத்த, தனிமைப்படுத்த அவர் அப்படிக்கூறியிருக்கலாம் என்று கருதினோம். ஆனால், அடுத்து பி.ஜே.பி.யின் பெரிய தலைவர்ராஜ்நாத்சிங்கும் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்குப் பயங்கரவாத முத்திரை பதித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, பி.ஜே.பி.யின் தலைமைப் பேச்சாளரும் பின்பாட்டுப் பாடியிருக்கிறார்.1999_ம் ஆண்டு சென்னை கடற்கரையில், இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.இடஒதுக்கீட்டை ஆதரிக்கின்ற கட்சிகள் கலந்து கொண்டன. அந்த மாநாட்டை நடத்தியது,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்தான். அதன் தலைவர் பேராசிரியர் ஜவஹருல்லாதான்மாநாட்டுத் தலைவர்.செல்வி ஜெயலலிதா உள்பட அனைத்துக் கட்சியினரும் மாநாட்டில் பங்கு கொண்டனர்.பி.ஜே.பி.யுடன் கொண்ட உறவிற்காக, செல்வி ஜெயலலிதா பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.2001_ம் ஆண்டுத் தேர்தலுக்கு அண்ணா தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணிக்கு, அந்தமாநாடுதான் அடித்தளமாகும்.

ஆனால், ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர், அ.தி.மு.க. திசை மாறியது. படுகொலைகளுக்குப் பின்னர்,அகமதாபாத்தில் நடந்த மோடியின் முடிசூட்டு விழாவில் கூட, செல்வி ஜெயலலிதா கலந்துகொண்டார். எனவே, அ.தி.மு.க. உறவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறுத்துக்கொண்டது.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அந்தக் கழகத்திற்கு அழைப்புக்கள் வந்தன. ‘உண்மையானஓர் முஸ்லிம், அ.தி.மு.க.வுடன் உறவு கொள்ள முடியாது’ என்று அந்தக் கழகம் அறிவித்துவிட்டது. அதனால், அந்தக் கழகம் மீது ஆத்திரம்தான்.கடந்த சட்டமன்றத் தேர்தலில், எல்லா இஸ்லாமியர்களும் ஒட்டுமொத்தமாகத் தி.மு.க. கூட்டணிக்குவாக்களித்தார்கள் என்று சொல்ல முடியாது.

ஆனால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகஒத்துழைப்பின் காரணமாக, ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள், அந்தக்கூட்டணிக்குத்தான் வாக்களித்தார்கள். அதனால் எதிர்முகாம் எரிச்சல்படவே செய்யும்.இந்தப் பின்னணியில் கோவையில் மீண்டும் குண்டு தயாரிப்பு என்றும், சதி என்றும் வரும்செய்திகளை ஆராய வேண்டும்.

ஏற்கெனவே நடந்த குண்டுவெடிப்பால், 120 இளைஞர்கள் எட்டு ஆண்டுகளாகச் சிறையில்வாடுவதைப் பார்க்கும் எந்த இஸ்லாமிய இளைஞனும், மீண்டும் அதே தவறைச் செய்வானா என்று யோசிக்க வேண்டும்.ஏனெனில், இனி இருபது வருடம் சிறை இருக்க வேண்டும்.முந்தைய கோவை சம்பவத்திற்குப் பின்னர், அவ்வளவு பெரிய சம்பவம் நடைபெற்றதில்லை.தற்போது கோவையில் பல இடங்களில் குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக, இஸ்லாமியஇளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள், தங்கள் தங்கள் வீடுகளிலேயேஇருந்தபோது, போலீஸார் அவர்களை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.கைது செய்யப்பட்டவர்கள், மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று காவல்துறை கூறுகிறது.அவர்களுக்கும் தங்களுக்கும் எந்த உறவும் இல்லை என்று அந்தப் பாசறை அறிவித்திருக்கிறது.சதி வேலைகளுக்கான எந்தப் பயிற்சியும் தங்களுக்குத் தெரியாது என்றும் அந்த அமைப்புதெரிவித்திருக்கிறது.

போத்தனூர் போலீஸார் மீது, உயர் நீதிமன்றத்தில் ஹாரூண் வழக்குப் போட்டிருக்கிறார். அவர்,இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.மாலிக் என்பவர், மனநிலை சரியில்லாதவர். தமது வீட்டைச் சோதனையிட வந்த காவல்துறையினருடன் கடும் வாக்குவாதம் செய்தாராம்.மாலிக், ஹாரூண் ஆகியோர் கிரைண்டர், மிக்ஸி தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதற்கானகண்டன்சர்கள், ஒயர்கள் ஆகியவை அவர்கள் வீட்டில் நிறைய இருக்கின்றன. இவைகள் குண்டுதயாரிப்பிற்கான மூலப்பொருள்கள் என்று, காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஆர்.டி.எக்ஸ்வெடிமருந்தோ, டெட்டனேட்டர்களோ கைப்பற்றப்படவில்லை.இந்த வழக்கு விவரத்திற்குள் செல்ல நாம் விரும்பவில்லை. எப்படியோ, கோவையில் மீண்டும்வெடிகுண்டு பீதி கிளப்பப்பட்டிருக்கிறது.இஸ்லாமியர்கள் ஆத்திரம் கொள்ளத் தக்க அளவிற்கு, எந்தக் காரியமும் நடந்துவிடவில்லை.ஆனாலும் பகிரங்கமாக நடமாடி, சொந்தத் தொழில்கள் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

முன்னர் கலைஞர் ஆட்சியில்தான் கோவை குண்டு வெடிப்பு நடந்தது. இப்போது மீண்டும்கலைஞர் ஆட்சியில், கோவையில் குண்டுகள் தயார் என்று சொல்கிறார்களா?

அல்லது கலைஞர்ஆட்சியென்றாலே கலவரம்தான் என்று, அ.தி.மு.க. பிரசாரம் செய்வதற்குக் காரண காரியங்களைத்தேடித் தருகிறார்களா?

யார் யாரைத் தீர்த்துக் கட்டுவது என்று கைது செய்யப்பட்ட இளைஞர்கள், ஓர் பட்டியல்வைத்திருந்தார்களாம். அந்தப் பட்டியலில் பிரதானமாக இடம் பெற்றிருப்பதாக, முந்தைய மார்க்கப்பிரசார கரைக் குறிப்பிடுகிறார்கள்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் அ.தி.மு.க.வின் பிரசாரபீரங்கியாகச் செயல்பட்டவர். அவரது இல்லத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு விட்டதாகவும்காவல்துறையினர் கூறுகின்றனர்.

தவறில்லை. ஆனால், அவரை ஏன் இந்த இளைஞர்கள் குறிவைக்க வேண்டும்?இப்போது இணைத்துப் பாருங்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தீவிரவாத இயக்கம். - இது பி.ஜே.பி.யின் பிரசாரம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குண்டு தயாரிக்காத இளைஞர்கள், இப்போது தயாரிக்கிறார்கள். - இது காவல்துறை.

அவர்கள் அ.தி.மு.க.வின் பிரசார பீரங்கியைக் குறிவைக்கிறார்கள் - இது உளவுத்துறை.

இப்படிக் கலைஞர் ஆட்சிக்குக் களங்கம் சேர்க்கக் காரியங்கள் ஆரம்பமாகின்றன.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்.

CLICK HERE TO DOWNLOAD SCANED KUMUDAM REPORTER

PAGE-1

PAGE-2

No comments: