Wednesday, July 05, 2006

பாலையில் உழைக்கும் இளைஞனே!!

சூரியனையே திருப்பிச் சுடும் பாலையில் உழைக்கும் இளைஞனே!! உன் சிந்தனைக்கு சில வரிகள்

அன்பார்ந்த சகோதரர்களே! இந்திய மக்கள் பேரவையின் வளைகுடா உறுப்பினர்களே! பேரவையின் பொறுப்பாளர்களே! அரசியல் ஆதிக்கத்தைப் பெறத் துடிக்கும் எங்கள் இதயத் துடிப்புகளே! மூச்சுக் காற்றைக் கூட சமுதாயத்தின் சுவாசக் காற்றாய் விடும் இளைஞர்களே! அனுதாபிகளே!
சொந்தம், பந்தம், உறவுகளை எல்லாம் துறந்து விட்டு, வியர்வைத் துளிகளை சிந்தி விட்டு மிக மிகக் குறைந்த சம்பளத்தை பெற்று சமுதாய உயர்வுக்கு கடமை உணர்வோடு அள்ளிக் கொடுத்தாய். கடந்த கால அமைப்புகளின் சமூகப் பொறுப்புணர்வு இல்லாமல் உன் ஏக்கங்கள் எல்லாம் கானல் நீராய் போய் விட்டதே என்று எரிச்சலில் எரி ஈட்டியைப் போன்று கேள்விகளை எழுப்பி இருக்கிறாய்.


கடல் தாண்டி உழைக்கும் எங்கள் காசைக் கறக்கவா? இந்திய மக்கள் பேரவை? நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்று எழுதி இருக்கிறாய். சிலரோ உங்கள் செயல் திட்டம், நோக்கம், தொலைநோக்கு பார்வை, சமுதாய உணர்வு, BRAIN TRUST COMMITTEE யின் வெற்றிக்கான செயல் திட்டங்கள், இயக்கம் வேண்டாம் என ஒதுங்கிய எங்களை உங்கள் கடிதங்கள் எங்கள் இரத்தத்தை மீண்டும் உசுப்பி விட்டு இருக்கின்றன. கோழிகளுக்கு கோதுமையைத் தூவினால் சண்டை வந்து விடுகிறது, தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்தால் நம்மவர்களுக்கு சண்டை வந்து விடுகிறது, என்ற வார்த்தை சமுதாயத் தலைவர்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளது. உங்களுக்கு உதவ வேண்டும் என்று மனம் உந்தித் தள்ளியது என்று சகோதரர்கள் எழுதி உள்ளார்கள்.

அருமைச் சகோதரர்களே! உங்கள் வியர்வைத் துளிகளின் பாலைவனக் காசுகள் எங்களுக்குத் தேவையில்லை. காசு சம்பாதிப்பது கடினம். செலவு செய்வது எளிது. அதை யாருக்கும் கொடுக்க வேண்டாம். நீங்கள் யாருக்காவது நன்மை செய்ய நாடினால் நேரடியாக சென்று தீர விசாரித்து உண்மை அறிந்து அவசியம்தானா? அதனால் நன்மை உண்டா? என ஆய்ந்து, தெளிந்து செய்யுங்கள். யாரையும் நம்பி கொடுக்காதே. நிஜத்திற்கும், நிழலுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது.

இந்திய மக்கள் பேரவை உங்களிடம் வேண்டுவது உங்கள் ஒத்துழைப்பு, ஆலோசனை, அரசியல் ரீதியாக வலிமை பெற சமூகத்தை கட்டமைக்க உங்கள் ஐக்கியம் மட்டுமே. உறங்கிக் கிடக்கும் இளைஞர்களே! சூரியன் மறைவது மீண்டும் எழுவதற்குத்தான். உறங்கியது போதும். பூமி பந்தைப் புரட்டிப் போட எழுங்கள், சிந்தியுங்கள் என்று இந்திய மக்கள் பேரவை அழைக்கிறது.


நாம் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்.

இவண்அன்புடன்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்

No comments: