Monday, May 15, 2006

பெண்ணியம் சில புரிதல்கள்




பெண்ணியம் சில புரிதல்கள்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி

பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன். பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.

ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்திய கோட்பாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றுள் முன் வரிசையில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கின்றது. இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.

வரலாற்றில் ஆணித்தரமாக பதிவாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்ணியக் கொள்கை தலையெடுத்தது. பெண் விடுதலைக்கான வாசல் திறந்தது, என்பதை படிக்கலாம். ஆனால், உண்மை நிகழ்வுகளை அலசிப் பார்த்தோமென்றால் பெண்ணுக்கான உண்மையான சுதந்திரம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த ஊரை, தான் பேசும் மொழியை, தான் பின்பற்றும் சமய நெறியை விரும்பி நேசிக்கத் தான் செய்கிறார்கள். எல்லை கடந்து போய் சிலரிடம் இது வெறியாக மாறிவிடுவதும் உண்டு! அத்தகைய ஒரு சமயப்பற்றினால், நாம் இவ்வாதத்தை முன் வைக்கவில்லை. மனிதகுலத்திற்கான விடுதலையே இஸ்லாமின் மூலமாதத்தான் சாத்தியம் என்று நாம் கூறுகிறோம். வரலாற்று அரங்கில் குறைந்த கால கட்டம் தான் என்றாலும் அதைப் பரீட்சித்துக் காட்டி இருக்கிறோம். மனித குல விடுதலையே இஸ்லாமின் மூலமாகத் தான் என்னும் போது பெண் இனமும் கண்டிப்பாக அதில் அடங்கத்தானே செய்யும்!

சமவுரிமை, சமத்துவம் என்றெல்லாம் பேசும் இன்றைய பெண்ணிய சிந்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறப்பெடுத்தது. கற்பனைச் சமூகவியலாளரான சார்லஸ் ப்யூரியே என்பவர் தாம் முதலில் பெண்ணியம் (Feminism) என்ற சொல்லை 1837 இல் கையாண்டார். அதன் பின்பு அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்று இன்று விமர்சனங்களின் விளிம்பில் வந்து நிற்கின்றது.


ஓரிடத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, நசுக்கப்படுகின்றன என்றால் அவற்றைப் பெறவும் மீட்டெடுக்கவும் அங்கே பாதிப்படைந்தவர்களால் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருத்து மோதல்கள் கிளம்புகின்றன. போராட்டங்கள் வெடிக்கின்றன! எந்தெந்தக் காரணங்களால் இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டனவோ அவற்றைக் குறி வைத்தே இவ்வெதிர்வினைச் செயற்பாடுகள் அமைகின்றன. இக்கண்ணோட்டத்தில் பெண்ணியம் பேசும் உலகளாவிய குழுக்களை கீழ்க்காணும் ஏழெட்டுப் பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அப்பிரிவுகளின் தலைப்புகளே பின்னணிக் காரணங்களை விளக்கி விடும் என்பதால் வகைப்படுத்துவதோடு நாம் நின்று கொள்கிறோம்.

சமஉரிமை, சமத்துவம் கோரும் குழுக்கள் (Egalitarian Forms)

தாயார் சமூக அமைப்புக் குழுக்கள் (Gynocentric Forms)

ஆணாதிக்க எதிர்ப்புக் குழுக்கள் (Belief Inoppression bg Patriarchty)

பிரிவினைவாதக் குழுக்கள் (Segregatailnalist)

நிலம் சார்ந்த குழுக்கள் (African American)

மேற்குலகு தாண்டிய குழுக்கள் (Non-Western)

பாலியல் சுதந்திரம் பேசும் குழுக்கள் (Pro-sex Feminism)


நம்முடைய இறை நம்பிக்கையும் ஈமானும் சரியாக இருக்கின்ற பட்சத்தில் இந்த இடத்தில், இத்தகைய பின்னணிக் காரணங்கள் இஸ்லாமிய சமூக அமைப்பினுள் நிலவுகின்றனவா? என்று கேட்பதை விட, இத்தகைய பின்னணிக் காரணங்கள் இடம் பெற இஸ்லாமியக் கோட்பாடு அனுமதிக்கின்றதா? என்று கேட்பதற்கே முன்னுரிமை அளிப்போம். இவ்விரண்டு கேள்விகளுக்கும் இடையிலான அடிப்படை அதே சமயம் அதிமுக்கிய வேறுபாட்டை விளங்கிக் கொண்டால் இன்றைக்கு ஒரு சிலர் இஸ்லாமியப் பெண்ணியம் என்று அறிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் மனதில் தோன்றியதையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் தோன்றியிருக்காது.
ஏனென்றால், யூதப் பெண்ணியம், கறுப்புப் பெண்ணியம், பிரெஞ்சுப் பெண்ணியம், ஆப்பிரிக்கப் பெண்ணியம். கிறிஸ்துவப் பெண்ணியம், இந்து மதப்பெண்ணியம் என்றெல்லாம் நிலம் சார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த பெண்ணியக் குழுக்கள் காணப்படுவதைப் போல இஸ்லாமியப் பெண்ணியம் என்று உலக அரங்கில் காணப்படுவதில்லை (அதைத் தோற்றுவிக்க ஒருசிலர் வலுக்கட்டாயமாக முயற்சிக்கிறார்கள்) ஏன்? என்ன காரணம்? என்றால் எந்த விதமான உட்காரணங்களும் அறவே இல்லை என்பதால் இஸ்லாமியப் பெண்ணியம் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் அடியோடு கிடையாது.

ஒரு கொள்கையோ, கோட்பாடோ பெண்ணை மனுஷியாகக் கருத மறுத்தால், அவளை அடக்கி வைக்கவும் அடிமைப்படுத்தவும் நினைத்தால், அவளிடம் புதைந்துள்ள திறதமைகளை வெளிக்கொணர விடாமல் தடுத்தால் நாம் அதை உட்காரணம் என்று கூறுகிறோம்.
ஒரு கொள்கையைப் பின்பற்றும் மக்கள், பின்பற்றாளர்கள் அதனை முறையாக பின்பற்றாததால் தோன்றும் பின் விளைவுகளை நாம் புறக்காரணம் என்று வகைப்படுத்துகிறோம்.
இஸ்லாமிய வட்டத்திற்குள் பெண் விடுதலை என்கிற பேச்சே எழ வாய்ப்பில்லை. ஏனெனில் அதற்கான உட்காரணம் ஒன்று கூட இங்கு காணப்படவில்லை என்று நாம் கூறுவதால் இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் சமூக அளவிலும், கல்வி, பொருளாதாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையப் பெற்று மேனிலையில் விளங்குகிறார்கள் என்று சாதிப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. நம்முடைய பெண்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளார்கள் என்பதையோ, அதற்கான மூலக் காரணங்களை இனங்கண்டறிந்து நீக்குவதில் முனைந்து செயற்பட வேண்டும் என்பதையோ நாம் ஒரு போதும் மறுக்கவில்லை.

உட்காரணம், புறக்காரணம் என்பவை பற்றிய முறையான புரிதல் எதுவும் இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்கும் திறன், சீர்தூக்கிப்பார்க்கும் போக்கு எதுவுமே இல்லாமல், மேற்கண்ட எல்லாவகையான பெண்ணியக் கொள்கைகளுக்கும் அமைந்துள்ளதைப் போன்றே, முஸ்லிம் பெண்களின் கீழ் நிலைக்கும் இஸ்லாமிய சமயத்தில் உள்ள குறைபாடுகளும் கோளாறுகளும் தான் காரணம் என்று வெள்ளாடுகளைப் போல மேலோட்டமாகப் புரிந்து கொண்டும், அதிமேதாவித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டும் சிலர் எக்கச்சக்கமாக பேசிக் கொண்டுள்ளார்கள். இத்தகைய வெள்ளாடுகளை கறுப்பு ஆடுகளாக எப்படியாவது மாற்றி இஸ்லாமின் மீது சேற்றையும் சகதியையும் வாரியிறைத்து விட வேண்டும் என்று உலகளாவிய அளவில் சில சக்திகள் தொடர் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இறையருளால் இத்தகு முயற்சிகள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதில்லை என்பதோடு, உட்காரணம் எதுவும் உண்மையிலேயே இல்லாததால் அவை தோல்வியையே தழுவும்.

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். கட்டுரைக்கு இடையில் சம்பந்தமில்லாமல் வந்து விட்ட விஷயம் என்றாலும் கவனித்தாக வேண்டிய விஷயம். இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிற நான், இறைவனுக்கு பயந்து நான் அறிந்த சில விஷயங்களை சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், நாளை அதற்கான விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற பயத்தில் எழுதிக் கொண்டுள்ளேன். இறைவனைப் பற்றிய பயம் என்னை எழுதத் தூண்டுகின்றது. இறைநம்பிக்கை, இறையருள் என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறேன். அதே சமயம், இஸ்லாமியப் பெண்ணியம் என்று பேசுபவர்களுடைய, முஸ்லிம் பெண்களைப் பார்த்து பரிதாபப்பட்டு எழுத்தாணியை ஏந்துபவர்களை உன்னிப்பாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தகைய ஒரு பார்வையையே காண முடியாது!
ஒரே இறைவன் தான் என்பது நம் கொள்கை!. ஒரே இறைவன் தான் என்பதால் அவனால் படைக்கப்பட்ட அனைத்து மக்களும் சரிசமமானவர்கள்!!. வெள்ளை கறுப்பு பாகுபாடுகள், நிற வேறுபாடுகள், ஆண்பெண் பிரிவினைகள் அறவே கிடையாது. ஆணை விட பெண் தாழ்ந்தவள் அல்ல என்று நாம் கூறுகிறோமென்றால் அதற்கான அடிப்படை அம்சம் இங்கு தான் இருக்கின்றது. மேலுலகில் இருந்து கருத்துக்களைத் தருவித்துக் கொண்டிருக்கும் இறக்குமதியாளர்கள் (இறங்குமதியாளர்கள்) இந்த இடத்தில் வேறுபடுகிறார்கள்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் அதற்காக முனைந்து உழைப்பதும் தான் பெண்ணியம் என்றால் இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை என்ன? சமூக அளவிலும், குடும்ப அளவிலும். கல்வி, பொருளாதார நிலைகளிலும் அவர்கள் எங்ஙனம் காணப்படுகிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இன்ஷா அல்லாஹ் அவற்றை அடுத்த கட்டுரையில் காண்போம்.

அதே சமயம் பெண்களின் உரிமைகளாக பெண்ணியக் குழுக்கள் முன் வைக்கும் சம உரிமை, ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்புகள், தனித்துவம், பாலியல் சுதந்திரம், ஓரினச் சேர்க்கை, போன்றவற்றைப் பற்றி இஸ்வாம் என்ன கருதுகின்றது என்பதையும் நாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது.



இஸ்லாமிய சமூகம் என்பது இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் பேரருள் அவர் மீது உண்டாகட்டும்) அவர்களுடைய வார்த்தைகளில் ஓருடலைப் போன்றது. உடலில் ஒரு நோய் தோன்றிவிட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி மழுப்புவது அறிவுடைமை ஆகாது. நோய் நாடி நோய் முதல் நாடி கண்டடைந்து நீக்க முயல வேண்டும். முஸ்லிம் பெண்கள் இன்று எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நம் உள்ளம் பதறுகின்றது. இறைவனிடம் அவர்களுக்காக மன்றாடுகிறோம். தலாக், வரதட்சணை, அடக்கு முறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ தளைகளை அவர்கள் தங்கள் கழுத்துக்களில் சுமந்து கொண்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் எதிர்க்க வீறு கொண்டு நாம் போராடுவோம்.

பெண்ணியம் என்கிற பேனரின் கீழ் அல்ல!

நம் இனப் பெண்கள் இன்னலுறுகிறார்களே என்கிற அக்கறையினாலும் அல்ல,

இறைவனும் இறைத்தூதரும் கடமையாக்கியுள்ள காரணத்தினால் ....... நாளை விசாரணை நாளன்று வல்ல இறைவனுக்கு முன்னால் குற்றவாளிகளாய் நிற்க வேண்டியிருக்குமே என்கிற பயத்தினால்......

நன்றி : அந்நிஷா

No comments: