நற்குணங்களால் ஜெயிக்கப்போவது யாரு?
அரசியல் கட்சிகளின் வண்ணமயமான வாக்குறுதிகளோடு தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நல்லபடியாக முடிந்திருக்கிறது.
கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஹை-லைட்டாக பேசப்படுவது கலர் டிவி,. தேவைப்பட்டால் இலவச கேபிள் இணைப்பு.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஹை-லைட்டாக பேசப்படுவது பிளஸ் 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், தாலிக்கு தங்கம்.
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படுமா? என்று கேள்வி கேட்கும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தேர்தல்/வாக்குப்பதிவு நேரங்களில் எதைப்பற்றியும் யோசிக்காமல் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பியவர்களாகத்தான் பெரும்பாலான மக்கள் வாக்களிக்கின்றனர். அந்த அளவிற்கு மக்கள் மனதில் அரசியல்வாதிகள் தங்களுடைய வாக்குறுதிகளை மீண்டும், மீண்டும் சொல்லி பதிய வைத்து விடுகிறார்கள். அதன் மூலம் மக்களின் பழைய நினைவுகளை மறக்க வைத்து விடுகின்றனர்.
இந்த அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கும் சில வாக்குறுதிகளை அள்ளி தந்துள்ளனர். தமிழகத்தில் வலுவான இரண்டு திராவிட கட்சிகளும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் என்று வாக்களித்துள்ளனர்.
அ.தி.மு.க
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரைகளின்படி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஓதுக்கீடு வழங்குவது குறித்து அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
தி.மு.க
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடஓதுக்கீட்டுச் சட்டம் இயற்றுவோம் என்று கருணாநிதியும் கூறியிருக்கிறார்.
இந்த இரு திராவிட கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி முஸ்லிம்களும் இரு பிரிவுகளாக தங்களுடைய ஆதரவுகளை அளித்துள்ளனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தி.மு.க.விற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அ.தி.மு.க.விற்கும் தங்களுடைய முழு சக்தியையும் விரயம் செய்து பிரச்சாரம் செய்துள்ளனர். இதை முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது இடஒதுக்கீடு தொடர்பாக ஜெயலலிதா ஆணையம் அமைத்துள்ளார். அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார், அதனால் அவருக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்துள்ளனர். ஜெயலலிதா வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழும்போது அதற்கு நாங்கள் உத்தரவாதம் தர இயலாது, தருவார் என்று நம்புகிறோம், தராவிட்டால் ஜென்ம விரோதியாக கருதுவோம் என்று அறிவித்துள்ளனர். கூடுதலாக தேர்தல் நிலைப்பாடு என்பது தேர்தலோடு முடிந்தது. தேர்தல் முடிந்த பிறகும் அவர்களை பின் தொடர மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகளுக்கு யாருமே உத்தரவாதம் தர முடியாது என்பதை ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு ஆதரவு திரட்டிய முஸ்லிம்களான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் நிலைப்பாடு தேர்தலோடு முடிந்தது என்று சொன்னதை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். அப்படி அவர்கள் நிறைவேற்றவில்லை என்றால் அ.தி.மு.க.விற்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கும் பொழுது அவர்கள் மீது என்னென்ன வகையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதோ அவை அனைத்தும் உண்மையாகவே கருதப்படும். இன்னும் மற்ற அரசியல் கட்சிகளைப்போலவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் காட்சி அளிக்கும்.
இவர்கள் ஆதரவு செலுத்தாத தி.மு.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அவர்களுடைய நல்ல திட்டங்களை தவறானதாக விமர்சிக்கக் கூடாது. முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை யார் செய்தாலும் அதை கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். தங்களுக்கு பிடிக்காத தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரித்த தி.மு.க. கட்சியின் ஆட்சி திட்டங்களை நாம் எப்படி ஆதரிப்பது என்று கருதினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்களிடம் செல்வாக்கு இழந்து செல்லாக்காசாக ஆகிவிடும்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரின் தேர்தல் பிரச்சார மேடைகளில் கருணாநிதி இந்த முறை நிச்சயமாக இடஒதுக்கீடு தருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே சமயம் கருணாநிதி இடஒதுக்கீடு தருவார் என்பதற்கு இவர்களும் எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை. அவர்கள் கருணாநிதி மீது வைத்த நம்பிக்கைகளை விடவும் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு செய்த துரோகங்களைத்தான் அதிகமாக தேர்தல் பிரச்சாரங்களில் பட்டியலிட்டுள்ளனர். அவர்களுடைய பட்டியலை உணர்வுள்ள எந்த ஒரு முஸ்லிமும் மறுக்க முடியாது.
இவர்களும் தாங்கள் ஆதரவு தெரிவிக்காத அ.தி.மு.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தோடு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியை கை கழுவி விட வேண்டும். இல்லையேல் அமைப்பின் பெயர் கெட்டு முஸ்லிம்களிடமிருந்தும் அது தூரமாகி விடும் ஒரு நிலை உருவாகும்.
அரசியல் கட்சிகளின் மீது முஸ்லிம்களுக்கு முழு நம்பிக்கை இல்லை.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இரு அமைப்புக்களும் வெவ்வேறு திராவிட கட்சிகளை ஆதரித்தாலும் அந்த கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு இந்த இரு அமைப்பினருமே உத்தரவாதம் தரவில்லை என்பது இந்த இரு முஸ்லிம் அமைப்புக்களுக்கும் மற்ற இரு திராவிட கட்சிகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கை இவ்வளவுதான் என்பதை உணர்த்துகிறது. அதனால் முஸ்லிம்கள் இந்த திராவிட கட்சிகளை நம்பும்படியாக இந்த இரு அமைப்பினருமே நடந்து கொள்ளவில்லை என்பது சற்று சந்தோசமான விசயம்தான்.
பொது மக்களின் விழிப்புணர்ச்சிக்காக சமுதாயப் பனி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற அமைப்புக்கள் தேர்தல் முடிந்து தங்களை சமுதாய பணியில் மும்முரமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களையும் விழிப்புணர்ச்சி அடையச் செய்யும் வகையில் ஒரு பனி செய்ய வேண்டும். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகளை எந்த வகையில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இரு அமைப்புக்களும் இடைவிடாது பிரச்சாரம் செய்ய வேண்டும். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகளை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிறைவேற்றுவது இல்லை என்பதை ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் பதிய வைக்க வேண்டும். அந்த ஆதாரங்கள் மக்கள் மனங்களிலிருந்து சீக்கிரமே நீங்கிவிடாத வன்னம் ஆனித்தரமானதாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் அமைப்புக்களுக்கு அபாயச் சங்கு
ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்கள் ஏதேனும் ஒரு கட்சியை ஆதரித்து ஒன்றிரண்டு சீட்டு வாங்கும் நிலையை மாற்ற கருத்து வேறுபாடுகளை கலைந்து அனைவரும் யோசிக்க முன்வர வேண்டும். முஸ்லிம்களிடம் தற்பொழுது ஓரளவுக்கு போதுமான அரசியல் விழிப்புணர்ச்சி எட்டியிருக்கிறது. இருப்பினும் அது முஸ்லிம்களுக்கு பயன்தரக்கூடியதாக இல்லை. அதை முஸ்லிம்களுக்கு பயன்தரக்கூடியதாக மாற்றியமைக்க வேண்டுமானால் முஸ்லிம்களிடம் செல்வாக்காக உள்ள அனைத்து அமைப்புக்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து யோசிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்னமும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு இருந்தால் சமுதாயம் அதுபோன்ற அமைப்புக்களை அலட்சியம் செய்து விடும். ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை கேட்டு, கேட்டு மக்களுக்கு காதுகள் வலிக்கிறது. அதை படித்து, படித்து கண்களும் வலிக்கிறது. அது அவர்களுடைய மனதை மிகவும் பாதிக்கிறது. எந்த அமைப்புக்களும் சரியில்லை என்ற குரல், பல குரல்களாக மெல்ல, மெல்ல வலுப்பெற்று வருகிறது. எல்லோரும் எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை மக்கள் ஏற்படுத்தவிருக்கிறார்கள். இது முஸ்லிம் அமைப்புக்களுக்கான முஸ்லிம் மக்களின் அபாய சங்காக இருக்கிறது. இதை சமுதாய அமைப்புக்கள் புரிந்து கொண்டால் சமுதாயம் சுபிட்சம் பெறும்.
வெற்றி பெற இருக்கும் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களே
முஸ்லிம்களின் ஆதரவை பெற்று சட்டமன்றத்திற்குள் புகவிருக்கும் மற்ற சமுதாயத் சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் முஸ்லிம்களின் ஆதரவை பெற்று சட்டமன்றத்திற்குள் செல்லவிருக்கும் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு ஆதரவு குரல் எழுப்ப வேண்டும். உங்கள் கட்சி உங்களுக்கு சீட்டு கொடுத்திருக்கிறதென்றால் அதை முஸ்லிம் மக்களிடம் நாங்கள் முஸ்லிம்களுக்கு இத்தனை சதவிகிதம் தேர்தலில் சீட்டு ஒதுக்கியிருக்கிறோம் என்று சொல்லி மற்ற தொகுதிகளில் வாக்கு பெற்றுள்ளனர். அதை நீங்கள் அனைவரும் மறந்துவிடக்கூடாது.
முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கும் வண்ணம் ஒரு தீர்மானம் நீங்கள் சட்டமன்றத்திற்குல் நுழைந்த அடுத்த வாரமே நிறைவேற்ற முயற்சிக்கப்படலாம். நாம் அந்த கட்சியின் சின்னத்தில் நின்று ஜெயித்தவராயிற்றே நாம் எப்படி இதை எதிர்க்க முடியும் என்று வாய்மூடி இருக்கக் கூடாது. அதுபோன்ற சமயங்களில் தங்களுடைய எதிர்ப்பை கடுமையாக காட்டிட வேண்டும். முஸ்லிம் என்று மட்டும் பாராமல் முஸ்லிமல்லாத மக்களுக்கும் அநீதி இழைக்கப்படுமேயானால் கொதித்தெழ வேண்டும். தேவையேற்படும் பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் என்ற பொருப்பை தூக்கியெறிந்துவிட்டு வெளியேற வேண்டும். அதன்மூலமாக மட்டுமே முஸ்லிம்களிடையே உங்களுடைய செல்வாக்கை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.
ஒரு விசயத்தை நன்றாக நினைவில் நிருத்திக்கொள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளீர்கள். முஸ்லிம்கள் முன்னெப்போதைவிடவும் இப்பொழுது அரசியலில் மிகுந்த விழிப்புணர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை முஸ்லிமல்லாத மற்ற அரசியல் கட்சியினர் ஏமாற்றியது போதும். நம்ப வைத்து கழுத்தருத்தது போதும். இன்று தருகிறேன் நாளை தருகிறேன் என்று இழுத்தடித்தது போதும். அதே வேலையை நீங்களும் செய்து விடாதீர்கள். உங்களால் முடியாததை முடியாது என்று வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். அது உங்களை பாதிக்காது. உங்கள் கட்சியைத்தான் பாதிக்கும். ஆனால் முடியாததையெல்லாம் முடியுமென்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி விடாதீர்கள். இப்பொழுது முஸ்லிம்கள் நினைவாற்றலில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
அமைப்பு சார்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
தி.மு.க, அ.தி.மு.க. இந்த இரு திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றுதான் ஆட்சி அமைக்கவிருக்கிறது. நீங்கள் ஆதரித்த கட்சிகளில் ஏதோ ஒன்று நிச்சயமாக தோற்கப்போகிறது. நீங்கள் ஆதரித்த கட்சி வெற்றி பெற்றுவிட்டால் அதை முன்னிருத்தி மார் தட்டதீர்கள். பெருமை பாராட்டாதீர்கள். அதை சுட்டிக்காட்டி சகோதர முஸ்லிமிடம் வம்புக்கு நிற்காதீர்கள். வெடி, வேட்டு வெடிப்பது போன்ற செயல்களில் கண்டிப்பாக ஈடுபடாதீர்கள். நீங்கள் ஆதரித்த ஏதோ ஒரு கட்சி வெற்றி பெற்றதாக நீங்கள் பெருமையடித்தால் அதே கட்சி மற்ற சில இடங்களில் தோல்வியையும் தழுவி இருக்கும் என்பதை சற்று நினைத்துப்பார்த்துக் கொள்ளுங்கள்.
அரசியல் கட்சிகளில் ஜெயிக்கப்போது யாரு? என்பது மனிதர்களாகிய நம்முடைய பார்வை.
வெற்றி, தோல்விக்கு பிறகு நற்குணங்களால் ஜெயிக்கப்போவது யாரு? என்பது நம்மைப் படைத்த இறைவனுடைய பார்வை.
எல்லா வகையிலும் நாங்கள் முஸ்லிம்கள் என்பதை எல்லா விசயங்களிலும் நாம் நிரூபிக்க கடமைப்பட்டுள்ளோம்.
இன்ஷா அல்லாஹ் அனைவரும் நிரூபிப்போமா?
நன்றியுடன்
அறிவழகன்.
5 comments:
நன்றி அறிவழகன்!
அருமையான பதிவு.
இன்ஷா அல்லாஹ்
நல்ல பதிவு. இவை அதற்குரியவர்களிடம் சரியாகப் போய்ச் சேர்ந்து முறையாக நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழகத்தில் ரசிகர்மன்றக் கூட்டணி படுதோல்வி அடைந்தது
தமுமுக இணையதளத்தில் இந்த செய்தி சுழன்று கொண்டிருக்கிறது.
ஆரம்பிச்சிட்டாங்கய்யா... ஆரம்பிச்சிட்டாங்கய்யா...
Good Article,
Both the Groups should learn from the Jewish Lobby of america, Whoever win they ensure Israel gets the maximum benefit.
Post a Comment