சமுதாய தலைமைகளே!
எங்களின் வேதனை(ரத்தங்)களை 'ஓட்டு'க்களாய் மாற்றாதீர்!
எங்களின் வேதனை(ரத்தங்)களை 'ஓட்டு'க்களாய் மாற்றாதீர்!
எம்.முகமது அன்சாரி
கோவை மத்திய சிறை
கோவை மத்திய சிறை
இறைவனின் திருப்பெயரால்பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு, கோவை மத்திய சிறையிலிருந்து சிறைவாசிகளின் பொறுப்பாளர் எம். முகமது அன்சாரி வரையும் மடல்.
ஒரு காலத்தில் சொந்தச் சகோதரனே ஏன் என்று கேட்க நாதியற்ற நிலையில் சிறைவாசிகளாக நாங்கள் இருந்து வந்தோம். ஆனால் இன்று முஸ்லீம் அமைப்புகள் மட்டுமன்றி வேறுபட்ட கொள்கைகள் உடைய கம்யூனிஸ்ட், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்பட உள்ள அரசியல் கட்சிகளும் பேசப்பட வேண்டிய அளவிற்கு இன்று சமூகத்தில் முஸ்லிம் சிறைவாசிகளான நாங்கள் செய்திகளாய் ஆக்கப்பட்டுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் தாங்கள் ஆதரவு தெரிவிக்கும் கூட்டணியை வெற்றிபெறச் செய்ய தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சிறைவாசிகளான எங்களின் விவகாரத்தையும் முக்கியப்படுத்தி வருகின்ற காரணத்தினாலேயே இப்பிரசுரத்தின் வாயிலாக மக்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.
தற்போது அ.தி.மு.க.வை ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரம் செய்து வரும் த.த.ஜ ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) சிறைவாசிகளை பற்றி குறிப்பட்டுள்ள விஷயங்களை கண்டு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். T.N.T.J. வெளியிட்டுள்ள ஒரு தேர்தல் பிரசுரத்தில் 3-ஆம் 40ஆம் பக்கத்தில் வந்த செய்திகளாவன:
ஷகோவையில் நடந்த குண்டு வெடிப்பில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மீது மட்டுமே வழக்குப்போட முகாந்திரம் இருந்தும் சுமார் 150 அப்பாவிகள் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்தது கருணாநிதி அரசு' கோவையில் கைது செய்யப்பட்ட 200 பேர் எட்டு வருடமாக ஜாமீனில் வர முடியவில்லை. இவர்களை வெளியே விட்டால் மீண்டும் குண்டு வைப்பார்கள். கொலை செய்வார்கள். சாட்சிகளைக் கலைப்பார்கள். எனவே, ஜாமீனில் விடக்கூடாது என்று நீதிமன்றத்தில் பலமுறை பதிவு செய்தவர் கருணாநிதி. இதனால் எட்டு ஆண்டுகளாக அவர்கள் சிறையில் வாழ்ந்து வருகின்றனர்'
மேற்குறிப்பட்டுள்ள த.த.ஜ.வின் கூற்றுப்படி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சுமார் 150 அப்பாவிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் எட்டு ஆண்டுகளை கடந்து தொடர்;ந்து சிறையில் இருக்கும் அந்த அப்பாவிகளுக்காக இதுவரை கூட்டத் தீர்மானம் நிறைவேற்றியதை தவிர எந்த வித உருப்படியான போரட்டமோ, முயற்சியோ மேற்கொள்ளாதது ஏன்?
தடுக்கி விழும் பிரச்சனைகளுக்கும் சகோதர அமைப்பினரிடம் நடக்கும் சண்டைகளுக்கும் வீதி இறங்கி போராடிய த.த.ஜ இதுவரை சிறைவாசிகளுக்காக போரட்டம் நடத்தாதது ஏன்?
அதிகாரப்பூர்வமாக சிறைவாசிகளுக்காக இயங்கிவரும் சி.டி.எம் (சிறுபான்மை உதவி அறக்கட்டளை)இ கேரளா மதானி சகாய சமிதி, பெண்கள் நல்வாழ்வு அறக்கட்டளை, கே.கே..நகர் போன்ற அமைப்புகளை அணுகி இவ்வழக்கு பற்றிய விவரங்களையோ, இவ்வழக்கில் உள்ளோர் விவரங்களையோ இதுவரை கேட்டு பெற்றிருக்கிறீர்களா? அல்லது இவ்வழக்கை நடத்திவரும் வழக்கறிஞர்களிடமேனும் விவரங்களை கேட்டு பெற்றிருக்கிறீர்களா?
இதுவரை எந்த ஒரு சிறைவாசியையாவது நேரில் கண்டு வழக்கின் நிலைகளையும் எட்டாண்டுகளின் சோகங்களையும் கேட்டறிந்து ஆறுதல் கூறியதுண்டா? இப்படி எவ்வித விவரமும் இன்றி 03.03.2006 அன்று தமிழக முதலமைச்சரிடம் (சி.எம்.இடம்) சிறைவாசிகள் பற்றி நடந்த பேச்சுதான் என்ன? இதுவரை சிறைவாசிகள் விஷயத்தில் சி.எம் இடம் நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில், மீண்டும் அ.தி.மு.க. அரசு பதவியேற்கும் பட்சத்தில் குற்றமற்ற அப்பாவி முஸ்லிம்களின் விஷயத்திலும் நீண்டகால சிறைவாசத்தால் தண்டிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் விஷயத்திலும் நீங்கள் பெற்றிருக்கும் உத்திரவாதம் என்ன? அல்லது ஒரு சாரார் குற்றம் சாட்டுவது போல நீங்கள் அவ்வாறு சிறைவாசிகள் விஷயத்தில் உருப்படியான எவ்வித பேச்சுவார்த்தையும் சி.எம் இடம் நடத்தவில்லை என்பது உண்மையா?
கடந்த ஐந்தாண்டு கால அ.தி.முக. அரசில் 150 அப்பாவிகளையும் விடுவிக்க மறுத்த காரணம் என்ன? உங்கள் கூற்றுப்படி தி.மு.க. அரசு ஜாமீன் மனுவின் போது செய்த குற்றப்பதிவுகள்தான் எனில், அ.தி.மு.க. அரசு அப்பொய்யான குற்றப்பதிவை தொடரவேண்டும் என்று எந்த சட்டஞானி தங்களுக்குச் சொன்னது? தமிழகத்தின் மதமோதல்களுக்கு வித்தாய் போன பழனிபாபா' கொலைவழக்கின் கொடூர குற்றவாளிகளுக்கு தி.மு.க. அரசு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்து சிறையில் வைத்திருந்த நிலையில் நீதிமன்றத்தால் கொலை குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட அக்கொடூர குற்றவாளிகளை அ.தி.மு.க அரசு முந்தைய தி.மு.க. அரசின் குற்றப்பதிவுகளை கண்டு கொள்ளாமல், பின் தொடராமல் ஜாமீனில் விடுவித்தது. ஏப்படி?
தமிழக முஸ்லிம்கள் தங்கள் வாழ்வினில் என்றும் மறந்திடாத கோவை நவம்பர் கலவரம், இதில் ஈடுபட்ட இந்து அமைப்புகளைச் சார்ந்தோர் இன்று ஒருவர் கூட சிறையினில் இல்லையே! கலவரத்துக்கும், குண்டுவெடிப்புக்கும் காரணமானவர்களே வெளியே சென்றுவிட்டார்கள் என்கிறபோது அப்பாவிகளான எங்களுக்கு எதற்கு எட்டாண்டு சிறைவாசம். ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் அத்தகைய பாரபட்சங்கள். இவ்வநீதியை தட்டிக்கேட்ட முஸ்லிம்களை உடனடியாக பிணையில் தேர்தலுக்கு முன்பே விழுவது தான் உத்தமம் என பேசியதுண்டா?
கடந்த எட்டாண்டுக்கும் மேலாக இவ்வழக்கில் உள்ள 123-வது எதிரி சர்தார் (வயது 25) 165வது எதிரி சிவக்குமார் என்கிற அப்துல்லா(வயது 27) ஆகியோரின் மீது கோவை குண்டுவெடிப்பு வழக்கின் சாட்சிய விசாரணைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில, எந்த ஒரு குற்றப்பதிவும் இவர்கள் மீது இல்லை என்பது தெளிவான நிலையில் அ.தி.மு.க. அரசு இவர்களை சிறையில் வைக்கக் காரணம் என்ன? கடந்த தி.மு.க. ஆட்சியில் இவர்களுக்கு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்படவே இல்லை. குற்றப்பதிவே இல்லாத இவர்களை அ.தி.மு.க. அரசு ஜாமீனில் விடுவிக்க எதிர்;ப்பு தெரிவிப்பது ஏன்?
இன்னும் கருணாநிதி அரசில் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப் பட்;ட திரு. ராஜசேகரன் (ஏ.டி.எஸ்.பி) கோவை மு.மு.நகர் முஸ்லிம்களுக்கு ஷகுண்டுவெடிப்பு சதியில்' தொடர்பில்லை என 2005 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், அ.தி.மு.க. அரசு குற்றப்பதிவு இல்லாத அப்பாவி கே.கே..நகர் முஸ்லிம்களை ஜாமீனில் விடுவிக்க மறுப்பது ஏன்?
இப்படி எண்ணற்ற முஸ்லிம் சிறைவாசிகள் குற்றப்பதிவுகள் நிரூபிக்கப்படாத நிலையிலும், தண்டனை காலத்திற்கும் அதிகமான காலம் சிறையில் இருந்து வரும் நிலையிலும் ஜாமீன் வழங்க தொடர்ந்து தீவிரமாக அ.தி.மு.க. அரசு முட்டுகட்டைகள் போடுவது ஏன்?
இப்படி எண்ணற்ற வினாக்களுக்கு த.த.ஜ சிறைவாசிகளுக்கும், சமூக மக்களுக்கும் அளிக்கப்போகும் பதில்கள் என்ன? உங்கள் அரசியல் களத்தில் எதையும் சொல்லிவிட்டுப் போங்கள். ஆனால், எட்டாண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் இருக்கும் எங்களையும், எங்கள் குடும்பத்தவர்களையும் உங்கள் அரசியல் வாழ்விற்கு பலிகடாவாக ஆக்காதீர்கள்.
நீங்கள் இயக்கப்போட்டியில் இருந்து அரசியல் போட்டியாய் பரிணாமம் அமைந்துவிட்ட நிலையில் உங்கள் அரசியல் போட்டியில் எங்களின் வேதனை (ரத்தங்களை) ஓட்டுக்களாய்' மாற்ற முயலாதீர்கள்.
சமுதாய மக்கள் எங்களின் விடுதலை(விடியலு)க்காக துடியாய் துடிப்பதை உணர்கின்றோம். எங்களுக்காக சமுதாய மக்கள் சிந்தும் கண்ணீர் வீணாகி விடக்கூடாது.
சமுதாயமே! இவ்வரசும் வருங்கால தமிழக அரசும் உணர்ந்து கொள்ளும் வகையில் உங்கள் சக்திகளை' சிந்தாமல் சிதறாமல் ஓரணியில் திரட்டுங்கள். யார் வெற்றி பெறவேண்டும் என்பது நோக்கமல்ல!
சமுதாய தலைமைகளே! சமுதாயத்தின் அவலநிலைகளை கருத்தில் கொண்டு உங்கள் இயக்கச் சண்டைகளை புறந்தள்ளிவிட்டு ஓரணியில் ஒன்றிணையுங்கள். இவ்வழைப்பு சமுதாய அமைப்பினர் அனைவருக்கும் பொதுவானதாகும்
ஒன்றும் பேசாமல் எவ்விளக்கத்தையும் முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்து அம்மாவுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே!
நம் கோரிக்கைகள் வென்றெடுக்க வேண்டும் என்பதே மிக முக்கியமாகும். ஆகவே, நாம் பகடைக்காய்களாக இருந்ததுபோதும். சமுதாயம் முன்னேற படைவீரர்களாக செயல்பட்டு போலிகளை இனம்கண்டு முன்னேற்றபாதையிலே முதல் அடி எடுத்து வைப்பீராக!
இந்த பிரசுரத்தை அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எடுத்துரைக்கச் செய்வீராக!
இவண்
இஸ்லாமிய சகோதரன்
எம் முகமது அன்சாரி
விசாரணை சிறைவாசி
கோவை மத்திய சிறை
No comments:
Post a Comment