Friday, April 28, 2006

தேர்தல் களத்தில் ஈமானை இழந்தவர்கள்...?

கலீல் ரஹ்மான், சவுதி அரேபியா

? தேர்தல் பிரச்சாரம் செய்தால் ஈமான் போய்விடும் என்று கூறியவர்கள் இப்போது, உயிரைக் கொடுத்தேனும் அ.தி.மு.க.வை ஜெயிக்க வைப்போம் என்று கூறி தேர்தல் வேலை செய்கிறார் களே?

! இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பதையே இது காட்டுகிறது. கடந்த 2004தேர்தலின்போது,

''ஈட்டி முனை வேண்டாம், தேர்தல் போட்டி முனையிலேயே ஈமானை இழந்து விடுகின்றனர். இதில் முஸ்லிம் லீக்கினர் மட்டுமல்ல! களப்பணியாற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுகின்றனர்''

என்று எழுதினார்கள் (ஏகத்துவம் ஏப்ரல் 2004
).

ஆனால் இரண்டே வருடத்தில் தங்களது நிலைபாட்டை மாற்றி, கொள்கையை(?) கைகழுவி விட்டார்கள். அவர்கள் குறிப்பிட்டது போலவே இப்போது ஏகத்துவத்தையும் இழந்து நிற்கின்றனர். முன்பு முஸ்லிம் லீக்கை உதாரணமாகக் காட்டியவர்கள் இப்போது தாங்களே உதாரணமாகி இருக்கிறார்கள்.

நெல்லிக்குப்பத்திற்கு ஜெயலலிதா வந்தபோது அவரை வரவேற்க அ.தி.மு.க.வினர் 'குறவன் குறத்தி' நடனத்திற்கு ஏற்பாடு செய்திருந் தனர். அந்த நடன நிகழ்ச்சியில் த.த.ஜ.வினர் கொடி தூக்கும் ஜமாஅத்தாக மாறி கொடியோடு கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

நீலகிரி மாவட்டத்திற்கு ஜெ வந்தபோது அவரை வரவேற்று 'படுகர்' இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடினர். 'அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ' என்ற பாடலின் இசைக்கேற்ப அவர்கள் நடனமாட, அதனை ரசித்துக் கொண்டே... தங்களது கொடிகளை அசைத்துக் கொண்டே.... அவர்கள் ஆனந்தமாடியதை ஜெயா டி.வி. யில் பார்க்க முடிந்தது.

கடையநல்லூரில் த.த.ஜ. நடத்தும் மதரஸா மாணவர்களின் கைகளில் அவர்களின் கொடியைக் கொடுத்து 'அம்மா'வை வரவேற்றதைக் கண்டு அவ்வூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தூய வடிவில் இஸ்லாத்தை போதிக்கிறோம் என்று கூறியதால் மதரஸாவில் சேர்ந்த மாணவர்களையும், கலிமா கூறி புதிய இஸ்லாமிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ள சகோதரர்களையும் ஜெயலலிதாவை வரவேற்க இவர்கள் அழைத்துச் சென்றது மார்க்க சிந்தனையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கூத்தாநல்லூரில் ஜெய்னுலாப்தீன் பேசும்போது கூட்டத்தில் 'விசில்' சத்தம் பறந்தது. முன்னதாக, ஆட்டோ பிரச்சாரங்களின் போது 'அம்மாவின் போர்ப்படைத் தளபதி பீ.ஜே. பேசுகிறார்' என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

கும்பகோணத்தில் சங்கராச்சாரியின் அரசியல் ஏஜெண்டும், ஆர்எஸ்எஸ் ஸின் செல்லப் பிள்ளையுமான 'குடுமி' ராமநாதன் என்ற பார்ப்பனருக்கு உருகி உருகி வாக்கு கேட்டார் ஜெய்னுலாப்தீன். பயான் செய்யப் போகிறார் என்று கூறி அழைத்து வரப்பட்ட பெண்கள் இதனால் கொதித்துப் போயினர்.

இதையெல்லாம் நேரில் பார்க்கும் அல்லது கேட்கும் த.த.ஜ. சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி சிந்திக்கத் தொடங்கி விட்டனர். பலர் மீண்டும் தமுமுகவில் இணைந்து செயல்படத் தயாராகி வருகின்றனர்.

ஜனநாயக நாட்டில் பன்முகம் கொண்ட சமூக அமைப்பில் அரசியல் பணி செய்யும்போது நம்மோடு வருகை தரும் மாற்றுக் கட்சியினர் செய்யும் தவறுகளுக்கு நாம் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? என்று தமுமுகவினர் கூறியபோது அதனைக் கடுமையாகக் கண்டித்தவர்கள் இன்று திராவிடக் கட்சிகளையெல்லாம் தாண்டி அவர்களே சீரழிந்து கிடக்கிறார்கள்.

ஜெய்னுலாப்தீனின் இரட்டை வேடத்தையும், சமுதாய துரோகத்தையும் அம்பலப்படுத்திக் காட்டும் அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

நரேந்திர மோடி நல்லவரா?

அப்துல் பாசித், கோவை

? திமுக ஆட்சியில் கோவையில் கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறி திமுகவுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும், நரேந்திர மோடியை விட கருணாநிதி மோசமானவர் என்றும் ஒருவர் மேடைதோறும் பேசி வருகிறாரே?

! நமக்கும் தகவல் கிடைத்தது. திமுக ஆட்சியில் கோவையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது உண்மை. அதை நாம் என்றுமே நியாயப்படுத்த மாட்டோம். ஆனால் நரேந்திர மோடியை விட கருணாநிதி மோசமானவர் என்று பேசுவதை ஒருக்காலும் முஸ்லிம் சமுதாயம் ஜீரணிக்காது.

ஆனால் நரேந்திர மோடியோ குஜராத்தில் திட்டமிட்டு பந்த் நடத்தி, அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளை கும்பல் கும்பலாக முற்றுகையிட்டு முஸ்லிம்களை அவரது ஆணையின் கீழ் அழித்தொழித்தார்கள். குஜராத் போலீசார் சங்பரிவாருக்கு பாதுகாப்பாக ஒத்துழைத்தனர். இதனை கோவை சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பேசி நரேந்திர மோடியை நல்லவர் என்று சான்றளிக்கிறார்கள் என்றால் நிச்சயமாக இவர்கள் சமுதாயத்தை விலைபேசி விட்டார்கள் என்பதுதான் அர்த்தம்.

இன்று கோவை அசம்பாவிதங்களை நினைவு கூறுபவர்கள், 19
முஸ்லிம்களின் இரத்தம் காயும் முன்னரே 1998
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கச் சொன்னார்கள் என்பதையும், அடுத்து வந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு சேகரித்தார்கள் என்பதையும், 2005தேர்தலில் திமுக அதிமுக நேரடியாக மோதும் 100
தொகுதிகளில் யாருக்குப் பணியாற்றினார்கள் என்பதையும், 2004
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதையும் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு விளக்க வேண்டும். அப்போதெல்லாம் இவர்கள் கோவை அசம்பாவிதங்களை மக்களிடம் கொண்டு செல்லாதது ஏன்? என்றும் சமுதாயம் கேள்வி கேட்கிறது. ஒருவேளை அவர்கள் 'தோட்டத்திடம்' பெற்றுக் கொண்ட ஆதாயம்தான் காரணமோ?

No comments: