Wednesday, November 20, 2013

இந்திய அரசு மீதும் தமிழக அரசு மீதும் வழக்கறிஞா் உமா்கயான் வழக்கு


 


தமிழக சிறைகளில் பல்லாண்டுகாலமாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகள் விடுதலை தொடர்பில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பாக பல்வேறு முன்னேடுப்புகள் செய்து வருவது தாங்க...ள் அனைவரும் அறிந்ததே.

ஆயுள்சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அரசின் கொள்கை முடிவுகள் என்பது ஆட்சியாளர்களின் சுய விருப்பு வெறுப்புகளில் இருந்தே வெளிப்படுகிறது. பொதுவான சொல்லாடல்களாக அனைவரின் மனதிலும் இருப்பது 14 ஆண்டுகள் ஆயுள்சிறைவாசம் அனுபவித்தால் போதுமானது, அவர்கள் மகிழ்சியுடன் வீடு திரும்பிவிடுவார்கள் என்பதே.

ஆனால் எதார்த்தம் என்பது வேறாகவே இருக்கிறது. பல மாநிலங்களில் ஆயுள்சிறைவாசிகள் விடுதலை என்பது 10, 7, 5 ஆண்டுகள் என்று ஒரே சீரான முறையில் இல்லாமல் அரசியல், தேர்தல், தங்களுக்கு விருப்பமானவர்களை விடுதலை செய்வதற்காக விடுதலை செய்வது என்று அனைத்தும் இங்கே அரசியல்மயப்படுத்தியே உள்ளது.

சிறையில் இருப்பவர்கள் என்றால் அவர்களுக்கு என்று ஆன்மா இல்லை என்ற எண்ண‌ங்களும், தப்பு செய்தால் தண்டனை அடைந்துதான் தீரவேண்டும் என்ற பொது உரையாடல்கள் தவிர்த்து நமது சிந்தனை முறை விரிவடைவதில்லை.

தண்டனை முறைகளைப் பற்றி பேசும் நாம் நமது தேசத்தில் நிலவி வரும் சமுக, பொருளாதாரப் பிரச்சனைகள், அரசியல் சூழல்கள் இவை குறித்தும் இவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பேசுவதில்லை.

"சட்டங்களை சார்ந்துதான் சமுகம் இருக்கிறது என்பது சட்டப்பூர்வ கற்பனையே. மாறாக சட்டங்கள்தான் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும். மக்களுக்காகத்தான் சட்டங்களே அன்றி சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பதான சட்டமுறைகள்தான் இங்கே சிறந்த சமூக அமைப்பு முறைகளை உருவாக்கும்”

தமிழகம் மட்டும் அல்ல இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் இந்த சட்ட வன்முறைகளில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் இசுலாமியர்கள், தலித்துகள், ஏழைகள், அரசியல் காரணிகளுக்காக போராடுபவர்கள், பழங்குடியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஏதும் அற்ற அப்பாவிகள்.(உதாரண‌மாக கூடன்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போராடிவரும் இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் மீது ஏராளமான பொய் வழக்குகள். சிறுவர்கள், பெண்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. 70 வயது முதியவர் மீது குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது)

உங்களுக்குத் தெரியுமா, அபுதாஹீர் என்ற இளைஞனை. சிறுவனாக சிறைக்குச் சென்ற இந்த இளைஞன் இன்றைக்கு 10 ஆண்டுகள் கடந்து SLE என்ற சிறை நோயால் தன் உடலில் ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்து தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறான். இடைக்காலமாக ஒரு நீண்ட பரோல் கொடுக்க சிறைசட்டங்களில் இடம் இருந்தாலும் இவனை விடுதலை செய்ய அரசும், ஆட்சியாளர்களும் தயாராக இல்லை. அபுதாஹீருக்கும், மதானிக்கும் கருணை காட்டாத சட்டங்கள், இவர்கள் என்ன வகையான வழக்குகளில் சிறையில் இருக்கிறார்களோ அதே வகையான வழக்குளில் சிறையில் இருக்கும் பெண் சாமியார்களுக்கும், நடிகர்களுக்கும் கருணை காட்டுவது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாக்குவதாக இருக்கிறது.

இங்கே சட்டங்கள் சமூகங்களை இரண்டுவகையான‌ பாகுபாடுகளுடன் அணுகுகிறது. இசுலாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள், சமூக மாற்றத்திற்காக போராடுபவர்களை சட்டம் அணுகும் முறையே எந்த அறங்களும் அற்றதாய் இருக்கிறது.





இந்த பாகுபாடுகளுக்கு எதிரான நமது சட்ட பூர்வமான போராட்ட களத்தை விரிவுபடுத்தவேண்டிய கட்டாயத்தில் கடந்த 14.11.2013 அன்று டெல்லியில் தேசிய மனித உரிமை ஆனையம்(NCHR)ல் மனுதாக்கல் செய்துள்ளோம். இந்திய அரசையும், தமிழக அரசையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட இம் மனு விரைவில் விசாரனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.


நீண்ட காலமாக நீதி மறுக்கப்பட்டு சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை நோக்கிய எமது போராட்டம் உங்கள் அனைவரின் கரங்களையும் இனைத்துக்கொண்டு பயணப்படுகிறோம்.
விளிம்பு நிலை மனிதர்களான சிறைவாசிகளின் விடுதலைக்காக தாங்கள் அனைவரும் சாத்தியப்பட்ட அனைத்து வழிகளிலும் செய்திகளை கொண்டு செல்லவேண்டுகிறோம்.

இந்த வேலையில் எம்மோடு இப்போராட்டத்தில் துனை நிற்கும் அனைத்து தோழர்களையும் நன்றியுடன் நினைத்துபார்க்கிறோம்.

முகநூல் வழியாக எமது முயற்சிகளுக்கு துனைநிற்கும் தோழமைகளுக்கும் நன்றிகளும்.நேசிப்புகளும்...

இந்த முயற்சியில் எம்மோடு துனைநின்ற மேபதினேழு இயக்க தோழர்கள். மற்றும் அதன் ஒருங்கினைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, எழுத்தாளர் தோழர் வளர்மதி உள்ளிட்ட அத்தனை தோழர்களுக்கும் நன்றி.

No comments: