Thursday, October 17, 2013

பாம்பன் விவேகானந்தர் இல்லம்




உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர். 

பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிந்தார் விவேகானந்தர்.

இந்தச் சம்பவம் நடந்து நூறாண்டுகள் கழித்து விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய பாம்பன் குந்துகால் பகுதியில் நினைவிடம் கட்ட வேண்டும் என பணிகளை ஆரம்பித்தபோது விவேகானந்தர் நினைவிடத்திற்குரிய இடம், மண்டபம் மரைக்காயர்களின் உரிமையில் இருந்தது.
ராமகிருஷ்ண தபோவனத்தில் இருந்து நிலத்தை விலைக்குக் கேட்டு மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினரை அணுகினார்கள். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பல தலைமுறைகளாக நெருக்கமாக இருந்துவந்த மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர் பாஸ்கர சேதுபதியின் வழியைப் பின்பற்றி இலவசமாகவே ஐந்து ஏக்கர் நிலத்தை அளித்து நினைவிடம் கட்ட அனுமதித்தனர். பின்னர் 2009 ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் திறக்கப்பட்டது. இந்த இடத்தில் வருடந்தோறும் ஜனவரி 26 அன்று விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய நாளை நினைவுகூறும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள், விவேகானந்தர் நினைவிடத்துக்கு ஆர்வத்துடன் வருகின்றனர். இங்கிருக்கும் கண்காட்சிக் கூடத்தில் விவேகானந்தர் பாம்பன் கடற்கரையில் வந்திறங்கிய போது, அவரை சேதுபதி மன்னர் வரவேற்ற காட்சி, அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு ரதத்தில் விவேகானந்தர் பயணித்த காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் ஓவியங்களா தத்ரூபமாக தீட்டப்பட்டுள்ளன. இங்கு விவேகானந்தர் வாசக சாலையும் அமைந்துள்ளது. விவேகானந்தர் இல்லத்தின் மாடியில் இருக்கும் தொலைநோக்கி மூலம் அருகில் உள்ள தீவுகளையும் பார்க்கமுடியும்.

விவேகானந்தர் நினைவிடம் செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு. பாம்பனில் இருந்து தென்னந்தோப்புகள் ஊடாக கடல் காற்றைச் சுவாசித்தபடியே 4 கிலோ மீட்டர் நடந்தும் செல்லலாம். 





No comments: