Monday, March 29, 2010

நக்கீரன் கோபாலுக்கு பாராட்டு விழா



சென்னை:''நக்கீரன் பத்திரிகை இன்று வளர்ந்துள்ளதற்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்றவர்கள் காட்டிய வழியே காரணம்,'' என நக்கீரன் ஆசிரியர் கோபால் பேசினார். தமிழ்நாடு பாடநூல் அச்சிடுவோர் சங்கம் மற்றும் சென்னை பைண்டிங், பிரின்டிங் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசின் 'பெரியார் விருது' பெற்ற நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில், நக்கீரன் கோபாலுக்கு பாக்கெட் நாவல் ஆசிரியர் அசோகன், நினைவுப்பரிசு வழங்கினார். நக்கீரன் கோபால் பேசியதாவது:தமிழக அரசின் சார்பில் எனக்கு, 'பெரியார் விருது' அறிவிக்கப்பட்டபோது ஆச்சரியம் அடைந்தேன். நக்கீரன் பத்திரிகை, பல கஷ்டங்களைத் தாண்டி வந்துள்ளது, இங்குள்ள பெரியவர்கள் மேடையில் பேசும்போது தான் அதை எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.நான் முன்னேற உதவியவர்கள் தான், இன்று எனக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர்.

நக்கீரன் இன்று வளர்ந்து வந்துள்ளதற்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்றவர்கள் காட்டிய வழியே காரணம்.என்னுடைய பத்திரிகையின் சக ஊழியர்கள் சார்பில், அவர் களுக்காக நான் தலைமையேற்று பெற்ற விருதாகவே, இந்த விருதைக் கருதுகிறேன்.இவ்வாறு கோபால் பேசினார்.

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு பேசும்போது,''பத்திரிகை என்பது சமூக நீதியின் அங்கம். சமூக நீதியில் வெற்றிபெற்ற ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.பத்திரிகையாளர் கனல் தினகரன் பேசும்போது,''மனதில் பட்டதை தெளிவாக, அச்சமில்லாமல் சொல்பவரான நக்கீரன் கோபாலுக்கு, விருது வழங்கப்பட்டது நன்று,'' என்றார். பத்திரிகையாளர் ஜவஹர் பேசும்போது,''ஈ.வெ.ரா., சிறந்த பத்திரிகையாளர். அவர் ஒரு போராளி; மனிதாபி மானி. இத்தகுதிகள் படைத்த நக்கீரன் கோபாலுக்கு விருது வழங்கியது வரவேற்கத்தக்கது,'' என்றார்.

அண்ணாதுரை நூற் றாண்டு நவீன நூலகத்தின் திட்டஅலுவலர் ஆவுடையப்பன் பேசும்போது, ஈ.வெ.ரா., வுடன் பழகாமல், அவருடைய பாதையை பின்பற்றும் ஒருவருக்கு முதன்முதலாக விருது வழங்கப் பட்டுள்ளது. விருதை வாங்கியவர் என்பதை விட, இந்த விருதைப் பெற்றவர் என்பது பொருந்தும்,'' என்றார்.

சென்னை மாவட்ட நூலக ஆணையத்தின் துணைத் தலைவர் கோபண்ணா பேசும் போது,''நக்கீரன் கோபால் தனது பத்திரிகையின் வாயிலாக சமூக அநீதியை எதிர்த்து போராடி வருகிறார். தகுதியான நபருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.குமரன் பைண்டிங் ஒர்க்ஸ் சார்பில், நிறுவனத்தின் சக உரிமையாளர் விஸ்வநாதன், நக்கீரன் கோபாலுக்கு ஈ.வெ.ரா., உருவப்படத்தை பரிசாக வழங்கினார்.
நன்றி : தினமலர்

No comments: