Monday, October 05, 2009

இளைஞர்களை கவர தி.மு.க.,வும் களமிறங்குகிறது : 'கலைஞர் தமிழ் பேரவைக்கு புத்துயிர் அளிக்க முடிவு


இளைஞர்களை கவர தி.மு.க.,வும் களமிறங்குகிறது : 'கலைஞர் தமிழ் பேரவைக்கு புத்துயிர் அளிக்க முடிவு

தி.மு.க.,வில் கட்சி, இளைஞரணி, மாணவரணி, விவசாய அணி, மகளிரணி, தொண்டரணி என பல அமைப்புகள் உள்ளன; இருப்பினும், கட்சி மட்டுமே பிரதானமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி செயலர்களின் கட்டுப்பாட்டில் தான் சார்பு அமைப்புகள் செயல்படுகின்றன; சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் அந்தந்த மாவட்ட செயலர்கள், உள்ளூர் அமைச் சர்களின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

கடந்த 2004ல் "கலைஞர் தமிழ் பேரவை' என்ற அமைப்பு துவங்கப் பட்டது. "தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கப் போராடுவது; தீண்டாமையை முற்றிலுமாக ஒழிக்க பாடுபடுவது; இளைய தலைமுறையிடம் தமிழ் விழிப்புணர்வை ஏற்படுத்துவது; தமிழை வழிபாட்டு மொழியாக்க முயற்சி மேற் கொள்வது; முதல்வர் கருணாநிதியின் பகுத்தறிவு கொள்கையை பிரசாரம் செய்வது; பிறமொழி ஆதிக்கத்தை அகற்றி தமிழை வளர்ப்பது; தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்குவது; திருக்குறளை தேசிய நூலாக்க முயற்சி மேற்கொள்வது' போன்ற கொள்கைகளை, இப்பேரவை அடிப்படையாக கொண்டிருந்தது. கடந்த 2004ல் அமைப்பு துவங்கப் பட்டாலும் கடந்தாண்டு தான் முறையாக பதிவு செய்யப்பட்டது; மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்; இருப்பினும், கட்சிக்கு இணையான செல்வாக்கை பேரவையால் பெற முடியவில்லை.

சில மாதங்களுக்கு முன் நடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க., பெற்ற எழுச்சியை தொடர்ந்து, தமிழ்ப் பேரவையை பலப்படுத்தும் பணியில் நிர்வாகிகள் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர். மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மொழி, பகுத்தறிவு சிந்தனையை மையமாக வைத்து இந்த அமைப்பு செயல்பட்டாலும், வருங்காலத்தில் செல்வாக்கு பெற்ற தி.மு.க.,வின் சார்பு அமைப்பாக வலம் வர திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. பல தேசிய, மாநில கட்சிகள் தற்போது இளைஞர்களை "குறி' வைத்து அரசியல் நடத்துகின்றன. தே.மு.தி.க.,வில் பெருமளவு இளைஞர் பட்டாளம் உள்ளது; அ.தி.மு.க.,வின் இளைஞர், இளம் பெண்கள் பாசறையில் உறுப்பினர் சேர்க்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. காங்., பொது செயலர் ராகுல், இளைஞர், இளம், பெண்களை கட்சியில் ஈர்க்கும் விதத்தில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் நியமிக்கபட உள்ளனர்.

ஆனால், தி.மு.க.,வில் உள்ள இளைஞரணி, மாணவரணியில் 40 வயதுக்கும் அதிகமானவர்கள் தான் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் உள்ளனர்; எனவே, இளைஞர், இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட கலைஞர் தமிழ்ப் பேரவை திட்டமிட்டுள்ளது. இதற்கேற்றாற் போல், 40 வயதுக் குட்பட்ட படித்த பட்டதாரிகள் தான் உறுப்பினர் களாக இணைத்து கொள்ளப்படுகின்றனர்; இளைஞர்களுக்கு தான் பொறுப்புகளும் வழங்கப்படுகின்றன."வரும் 2011ல், 10 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது தான் எங்கள் இலக்கு என்கிறார்' பேரவையின் மாநில அமைப் பாளர் திருநாவுக்கரசு. இருப்பினும், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல் தமிழ் பேரவையையும் விட்டு வைக்கவில்லை; பல மாவட்டங்களில்,

தமிழ் பேரவைக்கு அந்தந்த மாவட்ட செயலர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனக் கூறப்படுகிறது; இருப்பினும், மாவட்ட செயலர்கள், அவருக்கு போட்டியாக அதே ஊரில் அரசியல் நடத்தும் வி.ஐ.பி.,கள், நகர, ஒன்றிய செயலர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர், பேரவை நிர்வாகிகள். "கலைஞர் தமிழ் பேரவை' தலைமையால் அங்கீகரிக்கப்படாத அமைப்பு; அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என கட்சி நிர்வாகிகள் பலர் பகிரங்கமாகவே கூறுகின்றனர். இக்குற்றச்சாட்டை மறுக்கும் பேரவை நிர்வாகிகள், சமீபத்தில் சென்னையில் நடந்த பேரவையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் கட்சி வி.ஐ.பி.,க்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்; பேரவையை பலப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது; பேரவையின் வளர்ச்சி பொறுக்காத சிலர், தேவையற்ற வதந்தியை பரப்பி வருகின்றனர்' என்கின்றனர்.பிற கட்சிகளில் இருந்து தி.மு.க.,வில் தஞ்சம் புகுந்தவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க பேரவை நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்; அ.தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வுக்கு வருபவர்களின் கவனத்தை கலைஞர் தமிழ்ப் பேரவையின் பக்கம் திருப்பி, அவர்களுக்கு பொறுப்பு வழங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்; இதன் மூலம் அவர்கள் சோர்வடையாமல் கட்சிப் பணியாற்றவும், பேரவையை பலப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும் என்பது, நிர்வாகிகளின் கணிப்பு. பல விமர்சனங்கள், அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கலைஞர் தமிழ்ப் பேரவையை வளர்க்க ஒருதரப்பு தீவிரமாக கிளம்பியுள்ளது.

நன்றி : தினமலர்

No comments: