Tuesday, September 01, 2009

திருவாரூர் மாவட்ட தமுமுக தொண்டரணிச் செயலாளர் படுகொலை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த சகோ. நூர் முஹம்மத் நேற்று தனது வீட்டருகில் உள்ள அன்வரியா பள்ளிவாசலில் நோன்பு திறந்து விட்டு மஃரிப் தொழுகையை நிறைவேற்றி விட்டு வெளியில் வந்தபோது நான்கு பேர் கொண்ட சமூக விரோத கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு அந்த இடத்திலேயே அநியாயமாக உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சகோ. நூர் முஹம்மத் தனது கம்பீரமானத் தோற்றத்துடனும், மிகுந்த செயல்துடிப்புடனும் பாடுபட்டு திருவாரூர் மாவட்ட தமுமுகவின் தொண்டரணி உருவாகவும், அது திறம்பட செயல்படவும் காரணமாக இருந்தவர். தனது சொந்த ஊரான கூத்தாநல்லூரின் நலனுக்காகவும், அந்த பகுதியில் உள்ள மக்களுக்காக உழைப்பதிலும் அயராது ஈடுபட்டு வந்தார். சென்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை மற்றும் மன்னார்குடியில் தமுமுக நடத்திய இரத்ததான முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம்களிலும், திருத்துறைப்பூண்டியில் நடந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவிலும் கொடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் தொண்டரணியை வழி நடத்தி சிறப்பான சேவைகளை வழங்கினார்.

இவரது படுகொலை செய்தி பரவியதுமே அந்த பகுதி முழுவதும் பதற்றம் பற்றிக்கொண்டது. செய்தி அறிந்த மாவட்ட நிர்வாகிகள் உடனே களத்துக்கு விரைந்து காவல்துறை அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் தவறினால் விளைவுகள் மோசமாகிவிடும் என்று கேட்டுக் கொண்டனர்.

சமூக சேவையிலும், மனிதநேய பணிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சகோ. நூர் முஹம்மதை, புனிதமிக்க ரமலான் மாதமென்றும் பாராது கொடூரமாக படுகொலையை முன்னின்று நடத்திய அதே ஊரைச் சேர்ந்த அனஸ் என்பவரை காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. முஹல்லா பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஈடுபடுவதில் ஏற்பட்ட சாதாரண ஈகோ பிரச்சினையின் காரணமாக இந்த படுபாதக செயலை செய்துள்ளனர்.

மாநிலத் தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், மாநில செயலாளர் ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, மாநில துணை செயலாளர் கோவை சாதிக் ஆகியோர் கூத்தாநல்லூரில் கூடி உள்ளனர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தமுமுக, மமகவினர் வந்துக் கொண்டுள்ளனர்.

கொலையாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வைப்பதற்காகவும், மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காகவும் இன்று கூத்தாநல்லூரில் தமுமுக தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளனர்.

தனது இன்னுயிரை மக்கள் பணியில் இழந்துள்ள சகோதரரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் மேன்மை ஆக்கவும், அவரது குடும்பத்தினர், கழகத்தினர் அனைவரது உள்ளங்கள் அமைதி அடையவும் யாவரும் பிரார்த்திப்போமாக.

No comments: