தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
"சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:
இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?
சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.
சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.
தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.
இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.
நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?
சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.
'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?
எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.
இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.
தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.
நன்றி : புதினம்
No comments:
Post a Comment