Friday, April 03, 2009

தாடி வைப்பது தாலிபானிஸமா? உச்சநீதிமன்ற கருத்துக்கு PFI எதிர்ப்பு


முஸ்லிம்ககளின் மத உரிமையை தாலிபானிஸம் என்று உச்சநீதிமன்றம் சித்தரித்தது ஒரு சமூகத்தையே குற்றம் பிடிக்கும் கருத்து பாப்புலர் ஃப்ரண்ட் அதிர்ச்சி

மத்தியபிரதேசத்திலுள்ள சிறுபான்மையின பள்ளியான நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவன் முஹம்மது சலீமை தாடி வைக்கக் கூடாது என தடுத்த பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து அந்த மாணவன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம் சமுதாயத்தையும் சமூக உரிமைப் போரõளிகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை சீக்கிய மதத்தினர் அனுபவிக்கின்றனர். மற்ற மதத்தினரும் அனுபவிக்கின்றனர். இந்து மாணவர்கள் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். ஐயப்பபன் கோவிலுக்கு செல்ல நேர்ச்சை செய்திருக்கும் இந்து மாணவர்கள் மாலை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். கிறிஸ்தவ மாணவர்கள் சிலுவை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் மத உரிமையை மறுத்து தாடி வைக்கக் கூடாது, புர்கா அணியக் கூடாது என அனுமதி மறுப்பது மத ரீதியான பாகுபாடே ஆகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய அரசியல் சட்டம் உறுப்பு எண் 14 வழங்கியுள்ள சமஉரிமையை மறுப்பதாகவும் உள்ளது. தாடி வளர்ப்பது முஸ்லிம்களின் மத அடையாளம். முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கையான தாடியை தாலிபானிசம் என உச்சநீதிமன்றம் கூறியது இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளியாக சித்தரிக்கும் வகையில் உள்ளது என முஸ்லிம் சமூகம் கருதுகின்றது. வேதனையடைகின்றது.ஷாபானு வழக்கில் ஷரீஅத்தைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவந்தது போல் முஸ்லிம்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து முஸ்லிம்களின் மத நம்பிக்கையை பாதுகாக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.


இவண்
எம். முஹம்மது அலி ஜின்னா
மாநிலத் தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

No comments: