Wednesday, March 25, 2009

அரசியலில் இலக்கியவாதிகள் - அருளடியான்


சிற்றிதழ்களுக்குள் நடக்கும் சண்டையையும், எழுத்தாளர்களுக்குள் நடக்கும் அக்கப்போரையும் நாம் அறிவோம். இவையெல்லாம் இலக்கியத்தில் நடக்கும் அரசியல். இவற்றைப் பற்றி நாம் பேசப்போவதில்லை. அரசியலில் ஈடுபட்டுள்ள இலக்கியவாதிகளைப் பற்றிய ஒரு பார்வையாக இக்கட்டுரையை எழுதியுள்ளேன். "எழுத்தாளர்களை அறிவாளிகளாகப் பார்க்கும் ஒரு சாராரையும், அவர்களை கோமாளிகளாகப் பார்க்கும் இன்னொரு சாராரையும் நம் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது." என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஓரளவு உண்மைதான். இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றிய அறிமுகமோ, அடிப்படை குடியுரிமைகள் பற்றிய புரிதலோ, இந்த நாட்டின் வரலாறோ, அதன் பன்மைத்துவமோ தெரியாத ஒருவர் இங்கு மிகப் பெரிய எழுத்தாளராக மதிக்கப்படுகிறார். மதச் சிறுபாண்மையினர் மீதான காழ்ப்புணர்ச்சி கூட அவரது தனித் திறமையாக மதிக்கப் படுகிறது. இது ஃபாசிசம் அல்லாமல் வேறு என்ன?

தி.மு.கவில் கனிமொழி, சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன் என பெண் கவிஞர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.கவில் நடிகர்கள் இருக்கும் அளவுக்கு இலக்கியவாதிகள் இல்லை. அங்கிருந்த கவிஞர் சினேகனும் நீக்கப்பட்டு விட்டார். காங்கிரஸில் கவிஞர் இந்திரா இருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் எழுத்தாளர் சிவகாமி, கவிஞர்கள் குட்டி ரேவதி, சுகிர்தராணி ஆகியோர் சேர்ந்துள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றத்தின் கூட்டங்களில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் பங்கேற்கிறார். மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சில திங்களுக்கு முன் சென்னையில் மாநில மாநாட்டை நடத்தியுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இவ்வாண்டின் சாகித்ய அகதமி விருதைப் பெற்றுள்ளார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தி.மு.கவைச் சார்ந்தே தன் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கிறார். தி.மு.க நடத்தும் கவியரங்கத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இடம் பெறுபவர்.

பாட்டாளி மக்கள் கட்சி ‘தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்’ என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளது. இந்த அமைப்பின் பொறுப்பாளர்களான எழுத்தாளர்கள் இராசேந்திரசோழன், பா. செயப்பிரகாசம் ஆகியோர் தேர்தல் புறக்கணிப்பை தங்கள் கொள்கையாகக் கொண்டவர்கள்.

கவிஞர் லீனா மணிமேகலை படைப்பாளிகளை ஒருங்கிணைத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, டில்லியை உலுக்கும் போராட்டங்களை நடத்தினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற இடதுசாரி அமைப்பின் ஆதரவாளர்கள் ‘வினவு’ என்ற கூட்டு வலைப்பதிவை நடத்தி வருகின்றனர். இவர்களும் தேர்தலை புறக்கணிப்பவர்கள்தான். இந்துத்துவ சார்பாக சில எழுத்தாளர்கள் எழுதினாலும் அவர்களில் பா.ஜ.க உறுப்பினராகத் தங்களை காட்டிக் கொள்பவர்கள் யாரும் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

புதிய முஸ்லிம் அரசியல் கட்சிகளில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய மக்கள் கட்சி ஆகியவை தங்கள் இலக்கியப் பிரிவை இன்னும் தொடங்கவில்லை. மனிதநேய மக்கள் கட்சியின் ஹாஜா கனி கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவைத் தமிழன் வலைப்பதிவர்களிடையே பரவலாக அறியப் படுபவர்.

இலக்கியவாதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். தி.மு.கவில் கவிஞர் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். நம் முதலமைச்சர் கலைஞரும் ஓர் இலக்கியவாதிதான். தமிழ் நாட்டில், வரும் மக்களவைத் தேர்தலில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுபவர்களில் எத்தனை பேர் இலக்கியவாதிகளாக இருப்பர்?

- அருளடியான்

நன்றி : அதிகாலை இணைய நாளிதழ்

No comments: