Thursday, March 12, 2009

இலங்கையில் மனித குண்டு தாக்குதல்: த.மு.மு.க மற்றும் த.த.ஜ கண்டனம்

சென்னை : இலங்கையில் இஸ்லாமியர்களின் ஊர்வலத்தில் நடந்த மனித குண்டு தாக்குதல், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று, த.மு.மு.க., தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புகள் கண்டித்துள்ளன.

தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலர் அப்துல்ஹமீது அறிக்கை:இலங்கையில் மசூதி ஒன்றின் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது மிகுந்த கண்டனத்துக்குரியது. தொடர்ந்து முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.இதற்கு முன் முஸ்லிம்களை பள்ளிவாசலில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியவர்கள் விடுதலைப் புலிகள். இதுபோன்ற மனித விரோத செயல்களை கடுமையாக கண்டிக்கிறோம். இலங்கையில், அமைதி ஏற்பட வேண்டும் என்று உலக மக்கள் எண்ணிக் கொண்டிருக்கையில், விடுதலைப் புலிகள் செய்த காட்டுமிராண்டித்தனமான இந்தத் தாக்குதல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல் தலைவர்கள், மனித குலத்திற்கு எதிரான இச்செயலை கடுமையாக கண்டிதக்கத் தவறிவிட்டனர். மத்திய அரசும், உலக நாடுகளும் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

த.மு.மு.க., துணைப் பொதுச் செயலர் ரிபாயி அறிக்கை:இலங்கையில், மிலாது நபி விழா ஊர்வலத்தில் நடந்த குண்டுவெடிப்பை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் தலைவர்கள், கிறிஸ்தவ, பவுத்த மதத் தலைவர்கள், தமிழ் சிந்தனையாளர்கள் என பலரும் கலந்து கொண்ட ஒரு பொதுவான நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கெலைப் படைத் தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதும், ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.ஏற்கனவே, வட இலங்கையில் நடக்கும் போரால் அப்பாவி தமிழர்களின் வாழ்வு நிலைகுலைந்துள்ள நிலையில், இச்சம்பவம் அதை மோசமான நிலைக்கு கொண்டு செல்லுமோ என்று அஞ்சுகிறோம்.இலங்கையில், தமிழர்கள், மலையாள தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என சகல தரப்பும் அமைதியான முறையில் சம உரிமையுடன் வாழ துரிதமான நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கை அரசை கேட்டுக் கொள்கிறோம். உண்மையில் இப்பயங்கரவாதத்தை செய்திட்ட சக்தி எது என்பதை கண்டறியும் வரை மாத்தறை தற்கொலை படை தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி : தினமலர்

No comments: