Sunday, February 01, 2009
போரூரில் ரூ.500 கோடி வக்பு சொத்துக்கள் இழப்பு:
போரூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள வக்பு சொத்துக்கள் இழப்பிற்கு அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.பதர் சயீத்-தான் காரணம் என்று வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளருமான செ.ஹைதர் அலி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவரும், தற்போதைய அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.வுமான பதர்சயீத் சட்டப்பேரவையில் பேசும்போது, ``வக்பு வாரியத்திற்கு சொந்தமாக நிறைய நிலங்கள் இருக்கின்றன. அதனை தனக்கு வேண்டியவர்களுக்கு தானம் மாதிரி கொடுக்கிறார்கள். இன்றைக்கு அரசியல் கட்சிகளுக்குக்கூட அந்த இடத்தை லீசுக்கு கொடுத்து இருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். என்ன குற்றச்சாட்டுகள் என்று அவர் தெளிவாக குறிப்பிடவில்லை. உண்மையில் அவரிடம் எந்தவிதமான ஆதரமும் இல்லை.
வக்பு வாரியத்திற்கு கட்டிடத்தை தவிர சொந்தமாக எந்த நிலமும் இல்லை. ஆனால், வக்புகளுக்கு அதாவது பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களுக்கு சொத்துக்கள் உள்ளன. அவற்றை யாரும் தானமாக கொடுக்க முடியாது. வக்பு நிறுவனங்களை கண்காணிப்பதே வக்பு வாரியத்தின் வேலையாகும்.
பதர் சயீத், வக்பு வாரிய தலைவியாக இருந்தபோது வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட போரூர் ஷேக் மானியம் மஸ்ஜித் கைருன்னிசா என்ற வக்புவை, அது வக்புவே இல்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். 1935-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரெவின்ï மேப்பில் உள்ள பள்ளிவாசலையே ``இல்லாத பள்ளிவாசலுக்கு ஒரு நிர்வாகக்குழு தேவையில்லை'' என உத்தரவு போட்டு, சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள 52 ஏக்கர் வக்பு சொத்தை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டார். அந்த வாரிய உத்தரவால், வக்பு வாரியத்திற்கே மிகப்பெரும் களங்கம் ஏற்படுத்திவிட்டார். சுப்ரீம் கோர்ட்டு மூலம் அந்த சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விஷயத்தில் பதர் சயீத் செய்துள்ள தவறை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்.
பதர்சயீத் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரம், என்மீது அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பதர்சயீத் மீதான குற்றச்சாட்டுகள் நிருபீக்கப்பட்டால் எம்.எல்.ஏ.பதவியில் இருந்து விலக அவர் தயாராக இருக்கிறாரா? என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பொதுவாழ்க்கையில் இருந்தே விலகிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
வக்பு சொத்துக்கள் விவரம் அனைத்தையும் இணையதளத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வக்பு நிர்வாகம் திறந்த புத்தகமாகவே இருக்கிறது. இந்திய ïனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் பேராசிரியர் காதர்மொய்தீன் வக்பு வாரியக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன.
இவ்வாறு ஹைதர் அலி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment