Monday, January 26, 2009

2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக...

2009ஆம் ஆண்டு இந்திய ஜனநாயகத்திற்கு நாடாளுமன்ற தேர்தல் ஆண்டு. 115 கோடி மக்களுக்கான நிர்வாக தலைமையை தேர்ந்தெடுக்கும் ஆண்டாகும். சில மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தல்கள் முடிந்து கடைசி சுற்றும் முடிந்துவிட்டது. எதிர்வரப் போகும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அலசலை ஆரம்பிப்போம்.


கடைசியாக முடிந்த மாநில சட்ட மன்ற தேர்தல்களில் காங்கிரஸும், பாரதிய ஜனதாவும், தலா மூன்று மற்றும் இரண்டு மாநிலங்களை கைப்பற்றின. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ் தான், டெல்லி, மிசோரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களை வைத்து பார்க்கும் போது இரண்டு மாநிலங்களில் வென்ற பாஜக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பகுதியில் அமர்நாத் விவகாரத்தை வைத்து வெற்றியைப் பெற்றது. 37 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 11 தொகுதி களைக் கைப்பற்றியது. ஆனால் இரண்டே இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜம்முவில் பாஜக பெற்ற 11 சட்டமன்ற தொகுதிகளை வைத்து பிரமாதமாக சாதிக்க முடியாது.


மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ் கரில் பாஜகவும், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸும் பெருவாரி யான வெற்றியை பெற்றிருந்தாலும் இந்த நான்கு மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனது வாக்கு வங்கியை விரிவு படுத்தியிருக்கிறது.


2004ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏழு மாநிலங் களில் தூள் கிளப்பியது. மக்கள் செல்வாக்கு இந்த ஏழு மாநிலங்களிலும் அமோகமாக இருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், ஜார்கண்ட், ஹரியானா, டெல்லி மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் முதலிய மாநிலங்களில் வெற்றி வாகை சூடியது. இந்த ஏழு மாநிலங்களில் உள்ள மொத்த தொகுதிகளில் 156ல் 129 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெற்ற வெற்றி வாக்கு சதவீதத்தில் 82 சதவீதமாகும்.


அதோடு மகராஷ்ட்ராவில் 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 23ஐ வென்றது. 26 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 12 தொகுதிகளைப் பெற்றது. 6 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் மூன்று தொகுதிகளையும், 14 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் 9 தொகுதிகளையும் பெற்றது.


உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மொத்தமுள்ள 249 தொகுதிகளில் 36 தொகுதி களையே காங்கிரஸ் கூட்டணியால் வெல்ல முடிந்தது.


2004ல் அமைந்த காங்கிரஸின் கனவுக் கூட்டணி அதே உறுதியுடன் இன்று இருக்கிறதா என்றால் ஆம் என்று சொல்லிவிட முடியாது. இடதுசாரிகள் மாநிலத்திற்கு மாநிலம் புதிய கூட்டணியை அமைத்து வருகிறார்கள்.


காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்த அளவில் கேரளா, ராஜஸ்தான், டெல்லி, ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாகாணங் கள் (அஸ்ஸாம் தவிர- அஸ்ஸாமில் பாஜக மற்றும் அஸ்ஸாம் கனபரிஷத் கூட்டணி வலுவாக இருப்பதாகக் கருதப்படுகிறது) வெற்றியைப் பெறலாம் என பொதுவாகக் கருதப் படுகிறது.


உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து வலுவான நிலையில் இருப் பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மாயாவதியின் வாக்கு வங்கி யின் நிலவரம் காங்கிரஸை மிரட்டி வரும் ஒரு அம்சமாக விளங்கி வருகிறது. எனினும் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கூட்டணி 50 தொகுதிகளை உத்தரப் பிரதேசத்தில் கைப்பற்றும் நம்பிக்கையில் இருக்கிறது. பீகாரைப் பொறுத்த அளவில் நிதீஷ்குமார் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராகவே நீடித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் இருவரும் காங்கிர ஸுடன் கை கோர்த்துக் கொண்டு பீகார் அரசியலில் வலம் வந்தால் ஒரு வேளை பலன் விளையலாம். இருப்பினும் பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே நிதீஷ் குமாரின் செல்வாக்கு சரிவை சந்திக்கும் என எதிர்பார்த்த அரசியல் நோக்கர் களின் கருத்துக்கு மாற்றமாக நிதீஷ் குமாரின் மக்கள் ஆதரவு குறைய வில்லை.


ஒரிஸ்ஸா கடும் வன்முறைகளாலும், கலவரங்களாலும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்பதோடு அம்மாநில அரசை காவு கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. பிஜு பட்நாயக்கின் பிஜு ஜனதாதளமும், பாஜகவும் அங்கு சரிவை நோக்கி செல்கின்றன. இங்கு காங்கிரஸுக்கு லாபம் விளையக் கூடும். இங்கு பாஜக கூட்டணிக்கு பலத்த அடி காத்திருக்கிறது. மேற்கு வங்காளத்தை பொறுத்த அளவில் அங்கு ஆளும் கூட்டணிக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது. நந்திகிராம் உதாரணம் ஒன்று போதாதா? இருப்பினும் மக்களின் ஆதரவைப் பெற்ற இடதுசாரி கட்சிகளுக்கு எதிரான எந்தக் கட்சியும் மேற்கு வங்காள அரசியலில் தற்போது வெற்றி பெரும் நிலையில் இல்லை என்பதே உண்மை.


மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப் பிடித்து சிறைக்குள் அடைத்து சித்திர வதைகள் செய்த செயலால் இரண்டு மாநில ஆளுங்கட்சிகளையும் கடும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. தெலுங்கு தேசமும், நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யமும் வாக்குகள் திரட்டும் விஷயத் தில் அறுவடை செய்யக் காத்திருக் கின்றன. பாஜகவுடன் கூட்டணி அமைத்த குற்றத்திற்காக தங்களுக்கு கிடைத்த தண்டனையிலிருந்து மீண்டு விட தெலுங்கு தேசம் கட்சி துடிக்கிறது. பாஜகவுடன் சேர்ந்த கூடா நட்பினால் மாட்டித் தவித்த தெலுங்கு தேசம் கட்சியைக் கண்டு பாடம் படித்த நடிகர் சிரஞ்சீவியோ பாஜகவைக் கண்டாலே அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார். தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்யம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி என்ற மூன்று கட்சிகளும் காங்கிரஸுக்கு கடும் போட்டியை உருவாக்கும் என கருதப்படுகிறது.


கர்நாடகாவைப் பொறுத்தவரை காங்கிரஸும் தேவகவுடாவின் மதச்சார் பற்ற ஜனதாதளமும் கூட்டணி அமைத் தால் பாஜகவை பஞ்சாக பறக்கச் செய்து விடலாம். ஆனால் ஒன்று சேராவிட்டால் பாஜக இந்த கட்சிகளை பதம் பார்த்து விடும் என்பதே. அண்மையில் நடை பெற்ற கர்நாடக இடைத் தேர்தல்களின் முடிவுகளின் வாயிலாக நாம் அறிந்தது.


தமிழகத்தை பொறுத்த அளவில் திமுக கூட்டணிக்கு எதிரான அதிருப்தி நிலவுகிறது என்ற பிரச்சாரத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் திமுக ஆட்சி மீதான அதிருப்தி அதிமுக மீது ஆதரவாக மாறவில்லை என்பதும் உண்மை.


இந்நிலையில் இந்தியாவில் ஒருங் கிணைந்த ஒரு சமூகமாகவும், இரண் டாவது பெரிய சமூகமாகவும், முதலிடம் பெறும் சிறுபான்மை சமூகமாகவும் இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் நிலை என்ன? என்பதைப் பார்க்கும் முன்பாக 2004 நாடாளுமன்றத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எத்தனை பேர்? என்பதை பகுதி வாரியாகப் பார்ப்போம்.


31லிருந்து 36 நாடாளுமன்ற பிரதி நிதிகள்... என்ற நிலையே சமீபகாலமாக நிலவி வருகிறது.


ஆந்திராவில் 1. நிஜாமுத்தீன் (காங்கிரஸ்) 2. அசதுதீன் உவைஸி (அகில இந்திய மஜ்லிஸே இத்திஹாதில் முஸ்லிமின்) என்ற இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். அசதுத்தீன் உவைஸி முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.


நிஜாமுத்தீன் காங்கிரஸ் கட்சியின் விசுவாச உறுப்பினராக இருக்கிறார் அவ்வளவுதான். தற்போது அறிவிக்கப் பட்டிருக்கும் தொகுதி மறுசீரமைப் பினால் முஸ்லிம்களுக்கு 14 சட்டமன்ற தொகுதிகளில் பின்னடைவு ஏற்படும் என ஆந்திர மாநில அரசியல் திறனாய் வாளர்கள் கூறுகிறார்கள்.


அஸ்ஸாமில் 1. அன்வர் ஹுஸைன் (காங்கிரஸ்) 2. குலாம் உஸ்மானி (காங்கிரஸ்) . 30 சதவீத முஸ்லிம்கள் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் வெறும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் களா? என அதிர்ச்சியடைந்த அஸ்ஸாம் முஸ்லிம்களும், அரசியல் முனைப் பாளர்களும் சிந்தனையில் ஆழ்ந்ததால் எழுந்ததே ஹருனுகு அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி. முஸ்லிம் களிடையேயான ஒருங்கிணைப்பை அதிகரித்து உரிமைகளை காக்க மார்க்க அறிஞர் பத்ருதீன் அஜ்மல் தலைமையில் இந்த இயக்கம் எழுந்தது.


சமீபத்தில் நடைபெற்ற அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில் 10 சட்டமன்ற தொகுதிகளை தனித்து நின்றே கைப் பற்றினார்கள். இனி 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஹருனுகு-ன் அதிரடிகள் ஆரம்பம் ஆகும்.


பீகார் மாநிலத்தில் 1. டாக்டர் ஷகீல் அஹ்மத் (காங்கிரஸ்) 2. தஸ்லீமுத்தீன் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) 3. முஹம்மத் அஷ்ராஃப் பாத்மி (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். பீகார் மாநிலத்தில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். இருப்பினும் மூன்று எம்.பி.க்கள் மட்டும் தானா? என்ற அதிர்ச்சி எழுவது வாடிக்கைதான். காங்கிரஸின் டாக்டர் ஷகீல் அஹ்மத் உள்துறை இணையமைச் சராக இருக்கிறார். தஸ்லீமுதீன் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார். பீகாரில் அஸ்ஸாமைப் போன்ற ஒரு கட்சி இல்லை.


ஜம்மு காஷ்மீரில் 1. அப்துல் ரஷீத் ஷாஹீன் (தேசிய மாநாட்டுக் கட்சி) 2. உமர் அப்துல்லாஹ் (தேசிய மாநாட்டுக் கட்சி) என்ற இருவர் மட்டுமே. இதில் உமர் அப்துல்லாஹ் தற்போது ஜம்மு காஷ்மீரில் முதல்வராகி விட்டார்.


கர்நாடகாவில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.பி. அவர் காங்கிரஸைச் சார்ந்த அவரது பெயர் இக்பால் அஹ்மத் சர்தாகி.


கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இருவரும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஒருவரும் எம்பிக்களாக உள்ளனர். 1. அப்துல்லாஹ் குட்டி (மார்க்சிஸ்ட்) 2. டி.கே. ஹம்ஸா (மார்க்சிஸ்ட்) 3. அஹ்மது (முஸ்லிம் லீக்) இவர் மத்திய வெளியுறவுத்துறை குட்டி அமைச்சராக உள்ளார். 20 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் கேரளாவில் இது போதுமானதல்ல.


ஏறக்குறைய ஒன்றே முக்கால் கோடி முஸ்லிம்கள் வாழும் மகராஷ்ட்ராவில் ஒரே ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே இருக்கிறார். முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளில் குஜராத்துக்கு அடுத்து மகராஷ்ட்ரா மாநிலம் முன்னிலை வகிக்கிறது. ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் கர்கரே இல்லையே?...


உத்தரப் பிரதேசத்தில் 1. ருபாப் சய்யீதா (சமாஜ்வாதி) 2. சலீம் இக்பால் செர்வானி (சமாஜ்வாதி) 3. டாக்டர் சபீகுர் ரஹ்மான் (சமாஜ்வாதி) 4. அதீக் அஹ்மத் (சமாஜ்வாதி) 5. முனவர் ஹஸன் (சமாஜ்வாதி) 6. ரஷீத் மசூத் (சமாஜ்வாதி) 7. அப்சல் அன்சாரி (சமாஜ்வாதி) 8. முஹம்மது முகீம் (பகுஜன் சமாஜ்) 9. முஹம்மத் ஷகீத் (பகுஜன் சமாஜ்) மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் முர்ஷிதாபாத் மாவட்டம் 26 பர்கானாக்கள் போன்ற மாவட்டங்கள் உண்டு எனினும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து திமுக சார்பாக காதர் மொய்தீனும் காங்கிரஸ் சார்பாக ஹாரூண் ரஷீதும் இடம் பெற்றுள்ளனர்.


ஜார்கண்ட் மாநிலத்தில் புர்கான் அன்சாரி என்ற ஒரே முஸ்லிம் உறுப்பினர் லட்சத் தீவுகளில் ஒரே. ஒரு முஸ்லிம் உறுப்பினர் டாக்டர்.பி. பூக்குன்ஹி கோயா என மொத்தம் 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமுதாயத் தினருக்காக இருந்தும் கூட பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை என்பது நிஜம்.


சமுதாயம் சார்ந்த அமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் என்று கூறினால் கேரள மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஈ. அஹ்மதுவும், ஆந்திராவில் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசதுத்தீன் உவைஸி அவர்களையும் மட்டுமே குறிப்பிட முடியும். ஈ. அஹ்மது குறித்து பெரிதாகக் கூற ஒன்றுமில்லை. எனினும் அசதுத்தீன் உவைஸி சமுதாய நலன் குறித்து அவ்வப்போது போர்க் குரல் எழுப்பி வருகிறார். அவ்வப்போது ஒரே ஒருவர் போர்க் குரல் எழுப்பி வருவது மட்டும் 30 கோடி முஸ்லிம் களுக்கும், 115 கோடி இந்திய மக்களையும் நேர்வழிப்படுத்த இன்று நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி இல்லை என்பதே முகத்தில் அறையும் உண்மையாகும்.


இந்த அவலத்தைத் தீர்க்க என்ன வழி என நாடே தவிக்கும் சூழலில் மனிதநேய மக்கள் கட்சியின் தேவை ஒவ்வொரு மணித்துளியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


இந்தியாவின் ஒவ்வொரு சாலையும் தாம்பரத்தை நோக்கித் திரும்பட்டும்.

No comments: