Monday, November 03, 2008

சென்னையில் PFI தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சார துவக்கவிழா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சார துவக்கவிழா மற்றும் பொதுக்கூட்டம்


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தேசிய அரசியல் மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளது. இதன் பிரச்சார துவக்கவிழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியிலுள்ள தம்புச் செட்டித் தெருவில் நேற்று(2112008) நடைபெற்றது.

கூட்டத்திற்கு மனித நீதிப்பாசறையின் மாநிலத்தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் யாமுகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் அகில இந்திய தலைவர் இ. அபுபக்கர் தேசிய அரசியல் மாநாட்டின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் அவர் கூறியதாவது.

""இன்று சென்னையிலே நடந்து கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய அரசியல் மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழா, இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏன் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது என பலருக்கும் சந்தேகம் வரும். நாம் சுதந்திரமடைந்த 62 ஆண்டுகள் கழிந்து விட்டன. சுதந்திரப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் பங்கெடுத்த நாம் சுதந்திரத்திற்குப் பின் நடந்த தேசப்பிரிவினையின் காரணமாக நிராதரவாக நின்று கொண்டிருக்கிறோம்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் தலித் முஸ்லிம் ஒற்றுமை உயர்ந்து வந்தது. தலித் மக்கள் அம்பேத்கர் தலைமையிலும் முஸ்லிம்கள் முஹம்மது அலி ஜின்னா தலைமையிலும் ஒன்று திரண்டார்கள்.

இந்த தலித் முஸ்லிம் ஒற்றுமையை ஒரு மிகப்பெரிய விபத்தாகக் கண்ட உயர் ஜாதி பார்ப்பனர்கள் ஆட்சியதிகாரம் தங்கள் கைகளை விட்டுச் சென்று விடுமோ என்று அஞ்சினார்கள்.


இந்த ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உயர்ஜாதி பார்ப்பனர்கள் உருவாக்கிய திட்டமே தேசப்பிரிவினை. இத்திட்டத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். தேசப் பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம்களின் தலைமையும் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது. முஸ்லிம்களின் பொருளாதாரமும் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது.
ஆனால் இந்திய முஸ்லிம்கள் இங்குள்ள ஆட்சியாளர்களால் நிர்க்கதியாக்கப்பட்டார்கள். ஆதரவற்று இங்கிருந்த முஸ்லிம்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அது, காங்கிரஸைப் பின்பற்றிச் செல்வது.
இதனடிப்படையில் இந்த முஸ்லிம்கள் உருது மொழி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என சிறு சிறு தேவைகளை மட்டுமே முன் வைத்தனர்.
இதன் பிறகு 30 வருடங்கள் கழித்து மண்டல் கமிஷன் வந்தது. தலித்கள், யாதவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் முன்னேற்றப்பட வேண்டிய சமூகத்தினர் என அறிக்கை சமர்ப்பித்தது.

அதன் பிறகு சச்சார் கமிஷன் வந்தது. முஸ்லிகள் தலித்களை விட பின்னே சென்றுள்ளனர் என அறிக்கை சமம்பித்தது. மண்டல் கமிஷனுக்கும் சச்சார் கமிஷனுக்கும் இடைப்பட்ட வருடங்களில் எந்த முன்னேற்றமும் முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை.

ஆனால் மண்டல் கமிஷனில் கூறப்பட்ட மற்ற இரண்டு சமூகத்தாரான தலித்களும், யாதவர்களும் மாயாவதி, லல்லு பிரசாத் யாதவ் என இன்று இந்தியாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறியுள்ளனர்.ஆனால் முஸ்லிம்களின் நிலையோ இன்று மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.


எங்கு, என்ன நடந்தாலும் விசாரணை முஸ்லிம்களை நோக்கியே சுற்றிச் சுற்றி வருகிறது. முஸ்லிம்கள் குற்றப்பரம்பரையாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்குக் காரணம் கடந்த 60 வருடங்களாக அவர்கள் ஆட்சியதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதுதான். இரண்டாந்தரக் குடிமக்களைப் போல் முஸ்லிம்கள் நடத்தப்படுகிறார்கள். தேசப்பற்றில்லாதவர்கள், நாட்டுப் பற்றில்லாதவர்கள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

தேசத் துரோகிகள் என முஸ்லிம்கள் பரிகசிக்கப்படுகிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் நாம் நேசிக்கும் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை. கூமர் நாராயணன் முதல் "ரா'வின் ரபீந்தர் சிங்வரை யாரும் முஸ்லிம்கள் இல்லை.

இப்படி நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு மத்தியில் நாம் நமது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமா? பாகிஸ்தானிலிருந்து இங்கு குடியேறி இந்துக்கள் எனவும், முஸ்லிம்கள் எனவும் கிறிஸ்தவர்கள் எனவும் மக்களை மத ரீதியாகப் பிரித்து பிளவுபடுத்தி நாட்டையே ரத்தக் களரியாக்கும் ஃபாசிஸ்டுகளுக்கு முன், சுதந்திப் போராட்ட யுத்த களத்தில் தலை வெட்டி வீழ்த்தப்பட்ட வீர தியாகிகளின் வாரிசுகள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமா?

அந்த காலம் கடந்து விட்டது எனதருமை சகோதரர்களே! பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற பீதியை ஏற்படுத்தி தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களை வளைக்கவே, முஸ்லிம்களின் வாக்கு வங்கி சிதறியது. முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இல்லாமலாக்கும் முயற்சியே இது.
இதனை மாற்றி முஸ்லிம்கள் சுயமாக சொத்தக் காலில் நின்று முன்னேறிச் செல்ல வேண்டும். யார் வரக் கூடாது என்று இது நாள் வரை எதிர்மறை (Negative Politics) அரசியலைக் கடைப்பிடித்து வந்த முஸ்லிம்கள் இனி தாங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்கு பெற நேர்மறை (Positive Politics) அரசியலை நோக்கிச் செல்ல வேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுவதற்காகவே பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அரசியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.''

மேலும் கூட்டத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் இ.எம்.அப்துர்ரஹ்மான், கர்நாடகா ஃபோரம் ஃபார் டிக்னிட்டியின் மாநில தலைவர் டாக்டர் மக்பூப் ஷரீஃப், மூத்த வழக்கறிஞர் பவானி பா. மோகன், தமிழக முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுத்தீன், முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் செயலாளர் முகமது ஹனீஃபா, எம்.என்.பி.யின் மாநில துணை தலைவர் ஷேக் முகமது தெஹ்லான் பாகவி மற்றும் மௌலவி முகமது மன்சூர் காசிஃபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய அரசியல் மாநாட்டுக்கு ஆதரவு தந்தனர். இறுதியில் எம்.என்.பி.யின் மாநிலச் செயலாளர் ஃபக்ருதீன் நன்றியுரையாற்றினார்.


செய்திகள் :
ஏ.முகமது யூசுஃப்,
மீடியா கன்வீனர், மனித நீதிப் பாசறை.

1 comment:

Anonymous said...

அல்ஹம்துலில்லாஹ். சுயநலம் இல்லாத ஒரு கூட்டத்தை அல்லாஹ் இந்திய முஸ்லிம்களின் விமோசனத்திற்காக களம் இறக்கியுள்ளான். இனி பார்ப்பன கூட்டமும், மதசார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் அரசியல்வா(ந்)திகளும் இடம் தெரியாமல் போவார்கள். இனிமேலாவது இந்த முஸ்லிம்கள் சிந்திப்பார்களா? ஓன்றுபடுவார்களா? அதிகாரம் மக்களுக்கே என்பதை ஏற்பார்களா? ஆட்சி செய்வார்களா? இல்லை அடிபட்டு சாவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.