Wednesday, November 19, 2008

தர்ஹாக்களை தகர்க்கிறார் ஹைதர் அலி.திருந்தாத ஜென்மங்களின் புலம்பல்

இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வக்ஃபு வாரிய சேர்மன் செயல்படுகிறார்.

இளைஞர்களைத் தவறான பாதைக்குத் திருப்பி தர்காக்களை இடிக்கச் செய்யும் வேலையில் ஈடுபடுகிறார்.

வாரிய சேர்மனை மாற்றாவிட்டால் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலைக்கு முஸ்லிம்கள் மாறுவார்கள்'' என கண்டனத் தீர்மானம் போட்டு முதல்வர் கலைஞரை அதிர வைத்திருக்கிறார்கள் சுன்னத் ஜமாத் பேரவையினர்.

வக்ஃபு வாரிய சேர்மன் ஹைதர் அலியை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியிருக்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் மேலை நாசரை சந்தித்துப் பேசினோம். "சமீபகாலமாகவே இஸ்லாத்தை புதுவழியில் மாற்றுகிறோம் என்ற பெயரில், சில தவறான கலாசாரங்களை அறிமுகப்படுத்தி, இஸ்லாமிய மக்களைக் குழப்பும் வேலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தவ்ஹீத் ஜமாத், அஹ்லே ஹதீஸ், ஜாக் போன்ற அமைப்பினர் செய்து வருகின்றனர்.

அதிலும், த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலியை தி.மு.க. அரசு வக்ஃபு வாரிய சேர்மனாக நியமித்ததற்குப் பிறகு பல ஜமாத்களில் அராஜகம்தான் நடக்கிறது'' என எடுத்த எடுப்பிலேயே அதிர வைத்தவர்,

"தமிழகத்தில் 98 சதவிகித இஸ்லாமியர்கள் சுன்னத் ஜமாத் கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள்தான். `இந்த மக்களின் கொள்கைக்கு விரோதமாக இருக்கும் த.மு.மு.க.வினரை வக்ஃபு பதவியில் அமர்த்தக் கூடாது' என்று ஆரம்பம் முதலே தி.மு.க. தலைவரிடம் வலியுறுத்தினோம்.

அவர் எங்கள் கருத்துக்கு செவி கொடுக்கவில்லை. குர்-ஆனின் கருத்துக்களை மறுத்து இவர்களே புதிய கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

உதாரணமாக, குர்-ஆனில் `தின்றுவிட்டுப் போ' என்றிருந்தால், இவர்களோ `சாப்பிட்டுவிட்டுப் போ' என்பதுதான் சரி. இதை மாற்ற வேண்டும்' என்பார்கள்.


நோன்பு மாதத்தில் இருபது முறை தொழுகை நடத்த வேண்டும் என்றிருக்கிறது. இவர்கள் `எட்டு முறை நடத்தினால் போதும்' என புதுச் சட்டம் போடுகிறார்கள். அதேபோல், தொப்பி அணிந்து தொழுகை நடத்த வேண்டும். பெண்கள் தொழுகைக்கு வரக் கூடாது என்று பாரம்பரியமாக இருக்கும் விஷயங்களை மாற்ற நினைக்கிறார்கள்.

பெண்களைப் புனிதமானவர்களாகத்தான் இஸ்லாம் பார்க்கிறது. ஆனால், பெண்களை வீதிக்கு வந்து போராடச் சொல்லி தூண்டிவிடுகின்றனர். இதனால் மார்க்கப் பெரியவர்கள் மனம் வருந்துகின்றனர்.

அதேபோல், அரசால் தலைமை ஹாஜியாக ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் சொல்வதை வைத்துத்தான் எந்த முடிவையும் எடுப்போம். ஆனால், இவரது கருத்துக்களை த.மு.மு.க.வினர் ஏற்றுக் கொள்வதில்லை.

தொழுகை நடத்தும்போது ஆள்காட்டி விரலை ஒருமுறை மட்டும் நீட்டி `இறைவன் ஒருவனே' என்ற பொருள்படி செய்வோம். ஆனால், த.மு.மு.க.வைச் சேர்ந்த இளைஞர்கள் விரலைப் பலமுறை ஆட்டி அருகில் இருக்கும் மற்றவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இதுதொடர்பாக பல மசூதிகளில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பாபு ஜும்மா மசூதியில் இதற்காக பெரும் சண்டையே நடந்திருக்கிறது.


தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மசூதிகள் இருக்கின்றன. இவற்றின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும். இவற்றை பராமரித்து நிர்வாகத்தை நடத்தும் வேலை வக்ஃபு வாரியத்தைச் சேர்ந்தது.

`முக்கியப் புள்ளிகள் பலர் ஜமாத் சொத்துக்களை அனுபவித்து வருவதை மீட்பேன்' என்று ஹைதர் அலி சொல்கிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், மசூதி நிர்வாகங்களில் த.மு.மு.க.வினரை நிர்வாகப் பதவிகளுக்குக் கொண்டு வந்து, ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையும் அனுபவிக்கும் நோக்கத்தில் வக்ஃபு வாரிய சேர்மன் செயல்படுகிறார்.

இஸ்லாமிய கலாசாரத்தையும் இவர்கள் மாற்ற நினைக்கின்றனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரை இந்து அறநிலையத்துறையில் அமைச்சராக நியமித்தால் எப்படியிருக்குமோ, அதைப் போல் வக்ஃபு வாரிய சேர்மன் பதவிக்கு இவரை அமர்த்தியிருக்கிறார்கள்.

திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஃபதர்சயீத் வாரிய சேர்மனாக இருக்கும்போது, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. இதைவிட முக்கியமான விஷயம்... மாநிலம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் தர்காக்களைத் தரைமட்டமாக்கும் வேளையில் த.மு.மு.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்கா என்பது இஸ்லாத்தைப் பரப்புவதற்காக வந்து, இறந்து போன மகான்களுக்காக எழுப்பப்படும் சமாதியாகும். சமாதியில் உறங்கும் பாவாக்களை வணங்குவதை இந்தப் `புதுமை விரும்பிகள்' எதிர்க்கிறார்கள்.

சபரிமலையில் உள்ள வாபர் சாமியும் ஒரு பாவாதான். திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோட்டில் சைதானியம்மா சமாதியை தரைமட்டமாக்கிவிட்டனர்.

இப்படிச் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள பப்பு மஸ்தான் தர்காவுக்கும் இதே நிலைதான் .

இறைவனிடம் சொல்ல வேண்டிய கருத்தை, இறந்துபோன மகான்கள் மூலம் தங்கள் வேண்டுதலைச் சொல்வது எங்களின் வழக்கம். இவர்கள் அந்த நம்பிக்கைகளைத் தகர்க்கிறார்கள்.

பல மாவட்டங்களில் இதேநிலைதான் நடக்கிறது. பரங்கிப்பேட்டையில் மட்டும் 360 தர்காக்கள் இருக்கின்றன. இவை எல்லாம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

த.மு.மு.க. மற்றும் தவ்ஹீத்களின் இந்த செயல்பாடுகளைத் தடுக்க வேண்டிய வாரியம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றி இப்தார் விருந்தில் பங்கேற்ற அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், `வக்ஃபு வாரிய சேர்மனாக சரியான நபரை அரசு நியமித்திருக்கலாம்' என்று பேசினேன்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் ஜே.எம்.ஆரூண் எம்.பி.யும், `ஹைதர் அலியை நியமித்ததில் யாருக்கும் விருப்பமில்லை. அவரை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடந்தால் நானே தலைமை ஏற்பேன்' என்றார்.

தஞ்சையில் நடந்த எங்கள் மாநாட்டில் `சேர்மனை மாற்ற வேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றி முதல்வருக்கு அனுப்பி வைத்தோம். பல பகுதிகளில் த.மு.மு.க. இளைஞர்கள் இடங்களை ஆக்கிரமிப்பது, பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது என தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதில் அடுத்த மாதம் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறார்கள். ஏனென்றால், த.மு.மு.க. பெயரைச் சொன்னால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால்தான் வேறு பெயர் வைத்திருக்கிறார்கள்.

இறுதிக்கட்டமாக, சேர்மனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். இதைத் தி.மு.க. அரசு ஏற்காவிட்டால், ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வை புறக்கணிக்கும் முடிவுக்குத் தள்ளப்படுவார்கள் என்பது மட்டும் நிஜம்'' எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தார் மேலைநாசர்.

சுன்னத் ஜமாத் பேரவையின் குற்றச்சாட்டுகளுக்கு வக்ஃபு வாரிய சேர்மன் ஹைதர் அலியிடம் விளக்கம் கேட்டோம். " எங்கள் மீது குற்றம் சாட்டும் அந்த நபர் இஸ்லாத்துக்கு எதிரானவர். ஆலிம்கள் சொல்லும் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.


ஜமாத்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறோம். அந்தச் சொத்துக்களைத் திருடித் தின்பவர்கள்தான் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். எங்களின் செயல்பாடுகளைப் பற்றி பொதுமக்களிடம் கேட்டுப் பாருங்கள்.

தர்காக்களைத் தரைமட்டமாக்கும் வேலையில் யாரும் ஈடுபடவில்லை. த.மு.மு.க. என்பது ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் கூட்டமைப்பு. அது ஒருபோதும் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. குற்றம் சொல்பவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை.

பெண்களுக்குள்ள உரிமைகளை காலம்காலமாக ஏமாற்றி வந்திருக்கிறார்கள். நபிகள் காலத்தில் போர் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை போராட்டக் களத்திற்கு அழைத்து வரக்கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? கறுப்புப் பணத்தைப் பதுக்கும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களைப் பற்றிப் பேசுவதே அவசியமற்றது'' என்றார் தெளிவாக. THANKS TO KUMUDAM REPORTER

3 comments:

Thoobaah said...

சற்று பூமியில் இருந்து உயர்ந்து இருக்கும் கப்ருகளையே தரைமட்டமாக்க வேண்டும் என்றால்...

தர்காக்கள் என்ன....ஒரு சென்டிமீட்டர்..உயரமா?

இடிப்பதால்...நன்மை கிடைக்கும்....

அல்லாஹ் நமக்கு அந்த நன்மையை கொடுக்க துஆ செய்கிறேன்...

thoobaa.blogspot.com


naan tmmk matrum tntj...innum entha amaippu parappaalanum illai...

Anonymous said...

சுன்னத் ஜமாத் பேரவையின் குற்றச்சாட்டுகளுக்கு வக்ஃபு வாரிய சேர்மன் ஹைதர் அலியிடம் விளக்கம் கேட்ட குமுதம் ரிப்போர்ட்டருக்கு த.மு.மு.க பொதுச்செயலாளரும் வக்பு வாரியத்தலைவருமான ஹைதர் பொறுப்பற்ற முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலை நாசர் சொன்னது என்ன ஹைதர் கொடுத்த பதில் என்ன? முஸ்லிம் இல்லை என்று சொல்லும் உரிமை யார்கொடுத்தது? அவர்மேல் சொன்ன குற்றச்சாட்டை மறைக்க இப்படி ஒரு பல்டி. ஹைதர் நீங்கள் அரசியல்வாதிகளை மிஞ்சிட்டிங்க.

Anonymous said...

பெண்களுக்குள்ள உரிமைகளை காலம்காலமாக ஏமாற்றி வந்திருக்கிறார்கள். நபிகள் காலத்தில் போர் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை போராட்டக் களத்திற்கு அழைத்து வரக்கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?

இப்படி கேட்க ஹைதர் அவர்களே உங்களுக்கு என்ன யோக்கியதை? நீங்களே சொல்கிறீர்கள் நபிகள் காலத்தில் போர் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று. அப்ப போராட்டத்தில் கலந்தகொள்ள அனுமதி உண்டா? என்று சொல்லுங்கள். உதவி செய்வது என்பது வேறு, போராட்டத்தில் கலந்துகொள்வது என்பது வேறு.

வக்ஃபு வாரிய சேர்மனும் தமுமுக பொதுச்செயலாளருமான ஹைதர் அலி அவர்களே, தமுமுக வும் ததஜ வும் நடத்தும் போராட்டத்தில் பெண்கள் கோஷம் போடுவது உதவியா? அப்ப ஆண்கள் என்ன செய்கிறார்கள்? டான்ஸ் ஆடுகிறார்களா? ஆண்களின் டான்ஸ்க்கு ஏற்ப தமுமுக, ததஜ பெண்கள் இடுப்பை காண்பிக்கிறார்களா? தமுமுக பொதுச்செயலாளரான ஹைதர் அலி அவர்களே என்ன சொல்லவருகிறீர்கள்?

தமுமுக வும் ததஜ வும் நடத்தும் போராட்டத்தில் ஆண்களின் கோஷத்திற்கு ஏற்ப போராட்டத்தில் கலந்து பெண்களும் கோஷம்தானே போடுகிறார்கள். அப்ப போராட்டத்தில் கலந்துகொள்கிறார்களா? இல்லையா? இதில் போராடும் ஆண்களுக்கு பெண்கள் என்ன உதவி செய்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

கோஷம்போட்டு போராடும் ஆண்களுக்கு பெண்கள் தங்கள் இடுப்பைகாட்டி, குரலை வெளிப்படுத்தி உற்சாகத்தை ஏற்படுத்துகிறார்களா? பருப்பு என்று நினைத்து பேசாதீர்கள். பொறுப்பான முறையில் பதில் சொல்லுங்கள்.

சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் மேலை நாசர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல் ஏன் திசை திருப்புகிறீர்கள்? குற்றச்சாட்டை மறைப்பதற்கு திசை திருப்புனீர்கள. பெண்களை கேவலப்படுத்திதான் திசை திருப்பவேண்டுமா?

போராட்டத்தில் கலந்துகொள்வதற்கும் போராட்டக்காரர்களுக்கு உதவி செய்வதற்கும் வித்தியாசம் தெரியாத, இஸ்லாத்தைப்பற்றி இந்த அளவுக்கு விளங்கி வைத்திருக்கும் உங்களுக்கு வக்ஃபு வாரிய தலைவர் பதவி? முஸ்லிம்களின் சொத்து உறுப்புட்ட மாதிரிதான் போங்க