Tuesday, October 21, 2008
இனவெறியன் தீவிரவாதி ராஜ்தாக்கரே கைது
மும்பை: மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து மும்பையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ரயில்வே தேர்வு எழுத வந்த வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு தனது அமைப்பினரை தூண்டிவிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவ சேனையிலிருந்து பிரிந்து வந்ததில் இருந்து ராஜ் தாக்கரேவின் அட்டூழியம் அதிகமாகிவிட்டது. மராட்டியர்கள் நலனுக்காக போராடுவதில் அதிகம் பாடுபடுவது யார் என்ற போட்டியில் சிவசேனாவும் நவ நிர்மாண் சேனாவும் போட்டி போட்டிக் கொண்டு இறங்கியுள்ளன.
மராட்டியர் நலன் என்ற பெயரில் உத்தரப் பிரதேச, பிகார் கூலித் தொழிலாளிகளைத் தாக்குவதையே வேலையாகக் கொண்டுள்ளனர் இந்த இரு அமைப்பினரும். அதிலும் ராஜ் தாக்கரே அமைப்பினரின் அராஜகம் மிக அதிகமாகி வருகிறது.
இந் நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில்வே தேர்வு எழுத வந்த பிகாரிகளை இவரது அமைப்பினர் அடித்து உதைத்தனர்.
இதற்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட வட இந்திய தலைவர்களிடம் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து ராஜ் தாக்கரே மீது மும்பையின் கார்வாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முடிந்தால் தன்னை கைது செய்யலாம் என ராஜ் தாக்கரே மாநில காங்கிரஸ் அரசுக்கு சவால் விட்டார். என்னை கைது செய்தால் மகாராஷ்டிராவே பற்றி எரியும் என்றார்.
இந் நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் ரத்னகிரி மாவட்டத்தில் வைத்து இன்று அதிகாலை அவர் செய்யப்பட்டார். பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அவர் மும்பை கொண்டு வரப்படுகிறார்.
இவரது கைதையடுத்து மும்பையில் பல இடங்களில் இவரது அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. பல டாக்சிகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.
போரிவிலி பகுதியில் லாரிகளை எரிக்க முயற்சி நடந்தது. முலுன்ட் பகுதியில் டோல் கேட் தீ வைத்து எரிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபமின் வீடு மீது கல்வீச்சும் நடந்துள்ளது.
இதனால் மும்பையில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. நகர் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment