Thursday, August 28, 2008

குறைந்த செலவில் சமையல் எரிவாயு : திண்டுக்கல் முஸ்லிம் ஆராய்ச்சியாளர் சாதனை


திண்டுக்கல்: குறைந்த செலவில் எரிவாயு உற்பத்தி செய்வதை திண்டுக்கல் ஆராய்ச்சியாளர் அப்துல் அஜீஸ் கண்டுபிடித்துள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் அப்துல்அஜீஸ்.இவர் விறகிலிருந்து செலவில்லாமல் மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த அகில இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் இவரது கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு நிதியுதவியும் செய்யப்பட்டது. இதையடுத்து தாவர எரிபொருள் சேர்மானம் கண்டுபிடித்தார். தற்போது புதிய கண்டுபிடிப்பாக பகுதிநீர் எரிவாயு கலன் மூலம் குறைந்த செலவில் சமையல் எரிவாயு கண்டுபிடித்துள்ளார்.


நான்கு அறைகள் கொண்ட கலன் ஒன்றில் மரக்கறி, விறகுத்தூள், முந்திரிக்கொட்டை, தேங்காய் சிரட்டை,வறட்டி இவற்றில் ஏதேனும் ஒன்றை 15 கிலோ போடவேண்டும். இதில் தீ பற்ற வைத்து காற்றை செலுத்தி தொடர்ந்து எரியச்செய்ய வேண்டும். இது எரியும் போது கார்பன்டை ஆக்சைடு உருவாகும்.கலனுக்குள் ஒரு பகுதிக்குள் சென்று கார்பன் மோனாக்சைடாக மாறி வெளி வருகிறது. அதே நேரம் அதிக வெப்பம் கொடுக்கக்கூடியதாக இது இருப்பதில்லை. இதனுடன் சொட்டுச்சொட்டாக தண்ணீரை சேர்க்கும் போது பகுதி நீர் எரிவாயு உருவாகிறது.இது டீசல் ஆயில் எரிபொருளுக்கு சமமானது.ஒரு கிலோ எல்.பி.ஜி.,காஸ் வீட்டு உபயோகத்திற்கு ரூ.25க்கும்,கடைகளுக்கு ரூ.55 க்கும் விற்கப்படுகிறது. ஆனால் இவரது கண்டுபிடிப்பு மூலம் ஒரு கிலோ எல்.பி.ஜி.,காஸ் க்கு சமமான எரிபொருளை 2 கிலோ மரக்கறி மூலம் தயாரிக்கலாம். இதற்கு ஆகும் செலவு ரூ. 16 மட்டுமே. விறகை கொண்டு தயாரித்தால் ஆகும் செலவு ரூ. 8 மட்டுமே.


ஒரு கிலோ எல்.பி.ஜி., திரவ எரிபொருளுக்கு ஈடான எரிபொருள் தயாரிக்க 2 கிலோ மரக்கறி அல்லது 4 கிலோ விறகு அல்லது 3 கிலோ முந்திரிக்கொட்டை அல்லது கொட்டாங்குச்சி 3 கிலோ தேவை. ஹோட்டல் மற்றும் பெரிய நிறுவனங்களின் எரிவாயு தேவையை இவரது கண்டுபிடிப்பு குறைந்த செலவில் பூர்த்திசெய்யும். புதிய கண்டுபிடிப்பை பதிவு செய்து விரைவில் சந்தைப்படுத்தவும் முடிவு செய்துள்ளார்.

நன்றி : தினமலர்

No comments: