Wednesday, August 06, 2008

சிமி மீதான தடை நீக்கம்: பயங்கரவாத மாயை தகர்ந்தது

சிமி மீதான தடை நீக்கம்: பயங்கரவாத மாயை தகர்ந்தது

டெல்லி: இஸ்லாமிய தீவிரவாத மாணவர் இயக்கம் என்று குற்றம் சாட்டப்பட்டு தடை விதிக்கப்பட்ட சிமி அமைப்புக்கு 2010 வரை விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்குவதாக டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் நடந்த பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் சிமியின் தொடர்பு இருப்பதாகக் கூறி மத்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிமிக்கு 2 ஆண்டுகள் தடை வித்தித்து.

பின்னர் இத் தடை ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒருமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி 7ம் தேதி இத்தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 2010-ம் ஆண்டு வரை தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தது சிமி.

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது சிமி. மத்திய அரசு புதிதாக எந்த ஆதாரத்தையும் காட்டாமல் இப்படி பொத்தாம் பொதுவாக தடையை நீட்டிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த இயக்கம் தனது மனுவில் கூறியிருந்தது.

இவ்வழக்கை நீதிபதி கீதா மித்தல் தலைமையிலான சிறப்பு நடுவர் மன்றம் விசாரித்தது. இந்த தடை நீட்டிப்புக்கு போதிய ஆதாரங்களைத் தருமாறு அவர் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் கடைசி நிமிடம் வரை, சிமிக்கு எதிராக எந்தப் புதிய ஆதாரத்தையும் மத்திய அரசு தாக்கல் செய்யவே இல்லை.

பழைய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு இயக்கத்துக்கு தடையை நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது என்றும், ஆதாரமில்லாமல் தடைவிதித்து யாருடைய அடிப்படை உரிமையையும் பறிக்க முடியாது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை

சிமி என்றழைக்கப்படும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியும், சிமி மீதான தடையை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாணையத்தின் தலைவருமான நீதிபதி கீதா மிட்டல் அளித்துள்ள தீர்ப்பைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. 267 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பில் சிமி மீதான தடையை நியாயப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி கீதா மிட்டல் தெரிவித்துள்ளார்.

இந்திய முஸ்லிம் இளைஞர்களின் முகத்தில் அள்ளிவீசப்பட்ட தீவிரவாத முத்திரையை இந்தத் தீர்ப்பு கனிசமான அளவு துடைத்துள்ளது. நமது நாட்டில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும் போது சிமி மீது பழிப்போடுவதைத் தான் செய்தி ஊடகங்களில் ஒரு சாராரும், புலனாய்வு நிறுவனங்களும் வழக்கமாகக் கொண்டிருந்தன. இருப்பினும் சமீபக்காலப் பயங்கரவாத நடவடிக்கைகளில் சிமி ஈடுபட்டு வந்தது என்பதை நிரூபிக்கும் துளிஅளவு ஆதாரத்தையும் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் காட்ட இயலவில்லை என்பது நீதிபதி கீதா மிட்டலின் தீர்ப்பில் இருந்து தெரிய வருகின்றது. சிமியை பயங்கரவாதத்தின் பிம்பமாகக் கருதி கானல்நீரைத் தான் செய்தி ஊடகங்களில் ஒரு சாராரும், அரசு புலனாய்வு நிறுவனங்களும் துரத்தி வந்து வந்துள்ளன என்பதை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளது. இப்படிக் கற்பனையான ஒரு தேடலில் புலனாய்வு துறையினர் ஈடுபட்டதின் காரணமாகத் தான் அஜ்மீர் முதல் பெங்களூர் அஹமதாபாத வரை நடைபெற்ற பல பயங்கரவாதத் தாக்குதகளில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை இதுவரை காவல்துறையினரால் கைதுச் செய்ய முடியவில்லை.

இந்திய நீதி பரிபாலனத் துறையின் சுயாட்சித்தன்மையை நீதிபதி கீதா மிட்டல் வழங்கியுள்ள தீர்ப்பு மீண்டும் நிரூபித்துள்ளது. தனது பாரபட்சமற்ற தீர்ப்பின் மூலம் இந்திய நீதித்துறையின் அப்பழுக்கற்ற நிலையை நீதிபதி கீதா மிட்டல் கட்டிக்காட்டியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம்.

தடைநீக்கப்பட்ட நிலையில் சிமி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்பணித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்காகவும், நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களுடன் நல்லுறவு வலுப்பெறுவதற்காகவும் சிமி சகோதரர்கள் முழு அற்பணிப்புடன் பாடுபட வேண்டும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

No comments: