Friday, July 04, 2008

அனைவருக்கும் ஹஜ் வாய்ப்பு! முஸ்லிம் லீக் தீர்மானத்தை ஏற்று மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை!!


புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்ற வாய்ப்பளிப்பது தொடர்பாக தஞ்சையில் மே மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழக அரசு இந்த தீர்மானத்தை ஏற்று, இதனை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு இத்தகவலை தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்துக்கு, அனுப்பியுள்ளது.


புனித ஹஜ்ஜுக்கு பயணம் செய்கின்றவர்கள், எத்தகைய ஏமாற்றமும் இன்றி அந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்ள அரசு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.


சென்ற ஆண்டு விண்ணப்பித்தவர்களில் ஏராளமானோருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காததால், பரவலாக பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.


இதுதொடர்பாக சென்ற மே மாதம் 4ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அந்த தீர்மானத்தில், ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்த பலருக்கும் வாய்ப்பு கிடைக்காததால் இந்த ஆண்டு ஒதுக்கீட்டில் சென்ற ஆண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது.


இந்தத் தீர்மானம் அரசுக்கு மாநில முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தால் முறைப்படி அனுப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு இந்த தீர்மானத்தின் மீது மேல் நடவடிக்கை எடுத்து மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.


தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு செய்துள்ள இந்த பரிந்துரையில் முஸ்லிம்கள் தங்கள் மார்க்க கடமையான புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.


இதற்காக ஹஜ்ஜுக்கு சென்றவர்கள் 10 வருடங்களுக்குள் மீண்டும் ஹஜ்ஜுக்கு செல்லாமல் புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும்.


70 வயதுக்கு மேல் ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் இரண்டு நபர்களுடன், செல்ல வாய்ப்பு அளிக்க வேண்டும்.


இரண்டுமுறை விண்ணப்பித்தும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்யவேண்டும்.


தனியார் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்கின்றவர்கள் அரசு மூலம் ஏமாற்றமின்றி புனிதப் பயணம் செய்ய அரசு வழி செய்யவேண்டும்.


இவ்வாறு தமிழக அரசு பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் நகல் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.



Thank IUML website

No comments: